மாண­­வர்கள் ஆளுமைமிக்­க­வர்­க­ளாக வளரும் கள­மாக பாட­சா­லை­களும்  மத்­ர­சாக்­களும் மாற வேண்டும்

0 815

15.01.2023 அன்று காத்தான்குடி பிஸ்மி கலாசாலையின் வருடாந்த பரிசளிப்பு
விழாவில் இலங்கை தொழில்­நுட்ப பல்­க­லைக்­க­ழக முது­நிலை
விரி­வு­ரை­யாளர் கலா­நிதி எம்.சீ.ரஸ்மின் ஆற்­றிய உரையின் தொகுப்­பு

கல்வி பற்­றிய பெரும்­பா­லான உரை­யா­டல்கள் அதன் முக்­கி­யத்­து­வத்தை எடுத்­துக்­காட்­டு­வ­தா­கவே அமை­கின்­றன. புனித அல்­குர்­ஆனின் முத­லா­வது வச­னமே ‘இக்ரஹ்’ – என்ப­தா­ன­து கல்­வியை ஊக்­கு­விப்­ப­தாக அமை­கின்­றது என்­பதை அனே­க­மா­ன­வர்கள் அறிவோம். அத்­தோடு, கல்­வியைக் கற்­பது ஆண், பெண் இரு­பாலார் மீதும் கட்­டாயக் கட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது என்­பதும் அனேகர் அறிந்தது. அறிவைத் தேடிச்­செல்லும் ஒரு­வ­ருக்கு மலக்­குகள் பிரார்த்­தனை புரி­கின்­றனர் என்­பதும் அவ்வாறே. இவை யாவும் கல்­வியின் சிறப்பை எடுத்துக் கூறு­வ­தாகும். இத­னோடு அவ­தா­னிக்­கக்­கூ­டிய மற்­று­மொரு போக்கு முஸ்­லிம்­களின் அறி­வியல் பொற்­கா­லத்தில் (8-13 நூற்­றாண்டு வரை) அவர்கள்  விஞ்­ஞான வளர்ச்­சிக்கு ஆற்­றிய அதீத பங்­க­ளிப்­பினை மெச்­சிப்­பே­சு­வ­தாகும். உணர்­வு­பூர்­வ­மா­கவும்  ஓர­ளவு பெரு­மி­தத்­தோடும் அவ்­வாறு பேசப்­படும் விட­யங்­களில் பல அம்­சங்கள் உள்­ள­டங்­கு­கின்றன. குறிப்­பாக பாத்­திமா பிஹ்ரி என்­பவர் முதன் முதலில் பல்­க­லைக்­க­ழகம் கட்­டி­யது, இப்னு ஹைதம் கம­ராவைக் கண்­டு­பி­டித்­தது, அல் இத்ரீஸ் உலக வரை­ப­டத்தைக் கண்டு பிடித்­தது,  அப்பாஸ் பின் பர்னாஸ் பறக்கும் விமா­னத்தின் முன்­னோடிக் கண்டுபிடிப்பை  மேற்­கொண்­டது என்­ப­ன­வற்­றோடு இன்னும் பலவும் அடங்கும். இவை அதி­காரபூர்­வ­மாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட உண்­மைகள் என்­பதை மறுப்­ப­தற்­கில்லை. ஆனால், கல்வி வளர்ச்­சியில் குறிப்­பாக இலங்கை போன்ற நாடு­களில் வாழும் முஸ்­லிம்­களின் கல்வி வளர்ச்­சியில் மேலே குறிப்­பிட்ட விஞ்­ஞா­னத்­துறைப் பங்­க­ளிப்பின் செல்­வாக்கும் தாக்­கமும் வீச்சும் எவ்­வாறு உள்­ளது என்­பதே எம்­முன்­னுள்ள கேள்­வி­யாகும்.

பாட­சாலைக் கல்­வித்­திட்­டத்­திற்குள் முஸ்­லிம்­களின் அடைவு மட்டம் கூடு­த­லா­கவோ குறை­வா­கவோ இருக்­கலாம். ஆனால் தகவல் தொடர்­பாடல் தொழி­நுட்பம் வளர்ந்து,  உலக மய­மாக்­கத்தின் தாக்கம் தேச எல்லை கடந்து வியா­பித்து, விஞ்­ஞான வளர்ச்சி சிகரம் தொட்டு முஸ்­லிம்­களின் அர­சியல்– பொரு­ளா­தார– சமூக இருப்பு தேசி­ய-­ சர்­வ­தேச மட்­டத்தில் சவா­லுக்கு முகங்­கொ­டுக்கும் யுக­மொன்றில் சம­கா­லக்­கல்வி முறை தெளி­வான போதா­மை­களைக் கண்­டுள்­ளது என்­பதை குறிப்­பிட்­டாக வேண்டும்.

அத்­தோடு, பல தசாப்­தங்­க­ளாக ஒரு குறிப்­பிட்ட வரை­ய­றைக்குள் வளர்ந்து வரும் மத்­ர­சாக்­கல்வி முறையும் பல போத­னை­களைக் கொண்­டுள்­ளது. ஒரு சில மத்­ர­சாக்­க­ளைத்­த­விர பெரும்­பா­லா­னவை காலத்­திற்குத் தேவை­யான முஸ்லிம் ஆளு­மை­களை உரு­வாக்கும் ஆற்றல் இல்­லா­தி­ருக்­கின்­றன.  மத்­ர­சாக்­களின்  குறை­பா­டு­களை விப­ரிப்­பது எனது நோக்­க­மல்ல. ஆனால், இவ்­விரு கல்வி முறை­களும் வெறு­மனே மனப்­பாடம் செய்து ஒப்­பு­விக்க வழி­காட்­டு­கின்­றன. பரீட்­சைகள் வெறு­மனே மாண­வர்­களின் கிர­கித்­த­லையும் அறிவு மட்­டத்­தையும் சோதிப்­ப­தாக உள்­ளன. சவால்­மிக்க உல­கத்தில் மாண­வர்­களின் தர்க்­க­ரீ­தி­யான சிந்­தனை, புத்­தாக்க இய­லுமை, நடை­மு­றைக்குச் சாத்­தி­ய­மான தீர்­வு­களை பிர­யோக ரீதி­யாக முன்­வைக்கும் ஆற்றல், பிரச்­சி­னை­களை ஆக்­க­பூர்­வ­மா­கவும் வாய்ப்­பா­கவும் எதிர்­கொள்ளும் இய­லு­மைகள் என்­பன பெரும்­பாலும் சோதிக்­கப்­ப­டு­வ­தில்லை. இத்­த­கைய ஆற்­றல்­களை போதி­ய­ளவு பெற்­றுக்­கொள்ளும் அவ­கா­சமும் மேற்­சொன்ன இரு கல்வி முறை­யிலும் கிடைப்­ப­தில்லை. இக்­கல்வி முறை பரீட்­சையில் அதி­கப்­புள்­ளி­களைப் பெறும் மாண­வ­னையே ‘புத்­தி­சாலி’ எனக் கட்­ட­மை­க்கின்­றது. இது ஒரு பாரிய துர­திர்ஷ்டம்.

இந்த இடத்தில் ஒரு குட்­டிக்­க­தையை – உண்­மை­யாக நடந்த சம்­பவம் ஒன்றைப் பதிவு செய்­வது முக்­கி­ய­மாகும். 2015 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முஸ்லிம் பாட­சாலை ஒன்றில் அரங்க நாடக நிகழ்ச்­சி­யொன்­றிற்­காக சென்­றி­ருந்தோம். அப்­போது நாடகக் குழுவில் உள்­ள­வர்­களை அதிபர் இன்­மு­கத்­துடன் வர­வேற்றார்.

ஆனால், அன்­றைய தினம் பாட­சா­லையில் மற்­று­மொரு நிகழ்ச்சி இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­ததால் அதி­பரும் ஏனைய ஆசி­ரி­யர்­களும் மிக வேலைப் பளு­வோடு ­இ­ருந்­தனர்.
நாட­கக்­கு­ழு­வினர் எந்த அறையில் தங்­கு­வது, எங்கே தண்ணீர் எடுப்­பது, மல­ச­ல­கூடம் எங்­குள்­ளது, மாண­வர்கள் படித்துக் கொண்­டி­ருக்­கும்­போது நாட­கக்­குழு உறுப்­பி­னர்கள் எவ்­வாறு வெளியில் செல்­வது, எங்கே நாட­கத்­திற்­கான ஆடை­களை மாற்­றிக்­கொள்­வது என்­பது தெரி­யா­ம­லி­ருந்­தது.

அப்­போது, ஒரு சிறுவர் உள்ளே வந்தார். தண்ணீர் கொண்டு வந்து தந்தார். மல­ச­ல­கூ­டத்­திற்­கான வழியைக் காட்­டினார். பக­லு­ணவு பற்றி விசா­ரித்தார். ஒரு அறைக்குள் அதனை மூடி­ய­படி நாட­கத்­திற்­கு­ரிய ஆடை­களை மாற்­றிக்­கொள்ள உத­வினார். அதற்­காக மேசை விரிப்பு ஒன்றை பயன்­ப­டுத்­தினார். இடை­யி­டையே நாட­கக் ­க­லை­ஞர்­களின் பொருட்­களைக் கையி­லெ­டுத்துப் பார்த்தார். அரு­கி­லி­ருந்த தப்­லாவை இரண்டு தட்­டு­தட்­டினார். சாப்­பிட்ட பின் எஞ்­சிய குப்­பை­களை அகற்ற ஏற்­பாடு செய்தார்.

இந்தப் பையன் பாட­சாலை அதி­பரின் மக­னாக அல்­லது சொந்­தக்­காரப் பிள்­ளை­யாக இருக்க வேண்டும் என்­பதை நான் உணர்ந்து கொண்டேன்.

நாடகம் அரங்­கே­றி­யது. மக்கள் அரங்­கத்தில் நடி­கர்­களின் நடிப்பை பாத்­தி­ரத்தை மாற்றி ரசி­கர்கள் நடித்­துக்­காட்ட வேண்டும். அது மக்கள் அரங்­கத்தின் பண்பு. அப்­போது அதே சிறுவன்  அடிக்­கடி மேடை­யேறி பாத்­தி­ர­மேற்று நடித்தார். மாற்­றப்­பட வேண்­டிய சந்­தர்ப்­பங்­களை விப­ரித்தார். நாடகம் நன்­றா­கவே நடந்து முடிந்­தது.

நாம் பாட­சாலை அதி­பரின் அறைக்குச் சென்றோம். அவ­ருக்கு மிகவும் சந்­தோஷம். ஆசி­ரி­யர்­களும் அவ்­வாறே. அப்­போது எமக்கு உத­வி­யாக இருந்து, நாடக அரங்­கத்­தின்­போது அடிக்­கடி மேடை­யேறி  திற­மை­களை வெளிக்­காட்­டிய சிறுவன் பற்றி நான் கேட்டேன்.
அதிபர் அந்தப் பையன் யார் என உங்­களால் சொல்ல முடி­யுமா? என்றார். நிச்­ச­ய­மாக அவர் உங்­க­ளது மக­னாக இருக்க வேண்டும் அல்­லது ஆசி­ரி­ய­ரு­டைய மக­னாக இருக்க வேண்டும்  என்றேன்.  அப்­போது அதிபர் சொன்ன விடயம் என்னை ஆச்­ச­ரி­யத்தில் ஆழ்த்­தி­யது.

“அவன் ஒரு மாட்டு யாவா­ரியின் மகன். அவனை நாம் பாட­சா­லை­யி­லி­ருந்து விலக்கி வைத்­தி­ருக்­கின்றோம். அவனின் அட்­ட­காசம் தாங்க முடி­யாது. எல்­லோ­ரு­டனும் சண்டை போடுவான். ஒரு இடத்தில் இருக்கமாட்டான். புத்­தி­மதி சொல்­லவும்  பயம். ஒழுக்­க­மில்­லாத பிள்ளை என்­பதால் ஸ்கூலுக்கு வர­வேணாம் என்று சொல்­லி­யி­ருக்­கிறோம்” என்ற அதிபர் சிறிது நேரம்  என்னைப் பார்த்­து­விட்டு “34 வருட ஆசி­ரிய சேவையில் இருக்கும் நான் ­இ­வ­னுக்குள் மறைந்­தி­ருந்த ஆற்­ற­லையும் இய­லு­மை­யையும் புரிந்து கொள்ள முடி­யாமல் போய்­விட்டேன்” என  வருந்­தினார். இது சம­கால கல்வித் திட்டம் எங்கே செல்­கின்­றது என்­பதை எடுத்­துக்­காட்டும் ஒரு சிறிய சம்­பவம் மாத்­தி­ரமே. இக்­கல்வி முறையில் சில­போது சமுக ஆளுமை கொண்ட தலை­வர்கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­தில்லை. மாறாக, அழிக்­கப்­ப­டு­கின்­றனர் என்­பதை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.

அதிக புள்­ளி­களை எடுக்க வேண்டும் என்­பது பல மாண­வர்­களின் வாழ்வில் ஒரு போராட்­ட­மாக மாறி­விட்­டது. குறைந்த புள்­ளி­களை எடுக்கும் மாண­வர்கள் வீட்­டிலும் பாட­சா­லை­யிலும் அவ­ம­திப்பு, குத்­திக்­காட்­டுதல், ஒப்­பிட்­டுப்­ பே­சுதல் போன்ற செயற்­பா­டு­களால் உளம் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். கல்வி ஒரு­வரின் ஞாபக சக்­தி­யையும் வெளிப்­பாட்­டுத்­தி­ற­னையும்  மாத்­திரம் மதிப்­பி­டு­வதால் சமூ­கத்­திற்கு பிர­யோ­ச­ன­மான இய­லு­மைகள் பல­வற்றைத் தன்­ன­கத்தே கொண்ட மாண­வர்கள் காலந்­தோறும் இலை­மறை காய்­க­ளாக வாழ்­கின்­றனர்.

குறைந்த புள்­ளி­களை எடுத்தால் வீட்டில் ‘அடி விழும்’ என்­பதால் வகுப்­பா­சி­ரி­யரின் பரீட்சை புள்­ளிகள் பதிவு செய்­தி­ருந்த தாளில் இர­க­சி­ய­மாக மாற்­றங்­களைச் செய்து தனது புள்­ளியை அதி­க­ரித்­துக்­கொண்ட மாணவன் பற்றிக் கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம்.
குறைந்த புள்­ளி­களை எடுத்து அவ­மா­னப்­பட வேண்டும் என அஞ்சி மாண­வர்கள் தற்­கொலை செய்து கொண்ட சம்­ப­வங்கள் பல­வற்றை படித்­தி­ருக்­கிறோம். டியுசன் பெக்­ட­ரி­களால் மன உளைச்­சல்­க­ளுக்கு ஆளாகி ஓய்வே இல்­லாமல் மன­நிலை பாதிக்­கப்­பட்ட பல மாண­வர்­க­ளது சம்­ப­வங்­களை கேள்­விப்­பட்­டி­ருக்­கிறோம். ஆசி­ரியர் தனக்குத் தெரிந்­ததை மாண­வ­னுக்குச் சொல்­லிக்­கொ­டுக்­கின்றார். சொல்­லிக்­கொ­டுத்­ததை மாணவன் கிர­கித்துக் கொண்­டாரா என்­ப­தையும் சோதித்துப் பார்க்­கின்றார். இத்­த­கைய கல்வி முறை சமூ­கத்தில் மறைந்­தி­ருக்கும் ஆளு­மை­களை புடம்­போட்டு வளர்ப்­பதில் மிகக்­கு­றை­வா­கவே பங்­க­ளிப்புச் செய்­கின்­றது.

பாட­சாலை மற்றும் மத்­ர­சாக்­களின் கல்வி முறை மாண­வர்கள் திறன் விருத்தி, ஆளுமை விருத்தி, நுண்­ண­றிவு விருத்தி போன்­ற­வற்றில் கரி­சனை காட்­டும்­போது நாம் எத்­த­கைய உல­க­மொன்­றுக்கு மாண­வர்­களை அனுப்­பி­வைக்­கின்றோம் என்­பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முன்னர் குறிப்­பிட்­டது போல அதி­தீ­வி­ர­மாக வளர்ந்து வரும் விஞ்­ஞான தொழில்­நுட்ப உலகில் சிறு­வர்­களும் நாமும் தனித்து வாழவோ, மறைந்து வாழவோ  முடி­யாது.  உலகில் பல நாடு­களின் அர­சியல் தலை­வி­தியை  ஆயுதத் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களும், இரா­ணுவப் போராட்­டக்­கு­ழுக்­க­ளும் ­தீர்­மா­னிக்­கின்­றன.  முழு உலகும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான போட்­டியில் பகி­ரங்­க­மாக ஈடு­ப­டு­கின்­றன.  பொரு­ளா­தாரப் பலமே உலகின் இயக்­கத்தை தீர்­மா­னிக்­கின்­றது. மேற்­கு­லக மற்றும் பூகோள அர­சியல் சக்­திகள் சாதா­ரண மக்­களின் வாழ்க்­கையை கஷ்­டத்­திற்கு உள்­ளாக்கி வரு­கின்­றன.

அமெ­ரிக்க இரட்டைக் கோபுரத் தாக்­குதல் (9/11)  இலங்­கையில் இடம் பெற்ற (2019/ ஏப்ரல்) உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் என்­பன சர்­வ­தேச ரீதி­யிலும் தேசிய மட்­டத்­திலும் முஸ்­லிம்­களை ‘ஆபத்­தான சமூ­க­மாக’ கட்­ட­மைத்­து­விட்­டன.  முஸ்லிம் சமூ­கத்தில் இளை­ஞர்கள் என்­று­மில்­லா­த­வா­றான உள­வியல் போராட்­டத்தை எதிர்­கொள்­கின்­றனர். “உலகம் கொசுவின் இறக்­கைக்கும் மதிப்­பற்­றது” எனக்­க­ருதி எதிர்க்க வரும் உல­கத்­தி­லி­ருந்து பதுங்­கியோ, மறைந்தோ, வில­கியோ வாழ முடி­யாது. முறை­யான கல்வி மூலம் இத்­த­கைய உலகை சாது­ரி­ய­மாக எதிர்­கொண்டு தம்­மையும் சமூ­கத்­தையும் பல­மாக முன்­னி­றுத்திக் கொள்­வது சகல சிறு­பான்மை மக்­க­ளுக்கும் கட்­டா­ய­மா­னது.

பாட­சாலை மற்றும் மத்­ர­சாக்­கல்வி முறை­களை மாற்ற வேண்­டி­யது கட்­டா­ய­மா­னது. பல பாட­சா­லைகள் மரம் நடுகை, சிர­ம­தானம், விளை­யாட்டு, கலை நிகழ்ச்­சிகள், மாணவர் மன்றம் மற்றும் பல இணைப் பாட­வி­தா­னங்­களில் கரி­சனை காட்­டு­கின்­றன. எனினும்  ஒப்­பீட்டு ரீதியில் பார்க்­கின்­ற­போது அதிகம் புள்ளி எடுக்­கிற மாண­வர்­களை வளர்த்­து­வி­டு­வ­தி­லேயே அதிக நேரத்தைப் பாட­சா­லைகள் செல­வ­ழிக்­கின்­றன.

சம­கால உல­கத்தை எதிர்­கொள்ள மாண­வர்கள் தொழில்­நுட்­பத்தைக் கையி­லெ­டுக்க வேண்டும். தொழில்­நுட்­பத்தை துறந்து அதிகம் சாதிக்க முடி­யாது.  ஒவ்­வொரு மாண­வரும் பதின்ம வயதை அடை­கின்ற போது தமது பொரு­ளா­தா­ரப்­பாதை எது என்­பதை தீர்­மா­னித்து அதற்­குண்­டான திறன்­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். தொழி­நுட்ப அறிவு பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மை­யுடன் இணைந்து வள­ரும்­போது  அதன் சக்தி அலா­தி­யா­னது.

இவற்­றோடு பன்­மைத்­துவ நுண்ணறிவு, சமூக, உளவியல், சூழலியல் நுண்ணறிவுகளும் இன்றியமையாதன.

முஸ்லிம் மாணவர்களைப் பொறுத்தவரை பன்மைத்துவ ஆளுமை, ஆய்வுத்திறன், இலங்கை முஸ்லிம் வரலாறு, கலாசார மற்றும்  பண்பாட்டு ஈடுபாட்டுத்திறன் என்பன திட்டமிட்ட அடிப்படையில் வழங்கப்படல் கட்டாயமாகும்.

இத்தகைய எந்தவொரு அறிவும் சமயக் கண்­ணோட்­டத்தில் பார்க்­கும்­போது இறை­வனின்  பொருத்­தத்தை பெற்­றுத்­த­ரு­வ­தாக அமை­வது எல்­லா­வற்­றை­யும்­வி­டவும் முக்­கி­ய­மா­னது. வைத்­தி­ய­ரா­கவோ, பொறி­யி­ய­லா­ள­ரா­கவோ, ஆசி­ரி­ய­ரா­கவோ வர வேண்டும் என்ற சிறிய இலக்­கு­க­ளுடன் சேர்ந்த புத்­தாக்­கங்­களை துணி­வுடன் மேற்­கொண்டு சமூக ஆளுமை மிக்­க­வர்­க­ளாக வளரும் கன­வுக்­கான கள­மாக பாட­சா­லை­களும்  மத்­ர­சாக்­களும் மாற வேண்டும்.

வீடுகள் நிபந்­த­னை­யற்ற அன்­பையும் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொ­டுக்­கா­த­வரை, ஆசி­ரி­யர்கள் மாண­வர்­களின் மனங்­களை வென்று, அவர்­களின் கன­வு­களை நிஜப்­ப­டுத்தி, அவர்­க­ளது இலட்­சி­யத்தில் பங்­கா­ளி­க­ளாக வரா­த­வரை, எம்மை நோக்­கி­வரும் சிக்­க­லான உலகம் எம்­மிடம் எதனை எதிர்­பார்க்­கின்­றது என்­பதை புரிந்­து­கொள்­ளா­த­வரை, இஸ்­லா­மியக் கல்­வியின் நோக்கம் இறைவனை நெருங்குவது என்பதை விளங்கிக்கொள்ளாதவரை மாணவர்கள் எதிர்காலத்தை கையிலெடுக்க முடியாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.