புலனாய்வு, சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு விவகாரங்களில் வருந்தத்தக்க வகையில் நடந்தமைக்கு உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி
அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பு குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர்
புலனாய்வு, சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களில் வருந்தத்தக்க வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் உச்ச நீதிமன்றம் தனது ‘அதிர்ச்சி மற்றும் கலக்கத்தை’ வெளியிட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அடிப்படை உரிமை மீறல் வழக்குக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வரலாற்று ரீதியான தீர்ப்பு என பரவலாக சிலாகிக்கப்படும் உச்ச நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பின் முடிவுரைக் குறிப்புகளில் பின்வருமாறு தெளிவான மற்றும் ஊடுருவும் வார்த்தைகளால் குறிப்பிடப்பட்டுள்ளது: “…பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு தொடர்பான விவகாரங்களில் வருந்தத்தக்க வகையில் காணப்பட்ட செயலறு நிலை மற்றும் மேற்பார்வையின்மை தொடர்பில் நாம் எமது அதிர்ச்சி மற்றும் கலக்கத்தை வெளியிட்டாக வேண்டும்.”
இந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் எழுவர் அடங்கிய நீதிபதிகள் குழாமுக்கு பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமை வகித்திருந்தார். அனைத்து தரப்பினராலும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட சான்று ஆவணங்களை உணர்ச்சிகளுக்கு கட்டுப்படாமல் பகுப்பாய்வு செய்ததன் மூலம் இந்த முக்கியமான அமைப்புகளுக்குள் நிலவும் ‘வருந்தத்தக்க’ விவகாரங்கள் தேசத்தின் முன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளில் ‘சட்டமியற்றல்’, ‘கட்டமைமைப்பு’ மற்றும் ‘நிருவாக’ மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்குள் ‘மூலோபாய ஒருங்கிணைப்பு’, ‘நிபுணத்துவம்’ மற்றும் ‘தயார்நிலை’ என்பவற்றில் காணப்படும் இடைவெளிகள் காரணமாக தவிர்க்கத்தக்க ‘இறப்பு மற்றும் அழிவை’ நாடு எதிர்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலிழப்புக்கள் “பல் கலாச்சாரம் மற்றும் பல மதங்களின் ஆசீர்வாதம் கொண்ட நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு துடைக்கப்பட முடியாத கறையை ஏற்படுத்தியுள்ளது…” (பக்கம் 120) என தனது கவலையை வெளியிட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு பேரவை (NSC) சட்டபூர்வமான நிலைப்படுத்தலைக் கொண்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்பின் பல ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மேலதிகமாக, உச்ச நீதிமன்றம் 1865 ஆம் ஆண்டின் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 56 ஆம் பிரிவை மேற்கோள் காட்டியுள்ளது, பொலிஸ் அதிகாரிகளின் “கடமைகள் மற்றும் பொறுப்புக்கள்” பற்றிய இப்பிரிவில் அனைத்து குற்றங்கள் மற்றும் பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் ‘தடுக்க’ ஒவ்வொரு பொலிஸ் அதிகாரியும் “தனது சிறந்த நடவடிக்கைகள் மற்றும் இயலுமைகளைப் பயன்படுத்த” வேண்டியதுடன் அனைத்து உத்தரவுகள் மற்றும் ஆணைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 99). உச்ச நீதிமன்றத்தின் இக்கண்டறிதல்கள் எதிர்காலத்தில் சாத்தியமான அனைத்து மனிதப் பேரழிவுகளையும் தடுக்க அரசாங்கத்தினால் அவசர தீர்வு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதைக் கோரி நிற்கின்றது.
பாதுகாப்பு தொடர்புடைய விடயங்கள் சில சமயங்களில் ‘இரகசியமானவை’ என முத்திரை குத்தப்பட்டு அவை பொதுமக்களின் உரையாடல்களுக்கு, சில வேளைகளில் நீதிமன்றங்களின் செயற்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயங்களாக ஆக்கப்படுகின்றன. சட்டமா அதிபர், நீதிமன்றங்கள் மற்றும் பொதுச் சேவைகள் என்பன கேள்விக்குட்படுத்தப்பட முடியாமல் இயங்கும் நிலையையும் அவதானிக்க முடிகின்றது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), தேவாலயம் மற்றும் ஏனைய பல தரப்புக்கள் தாக்கல் செய்யும் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் காரணமாகவே இவ்விடயங்கள் பொதுமக்களின் மீளாய்வுக்கு கிடைக்கின்றன. இதன் மூலமாக, சாத்தியமான எதிர்காலப் படுகொலைகளைத் தடுக்கவும் தொடர்புடைய அதிகார சபைகளை எச்சரிக்கை விடுக்கவும் உச்ச நீதிமன்றத்துக்கு வாய்ப்பு கிடைக்கின்றது.
தேசிய பாதுகாப்பு பேரவை மற்றும் அரச புலனாய்வுச் சேைவ (SIS) போன்ற தொடர்புடைய அமைப்புகள் வழமையாக வெளிநாடுகளின் உள்ளீடுகளில் தங்கியிருப்பது உறுதியான விடயமாகும். சட்டரீதியாக இவ்வமைப்புகள் பாராளுமன்றத்துக்கு வகை கூறுவனவாக ஆக்கப்பட வேண்டும். உள்ளக மற்றும் வெளியக பாதுகாப்பு முகவர் அமைப்புகள் மற்றும் நபர்களால் இவ்வமைப்புகளுக்கு பிழையான மற்றும் மோசடியான புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்ட பல சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன. காலத்துக்கு காலம் வெளிநாட்டு சார்பு அமைப்புக்களால் வழங்கப்பட்டு ஊடகங்களால் வெளியிடப்பட்ட பல பிழையான அறிக்கைகள் பாதுகாப்பு அமைச்சினால் பிழை என நிரூபிக்கப்பட்ட சம்பவங்களும் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுள்ளன. எவ்வாறாயினும், துல்லியமான அறிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை கவலைக்குரியதாகும்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரி ஸஹ்றான் ஹாஷிமுக்கு பாதுகாப்பு முகவர் அமைப்புகளால் பணம் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தும் அறிக்கைகள் காணப்படுகின்றன, அவை முற்றுமுழுதாக பிழையான அறிக்கைகளாக இருக்கலாம். எனினும், அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகவும் மோசமான விடயங்கள் பற்றிய உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட்ட எட்டு தற்கொலைக் குண்டுதாரிகளின் தொலைபேசித் தொடர்பாடல்களில் ஒருவரின் தொடர்பாடலைத் தவிர்த்து ஏனையோரின் தொடர்பாடல்கள் காணப்படாமல் இருப்பது மர்மமான புதிராகவுள்ளது. கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட நபரின் மனைவியான சாரா என அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ள மற்றும் அவரை இந்தியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டு வர எந்த வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த பிரதம பொலிஸ் பரிசோதகர் வழங்கிய சான்றுகளின் பிரகாரம் அவர் செப்டம்பர் 2019 இல் இந்தியாவுக்கு கடல் மூலமாக தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
வகை கூறாத வகையில் அரசாங்கத்துக்குள் இயங்கும் ‘ஆழமான அரசாங்கம்’ சில வேளைகளில் அரசியல் மற்றும் வேறு நோக்கங்களுக்காக துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு வகை கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பன அவசியமாகின்றன.
புலனாய்வாளர்கள் வழங்கும் விடயங்களின் அடிப்படையில் நன்னம்பிக்கையுடன் சட்டமா அதிபர் செயற்படுகின்றார். சில நேரங்களில் அவர்கள் வழங்கும் விடயங்கள் பிழையானவையாக அமைகின்றன. அவ்வாறான விடயங்களை நீதிமன்றங்கள் நிராகரித்த பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. ‘சட்டத்தின் ஆட்சியே’ எப்போதும் உச்சமானது என்பதில் கவனத்தை திருப்புமாறு உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை கோரி நிற்கின்றது.- Vidivelli