ஏ.ஆர்.ஏ.பரீல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் நாட்டில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அரசு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கான காய் நகர்த்தல்களை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.
இவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹேவா, இம்மாத இறுதியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படுமென அறிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு ஒன்று கூடி இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் வேட்பு மனுக்கள் கோரும் அரசாங்க வர்த்தமானி இம்மாத இறுதியில் வெளியிடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு மீது
நம்பிக்கை இல்லை
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சி ஹோவா உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எத்தனை அறிக்கைகள் வெளியிட்டாலும் உறுதி மொழிகள் வழங்கினாலும் எதிர்க்கட்சி அவற்றை நம்புவதாகத் தெரியவில்லை. இறுதி நேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு கைவிரித்து விடுமென்றே அவர்கள் நம்புகிறார்கள்.
இந்நிலையிலே அரசியலமைப்பு மற்றும் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தவிசாளரும் சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்குக் கிடையாது. சூழ்ச்சிகளால் தேர்தலைப் பிற்போட ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான இந்த அரசாங்கத்துக்கு மக்களாணை கிடையாது. மக்கள் மத்தியில் செல்வதற்கு அச்சமடைந்து அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத்தேர்தலை பிற்போடுவதற்குப் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டுவருகிறது. தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு சட்டத்தின் ஊடாகப் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சி நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அடிப்படை கோட்பாடுகளுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் இரண்டு ரிட்மனுக்களை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்துள்ளன.
முதலாவது மனுவை சுதந்திர மக்கள் காங்கிரஸ் சார்பில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும், ஐக்கிய மக்கள் சத்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் தாக்கல் செய்துள்ளனர். இரண்டாவது மனுவை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தமிழ் தேசியக்கட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.
எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு
நாட்டில் இறுதியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது. இத்தேர்தல் 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்கே நடைபெற்றது. இதன்படி இந்த உள்ளூராட்சி மன்றங்களின் பதவி 2022 ஆம் ஆண்டு அதாவது இவ்வருடம் பெப்ரவரி மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. என்றாலும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தேர்தல் ஒரு வருடத்தினால் பிற்போடப்பட்டது.
அடிப்படையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் (2023) மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்பு நடத்தப்படவேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் வாதமாக உள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன பாராளுமன்றத்துக்குள்ளும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் கடந்த நாட்களில் குரல் எழுப்பி வந்தன.
அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கிறது. அதற்கான நகர்வுகளை முன்னெடுத்து வருகிறது என்று பிரதான எதிர்க்கட்சி குற்றம் சுமத்துவதற்கு பிரதான காரணம் ஒன்று உள்ளது. அதாவது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார். அக்கூட்டத்தில் அவர் அறிவிப்பொன்றினை வெளியிட்டார். ஜனாதிபதி இக்கூட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்ல் முறைமைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை முன்வைத்தார். இத்திருத்தங்களில் ஒன்றே உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000 லிருந்து 4000 ஆகக் குறைப்பதாகும்.
நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமை
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தற்போது கலப்பு முறை தேர்தல் முறைமையே அமுலில் உள்ளது. இம்முறை அமுலுக்கு வந்ததன் காரணமாகவே உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கை 8000 ஆக அதிகரித்தது. இதற்கு முன்பு விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கை 4000 ஆகவே இருந்தது. தேர்தல் வட்டாரத்தின் அடிப்படையிலும், விகிதாசார முறைமையின் கீழும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதனாலேயே உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது.
எல்லை நிர்ணயத்தின் அவசியம்
தற்போது நடைமுறையிலுள்ள மாற்றங்களை ஏற்படுத்தாது உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களது எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்றால் கட்டாயமாக உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குட்பட்டுள்ள தேர்தல் வட்டாரங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். அதற்காக புதிதாக எல்லை நிர்ணயம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இலங்கையில் அண்மைக்காலங்களில் நடைபெற்ற எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் பெரும்பாலானோர் திருப்தியடையவில்லை. எல்லைநிர்ணயத்தில் பல்வேறு குறைபாடுகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கலப்பு தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கென சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2012 ஆம் ஆண்டு இதற்கான எல்லை நிர்ணய பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டிலே நிறைவுற்றது.
இதே போன்று மாகாண சபைத் தேர்தலில் கலப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு இறுதியில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் ஆரம்பிக்கப்பட்டு அப்பணிகள் 2018 ஆகஸ்ட் மாதத்தில் நிறைவுக்கு வந்தது. என்றாலும் மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றம் நிராகரித்தது.ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனையடுத்து பிரதமரின் தலைமையிலான குழுவுக்கு மீள் பரிசீலனைக்காக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அக்குழுவும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் தனது பணியினை நிறைவு செய்யவில்லை. இதன்காரணமாக 2017 மற்றும் 2018 ல் நடாத்தப்பட வேண்டிய மாகாணசபைத் தேர்தல் இன்றுவரை நடாத்தப்படவில்லை.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு உள்வாங்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படவேண்டும். 4000 ஆகக் குறைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தீர்மானித்ததையடுத்து எதிர்க்கட்சி குழப்பமடைந்தது. உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலும் எல்லை நிர்ணயம் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்க்கட்சி எதிர்பார்த்தது. அதனால் இத்தேர்தலும் தாமதிக்கப்படலாம் என கருதப்பட்டது.
எதிர்க்கட்சி எதிர்பார்த்தப்படி பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள நிர்ணயிப்பதற்கு எல்லை நிர்ணய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டார். இவருக்கு எதிராக எதிர்க்கட்சி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பு எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டுமென குழுவுக்கு ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலைமை உருவாகலாம். பெப்ரவரி 28 ஆம் திகதி எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்படும்போது அபேட்சகர்களுக்கான வேட்பு மனுகோரப்பட்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கும் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது. நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தேர்தலை பிற்போடலாம். அத்தோடு தற்போதைய ஜனாதிபதியின் கட்சி 2017இல் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வெற்றியும் கண்டது. அந்நிலைமை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஏற்படலாம்.
உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கை கலப்பு முறை தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதனாலே அதிகரிப்பு ஏற்பட்டது.
2018ஆம் ஆண்டு 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 8691 ஆகும். இவர்களுக்கு சம்பளமாக மாதாந்தம் 135 மில்லியன் ரூபாவும், மேலும் வேறு கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 600 மில்லியன் ரூபாவுக்கும் மேலாக செலவிடப்பட்டது. இந்த கொடுப்பனவுகளை நோக்கும் போது கடந்த 4 வருட காலத்துக்கும் இவர்களுக்காக சுமார் 3500 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இத்தனை பெரும்நிதி உள்ளூராட்சி மன்றங்களை செயற்படுத்துவதற்கு செலவிடப்பட்டுள்ளது. இத்தனை நிதி செலவிடப்பட்டும் உள்ளூராட்சி மன்றங்களினால் பொதுமக்களுக்கு உரிய சேவை கிடைக்கப்பெற்றதா? என்பதை ஒவ்வொருவரும் மீட்டிப் பார்க்க வேண்டும். உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் 15 ஆயிரம் ரூபாவாகும். இதேவேளை மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளம் 30 ஆயிரம் ரூபாவாகும்.
நிலைமை இவ்வாறு இருக்கும் போது உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினராவதற்கு தேர்தலில் போட்டியிடுபவர்கள் மில்லியன் கணக்கில் செலவிடுகிறார்கள். ஏன் என்றால் இந்த உறுப்பினர் பதவி மூலம் சிறிய தொகையை சம்பளமாக பெற்றுக் கொண்டாலும் அவர்கள் இலஞ்சம் பெறுவதன் மூலமும், ஒப்பந்தக்காரர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்குவதன் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதை நடைமுறையில் காண முடிகிறது.
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகரித்துள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையை நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலையில் எம்மால் சுமக்க முடியாது. நாட்டு மக்களின் வரி இதற்காக செலவிடப்படுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
எனவே உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை குறைக்கும் ஜனாதிபதியின் தீர்மானத்தை நாம் வரவேற்க வேண்டும். ஆனால் எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பின் தள்ளுவதற்கு அரசு முயற்சிக்குமென்றால் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இச்சந்தேகம் நாளாந்தம் வலுப்பெற்று வருகிறது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, ‘உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இம்மாத இறுதிக்குள் கோரப்படுமென’ தெரிவித்துள்ளதை கவனத்தில் கொண்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வொன்றினை அரசாங்கம் உடனடியாக பெற்றுக்கொண்டு தேர்தலை நடத்த வேண்டும்.
கலப்பு தேர்தல் முறையிலன்றி முன்னைய விகிதாசார முறையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசினால் முன்னெடுக்க முடியும். தேர்தல் நாட்டு மக்களின் ஜனநாயக அடிப்படை உரிமையாகும். அதனை தொடர்ந்து தாமதப்படுத்துவது ஜனநாயகத்தை மீறும் செயலாகும்.- Vidivelli