கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
“சீவ வசீகரம் பெற்ற
இம்மார்க்கத்திற் சேரவருபவர்
எத்தனை கோடி?” – (கவிஞர் அப்துல் காதர் லெப்பை)
உலகத்தின் சனத்தொகை எண்ணாயிரம் மில்லியனை எட்டிவிட்டதென சில தினங்களுக்குமுன் வெளிவந்த செய்திகள் கூறுகின்றன. அந்தத் தொகையில் சுமார் ஐந்திலொரு பகுதியினர் முஸ்லிம்கள் என்பதும் ஒரு கணிப்பீடு. இன்னொரு மதிப்பீட்டில் உலக சனத்தொகையில் கால்வாசியினர் முஸ்லிம்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் எதை ஏற்றுக் கொண்டாலும் அந்தத் தொகை கணிசமானது என்பது உண்மை. மதவாரியாக நோக்கும்போதும் கிறிஸ்தவ மக்களே உலகத்தில் மிகப்பெரிய தொகையினர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஆனால் பலரின் பார்வையில் மதப் பின்பற்றுதலை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் இஸ்லாமியரே அந்த இடத்தைப் பிடித்துள்ளனர் என்றும் கருதப்படுகின்றது. எந்தக் கோணத்திலிருந்து நோக்கினாலும் முஸ்லிம்களின் இந்தத் தொகை ஒரு பக்கத்தில் பெருமையையும் இன்னொரு பக்கத்தில் வேதனையையும் அளிக்கின்றது என்பதையே இக்கட்டுரை தெளிவுபடுத்த விரும்புகிறது.
இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது நான் அண்மையில் படித்துமுடித்த அரேபியரைப்பற்றிய ஒரு வரலாற்று நூல். அதன் விபரங்கள் இதோ: Tim Mackintos–Smith, Arabs: A 3,000- Year History of Peoples, Tribes and Empires, Yale University Press, 2019. அரபு மொழியை ஆழமாய் கற்று அரபு மக்களின் மத்தியிலே வாழும் இவ்வரலாற்றாசிரியனின் நூலை இஸ்லாத்தின் வரலாற்றைப் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டுமென விரும்புகிறேன்.
பெருமை
உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகுவதை இக்கட்டுரை ஒரு பெருமையாகக் கருதவில்லை. மனித இனம் பெருகும்போது அதிலோர் அங்கமான முஸ்லிம்களின் தொகையும் பெருகுவது தவிர்க்கடியாதது. ஆனால், நாமமது முஸ்லிம்களெனக் கொண்டீங்கு வாழ்தல் நன்றோ சொல்லீர்! என்று பாரதி நடையில் கேட்கும்போது எண்ணிக்கை பெருகுவதால் பெருமை இல்லை என்பது புலனாகவில்லையா? அது ஒரு புறமிருக்க, பழம்பெருமை பாடுவதையும் இக்கட்டுரை விரும்பவில்லை. அந்தப் பாடலைத்தானே முஸ்லிம்களின் இன்றைய மேடைகளில் ஓயாது கேட்கிறோம். எனினும் அதனை மறக்கவேண்டும் என்றும் இங்கு கூறப்படவில்லை. மனிதன் போன பாதையை மறத்தலாகாது.
இன்றைய முஸ்லிம் சந்ததி படிக்கவேண்டிய பாடங்கள் எத்தனையோ அந்தப் பழமையில் உண்டு. ஒரே வசனத்தில் கூறுவதாயின் அன்றைய முஸ்லிம்களிடையே அறிவுத் தாகம் இல்லாது இருந்திருந்தால் இன்றைய உலகின் நவீனத்துவம் ஒன்றில் உருவாகி இருக்காது அல்லது காலம் தாழ்த்தியே உருவாகி இருக்கும். அந்த அறிவுத் தாகத்துக்கு எடுத்துக்காட்டாக பின்வரும் ஒரேயொரு சம்பவத்தை மட்டும் பெருமையுடன் இக்கட்டுரை நினைவூட்ட விரும்புகிறது.
பத்தாம் நூற்றாண்டுப் பாரசீகத்தின் ஒப்பற்ற ஆட்சி நிபுணன் அல்-சாகிப் இப்னு அப்பாத். ஒரு முறை அதிக ஊதியத்துடன் உயர்பதவியொன்று அவரை நாடி வந்தது. அதனை ஏற்க அவர் மறுத்தார். ஏன் தெரியுமா? அந்தப் பதவியை ஏற்பதானால் வேறோரு பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லவேண்டி இருந்தது. அவ்வாறு செல்வதானால் தனது சொந்த நூலகத்தையும் கொண்டுசெல்ல வேண்டியும் இருந்தது. அந்த நூல்களைக் காவிச் செல்வதற்கு குறைந்தது 400 ஒட்டகைகளாவது தேவைப்பட்டதால் அந்தப் பதவியையே அவர் தூக்கி எறிந்தார். (அவருடைய நூல்களுள் அறுபது ஒட்டகைகள் சுமக்கும் அளவுக்கு அரபுமொழியைப் பற்றிய நுல்கள் மட்டும் குவிந்திருந்ததாம்).
ஆகவே மந்தைகள்போல் எண்ணிக்கையிலே மட்டும் பெருகி யாது பயன்? சிறந்த சிந்தனையும் செயற்றிறனும் கொண்ட முஸ்லிம்கள் பெருக வேண்டும். அதிலேதான் பெருமையுமுண்டு. இறைவனின் சகல படைப்பினங்களையும் பராமரிக்கத்தானே மனிதனை இறைவன் படைத்து அம்மனிதனுக்குச் சிந்தித்துச் செயற்படும் சக்தியையும் கொடுத்து தனது படைப்புகளை மனிதனிடம் அமானிதமாக ஒப்படைத்தான் என்று முஸ்லிம்களின் திருமறை கூறுகின்றது (அல்-குர்ஆன்: 33:72). இதனை மிகவும் அழகாக அல்லாமா இக்பால் தனது ஜாவித் நாமாவில் பின்வருமாறு சித்தரித்துள்ளார். ஒரு முறை பூமி இறைவனைப்பார்த்து ‘ஏன் என்னைச் சேறும் சகதியும் இருளும் பாறைகளும் நிறைந்த ஒன்றாகப் படைத்துவிட்டு வானத்தை மட்டும் சந்திரனும் நட்சத்திரங்களும் நிறைந்த ஒளி உலகாகப் படைத்தாய்’ என்று முறையிட்டதாம். அதற்கு இறைவன், கொஞ்சம் பொறு, ‘உன் மடியில் இன்னும் ஒன்றைப் படைப்பேன். அது வானத்தையும் பட்டுப்போல் கிழித்துக்கொண்டு செல்லக்கூடிய வல்லமையுடன் உன்னை அழகுபடுத்தும்’ என்று கூறிய பின் மனிதனைப் படைத்தானாம். இன்றைய மனித இனம் அதிலும் முஸ்லிம்கள் இறைவனின் அமானிதத்தையும் இப்புவியையும் கட்டிக்காத்துள்ளார்களா என்பதே அவர்களை எதிர் நோக்கும் ஒரே கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை தேடும்போதுதான் வேதனை எழுகின்றது. அந்த வேதனையைப்பற்றி இனி அலசுவோம்.
வேதனைகள்
எகிப்து நாட்டின் ஷாம் அல்-ஷேக் நகரிலே ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை பற்றிய மகாநாடொன்று கடந்த இரு வாரங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் முஸ்லிம் தலைவர்களும் பங்கு கொண்டுள்ளனர். இந்த மகாநாட்டின் அவசியத்தைப்பற்றிக் கூறுவதானால், அது திருமறை கூறும் இறைவனின் அமானிதத்தை மனிதன் கட்டிக்காக்கத் தவறியதால் ஏற்பட்ட ஒரு மகாநாடென்று வருணிக்கலாம்.
இயற்கைக்கு தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் சக்தி இயற்கையாகவே உண்டு. அவ்வாறுதான் யுகயுகமாக தன்னைத்தானே பாதுகாத்துக்கொண்டும் அதே சமயம் மனித இனத்துக்கும் பயன்பட்டுக் கொண்டும் இயற்கை இயங்கிவந்துள்ளது. மனித இனமும் அது உருவாகிய காலம் தொடக்கம் நவீன விஞ்ஞான யுகம் ஆரம்பிக்கும்வரை இயற்கையுடன் ஒன்றியே வாழ்ந்து வந்துள்ளது. ஆனால் விஞ்ஞான யுகம் ஆரம்பமாகியதுடன் அந்த ஒற்றுமையும் சமநிலையும் படிப்படியாகச் சீர்குலையலாயிற்று. இயற்கையையே தனது சகபாடியாக அல்லாமல் ஓர் அடிமையாக மாற்றி, தன்னினம் மட்டும் உயரவேண்டும் என்ற இறுமாப்புடன் மனித இனம் காடுகளை அழித்து, மலைகளை உடைத்து, நதிகளை மறித்து, சமுத்திரங்களையும் ஆகாயத்தையும் விஞ்ஞானிகளின் விளையாட்டுத்திடல்களாக்கி, இயற்கையின் செல்வங்கள் அனைத்தையும் சூறையாடி அதனையே நாகரீகம் என்றும் நவீன வளர்ச்சி என்றும் கருதிப் புகழ்ந்து வாழ்ந்ததால், இன்று இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாகி வரட்சி, வெள்ளம், தீ, பூகம்பம் என்றவாறு மாறிமாறி இயற்கையின் அனர்த்தங்களுக்குள் சிக்கிச் சீரழிகின்றது. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் இப்போதுதான் மகாநாடுகளைக் கூட்டி என்ன செய்வதென்று மனித இனம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. இதுவே கடந்த நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகளின் விஞ்ஞானயுக வரலாறு.
அந்த யுகத்துக்கு வித்திட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதை ஒரு பெருமையாகக் கருதினாலும் அந்த யுகத்தை தொடர்ந்து வழிநடாத்த முஸ்லிம்கள் தவறிவிட்டார்கள் என்பதே இன்றைய வேதனை. இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது? அதற்கு விடைகாண வேண்டுமானால் பதினாலாம் நூற்றாண்டு தோற்றுவித்த முஸ்லிம் மாமேதை இப்னு கல்தூன் எழுதிய அல் முகத்திமா என்ற நூலைப் புரட்டிப்பார்க்க வேண்டும். அப்பாசியர்களின் அற்புதமான ஆட்சி மொங்கோலியரின் படையெடுப்பால் அழிந்ததோடு தொடங்கிய வீழ்ச்சி இன்றும் தொடர்கிறது. அந்தச் சோக வரலாற்றை மிகவும் துல்லியமாக எடுத்து விளக்குகிறது இக்கட்டுரையை எழுதத் தூண்டிய அரேபியரைப்பற்றிய அந்த வரலாற்று நூல். ஒரே வசனத்தில் கூறுவதானால் என்று தர்க்கரீதியான சிந்தனா வளர்ச்சிக்குத் தடைபோட்டு சொன்னதையே திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைப் பாடமாக முஸலிம்களின் கல்வி மாறியதோ அன்றே உலகத்தை வழிநடத்தக்கூடிய வல்லமையை முஸ்லிம்கள் தவறவிட்டு விட்டார்கள் என்று கூறலாம். அல்-குர்ஆன் அறிமுகப்படுத்திய இல்ம் அல்லது அறிவுக்கும் உலமாக்கள் வளர்த்த இல்முக்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான். அந்த இல்ம் முஸ்லிம்களை உலக அரங்கின் முன்வரிசையில் வைத்தது. இந்த இல்ம் அந்த அரங்கின் விளிம்பில் வைத்துள்ளது. உலமாக்கள் வளர்த்த கல்வியால் வெளிவந்த அத்தனை நூல்களும் அறிவு வளர்ச்சிக்குத் தடையாகிவிட்டன என்று இப்னு கல்தூன் ஏமாற்றத்துடன் தனது நூலின் ஒரு அதிகாரத்துக்குத் தலையங்கம் இட்டுள்ளார். அன்று முஸ்லிம்கள் வழிகாட்டிகள். இன்று மற்றவர் வழிகாட்டப் பின்தொடரும் மந்தைகள். இந்த மந்தைகளின் பெருக்கத்தால் என்ன பெருமையோ? ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்புச் சபையில் ஒரு முஸ்லிம் நாட்டுக்கும் இதுவரை இடமில்லாமல் போனது எதனால்? 1,600 மில்லியன் முஸ்லிம்களுக்கும் அவர்களின் ஐம்பத்தேழு நாடுகளுள் ஒன்றுக்கேனும் அச்சபையில் இடமில்லாதிருப்பது வேதனை இல்லையா?
கசப்பான ஓர் உண்மை
1970களின் பிற்பகுதியில் ஏற்பட்ட மூன்று மாற்றங்கள் ஏன் முஸ்லிம்களை மற்றவரைப் பின்பற்றும் மந்தைகளாக மாற்றியுள்ளது என்பதை உணர்த்துகின்றன. முதலாவது மாற்றம் எண்ணெய்வள முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட செல்வச்செழிப்பு. இரண்டாவது மாற்றம் சீனாவில் ஏற்பட்ட சந்தைப் பொருளாதார அடிப்படை மாற்றம். மூன்றாவது இந்தியாவில் ஏற்பட்ட முதலாளித்துவப் பொருளாதார மாற்றம். எண்ணெய்வள முஸ்லிம் நாடுகளோ ஆடம்பரத்தை வளர்ச்சியெனக் கருதி அதிலேயே ஊறித்திளைக்க. மற்றைய இரு நாடுகளும் பொருள் வளமும் படைபலமும் கொண்டு அறிவாலயங்களை வளர்த்து பிராந்திய வல்லரசுகளாக வளர்ந்து ஏன் உலக வல்லரசுகளாகவும் மாறத் துடிக்கின்றன. உலக அரங்கின் முன் ஆசனங்களில் இந்தியாவும் சீனமும் அமர பின் ஆசனங்களில் முஸ்லிம் நாடுகள் இடம் தேடுகின்றன. இத்தனை பணம் இருந்தும் உலகத்தின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு விஞ்ஞான ஆய்வுகூடமோ அருஞ்சுவடிச்சாலையோ நூலகமோ எண்ணெய் வள முஸ்லிம் நாடுகளில் இல்லை. இந்த நிலையில் மற்றவர்களைப் பின்தொடராமல் அவர்களுக்கு வழிகாட்டியாக இயங்க முடியுமா?
2076 ஆம் ஆண்டு அமெரிக்கா தனது நான்காவது சுதந்திர நூற்றாண்டுக்குள் காலடி வைக்கப்போகிறது. சீனமும் இந்தியாவும் தமது இரண்டாவது சந்தைப்பொருளாதார நூற்றாண்டுக்குள் நுழையவிருக்கின்றன. அதே நேரம் முஸ்லிம்கள் தமது 1500ஆவது ஹிஜ்ரி ஆண்டுக்குள் நுழைவர். அந்த வருடத்தில் இந்த நால்வரும் எந்தெந்த நிலையில் உலக அரங்கில் வீற்றிருப்பரோ தெரியாது. ஆனால் முஸ்லிம் நாடுகள் இன்றுள்ள போக்கிலேயே போனால் மற்றைய மூவரின் கைப்பொம்மைகளாக இயங்குவதன்றி சுதந்திரமாக இயங்க முடியாது என்பது மட்டும் உறுதி.
உங்களை நீங்களே மாற்றாதவரை இறையும் உங்களைத் தொடா (குர்ஆன்) – Vidivelli