ரமழானில் முடிந்தளவு மக்களுக்கு உதவுவோம்

0 439

நாடு மிக மோச­மான பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்ள இந்த நாட்­க­ளி­ல் முஸ்­லிம்­க­ளா­கிய நாம் அடுத்த வாரம் முதல் புனித ரழமான் மாதத்தை ஆரம்­பிக்­கிறோம். கடந்த வருடமும் இதை விடவும் மோசமான நிலைமைகளுக்கு நாம் முகங்கொடுத்திருந்தோம். இந் நிலையில் நாடு எதிர்­நோக்­கி­யுள்ள இந்த நெருக்­கடி நிலைமை அடுத்த வருடத்திற்கும் நீடிக்காது மிக விரைவில் நீங்­க வேண்டும் என எம்மை எதிர்நோக்கியுள்ள புனித மாதத்தில் பிரார்த்திப்போம்.

இன்றைய கால கட்டத்தில் இலங்கையைப் பொறுத்தவரை மக்கள் இன மத பேதமின்றி பாரிய துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் குடும்பத்துடன் தமது உயிரை மாய்த்துக் கொள்ளுமளவுக்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக இவ்வாறான பல சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. இந் நிலையில் மக்களை இந்தக் கஷ்ட நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை சமூக மட்டத்தில் ஆரம்பிக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அல்லல்படும் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டுமாறு அண்மையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் வேண்டுகோள்விடுத்திருந்தது. மூன்று வேளை உண­வுக்குக் கூட­ வ­ழி­யில்­லாமல் அல்­ல­லுறும் எண்­ணற்ற குடும்­பங்­களின் கவ­லைக்­கி­ட­மான தக­வல்கள் ஜம் இய்­யா­வுக்குக் கிடைத்த வண்­ண­முள்­ளதாகவும் தன­வந்­தர்கள் பரோ­ப­கா­ரிகள் வச­தி­ப­டைத்தோர் தங்­க­ளா­லான உத­வி­களை வழங்­க­வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமாவின் சமூக சேவைப்­பி­ரிவு கோரிக்கை விடுத்­திருந்தது.
இன்­றைய நாட்­களில் பண வசதி படைத்­த­வர்கள் முதல் ஏழைகள் வரை அனை­வ­ருமே பொரு­ளா­தார ரீதி­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். பாரிய வர்த்­த­கங்கள் கூட நெருக்­க­டியைச் சந்­தித்­துள்­ளன. பலர் தமது தொழில் நட­வ­டிக்­கை­களை கைவிட வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள்.

வாழ்க்கைச் செலவு உச்­சத்தைத் தொட்­டுள்ள இன்­றைய நாட்­களில் வரு­மா­ன­மின்றித் தவிக்கும் இந்தக் குடும்­பங்­க­ளுக்கு உதவிக் கரம் நீட்­டு­வது அவ­சி­ய­மாகும்.
முஸ்லிம் சமூகம் பள்­ளி­வா­சல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நிர்­வ­கிக்­கப்­ப­டு­வதால், ஒவ்­வொரு பள்­ளி­வா­சல்­களும் தமது மஹல்­லா­வுக்­குட்­பட்ட தேவை­யு­டைய குடும்­பங்­களை இனங்­கண்டு எவ்­வாறு உத­வலாம் என்­பது குறித்துத் திட்­ட­மிட்டுச் செயற்­பட வேண்டும்.

புனித ரமழான் மாதத்தில் அமல்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போன்றே தத்தமது பள்ளிவாசல் நிர்வாகப் பரப்பிற்குள் வாழும் மக்களின் அன்றாட தேவைகளையும் இனங்கண்டு நிறைவேற்றுவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். பள்ளிவாசல்கள் கட்டிடப்ப பணிகளை விட மக்களின் பசி போக்கும் பணிகளுக்கு தமது நிதிகளை செலவிட வேண்டும்.

முஸ்லிம் சமூக நிறு­வ­னங்­க­ளுக்கும் இதில் பொறுப்­புள்­ளது. தமது ஸகாத், ஸத­காக்கள் மூலம் உதவக் கூடி­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து பணத்தைத் திரட்டி ஒரு­வேளை உண­வுக்குக் கூட வழி­யின்றித் தவிக்கும் குடும்­பங்­களை இனங்­கண்டு உத­வி­களை வழங்க வேண்டும்.
துர­திஷ்­ட­வ­ச­மாக இன்று சமூ­கத்தில் மக்­களை மென் மேலும் நெருக்­க­டிக்குள் தள்­ளு­கின்ற செயற்­பா­டு­களே அதிகம் இடம்­பெ­று­கின்­றன. பொருட்­களைப் பதுக்கி வைத்து விலையை அதிகரித்து வியா­பாரம் செய்­ப­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.
இது மக்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­ய­டிப்­ப­தற்­கான நேர­மல்ல. மாறாக ஒரு­வ­ருக்­கொ­ருவர் உதவி ஒத்­தா­சை­யா­க­வி­ருந்து இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து நாம் மீளத் தலைப்­பட வேண்டும். நமது செயற்­பா­டுகள் ஒரு போதும் இறை­வனின் புறத்­தி­லி­ருந்து தண்­ட­னையைக் கொண்­டு­வ­ரு­ப­வை­யாக அன்றி அருளைக் கொண்டு வரு­ப­வை­யாக அமைய வேண்டும்.

எனவேதான் நெருக்கடியான இன்றைய நாட்களில் ஒருவரிடமிருந்து பொருளாதாரத்தை எப்படி அபகரிக்கலாம் என்பது பற்றிச் சிந்தியாது எவ்வாறு ஒருவருக்கொருவர் கொடுத்துதவலாம் என்பது பற்றிச் சிந்திப்போம். நமது பிரதேசங்களில் ஒருவர் கூட உண்ண வழியின்றி பட்டினியுடன் படுக்கைக்குச் செல்ல அனுமதிக்காதிருப்போம்.
புனித ரமழான் மாதம் ஏழைகளின் பசியை அனைவருக்கும் உணர்த்த வந்த மாதம் என்பதால் அதனை உணர்ந்து அவர்களது பசியைப் போக்குவதற்கு எம்மால் முடிந்த பணிகளை முன்னெடுப்போம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.