எம்.எம்.எம். ரம்ஸீன்
கெலிஓயா
“வரலாற்றை முதலில் பதிவு செய்பவர்கள் ஊடகவியலாளர்கள்” என்கிறார் பிரபல அமெரிக்க ஊடகவியலாளர் பிலிப் எல். க்ரஹம். சமகால நிகழ்வுகளை செய்திகளாக்கி சமூகத்திற்கு உண்மைகளை எடுத்துச் செல்பவர்கள் ஊடகவியலாளர்களாவர். இவர்கள் வாழும் போதும் மட்டுமன்றி மறைந்த பின்னரும் மக்கள் மனதில் வாழ்பவர்களாவர் என்பதில் ஐயமில்லை.
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தில் வட கிழக்குக்கு வெளியில் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். இதில் பல ஊடகவியலாளர்கள் ஊடகப்பணிகளில் ஈடுபடுவதில்லை. இதனால் முஸ்லிம் பிரதேச நிகழ்வுகள் அறிக்கையிடப்படுவதில்லை. உண்மைகள் சரியாக வெளிக்கெணரப்படுவதில்லை என்ற குறைகள் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளன.
இப்பின்னணியில் கண்டியில் 50 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஊடகப் பணிகளில் ஈடுபட்டு வந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.ஏ.சீ.எம். குவால்தீனின் திடீர் மறைவு ஊடகத்துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கண்டியில் முஸ்லிம் ஊடகத்துறையினர் மத்தியில் எஸ்.ஏ.சீ.எம். குவால்தீனின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளியாகும்.
கண்டியில் கெங்கல்ல பகுதியில் பிரபல வர்த்தகராகத் திகழ்ந்த மர்ஹூம் சேகு அப்தல் காதர் – காதர் பீபி தம்பதியின் புதல்வராக 1949 இல் பிறந்த எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் யாழ்ப்பாணத்தில் தனது கல்வியைப் பெற்றுக் கொண்டார்.
ஆக்க இலக்கியங்களில் ஈடுபாடு கொண்ட இவர், சிறுவயது முதல் சிறுகதைகள், கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். இவரின் ஆக்கங்கள் வீரகேசரி நாளிதழ், வீரகேசரி வார வெளியீடு, மித்திரன் என்பவற்றில் பிரசுரமாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் 1966 ஆம் ஆண்டு தினபதி பத்திரிகை மூலம் தனது ஊடகப்பணியை ஆரம்பித்தார். 1970 களில் டைம்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட “ஈழமணி” பத்திரிகை மற்றும் கண்டி மாநகரில் இருந்து வெளியாகிய “செய்தி” என்ற நாளிதழ் என்பவற்றின் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ள எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் வீரகேசரியின் கண்டி – செங்கடகல செய்தியாளராக தொடர்ச்சியாக தனது பணியைத் தொடர்ந்தார்.
முன்னாள் பிரதமர் டி. எம். ஜயரட்னவின் ஊடக ஆலோசகராகவும் செயற்பட்டு வந்த எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் கண்டியில் இருந்து சிறிது காலம் பி.பி.சி க்கு விசேட செய்திகளையும் வழங்கி வந்துள்ளார். இவர் தமிழ்பேசும் ஊடகவியலாளர்களுடன் மட்டுமன்றி சகோதர சிங்கள ஊடகவியலாளர்களுடனும் நெருக்கமான உறவைப் பேணி வந்தார்.
தமிழ்பேசும் மக்களின் சமூக விடயங்களில் அதீத ஆர்வமிக்கவராகத் திகழ்ந்த எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் பிரதேச செய்திகளை அறிக்கையிடுவதில் துணிச்சல்மிக்கவராவார். ஊடகத்துறைக்குள் புதிதாக நுழையும் இளம் சந்ததியினரை ஊக்குவிக்கும் நற்பண்பும் அமைதியும் அடக்கமும் அவரிடம் குடிகொண்டிருந்தது.
இவர் சலனமும் ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக ஊடகப்பணி செய்த ஊடகவியலாளர் ஆவார். இவரின் சிறுகதைகள், கட்டுரைகள் மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் இருந்து வெளிவரும் சஞ்சிகைகளில் மீள் பிரசுரமாகியுள்ளன. இவர் விவாகப் பதிவாளராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருந்து ஊடகத்துறைக்கு அப்பால் தனது சமூகப் பணிகளை ஆற்றியுள்ளார். பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவிகளையும் சேவைகளையும் தான் வாழ்ந்து வந்த தென்னகும்புர பகுதிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவரின் ஊடகப் பணியை பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், மலையக கலை கலாசார சங்கம், மலையக இலக்கிய பேரவை என்பன விருது வழங்கி கௌரவித்துள்ளன. மேலும், கலாசார திணைக்களத்தினால் கலாபூசணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவரது புதல்வர் எம்.கே.எம்.ரசூல் தனது தந்தையில் வழியில் இன்றும் ஊடகத்துறையில் பயணிக்கிறார்.
கண்டியில் ஐ.ஏ. ரஸ்ஸாக், ஸ்டார் ராசிக், க.ப.சிவம், எஸ்.ஏ.சீ.எம். குவால்தீன் முதலானோரின் இழப்புக்கள் அண்மைக்காலத்தில் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளன.
எல்லாம் வல்ல அல்லாஹ் இவரின் பிழைகளைப் பொறுத்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நுழைய வைப்பானாக ஆமீன்.- Vidivelli