இனப்பிரச்சினைக்கு உடன் தீர்வு காண 13ஐ முழுமையாக அமுல்படுத்துங்கள்
சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதியிடம் ஹக்கீம் வலியுறுத்து
(எஸ்.என்.எம்.சுஹைல்)
மாகாண சபை முறைமை கடந்த காலங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் அவை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. எனவே, 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு உடனடி தீர்வை காண வேண்டுமாயின் 13 ஆம் திருத்தத்தை முழு அதிகாரங்களுடன் முழுமையாக அமுல்படுத்துங்கள் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.
இனப்பிரச்சினை தீர்வு விடயமாக நேற்று முன்தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டாறு தெரிவித்தார்.
13 உடனடி தீர்வு
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கு எமது ஒத்துழைப்பை வழங்குவோம். புதிய திட்டமொன்றை முன்வைத்து நடைமுறைப்படுத்துவதற்கு காலம் போதாமல் இருக்கிறது. ஏற்கனவே, 13 ஆம் திருத்தம் அமுலில் இருந்தாலும் முழு அதிகாரங்களுடன் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, தற்போது 13 ஆம் திருத்தத்தை முழு அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவதே இனப்பிரச்சினைக்கு உடனடி தீர்வாக அமையும். அத்தோடு, அவற்றை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கும் சாத்தியமானதான இருக்கும்.
இதேவேளை, 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டியிருக்கிறது. இதற்கான யோசனைகளை பல தரப்பினரும் முன்வைக்கின்றனர். அதேபோல், எம்மிடம் பல்வேறு முன்மொழிவுகள் இருக்கின்றன. அதற்கான விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்து ஆராய்ந்து தீர்வுக்கு வர முடியும். ஆனால், அதற்கு நீண்ட காலம் செல்லும். எனவே, உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொள்ள முதலில் 13 முழுமையாக அமுல்படுத்துவதே போதுமானதாக அமையும்.
காணாமலாக்கப்பட்டோர்
30 வருடகால இன வன்முறையின்போது வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் பலரும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பல்வேறு இன அழிப்புகளும் திட்டமிட்ட தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன, அவற்றுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படுவதோடு நஷ்டஈடும் தரப்படல் வேண்டும்.
காணிப் பிரச்சினை
இனப்பிரச்சினையுடன் தொடர்புடையாதாக வடக்கு கிழக்கிலுள்ள காணி அபகரிப்பு விவகாரம் இருக்கின்றது. இராணுவம், படையினரால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன, இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கில், வன பரிபாலன திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், வனவிலங்கு திணைக்களம் என்பவற்றின் கெடுபிடுகள் முஸ்லிம் பிரதேசங்களில் அதிகமாக இருக்கின்றது. இதன் மூலம் காணி உறுதி மற்றும் காணி அனுமதிப்பத்திரம் உள்ள பலரும் அசௌகரியங்களை எதிர்கொள்ளவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொடர்ச்சியாக நீண்டகாலம் நியாயம் கேட்டு அலைந்து திரிவதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். உணவு உற்பத்திக்காக காணிகளை விடுவிக்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில், வடக்கு கிழக்கில் கெடுபிடுகளுக்கு உள்ளான காணிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
சம்பிக்கவுக்கு ரணில் பதில்
இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, 32 வீத வன பாதுகாப்பு வலியுறுத்தப்படவேண்டும். அதனை உதாசீனப்படுத்தி காணிப்பகிர்வை மேற்கொள்ள முடியாது. சட்டவிரோதமாக வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிக்க முடியாது என்றார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் வனப்பிரதேசங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆற்றுப்படுக்கை உருவாக்கும் இடத்திலும் காணிகள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றை சுவீகரித்து காடுகள் வளர்க்கப்பட வேண்டும். 32 வீத வனப்பாதுகாப்பு அவசியமானதே, இருப்பினும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை பயிர்ச் செய்கைக்காக மக்களுக்கு வழங்குவதில் சிக்கல் இல்லை. அவற்றை பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அத்தோடு, இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பிலும் நான் கவனம் செலுத்துவேன். மேலும், வனவிலங்குகள் திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிகளையும் படிப்படியாக விடுவிக்க நவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.
ரிஷாட் பதியுதீன் எம்.பி.
இங்கு கருத்து வெளியிட்ட அ.இ.ம.கா. தலைவர் ரிஷாட் பதியுதீன், நீங்கள் பிரதமராக இருந்தபோது நல்லாட்சி காலத்தில் இதுதொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது. அப்போது நாம் பல்வேறு யோசனைகளை முன்வைத்தோம். மீண்டும் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முன்வந்திருக்கின்றமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தற்போதைய சூழ்நிலையில் முடியுமானவரை காணி தொடர்பான பிணக்குகளுக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும். அதேபோல், வவுனியா மாவட்டத்தில் விவசாய காணிகள் தொடர்பாக அதிகமான பிரச்சிகளை வருடக்கணக்கில் தீர்த்து வைக்கப்படாமல் இருக்கின்றது. வனப்பாதுகாப்பு திணைக்களத்துடன் தொடர்புடன் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு நீதியை பெற்றுத் தர வேண்டும். நீங்கள் நியமித்திருக்கும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான செயலணி ஊடாக இந்த விடயத்தை தீர்த்து வைக்க வேண்டும்.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களை கூடிய சீக்கிரத்தில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை முன்வைப்பது பொருத்தமானதாக அமையும் என்றார்.
அமைச்சர் நஸீர் அகமட்
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நஸீர் அகமட், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு சில பாதகங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக அதில் உள்ளடக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம் போன்ற விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் அபிப்பிராயத்தைப் பெற்றே தீர்வுக்குச் செல்ல வேண்டியது அவசியம் என அவர் இதன் போது குறிப்பிட்டார்.
அமைச்சர் அலி சப்ரி
இங்கு கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தோம். பரணவிதான ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது. இன்னும் பல செயலணிகல் மூலமும் இலங்கையில் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருந்தமை வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இருந்தாலும் எமக்கு வெளிநாட்டு தலையீடுகள் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். உள்நாட்டு பொறிமுறைக்கமைய இந்த விடயத்திற்கு தீர்வை பெற்றுக்கொள்ளவே நாம் தீர்மானித்தோம். இதற்கமைய உள்ளக பொறிமுறையொன்றை அமைப்பதாக சர்வதேசத்திடம் வாக்குறுதியளித்தோம். அதனை நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நீதிபதி நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவை நியமித்தார்.
முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் முன்னெடுத்து செல்லும் அதிகாரம் நவாஸ் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது. இது தொடர்பில் எமது பாதுகாப்பு தரப்பிடம் கேட்டால், ஏன் இந்த பொறிமுறையை நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்துவர்.
தென்னாபிரிக்காவின் பங்களிப்போடு உள்ளக பொறிமுறைக்கமைய இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.- Vidivelli