நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சுமார் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இக் கால கட்டத்தில் இவ்வாறானதொரு சுதந்திர தின கொண்டாட்டம் தேவையா என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். எனினும் 75 ஆவது சுதந்திர தினம் என்பதாலும் இலங்கை சுதந்திர தினத்தை விமர்சையாக கொண்டாடக் கூடிய இயலுமையைக் கொண்டுள்ளது என்பதை சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காகவுமே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இம்முறை சுதந்திர தின நிகழ்வுகள் அதிக முக்கியத்துவம் பெறுவதற்கு காரணம், 2048 ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள 100 ஆவது சுதந்திர தினம் வரை மாறாத அரச கொள்கையை அமுல்படுத்தும் வகையில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டம் அறிவிக்கப்படவுள்ளமையாகும். காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள், தமக்கு விரும்பியவாறு தேசிய கொள்கைகளை மாற்றி வருவதன் காரணமாகவே நாடு தொடர்ந்தும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந் நிலை மாற்றப்பட வேண்டும். அந்த வகையில் இம்முறை ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள தேசிய கொள்கையை ஆகக் குறைந்தது அடுத்த 25 ஆண்டுகளுக்காவது மாற்றமுறாது நடைமுறைப்படுத்த முன்வர வேண்டியது சகல அரசியல் தரப்புகளினதும் கடப்பாடாகும். அந்த வகையில் இந்த 75 ஆவது சுதந்திர தினத்தின் பின்னராவது சகல தரப்புகளும் இதுவிடயத்தில் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வருட சுதந்திர தினம் முக்கியத்துவம் பெறுவதற்கான மற்றொரு காரணம், நாட்டில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருவதாகும். சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைப்பேன் என அவர் வாக்குறுதியளித்திருந்தார். இதற்காக சர்வ கட்சிக் கூட்டங்களையும் நடாத்தியிருந்தார். சுமார் மூன்று தசாப்தங்களாக நீடிக்கும் இனப் பிரச்சினைக்கு குறுகிய கால பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகளைக் காண முடியாது என்ற போதிலும் ஜனாதிபதியின் இந்த முன்னகர்வை பயன்படுத்தி சிறுபான்மை மக்கள் தமது பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள முனைவது காலத்தின் தேவையாகும்.
அந்த வகையில் தமிழ் கட்சிகளுடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தென்னிலங்கையில் சலசலப்பை தோற்றுவித்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான தீர்வுப் பொதியை எதிர்வரும் சுதந்திர தின உரையில் ஜனாதிபதி முன்வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவம் கைப்பற்றி வைத்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழ் கட்சிகளால் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதிக்குள் 100 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமையை முன்னேற்றகரமான நகர்வாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தமிழ் மக்களுக்கான தீர்வு விடயங்கள் இவ்வாறிருக்க, முஸ்லிம் சமூகத்திற்கான தீர்வுகள் குறித்தும் தான் கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய அவர், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி தீர்வுகளை வழங்க தான் தயாராகவிருப்பதாகவும் அது தொடர்பில் தனக்கு அறியத்தருமாறும் உலமா சபையை முன்னிறுத்தி முஸ்லிம் சமூகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் அது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் போதுமான கலந்துரையாடல்களோ செயற்திட்டங்களோ முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளுராட்சித் தேர்தலில் வெல்வதையே தமது பிரதான குறிக்கோளாகக் கொண்டு செயற்படுகின்றன. முஸ்லிம் சமூகத்தின் தேசிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற காணி மற்றும் மீள்குடியேற்ற பிரச்சினைகள், தொல்பொருளின் பெயரால் இடம்பெறும் ஆக்கிரமிப்புகள், யுத்த காலத்தில் இடம்பெற்ற கடத்தல்கள், காணாமல்போதல்கள், படுகொலைகள் என்பன முறையாக தொகுக்கப்பட வேண்டும். அதேபோன்று யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கிளம்பிய இனவாதத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குதல், வன்முறைகளுக்குக் காரணமானவர்களைத் தண்டித்தல் போன்ற கோரிக்கைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அநியாயமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நஷ்டயீடும் வழங்கப்பட வேண்டும், எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரசாரங்கள், வன்முறைகள் தோற்றம் பெறாதவாறு பாதுகாப்பதற்கான பொறிமுறை ஒன்றுக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்க வேண்டும், முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்காது அதனை நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முஸ்லிம்களின் சம்மதத்துடன் திருத்தம் செய்ய வேண்டும்.என்பன போன்ற கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
எனவேதான் முஸ்லிம் சிவில் மற்றும் அரசியல் தரப்புகள் தமது வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் முன்வைக்கக் கூடிய தீர்வுப் பொதி ஒன்றை தயாரிக்க முன்வர வேண்டும். அதனை ஜனாதிபதியிடம் கையளித்து தீர்வைக் கோர வேண்டும் இதற்கான முன்னெடுப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.- Vidivelli