எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கு பிர்தௌஸ் நகரில் வசிக்கும் சிறுவன் ஒருவனின் கொலைச் சம்பவம் அக் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வளர்ப்புத் தந்தையின் வெறித்தனமான தாக்குதலுக்கு இலக்காகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் 11 வயதுடைய முகம்மட் அஸ்மீர் முகம்மட் அரீப் எனும் சிறுவன் கடந்த (09) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் அக் கிராமத்தை மாத்திரமல்ல பலரையும் கண் கலங்கச் செய்துள்ளது.
மட்டக்களப்பு நாவற்குடா கிழக்கு பிர்தௌஸ் நகர் கிராமம் என்பது 1985ம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையினால் மட்டக்களப்பு கல்லியன்காடு பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் வசிக்கின்ற ஒரு கிராமமாகும்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா கிழக்கு பிர்தௌஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த இச் சிறுவனுக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனுமுள்ளனர்.
இந்த சிறுவனின் தாய் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு மாத்தளையைச் சேர்ந்த அப்ரி அஹமட் என்பவரை (வயது 28) கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார்.
இந்த தாய்க்கு முதல் திருமணத்தில் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
தனது புதிய கணவரிடம் தனது மூன்று பிள்ளைகளில் குறித்த 11 வயதுடைய மகனை கொடுத்து விட்டு வெளிநாடு (குவைத்) சென்றுள்ளார்.
ஏனைய இரண்டு பிள்ளைகளில் ஒரு பெண் பிள்ளை சிறுவர் விடுதி காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு மகனை முன்னாள் கணவரும் அவரது குடும்பத்தினரும் பொறுப்பேற்று வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதிய கணவர் மேற்படி சிறுவனை (வளர்ப்பு மகனை) கர்பலா கிராமத்திலுள்ள வாடகை வீடொன்றில் வளர்த்தது வந்த நிலையில் மிக கடுமையாக சிறுவனை கடந்த திங்கட்கிழமை (06) தாக்கியுள்ளார்.
படுகாயங்களுக்குள்ளான சிறுவனை மயக்கமடைந்திருந்த நிலையில் திங்கட்கிழமை மாலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வளர்ப்புத் தந்தை சிறுவன் விபத்தில் விழுந்ததாக பொய் கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் போலியான முகவரியொன்றையும் கொடுத்துள்ளார்.
உடனேயே காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிறுவனை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறுவன் அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
சிறுவனின் உடம்பில் தாக்கப்பட்ட பலத்த காயங்கள் காணப்பட்டதையடுத்து சந்தேகமுற்ற வைத்தியசாலை வைத்தியர்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு அறிவித்ததையடுத்து அங்கு விரைந்த சிறுவர் பிரிவு அதிகாரிகள் சிறுவனின் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தினர். அத்துடன் வைத்தியசாலை பொலிசாருக்கும் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சிறுவனை தாக்கிய வளர்ப்புத்தந்தை (சிறுவனின் தாயின் கணவர்) அப்ரி அஹமட் (வயது 28) காத்தான்குடி பொலிசாரினால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதே நேரம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தையினாலும் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் மேற்பார்வையிலும் ஆலோசனையின் பேரிலும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ரஹீம் தலைமையில் விசாரணைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டன.
சிறுவனை தான் தாக்கிதாக வளர்ப்புத் தந்தை பொலிசாரின் விசாரணையின் போது ஒப்புக் கொண்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த சிறுவன் வியாழக்கிழமை (09.02.2023) மாலை உயிரிழந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தது.
இதையடுத்து குடும்பமும் அக்கிராமமும் பெரும் சோகத்தில் உறைந்து போனது.
சிறுவனை தாக்கியதாக கூறப்படும் கர்பலா கிராமத்தில் வாடகைக்கு இருந்த உரிய வீட்டுக்கு (10) வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ரஹீம் ஆகியோர் சகிதம் சென்ற மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.தியாகேஸ்வரன் அந்த வீட்டினை பார்வையிட்டதுடன் சம்பவம் இடம் பெற்ற இடத்தினையும் பார்வையிட்ட பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று உயிரிழந்த சிறுவனின் சடலத்தையும் பார்வையிட்டார். அங்கு விசாரணைகளை மேற் கொண்ட பின்னர் பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
இதன் பின்னர் உரிய இடத்துக்கு வந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி குறித்த வீட்டையும் இடத்தினையும் பார்வையிட்டார்.
குறித்த வீட்டிலிருந்து உயிரிழந்த சிறுவனின் ஆடைகள் மற்றும் தாக்குவதற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் குழாய் ஒன்றும் சில பொருட்களும் இதன் போது மீட்கப்பட்டன.
இங்கு பொலிஸ் தடயவியல் குழுவினரும் ஸ்தலத்துக்கு சென்று தடயவியல் விசாரணைகளையும் மேற் கொண்டனர்.
சிறுவனை தாக்கிய சந்தேக நபரான குறித்த வளர்ப்பு தந்தை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் (9.02.2022) வியாழக்கிழமை ஆஜர்படுத்தபட்ட போது சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை(10)அழைத்து வந்து சட்டவைத்திய அதிகாரி விசாரணைகளை மேற் கொள்ளத்தேவையான நடவடிக்கைகளையும் மேற் கொண்டதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
இதையடுத்து விசாரணைகளை மேற் கொண்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சட்ட வைத்திய நிபுணரின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமையன்று(14) பிரேதப் பரிசோதனையை மேற் கொள்ள தீர்மானித்த பின்னர் சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது. எனினும் பொலிஸ் உயரதிகாரிகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் மேற் கொண்ட முயற்சியின் பயனாக திங்கட்கிழமை (13.02.2023) யன்று சட்ட வைத்திய நிபுணரின் முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரிகளினால் சிறுவனின் பிரேதப் பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட பின்னர் ஜனாசா சிறுவனின் தந்தை மற்றும் அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
சிறுவனின் ஜனாசா (13) திங்கட்கிழமை மாலை பெருந்திரளான மக்கள் கண்ணீர் மல்க பூநொச்சிமுனை முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அந்தக் கிராமத்திலுள்ள பிர்தௌஸ் பள்ளிவாசலில் ஜனாசா தொழுகையும் இடம் பெற்றது.
குறித்த இந்த சிறுவன் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 127 புள்ளிகளை பெற்றிருந்ததாக சிறுவன் கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் அப்துர் ரஹ்மான் தெரிவிக்கின்றார்.
அமைதியான சுபாவம் கொண்ட ஒரு சிறுவனாக திகழ்ந்தார் என அதிபர் சுட்டிக் காட்டுகின்றார்.
இந்த சிறுவன் கல்வி கற்ற பாடசாலையான அமீர் அலி வித்தியாலத்துக்கும் சிறுவன் கடைசியாக வசித்த கர்பலா கிராமத்துக்குமிடையில் நீண்ட தூரமாகும்.
சில நேரங்களில் சிறுவன் கால் நடையாகவும் பாடசாலைக்கு வந்ததை தான் கண்டதாக அதிபர் சுட்டிக்காட்டுகின்றார். எமது பாடசாலைக்கு பெருமையை தேடித் தந்த ஒரு சிறுவனை நாங்கள் இழந்துள்ளோம் எனவும் அதிபர் குறிப்பிட்டார்.
இந்த சிறுவனின் வகுப்பாசிரியர் திருமதி சுபாசினி குறிப்பிடுகையில், இந்த சிறுவன் அமைதியாகவே காணப்படுவார். கல்வியை சிறப்பாக முன்னெடுத்தார்.
எனது வகுப்பு மாணவன் ஒருவன் இவ்வாறு மரணித்திருப்பது மிகவும் கவலையாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி அவரது பிறந்த தினத்துக்காக கேக் தந்தார். சக மாணவர்களுடன் மிகவும் ஒற்றுமையாக நடந்து கொள்வார்.
ஒரு நாள் இவரில் காயம் ஒன்று காணப்பட்டது இந்த காயம் எப்படி எனக் கேட்ட போது தான் விழுந்ததாக தெரிவித்தார்.
இவரது வளர்ப்பு தந்தை தன்னை கொடுமைப்படுத்துகின்றார் என்று சொல்லியிருந்தால் நான் அதனை அதிபரிடம் சொல்லி நடவடிக்கை எடுத்திருப்பேன். ஒரு போதும் அந்த மாணவன் என்னிடம் இது பற்றி கூறவில்லை என்று கூறி கண்ணீர் மல்கினார்.
இந்த சிறுவனது வகுப்பு நண்பர்கள் பலரும் ஜனாசா தொழுகையிலும் நல்லடக்கத்திலும் கலந்து கொண்டனர்.
இவ்வாறு கலந்து கொண்ட சிறுவனது வகுப்பில் அருகில் இருந்த நண்பர் ஒருவரிடம் கேட்ட போது எனது நண்பர் அரீப் என்னுடன் தான் அதிகம் பேசுவார். வகுப்பில் எனது அருகில் இருப்பவர்.
இவர் ஒரு நாள் என்னிடம் கையில் சத்தியம் செய்து கேட்டார். ஒரு விடயத்தை சொல்வேன் ஒருவரிடம் சொல்லக் கூடாது என்று சத்தியம் செய்து கேட்டார்.
நானும் அவரது கையில் சத்தியம் செய்து கொடுத்தேன். பின்னர் தனது வளர்ப்பு தந்தை தன்னை அடிக்கடி தாக்குவதாகவும் தன்னை இரவு நேரங்களிலேயே தாக்குவதாகவும் தெரிவித்தார்.
நான் ஒரு நாள் வகுப்பாசிரியரிடம் இதைக் கூற முற்பட்ட போது நான் இனி உன்னுடன் பேச மாட்டேன் என்று கூறினார். அதனால் நான் இதனை ஆசிரியையிடம் சொல்லவில்லை என தெரிவித்தார்.
இன்னும் சில மாணவர்கள் தெரிவிக்கையில், இந்த மாணவனில் சில காயங்கள் காணப்பட்டன. இந்த காயம் ஏன் வந்தது எனக் கேட்டபோது விழுந்ததினால் வந்தது எனத் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்டுள்ள சிறுவன் வளர்ப்புத் தந்தையினால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளான். நீண்ட குழாய் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளான். தலையில் தாக்கியுள்ளதால் சிறுவனது சிறு நீரகம் உட்பட பல அவயங்கள் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.
இன்னும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என தெரிவித்த காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
குறித்த வளர்ப்புத் தந்தையான சந்தேக நபர் விளக்க மறியலில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
எதுவுமறியாத அப்பாவியான இச் சிறுவனின் பரிதாபகரமாக மரணம் மிகவும் கவலையளிக்கின்றது.- Vidivelli