ஜனாஸா எரிப்புக்கு ஆலோசனை வழங்கிய சுகாதார அதிகாரிகளிடம் விசாரணை நடத்துங்கள்
அமைச்சர் சிசிர ஜயகொடி உண்மையை வெளிப்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டினார் முஜிபுர் ரஹ்மான்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கொவிட் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் ஜனாசாக்களை பலவந்தமாக எரிக்க வேண்டும் என வலியுறுத்தி சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியவர்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தி, இவ்வாறு ஆலோசனை வழங்கிய அதிகாரிகள் யார் என்பதை அவசரமாக வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொரோனாவில் மரணித்தோரின் இறுதிக்கிரியைகள் விடயத்தில் சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் வழங்கிய தவறான ஆலோசனைகள் காரணமாக நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் உருவாகியதாக சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டதையடுத்து உரையாற்றியபோதே ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.
வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில், நேற்றுமுன்தினம் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
இதன்போது, சுதேச வைத்திய துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி உரையாற்றுகையில்,
கொவிட் தொடர்பில் மரணித்தவர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் வழங்கிய தவறான ஆலோசனை காரணமாக நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் உருவாகின. இவர்கள் தான் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார்கள். முஸ்லிம்கள் மீது எமக்கு வெறுப்பினை உருவாக்கினார்கள். சுகாதார அமைச்சின் ஒரு சில விசேட நிபுணர்களின் ஆலோசனை காரணமாகவே இனங்களுக்கிடையில் குரோதம் ஏற்பட்டது. கலகங்கள் ஆரம்பமாகின.
இவ்வாறான விசேட வைத்திய நிபுணர்கள் இளைஞர்களின் போராட்ட (அரகலய) களத்துக்குச் சென்று இனங்களுக்கிடையில் சமநிலை பேணப்படவேண்டும் என்று கூறினார்கள். ஆனால் இந்த 225 உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்கள் என்றார்.
சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் உரையாற்றிய பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பேசுகையில்; சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இங்கு உண்மையைக் கூறினார்.
கடந்த காலத்தில் கொவிட்டினால் இறந்தவர்களது இறுதிக் கிரியை தகனமா? அல்லது அடக்கமா? என்ற பிரச்சினையில் சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் எமக்கு தவறான ஆலோசனை வழங்கினார்கள். அவர்கள் சடலங்கள் எரிக்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றினார்கள் என்று இராஜாங்க அமைச்சர் இங்கு கூறியுள்ளார்.
நான் சுகாதார அமைச்சரிடம் கேட்கிறேன், உலக சுகாதார ஸ்தாபனம் அவ்வாறான சடலங்கள் தகனம் அல்ல அடக்கம் செய்வதற்கு இடமளியுங்கள் என்று சிபாரிசு செய்திருந்தது. இவ்வாறான சிபாரிசினை உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியிருந்தும் உங்களது அரசாங்கம் ஓர் இனத்துக்கு முறையற்ற விதத்தில் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படவேண்டும் என்று கூறி பலாத்காரமாக உத்தரவிட்டது. யார் இவ்வாறான தவறான ஆலோசனையினை சுகாதார அமைச்சுக்கு வழங்கினார்கள் என்பது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றினை நடத்தி அந்த அதிகாரிகளின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டுமென நான் வேண்டிக்கொள்கிறேன் என்றார்.– Vidivelli