(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்ளத்தில் பதிவுக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பள்ளிவாசல்களின் பதிவுகளைத் துரிதப்படுத்துவதற்கும், சவால்களுக்குள்ளாகியிருக்கும் வக்பு சொத்துக்களை தாமதிக்காது மீட்டெடுப்பதற்கும் முன்னுரிமை வழங்க புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வக்பு சபை தீர்மானித்துள்ளது.
நேற்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் அதன் பணிப்பாளர் பைசல் ஆப்தீன் தலைமையில் நடைபெற்ற வக்பு சபைக்கூட்டத்திலே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தோடு வக்பு சபையில் வருடக்கணக்கில் நிலுவையாக இருக்கும் வழக்குகள் சுமுகமான முறையில் தீர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக வக்பு சபை வாரம் மூன்று தினங்கள் தனது அமர்வுகளை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வக்பு சபை ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஒன்று கூடவுள்ளது. விசேடமாக வியாழக்கிழமைகளில் பள்ளிவாசல் பதிவுகள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பள்ளிவாசல்களின் பதிவுகள் மற்றும் வக்பு சபைக்கு தீர்வுகளுக்காக முன்வைக்கப்படும் பிரச்சினைகளை தாமதமின்றி விரைவாக தீர்த்து வைக்கும்படி அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கோரியுள்ளதால் வக்புசபை வாரம் மூன்று தினங்கள் ஒன்றுகூடி செயலில் இறங்கவுள்ளது என முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
வக்பு சபையின் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.மதீன் வக்பு சபையின் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் “வக்பு சபையில் சில வழக்குகள் தீர்க்கப்படாது 2007 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளன.இவ்வாறான வழக்குகள் துரித கதியில் தீர்த்து வைக்கப்படும்.
பள்ளிவாசல்களின் தலைவர்கள் தங்கள் நிர்வாகத்துக்குள் மற்றும் பள்ளிவாசலில் உருவாகும் பிரச்சினைகளை வக்பு சபை மற்றும் திணைக்களத்துடன் சேர்ந்து சுமுகமாக தீர்த்துக்கொள்ள முடியும்.
வக்பு சபைக்கு முன்வைக்கப்படும் பல்வேறு பிரச்சினைகளை வழக்கு பதிவு செய்யாது சுமுகமாக தீர்த்து வைப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படும். இதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்க முடிவதுடன் வீணாக சட்டத்தரணிகளுக்காக செலவிடப்படும் பணத்தையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.
வக்பு சபை பாரபட்சமற்ற தீர்வுகளையே வழங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறது. பள்ளிவாசல்களுக்கு புதிய நிர்வாக சபை நியமனம் தொடர்பில் உரிய விதிமுறைகள் கண்டிப்பாக அமுல் நடத்தப்படும் என்றார்.
நேற்றைய கூட்டத்தில் வக்புசபையின் தலைவர் மொஹிதீன் ஹுசைன் உட்பட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.- Vidivelli