ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவிய பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌசி, பியசேன கமகே மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு புதிய அமைச்சரவை நியமனத்தின்போது அமைச்சுப் பதவிகள் வழங்க அனுமதிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமையின் போது, மேற்படி மூன்று எம்.பி.க்களும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர். இந் நிலையில் தற்போது மஹிந்த ராஜபக் ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க நேற்று புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
இதனையடுத்து புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருகிறது. இதன்போது அரசியல் நெருக்கடி காலத்தில் தமக்கு ஆதரவு வழங்கிய மேற்படி 3 எம்.பி.க்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க ஐ.தே.கட்சி விருப்பங் கொண்டுள்ளது. எனினும் தனது தலைமையிலான சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிச் சென்று ஐ.தே.கட்சிக்கு ஆதரவளித்த இம் மூன்று எம்.பி.க்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்க அனுமதிக்கமாட்டேன் எனும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதியாகவுள்ளதாக ஐ.தே. கட்சியின் சிரேஷ்ட அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
-Vidivelli