வக்பு சபையில் பிரச்சினைகள் காலதாமதமின்றி சுமுகமாக தீர்த்து வைக்கப்பட வேண்டும்
புதிய அங்கத்தவர்களிடம் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வலியுறுத்து
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“தீர்வுகள் வேண்டி வக்பு சபையில் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் காலம் தாழ்த்தப்படாமல் இயன்ற அளவில் சுமுகமாக தீர்த்துவைக்கப்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி கிழக்கு மாகாணம் போன்ற பிரதேசங்களிலிருந்து வருகை தரும் மக்கள் கொழும்பில் சிலநாட்கள் தங்க வேண்டியேற்படுகின்றமை தவிர்க்கப்படவேண்டும்’’ என புத்தசாசன, சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க புதிதாக நியமனம் பெற்றுள்ள வக்பு சபையின் தலைவர் மற்றும் அங்கத்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
வக்பு சபையின் புதிய அங்கத்தவர்களுக்கும் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது. இந்தச்சந்திப்பின்போதே அமைச்சர் மேற்குறிப்பிட்டவாறு அறிவுரை வழங்கினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “வக்பு சபைக்கு சமர்ப்பிக்கப்படும் பிரச்சினைகள் அவசரமாக தீர்த்து வைக்கப்படவேண்டும். பாமர மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் கஷ்டங்கள் ஏற்படாதவண்ணம் துரித கதியில் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். வக்பு சபை நல்லிணக்க மையமாக செயற்பட வேண்டும். பிரச்சினைகள் சுமுகமாக தீர்த்து வைக்கப்படும்போது அங்கு சட்டத்தரணிகளின் பிரசன்னம் அவசியமற்றதாகிறது.செலவுகளும் தவிர்க்கப்படுகின்றன. பல வழக்குகள் வருடக் கணக்கில் நிலுவையில் உள்ளதாக அறிகிறேன். இவற்றுக்கு துரித கதியில் தீர்வு வழங்கப்படவேண்டும் என்றார்.
வக்பு சபையின் புதிய தலைவர் மொஹிதீன் ஹுசைனை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு வினவியது. அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
வக்பு சபை எதிர்காலத்தில் பிரச்சினைகளில் சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தும், எமக்குள் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சமய ரீதியில் நாம் ஒன்றுபடவேண்டும். பள்ளிவாசலை நிர்வகிப்பதற்கு நியமிக்கப்படுபவர்கள் தகுதியானவர்களாகவும் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களா கவும் இருக்கவேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு முதலிடம் வழங்கி தீர்வுகள் பெற்றுக்கொடுப்பதற்கு வக்பு சபை தீர்மானித்துள்ளது என்றார்.- Vidivelli