பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனை தொடர்பில் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி தருகின்றன. களுத்துறை பகுதியில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்த தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர் என்றும் தன்னிடம் கற்கும் மாணவர்களுக்கு இம்மாத்திரைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்தது. இவரிடமிருந்து சுமார் 1300 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அண்மைக் காலமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளமை தொடர்பில் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்துக்கள் கூர்ந்து கவனிக்கத்தக்கவை.
“இந்த நாட்டில் நாம் சந்தித்த தீவிரவாதங்களை விட தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஊடுருவியுள்ள போதைப் பாவனையே மிகவும் தீவிரமானது. இதற்கு எதிராக சகலரும் இணைந்து ஓர் ‘அரகலய’வை ஆரம்பிக்க வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு நாடுமே ஒன்று திரண்டு போராடியது போல இதற்கு எதிராகவும் இன,மத, கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் ” என அவர் தெரிவித்துள்ளார்.
“போதைப் பொருள் விற்பனையாளர்கள் மாணவர்களையும் கட்டிளமைப் பருவத்தினரையும் இலக்கு வைத்தே தமது வியாபாரத்தை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக ஐஸ் போதைப் பொருள் இன்று மாணவிகள் மத்தியிலும் ஊடுருவியுள்ளது. நகர்ப்புற பாடசாலைகளில் மாத்திரமன்றி கிராமப் புற பாடசாலைகளிலும் போதைப் பொருள் பாவனை தொற்றியிருப்பது கவனிப்புக்குரியது” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகளின் களியாட்ட நிகழ்வுகளில் ஆரம்பத்தில் மது பரிமாறப்படுகிறது. பின்னர் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள். சில நாட்களில் அவர்கள் ஐஸ் போன்ற பாரிய போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள் என்றும் டாக்டர் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த போதைப் பொருள் எனும் தீவிரவாதத்துக்கு எதிராக கிராம மட்டத்திலிருந்து அரகலய ஆரம்பிக்கப்பட வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு பிரதேசத்திலும் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோர் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்க வேண்டும், அவர்களை அப் பகுதியில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். அவர்களுக்கு மரண தண்டனை போன்ற உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக பாடசாலைகளுக்கு இவ்வாறான தீய சக்திகள் உள்நுழைவது தடுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறு போதைக்கு அடிமையானவர்களது 12 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகள் தற்போது சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டாக்டர் பெரேராவின் மேற்படி கருத்துக்கள் எதிர்கால சந்ததியையும் இந்த போதை மாபியாக்கள் விட்டு வைக்கவில்லை என்பதைத் தெளிவாக நிரூபிப்பதாக உள்ளன.
இந் நிலையில்தான், பாடசாலைகளை மையப்படுத்தி போதைப் பொருள் விற்பனை செய்யும் வலையமைப்பை முறியடிக்கும் வகையில் அரசாங்கம் நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 10,150 பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக கொழும்பில் உள்ள 144 பாடசாலைகளில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலைகளில் உள்ள உணவகங்கள், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உட்பட பல இடங்கள் பொலிசாரினாலும் கல்வி அதிகாரிகளாலும் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கல்வியமைச்சின் இந்த வேலைத்திட்டம் எந்தளவு தூரம் வெற்றியளிக்கும் என்பது கேள்விக்குரியதே.
அரசாங்கம் அண்மையில் 5 கிராமுக்கு அதிகமான ஐஸ் போதைப் பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்தியுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்ற போதிலும் கிலோ கணக்கில் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் கூட பொலிசாரின் உதவியுடன் சட்டத்திடமிருந்து தப்பித்து விடுகின்றமையே இந்த நாட்டின் சாபக்கேடாகும்.
அதுமாத்திரமன்றி, கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்கப்படும் போதைப் பொருட்களைக் கூட அதற்குப் பொறுப்பான பொலிசார் மீண்டும் சந்தைக்கு விடுவித்து பணம் சம்பாதிப்பதாக சில தினங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டிருந்தார். இவ்வாறுதான் நாட்டின் நீதித்துறையும் பாதுகாப்புத் துறையும் உள்ளது. இவ்வாறிருக்கும்போது இந்த ‘போதை தீவிரவாதத்துக்கு’ எதிராக போராடுவது எந்தளவு சாத்தியம்? மக்கள் எவ்வாறு இந்த அரகலயவில் தைரியமாக களமிறங்குவார்கள்?
எனவேதான் முதலில் போதைப் பொருள் விற்பனை வலையமைப்புகளுக்கு உதவி ஒத்தாசையாக இருக்கின்ற, அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்ற சகலரும் பொலிஸ் சேவையிலிருந்து உடனடியாக களைபிடுங்கப்பட வேண்டும். இந்த புதிய தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு இதய சுத்தியுடனான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும். இன்றேல், இலங்கை எனும் இந்த சிறிய தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது போய்விடும்.- Vidivelli