உணவு பாதுகாப்பு திட்டத்தை அமுல்படுத்த பள்ளி நிர்வாகங்கள் ஒத்துழைக்க வேண்டும்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள்
(எம்.வை.எம்.சியாம்)
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் உணவு பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகங்கள் செய்ய வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உணவுப் பற்றாக்குறையை போக்குவதற்காகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடு காரணங்களுக்காகவும் உணவு வங்கி மற்றும் உணவுப் பரிமாற்றச் சங்கங்களை உருவாக்குமாறு ஜனாதிபதி செயலகத்தின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு பணிப்புரை விடுத்துள்ளது.
புத்தசாசன மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் ஊடாக ஜனாதிபதி செயலகம் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் உணவு வங்கி உணவுப் பரிமாற்றச் சங்கங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அதன்படி மேலதிக உணவு உள்ளவர்களில் இருந்து உணவுத்தேவை உள்ள குடும்பங்களுக்கும் சரியான உணவு இல்லாமல் அவதிப்படும் குடும்பங்களுக்கும் உணவை வழங்க விரும்புவோர் வழிபாட்டு தலங்கள் மூலம் அத்தகைய உணவை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது
இது தொடர்பாக திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் வரும் பகுதியில் உள்ள ஜமாஅத் உறுப்பினர்களிடமிருந்து அதிகப்படியான உணவுகளை சேகரித்து தேவைப்படுபவர்களுக்கு விநியோகம் செய்வதற்கான வேலைத் திட்டத்தை அனைத்து பள்ளிவாசல் நிர்வாகமும் ஏற்பாடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மத நிறுவனங்களின் தலைமை பொறுப்பாளர்கள் (நம்பிக்கையாளர்கள் நிறுவன நிர்வாகிகள்) நிகழ்ச்சி திட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உயர்தர பரீட்சை முடித்தவர்களுக்கு மற்றும் அஹதியா பாடசாலை மாணவர்கள் உள்ளடக்கிய வகையில் சங்கங்களை உருவாக்குதல், உணவு பரிமாற்ற சங்கங்களை நடத்த ஒரு முகாமையாளரை நியமித்தல், நிர்வாக நிபுணரின் உதவிகளுக்கான செயல்பாட்டு முறைகள் தொடர்பில் தரவு சேகரித்து வைத்திருத்தல், உணவைப் பெறுதல் மற்றும் உணவு சேமிப்பு மற்றும் கணக்கியல் அமைப்புகளைத் தயாரித்தல் உள்ளிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். மேலும் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்தல், கணக்காய்வு மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு அமைப்பைத் தயாரித்தல், பள்ளியில் ஒரு சிறிய தனி அறையை ஒதுக்குதல், செயல்பாட்டு அமைப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அப்பகுதியில் வசிப்பவர்களுடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தல் என்பவற்றையும் பள்ளிவாசல் நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டும்.
அப்பகுதியில் உள்ள நன்கொடையாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வணிக சமூகம், நலன் விரும்பிகளுக்கு அழைப்பு விடுத்தல், கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற தேவையுள்ள குடும்பங்கள் மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை வழக்கமான பயனாளிகளாகப் பதிவு செய்து அவர்களுக்கு வழங்குதல் என்பவற்றை ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவு சேமிப்பு கூடைகள், மேசைகள், காகிதங்கள், கொள்வனவு பைகள் போன்ற அடிப்படை பொருட்களை வழங்குதல், ஒவ்வொரு கிராம மட்டத்திலும் திட்டம் தொடர்பாக வழக்கமான பேஸ்புக் விளம்பர பிரசாரங்களை உருவாக்குதல் மற்றும் சங்கங்கள் ஆரம்பித்தல், வருடாந்த செயல்திறன் அறிக்கைகளைத் தயாரித்து நன்கொடையாளர்கள் நலன் விரும்பிகள் மற்றும் பயனாளிகளுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தை மேற்பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள தேவையான குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்த பள்ளிவாசல், தக்கியாக்கள் மற்றும் சாவியா ஆகியவற்றின் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தல் ஆகியன இவற்றுள் உள்ளடங்குகின்றன என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.- Vidivelli