(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சும் இலங்கை அரசும் இவ்வருடத்துக்கான ஹஜ் உடன்படிக்கையில் கடந்த 9 ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ள நிலையில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஹஜ் முகவர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்புச் செய்யும் வரை ஹஜ் யாத்திரைக்காக எவரிடமும் முற்பணம் செலுத்த வேண்டாம் என ஹஜ் முகவர்கள் சங்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹஜ் உப முகவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிலர் மக்களை ஏமாற்றி, குறைந்த கட்டணத்தில் ஹஜ் ஏற்பாடுகளை செய்து தருவதாக முற்பணம்பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹஜ்முகவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜி.எம். ஹியாம் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
உத்தியோகப்பற்றற்ற முறையில் ஹஜ் யாத்திரைக்காக முற்பணம் செலுத்துவோருக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமோ அல்லது ஹஜ் முகவர்கள் சங்கமோ பொறுப்பாகமாட்டாது என்றும் அவர் கூறினார்.
இவ்வருடத்துக்கான இலங்கை மற்றும் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சின் உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜித்தாவில் நடைபெற்ற உடன்படிக்கை கைச்சாத்திடும் வைபவத்தில் சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் பி.எம்.அம்சாவின் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். சவூதி அரேபியாவின் சார்பில் ஹஜ் மற்றும் உம்ரா பிரதியமைச்சர் கலாநிதி அப்துல் பத்தாஹ் பின் சுலைமான் மஸாத் கலந்து கொண்டிருந்தார்.
இதேவேளை இவ்வருடத்துக்கான ஹஜ் கட்டணம் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என ஹஜ்முகவர்கள் சங்கத்தலைவர் ஹியாம் தெரிவித்தார். கடந்த வருடத்தை விட இவ்வருடம் ஹஜ் கட்டணம் அதிகரித்துக் காணப்படும் எனவும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த வருடம் கொவிட் தொற்று 19 நோய் பரவல் காரணமாக ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது. கடந்த வருடம் 9 இலட்சம் மக்களே ஹஜ் யாத்திரையை மேற்கொண்டனர். இவ்வருடம் மில்லியன் மக்களுக்கு ஹஜ் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அதனால் ஹோட்டல் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் என்பன அதிகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. அதனால் ஹஜ் கட்டணம் இதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்றார். – Vidivelli