காத்தான்குடி, அக்கரைப்பற்று மற்றும் நிந்தவூர் பகுதிகளிலிருந்து உம்ரா பயணத்துக்காக உம்ரா முகவர் நிலையமொன்றினால் அழைத்துவரப்பட்ட 40 உம்ரா பயணிகள் உம்ரா முகவர் நிலையத்தின் தவறினால் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்தும் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் மாபோலை ஜும்ஆ பள்ளிவாசலில் தங்கியிருக்கின்றனர்.
குறிப்பிட்ட 40 உம்ரா பயணிகளில் 12 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் முகவர் நிலையத்தினால் ஏமாற்றப்பட்டு தங்களது உம்ரா பயணம் நிறைவேறுமா என்ற சந்தேகத்தில் காத்திருக்கின்றனர்.
உம்ரா பயணிகளை நிர்க்கதியாக்கியுள்ள உம்ரா முகவர் நிலையம் காத்தான்குடியைத் தளமாகக் கொண்டதாகும். பயணிகளை நிர்க்கதியாக்கி விட்டு முகவர் தலைமறைவாகியதையடுத்து முகவர் நிலைய உரிமையாளரின் மனைவி மற்றும் உறவினர்கள் பயணிகளுக்கு அவசியமான விமான டிக்கட்டுகளை ஏற்பாடு செய்து நாளை செவ்வாய்க்கிழமை பயணிகளை உம்ரா கடமைக்காக அனுப்பி வைப்பதாக உறுதியளித்துள்ளதாக தற்போது மாபோலை பள்ளிவாசலில் தங்கியிருக்கும் உம்ரா பயணிகளின் வழிகாட்டியான மௌலவி இர்சாத் தெரிவித்தார்.
சம்பவம் அறிவிக்கப்பட்டதும் அரச ஹஜ் குழுவின் உறுப்பினரான மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் மாபோலை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து நிர்க்கதிக்குள்ளாகியுள்ள உம்ரா பயணிகளைச் சந்தித்து விபரங்களை அறிந்து, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக்கிற்கு அறிவித்தார். பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் இது தொடர்பான முழு விபரங்களைப் பெற்று தனக்கு அறிவிக்குமாறு வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பவம் தொடர்பில் மௌலவி எம்.எஸ்.எம். தாஸிம் கருத்து தெரிவிக்கையில்;
‘காத்தான்குடி, அக்கரைப்பற்று மற்றும் நிந்தவூர் பகுதிகளிலிருந்து காத்தான்குடியைச் சேர்ந்த முகவர் நிலையமொன்றின் மூலம் கடந்த வியாழக்கிழமை உம்ரா பயணத்துக்காக 40 பேர் வருகை தந்துள்ளனர். அவர்கள் விமான நிலையம் சென்றபோதும் அவர்களுக்கான விமான டிக்கட் முகவரினால் வழங்கப்படவில்லை. இதனையடுத்து விமான நிலையத்திலிருந்து அவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். இவர்களுக்கான விமான டிக்கட்டுகள் மற்றுமோர் முகவர் நிலையத்தினாலேயே பதிவு செய்யப்பட்டது. ஆனால் காத்தான்குடி முகவர், டிக்கட்டுகளுக்கான பணத்தை டிக்கட் முகவரானவருக்கு செலுத்தாமையினாலேயே டிக்கட்டுகள் கையளிக்கப்படவில்லை.
இதனையடுத்து விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட யாத்திரிகர்கள் மாபோலை பள்ளிவாசலில் தஞ்சமடைந்துள்ளனர். இவ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் முன்னாள் அமைச்சர்கள் ஹலீம், பௌசி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டன.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு பயணிகளை நிர்க்கதிக்குள்ளாக்கும் முகவர்கள், நிலையங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்றார்.
உம்ரா பயணிகளின் வழிகாட்டியாக பதவியேற்று வருகை தந்து தற்போது மாபோலை பள்ளிவாசலில் தங்கியிருக்கும் மௌலவி இர்சாத் சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கையில்;
‘மாபோலை பள்ளிவாசலில் தற்போது 38 பயணிகள் தங்கியிருக்கிறார்கள். 40 பேரில் இருவர் வேறு முகவர் நிலையத்தினூடாக சவூதி அரேபியாவுக்கு சென்று விட்டனர். கடந்த வியாழக்கிழமையிலிருந்து அவர்கள் சாப்பாடு மற்றும் ஏனைய தேவைகளுக்கு தமது சொந்தப் பணத்தையே செலவு செய்து வருகின்றனர். இந்தச் செலவினை முகவர் நிலையமே பெற்றுக்கொடுக்க வேண்டும்.
நாளை செவ்வாய்க்கிழமை பயணிகள் அனைவரையும் உம்ராவுக்கு அனுப்பி வைப்பதாகவும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் தாம் ஏற்றுக்கொள்வதாக உம்ரா முகவர் நிலைய உரிமையாளரின் மனைவி உட்பட உறவினர்கள் வாக்குறுதியளித்துள்ளார்கள். அதுவரை நாம் காத்திருக்கிறோம். கடந்த வியாழக்கிழமை முதல் யாத்திரிகர்கள் தங்கள் சொந்தப் பணத்தையே செலவழித்து வருகிறார்கள். இந்தப் பணத்தையும் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும்’ என்றார்.
இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக்கை தொடர்பு கொண்டு வினவியபோது;
‘உம்ரா பயணிகளின் நிர்க்கதியான நிலைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இவ்விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு உடனடி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
-Vidivelli