நவாஸ் முஹம்மத்
அண்மையில் இடம்பெற்ற அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் 100 வருட பூர்த்தியைக் கொண்டாடுகின்ற நிகழ்வில் பங்குபற்றக் கிடைத்தது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிக முக்கியமானதொரு உரையை முஸ்லிம் சமூகத்தை விளித்து ஆற்றியிருந்தார். இந் நிகழ்வில் ஆயிரக் கணக்கான உலமாக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் பங்குபற்றிய முஸ்லிம்களை அதிகமாகக் கொண்டதொரு ஊரின் உலமா சபை கிளைத் தலைவரையும் அதே ஊரைச் சேர்ந்த சமூகப் பிரமுகர் ஒருவரையும் நான் சந்தித்தபோது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனுபவத்தைப் பற்றிக் கேட்டேன்.
இதன்போது அவர்கள் ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரும் ஜனாதிபதியும் ஆற்றிய உரைகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டார்கள். இவ்வாறு அவர்கள் கூறியபோது அவர்களுடைய முகங்களிலே மிகவும் பிரகாசமான, மகிழ்ச்சியான அறிகுறிகள் தெரிந்ததை அவதானித்தேன். ஆனாலும் அவர்கள் ஜனாதிபதி கூற வந்த விடயத்தை சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் அவர்களுடனான உரையாடல் மூலம் நான் புரிந்து கொண்டேன். இது எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்விலே மேற்படி இரு முக்கியஸ்தர்களது உரைகளும் ஆங்கிலத்திலேயே ஆற்றப்பட்டன. இதனை விளங்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பிருக்கவில்லை என்பது எனக்கு தெளிவாக விளங்கியது.
ஜனாதிபதி அங்கு ஆற்றிய உரை மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. காரணம் இவ்வாறான ஒரு நிகழ்விலே அவ்வாறான பங்குபற்றுனர்களுக்கு மத்தியில் ஜனாதிபதி ஆற்றிய உரையினை அரசாங்கத்தினுடைய கொள்கை உரையாகவே (Policy Statement) முஸ்லிம் சமூகமும் ஜம்இய்யத்துல் உலமாவும் நோக்க வேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயமாகும். எனவே ஜனாதிபதி ஆற்றிய உரையினை முஸ்லிம் சமூகம் தெளிவாக விளங்கிக்கொள்வது முக்கியம் என்று நான் கருதுகிறேன். நான் இங்கு விளங்கிக் கொள்வது என்று சொல்வதன் அர்த்தம் அந்த பேச்சினுடைய தமிழ் மொழிப்பெயர்ப்பை வாசிப்பது என்பது அல்ல. அதற்கு அப்பால் சென்று அவர் சொல்ல வரும் செய்தியை, அதில் இருக்கின்ற ஆழமான கருத்துக்களை புரிந்து கொண்டு அவற்றை நாங்கள் எங்களது திட்டங்களில், கொள்கைகளில், செயற்பாடுகளில் நடைமுறைக்கு கொண்டுவருவதைப் பற்றி சிந்திப்பது காலத்தின் கட்டாய கடமை என்று கருதுகிறேன். அந்த விடயங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பைத்தான் இந்த கட்டுரையிலே குறிப்பிட விரும்புகிறேன். (ஜனாதிபதியினுடைய ஆங்கில உரையின் தமிழ் மொழிபெயர்ப்பினை கடந்த வார விடிவெள்ளி பத்திரிகையில் பார்க்கலாம்)
ஜனாதிபதி தனது உரையில் கூறிய கருத்துக்கள் சரியா? பிழையா? அதனை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டார்களா? என்பதை பற்றிய ஒரு அலசலை நான் இங்கு செய்ய முயற்சிக்கவில்லை. மாறாக அவர் சொல்ல வந்த கருத்துக்களைப் பற்றிய ஒரு தெளிவினை வழங்கவே முயற்சிக்கிறேன். இதிலே இன்னொரு விடயமும் முக்கியமானது. எந்தவொரு உரையினையும் முக்கியமானவர்கள் ஆற்றுகின்றபோது அதனுடைய தொனி முக்கியமானது. ஜனாதிபதியினுடைய உரையைக் கூர்ந்து அவதானிக்கின்ற போது, இரண்டு முக்கியமான தொனிகள் பரிணமித்ததை காணக் கூடியதாக இருந்தது.
ஒரு புறம் முஸ்லிம் சமூகத்தின் நல்ல விடயங்களை பாராட்டுகின்ற அல்லது மெச்சுகின்ற வகையிலும் மறுபுறத்திலே சமூகத்திலே இருக்கின்ற சவால்களை கவனமாகச் சுட்டிக் காட்டி அதனை சரி செய்து கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவதாகவும் அந்த உரை அமைந்திருந்தது. அதன் மூலமாகத்தான் சமூகத்தினது எதிர்காலமும் நாட்டினது எதிர்காலமும் நல்லமுறையிலே அமைய முடியும் என்ற ஒரு தொனி அதில் வெளிப்பட்டது.
ஜனாதிபதி தனது உரையிலே முன்வைத்த முதன்மையான விடயம், அனைத்து சமய மக்களும் உண்மையான இலங்கையர்களாக மாற வேண்டும் என்ற வேண்டுகோளாகும். இரண்டாவதாக அனைத்து சமூகங்களும் வேறுபாடுகளை புறந்தள்ளி ஒன்றுபட்டு ஒரு நாட்டு மக்களாக வாழவேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார். அத்தோடு சமூக நீதி தொடர்பான ஓர் ஆணைக்குழு அமைக்கப்படும் என்றும் அந்த ஆணைக்குழுவில் அனைத்து சமூகங்களும் குறிப்பாக முஸ்லிம் சமூகமும் இணைந்து பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அடுத்ததாக எந்த சமயமும் தன்னைப் பின்பற்றும் மக்களை, மாறிவருகின்ற நவீன உலகுடன் வாழ்வதற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கவேண்டும், இதில் இருந்து எந்தவொரு சமயமும் தப்பிவிடமுடியாது என்பதை அவர் வலியுறுத்தினார்.
அடுத்ததாக சமயங்களின் நம்பிக்கைகள் வேறுபட்டாலும் எந்தவொரு சமயமும் வன்முறையை ஊக்குவிக்காது, ஊக்குவிக்கக் கூடாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் சுதந்திர இலங்கையின் கடந்த 75 வருடங்களில் சமூகங்களுக்கிடையே முரண்பாடுகள் நிலவி வந்தன. எதிர்வருகின்ற சுதந்திர தினத்திலிருந்து அந்த முரண்பாடுகளைக் களைந்து மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படவேண்டும் என்ற செய்தியையும் ஜனாதிபதி தனதுரையில் கூறியிருந்தார்.
இதிலே அவர் முஸ்லிம்களுக்கு எத்திவைத்த பின்வரும் விடயங்களை ஆழமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முதலாவது விடயம், மாறிவருகின்ற நவீன உலகத்தோடு, இலங்கை முஸ்லிம்களை இணைப்பதற்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், உலமா சபை போன்றவர்கள் பங்களிப்புச் செய்யவேண்டும் என்ற கருத்தை அவர் பிரதானமாக வலியுறுத்தினார். “1922 ஆம் ஆண்டளவிலே முதலாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உலகம் பெரும் மாற்றங்களை எதிர்நோக்கியபோது இஸ்லாமிய உலகத்திலே இருந்த கிலாபத் ஆட்சி முடிவுக்கு வந்தது. அச் சந்தர்ப்பத்திலே அதற்கான மாற்றீடுகளை பல பாகங்களிலும் இஸ்லாமிய உலகம் ஏற்படுத்திக்கொண்டு வந்தது. இந்தியாவிலும் இதற்கான பெரும் முயற்சிகள் இடம்பெற்ற அக்காலப் பகுதியில்தான் இலங்கையிலும் உலமா சபை உருவாக்கப்பட்டது. மத சாசனத்திலே (இறையியல்) உடன்பட்டவர்களால் அந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இறையியல் தொடர்பான மாற்றுக்கருத்துக்கள், விவாதங்கள், வேறுபாடுகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்த சவால்கள், இந்த விவாதங்கள் இன்றும் தொடர்கின்றன.
ஆனால் நாம் இன்று மிகவும் வித்தியாசமான உலகிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதாவது அன்று இருந்த உலகத்தைவிட வேறுபட்ட உலகமே இன்றுள்ளது. அன்று இல்லாத 150 புதிய நாடுகள் இன்று உருவாகியிருக்கின்றன. அன்று நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு விஞ்ஞானம், தொழினுட்பம் இன்று முன்னேற்றமடைந்திருக்கின்றது. என்றுமில்லாதவாறு இன்று உலகம் முழுவதும் அரசியல் உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமைகளாக பார்க்கப்படுகின்றன.’’
இந்த பின்னணியிலே தான் நாங்கள் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எதிர்காலத்தை வழிநடத்த வேண்டியிருக்கிறது.
இதிலே எல்லா சமயங்களுக்கும் ஒரு சமய அடிப்படை, கொள்கை, நம்பிக்கை இருக்கும். அது என்ன என்பதில் நமக்கு தெளிவிருக்க வேண்டும். இரண்டாவது எங்களது சமயத்தினுடைய தூய அர்த்தம் என்ன? என்பது தொடர்பான அடிப்படையையும் விளங்கியிருத்தல் முக்கியம். ஆனால் மாறிவருகின்ற நவீனத்துவத்துடன் எப்படி இதனைத் தொடர்புபடுத்துவது என்ற கேள்விக்கு விடை காணப்பட வேண்டும். நாங்கள் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகின்றவர்கள் என்ற வகையில் அந்த வழிகாட்டலை வழங்குகின்ற பொறுப்பு இருக்கிறது. அந்த வழிகாட்டல் வழங்கப்படாமல் எங்களால் முன்னோக்கிச் செல்லமுடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது.
சமயங்கள் பின்னோக்கிப் போக முடியாது. சமயங்களின் அடிப்படைகள் எவ்வாறு அமையவேண்டும் என்றால் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலங்களுக்கு பொருத்தமாக பாவிக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும். இது எல்லா சமயங்களுக்கும் பொருந்தும் எனக் கருதுகிறேன். உதாரணமாக பௌத்த சமயத்தை குறிப்பிட்டுக் காட்டலாம். இந்தியாவிலே ஒரு விவசாய நீர்ப்பாசன அடிப்படை இல்லாத நாகரிகத்திலே உருவான புத்தசமயம் இலங்கைக்கு வந்த பொழுது முழுமையாக இங்கு ஒரு விவசாய நீர்ப்பாசன நாகரீகத்திற்கு ஏற்றவாறு தன்னை ஒழுங்குபடுத்திக்கொண்டது. அதற்கு உரியவாறு தன்னை மாற்றிக்கொண்டது. இது ஒரு உதாரணம்.
இதே போன்று நாங்கள் எப்பொழுதும் நிகழ்காலத்திலே வாழ்ந்து கொண்டு எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும். கடந்த காலத்திலே வாழ்ந்து கொண்டு எதிர்காலத்தைப் பார்க்க முடியாது. இந்த அடிப்படைகளை வழிநடத்துகின்ற பொறுப்பு முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவங்களுக்கு, இஸ்லாமிய அறிஞர்களுக்கு உள்ளது. இதன் மூலம் நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டிய இன்னொரு அடிப்படையும் இருக்கிறது. அதாவது எங்களுடைய கடந்த காலம் எங்களுக்கு ஏனைய சமயங்களுடன் வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடக் கூடாது. இதற்கு இஸ்லாத்திலேயே சிறந்த உதாரணம் இருக்கிறது. அதாவது யூதர்களும் கிறிஸ்தவர்களும் பின்பற்றிய சமயத்தைத் தான் நபி (ஸல்) அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால் அவர் அதனை வெறுப்புணர்வோடு பார்க்கவில்லை. அவர்கள் அந்த சமயத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். அதாவது இஸ்லாத்தினுடைய மிக அடிப்படையான ஒரு பண்பும் ஒரு வரலாறும் தான் ஏனைய சமூகங்களுடன் இணைந்து செயற்படுவதாகும். இது இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முன்னேற்றகரமான பாராட்டத்தக்க அடிப்படை விடயம்.
இன்னுமொரு முக்கியமான விடயம்தான், நாங்கள் ரசூலுல்லாஹ்வின் காலத்தில் தான் வாழ வேண்டும், சவூதி காலம், மதீனா காலத்தில் தான் வாழ வேண்டும் என்று சொல்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் இருக்கின்றது.
நீங்கள் பக்தாத் தலைநகராக இருந்த காலத்தில் இருந்த நாகரீகம், அந்த காலத்தில் இஸ்லாம் உலகிற்கு கொடுத்த கண்டுபிடிப்புகள், முன்மாதிரிகள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? இஸ்லாம் வான சாஸ்திரம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் ஏற்படுத்திய அடைவுகள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? அத்தோடு ஸ்பெயின் போன்ற இஸ்லாமிய சாம்ராஜ்ஜியங்களின் வளர்ச்சிகள், காட்டிய முன்மாதிரிகள், அதன் கண்டு பிடிப்புகள், அவை உலகிற்கு கொடுத்த விளைவுகள் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? சுலைமான் அவர்களுடைய உதுமானிய சாம்ராஜ்ஜியத்தினுடைய அடைவுகளைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? இவை எங்களுடையவை அல்ல, இவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முனைகின்றீர்களா? மன்னர் அக்பரின் பேரர்கள் கூட தெற்காசிய, பசுபிக் பிராந்தியங்களை இணைப்பதற்கு மிகப்பெரிய பணியாற்றியவர்கள். இவ்வாறான பாரம்பரியமும் வரலாறும் இருக்கின்ற சமயத்திற்கு சொந்தக்காரரான நீங்கள் இவற்றை மறுக்கிறீர்களா? நீங்கள் எப்படி நவீனத்துவத்துக்கு மாறமாட்டோம் என்று கூற முடியும் என்பதை கேட்க விரும்புகிறேன்.
இஸ்லாம் சவூதியில் ஆரம்பித்திருந்தாலும் இன்று இஸ்லாமிய உலகைப் பார்த்தால், முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பிரதேசங்கள் மிகவும் வித்தியாசமானவை. தெற்காசியாவில் அதிகளவில் இருக்கிறார்கள், இந்தோனேசியா, தென் கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவில் வளர்ந்து வரும் மார்க்கமாக இஸ்லாம் காணப்படுகிறது. இவற்றை நாம் புரிந்து கொண்டு இஸ்லாம் எப்படி இந்த மாற்றங்களோடு ஏனைய இடங்களில் பணியாற்றுகின்றது என்பதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டியிருக்கிறது.
உதாரணமாக இங்கிலாந்திலே இந்து ஒருவர் பிரதமராக இருக்கின்றார். லண்டன் நகரத்தின் மேயராக ஒரு முஸ்லிம் இருக்கின்றார். ஆனால் அவர்கள் எங்களுடைய கலாசாரத்தை அங்கு பிரதிபலிக்கவில்லை. அவர்கள் இங்கிலாந்தினுடைய கலாசாரத்தையே பிரதிபலிக்கின்றார்கள். அவர்களுடைய நம்பிக்கைகள் அப்படியே இருக்கின்றன. ஆகவே நாம் இந்த நவீன உலக ஒழுங்குகளை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார்.
அடுத்து ஜனாதிபதி முக்கியமாக வலியுறுத்திய விடயம்தான் வன்முறையற்ற தன்மை. “அதாவது நாம் எவ்வாறு சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வது என்பது. அனைத்து சமயங்களும் தங்களது போதனைகளை பின்பற்றுபவர்களுக்கும் பின்பற்றாதவர்களுக்கும் தங்களுடைய நம்பிக்கைகளை, கொள்கைகளை போதிக்கின்றன. இவ்வாறு போதிப்பதிலே எந்தத்தவறும் கிடையாது. ஆனால் எங்களுடைய கொள்கைகளை பின்பற்றாதவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கின்றபோதுதான் அது பெரும் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. அடுத்த முக்கியமான விடயம்தான் சமயங்களுக்கு உள்ளே இருக்கின்ற சர்ச்சைகள். இது இஸ்லாத்தில் மட்டுமல்ல எல்லா சமயங்களிலும் இருக்கின்றது.
உதாரணமாக இன்று திருச்சபை பழமைவாத கிறிஸ்தவக் குழுக்களினால் பல சவால்களை எதிர்கொள்கின்றது. ‘சேர்ச் ஒப் இங்கிலண்ட்’ ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது இஸ்லாத்துக்கு மட்டும் பொதுவானதல்ல. ஆனால் இதை எவ்வாறு அந்த சமயங்கள் கையாளுகின்றன, புதிய மாற்றங்களை எவ்வாறு கையாளுகின்றன, எவ்வாறு அவை கலந்துரையாடப்படுகின்றன, எவ்வாறு அதற்கு தீர்வு காணப்படுகிறது என்பது தான் முக்கியமானது. இதன் அர்த்தம் எமது அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டும், மாற வேண்டும் என்பதல்ல.
இன்று சமயங்கள் வர்த்தகமயப்படுத்தப்பட்டுள்ளன. யுத்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றன. வெறுப்பையும் வன்ம உணர்வுகளையும் தூண்டுவதற்கான ஆயுதங்களாக சமயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை நாங்கள் அகற்றி இஸ்லாத்தின் அடிப்படை சாரம், அடிப்படை பொருளென்ன? என்பதனை தெளிவாக விளங்கி, சமயத்தை வர்த்தக மயப்படுத்தப்படுவதற்கு, யுத்தங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்கு, வெறுப்புணர்வுகளை தூண்டுவதற்கு உபயோகப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது” என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.
மூன்றாவது முக்கியமான விடயம்தான், ஜனாதிபதி தனது உரையில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் சம்பந்தமாகவும் கூறுகிறார். முஸ்லிம்களுக்கு உள்ள மிகப்பெரிய வளம் இந்த தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்று அவர் குறிப்பிட்டதுடன் இதனை ஒரு சமூகத்துக்கு மாத்திரமான, முஸ்லிம்களுக்கு மாத்திரமான பல்கலைக்கழகமாக பார்த்தால் அது பிழையான அணுகுமுறையாக அமையும் என்றும் அதை நவீனத்துவமான வளர்ச்சியடைந்த பல்கலைக்கழகமாக மாற்றுவதனூடாக நீங்கள் உங்களை வளர்த்துக்கொண்டு, நாட்டுக்கும் பங்களிப்புச் செய்யலாம் என்ற கருத்தை முன்வைத்தார். அப்படி இல்லாவிட்டால் பௌத்த பாளி பல்கலைக்கழகம் எப்படித் தனிமைப்படுத்தப்பட்டதோ, எவ்வாறு சிறிய வட்டத்துக்குள் சுருங்கிப்போனதோ அவ்வாறான ஒரு நிலைக்கு இந்த பல்கலைக்கழகமும் சென்றுவிடலாம் என்ற ஆபத்தை உணர்ந்து செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் முக்கியமான ஒரு விடயத்தை ஜனாதிபதி கூறியிருந்தார். இலங்கை முஸ்லிம்களுடைய செயற்பாடுகள் அவர்கள் பற்றிய அபிப்பிராயங்களில் கரும்புள்ளிகளை ஏற்படுத்திவிடாமல் கவனமாக பார்த்துக்கொள்வது முஸ்லிம்களின் பொறுப்பு என்ற கருத்தினை முன்வைத்தார். இதற்கு முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பான விடயத்தை உதாரணமாக காட்டினார். “முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக நிறைய வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ஆனால் அவை மிகவும் நாகரிகமான முறையில் அதை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் மத்தியில் நடக்கின்றது. அந்த விடயங்களில் நான் தலையிடமாட்டேன். ஏனென்றால் அது முஸ்லிம்களின் விவகாரம். நீங்களே அதை பேசி தீர்த்துக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். ஆனால் அதை கையாளுகின்ற பொழுது பிழையான அணுகுமுறைகளை கடைப்பிடிக்க கூடாது. உதாரணமாக அண்மையிலே அது தொடர்பான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைக் கண்டேன். அங்கு சிறுவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இது சிறுவர் உரிமைக்கு பாதகமானது மட்டுமன்றி இது முஸ்லிம்கள் பற்றிய நல்ல உருவகத்தை காண்பிக்கவில்லை. எனவே இவ்வாறான முஸ்லிம்களுக்கு கறுப்பு புள்ளியை ஏற்படுத்தக்கூடிய விடயங்களில் நீங்கள் ஈடுபட வேண்டாம். அவற்றை தடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது” என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இறுதியாக “முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு இருக்கின்ற நீண்ட கால பிரச்சினைகள், கவலைகளை தீர்த்து வைப்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம். இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவழி தமிழர்களுடன் பேசி அவர்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பது போல முஸ்லிம்களுடைய பிரச்சினைகளை தீர்க்க தயாராக இருக்கிறோம். கிழக்கு மாகாணத்திலே உள்ள முஸ்லிம்கள், கொழும்பிலே உள்ள முஸ்லிம்கள், தென் கிழக்கிலே உள்ள முஸ்லிம்கள், மன்னாரிலுள்ள முஸ்லிம்களுக்கு வெவ்வேறான பிரச்சினைகள் இருப்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். எனவே அப் பிரச்சினைகளை இனங்காண்பதற்கு சமூக நீதி ஆணைக்குழுவை நியமித்து, அதனூடாக ஆராய்ந்து தீர்ப்பதற்கு உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அந்த பிரச்சினைகளை தீர்க்க எடுக்கும் முயற்சிகளில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட அடிப்படையான காரணங்கள் என்ன? முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட விடயங்கள் இருந்தாலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற விடயங்களுக்கு காரணமாய் அமைந்தவை என்ன என்பதையும் ஆழமாக ஆராய்ந்து அவற்றை தீர்க்க முயற்சி செய்வோம். அதனைப்போன்று முஸ்லிம்களுக்கு எதிராக திகனவில் வன்முறைகள் நடப்பதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அந்த விடயங்களுக்கு தீர்வு காண்போம்” என்றும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே ஜனாதிபதியின் இந்த உரையில் முஸ்லிம்கள் விளங்கிக் கொண்டு எங்களை நாங்களே மீள ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டிய விடயங்கள், குறிப்பாக ஆழமாக இங்கு நான் சுட்டிக் காட்டிய விடயங்கள் இருப்பதை அவதானிப்பீர்கள். எனவே உரிய தரப்புகள் தலைமைகள், நிறுவனங்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா போன்ற அமைப்புகள், மற்றும் பிராந்திய ஜம்இய்யத்துல் உலமாக்கள் இவற்றை கவனம் செலுத்தி மாற்றத்தை கொண்டுவருவதற்காக எவ்வாறு செயற்படலாம் என்பதைப் பற்றி சிந்திப்பது காலத்தின் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.-Vidivelli