ஷஃபான் மாதம் என்பது சந்திர மாதக் கணக்கின்படி எட்டாவது மாதமாகும். இன்னும் இது புனிதமிக்க ரமழானுக்குமுன்னுள்ள அருள்கள் நிறைந்த ஒரு மாதமாகும். இமாம் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹ்) அவர்கள் தனது லதாயிபுல்மஆரிஃப் என்ற நூலின் 292 ஆவது பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள். இமாம் அபூ பக்ர் அல் வர்ராக் அல் பல்ஹி என்ற அறிஞர் கூறுகிறார் : ரஜப் மாதம் காற்றைப் போன்றதாகும். ஷஃபான் மாதம் மழை மேகம் போன்றதாகும். ரமழான் மாதம் மழை போன்றதாகும். அது போலவே ரஜப் மாதம் விதை விதைக்கும் மாதமாகும். ஷஃபான் மாதம் தண்ணீர் பாய்ச்சும் மாதமாகும். ரமழான் மாதம் அறுவடை செய்யும் மாதமாகும்.
ரமழானின் உச்சகட்ட பலன்களை அடைந்து கொள்ளும் முகமாக நபிகளார் ஷஃபானில் அதிக வணக்கங்களில் ஈடுபட்டு, குறிப்பாக சுன்னத்தான நோன்புகள் அதிகம் வைத்து அதற்காக தயாராகியுள்ளார்கள். எனவே ஷஃபான் மாதம் அதிகமாக உபரியான வணக்கங்களில் ஈடுபட்டு சுன்னத்தான நோன்புகள் அதிகமாக நோற்கத்தக்க சிறந்த மாதமாகும்.
நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களையும் விட ரமழானுக்கு அடுத்தபடியாக ஷஃபான் மாதத்தில்தான் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள். ரமழான் மாதத்திற்கு முந்தைய மாதமான ஷஃபானில் நோன்பு வைப்பது நபியவர்களால் மிகவும் வலியுறுத்திக் கடைப்பிடிக்கப்பட்ட ஓர் அமல் ஆகும் என்பதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் நமக்கு பறைசாற்றுகின்றன.
“நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃ’பானும் அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூற, தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நூல்: அபூதாவூத் 2431, நஸாஈ 2350, அஹ்மத் 25548.
“நபி (ஸல்)அவர்கள் ஷஃபான் மாதத்தை விட அதிகமாக (ரமழான் அல்லாத) வேறெந்த மாதத்திலும் நோன்புநோற்கவில்லை. ஷஃபான் முழுவதுமாக நோன்பு நோற்பார்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), நூல் : புஹாரி 1970.
ஷஃபான் மாதம் முழுவதுமாக நபிகளார் அவர்கள் நோன்பு நோற்றதாக இந்த ஹதீஸ் கூறுகின்றது. இதன் விளக்கத்தை பின்வரும் ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகின்றது.
“நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு மாதத்தில் முழுமையாக நோன்பு நோற்றுள்ளார்களா? என ஆயிஷா(ரழி) அவர்களிடம் வினவப்பட்ட போது, நபி(ஸல்) அவர்கள் (தொடராக) நோன்பு நோற்பார்கள். அவர் நோன்பு இருக்கின்றார். (விடவே மாட்டார்) எனநாம் கருதுமளவிற்கு நோன்பு நோற்பார்கள். சில போது நோன்பு இல்லாது இருப்பார்கள். நோன்பு பிடிக்கமாட்டார்கள் என நாம் கருதுமளவிற்கு நோன்பு பிடிக்காது இருப்பார்கள்.
ஷஃபானைத் தவிர வேறு மாதங்களில் அவர்கள் அதிகம் நோன்பு நோற்றதை நாம் கண்டதில்லை. ஷஃபான் முழுவதுமாக நோன்பு நோற்பார்கள். ஷஃபானில் சில நாட்கள் தவிர மற்ற நாட்களெல்லாம் நோன்பு நோற்பார்கள்” எனக் கூறினார்கள். நூல் : முஸ்லிம்: 2778
ஷஃபான் முழுவதும் நோன்பு நோற்பார்கள் என்றால் ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்பார்கள் என்பதே உண்மையான அர்த்தமாகும் என்பதனை மேலுள்ள இந்த நபிமொழி எமக்கு தெளிவு படுத்துகிறது.
உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானைப் போன்று வேறொரு மாதத்திலும் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விடயத்தில் பராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதமெனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப் படக்கூடியமாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் எனக் கூறினார்கள். நூல் : நஸாஈ 2357 அஹ்மத் 21753
மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் தம்மை தூய்மைப்படுத்திய நிலையில் ரமழானுக்குள் நுழையச்செய்து ரமழானை தமது அமல்களின் மூலம் அழகுபடுத்தி அதன் மூலம் அவர்களது சுவனத்தை அலங்கரிக்கஅல்லாஹ்வின் முன்னேற்பாடாகவே ஷஃபான் மாதம் அருள்கள் நிறைந்ததாக வழங்கப்பட்டுள்ளது.
நபியவர்கள் ஷஃபான் மாதத்தைப் போன்று வேறு எந்தவொரு மாதத்திலும் அதிகம் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். மேலும் நபியவர்கள்: உங்களுக்கு முடியுமான வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். குறைவான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் அதனை தொடர்ந்தேர்ச்சியாக செய்து வருவதுதான் நபியவர்களுக்கு விருப்பமாக இருந்தது.
நபியவர்கள் தொழுவார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். நூல் : புஹாரி 1970
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஷஃபான் மாதத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும். எனவே நாமும் நபியவர்களின் இந்த நடைமுறையைசெயற்படுத்த முயற்சிப்போம். அதன் மூலமாக ரமழான் மாதத்தின் முழுமையான பயன்களை அடைந்து கொள்ள ஒருபயிற்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
நபியவர்கள் குறிப்பிட்டது போல் ஷஃபான் மாத விடயத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாகவே இருக்கிறார்கள் என்பதாகவே நம்மால் அவதானிக்கமுடிகிறது. அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுகின்ற இம்மாதத்தில் நாமும் அதிகம் வணக்க வழிபாடுகளில்ஈடுபட்டு ஷஃபானை நல்ல முறையில் பயன்படுத்த முயற்சியெடுப்போம்.
எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிர நிறைவேற்ற முடிவதில்லை’ என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புஹாரி 1950 முஸ்லிம் 1146
தகுந்த காரணங்களின் நிமித்தம் விடுபட்ட நோன்புகளை ஸஹாபாக்கள், குறிப்பாக பெண்கள் கூட இம் மாதத்தில்நோற்று தமது கடமைகளை முழுமையாக நிறைவேற்றி விட்டு ரமழானுக்கு தயாராகியிருப்பதை மேலுள்ள இந்த செய்தியின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்புவைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்துக் கொள்ளட்டும் என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி 1914
திங்கள், வியாழன் போன்ற நாட்களில் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவர் நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.
புனிதமிக்க இந்த ஷஃபான் மாதத்தை நபிகளார் காட்டித்தராத விடயங்களில் வீணாக்கிவிடாமல் இறைத்தூதர் (ஸல்) காட்டித்தந்த வழிமுறைகளை கடைப்பிடித்து ஷஃபானிலிருந்தே ரமழானுக்குத் தயாராகி ஈருலகிலும் வெற்றிபெறுவோமாக! – Vidivelli