உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரம்: கைது செய்யப்பட்டோர் சட்டமா அதிபரின் ஆலோசனையில் விடுவிப்பு
பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல், சட்டமா அதிபர் திணைக்களமானது அரச அதிகாரிகள் தேவைக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுயாதீன தன்மைக்கு அவமானமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஏனைய தொகுதிகளையும் மக்களுக்கு பகிரங்கப்படுத்துமாறும் , அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கத்தையும் , சட்டமா அதிபர் திணைக்களத்தையும் மீண்டும் வலியுறுத்துவதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் , அருட்தந்தை சிறில் காமினியினால் பேராயரின் விசேட அறிவித்தல் வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விடுதலை செய்யப்படுகின்றமை மக்களை முட்டாள்களாக்கும் செயற்பாடாகும். சட்டமா அதிபர் திணைக்களமானது , உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு பதிலாக, அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமையை கண்டிக்கின்றோம்.
இந்த நிலைமை உண்மையில் துரதிஷ்டவசமானதாகும். இது சட்டமா அதிபர் திணைக்களத்தின் நீதிக்கும் , அதன் சுயாதீனத் தன்மைக்கும் அவமானமாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளவற்றை நடைமுறைப்படுத்துவதிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களம் ஒதுங்கியுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாதவொரு விடயமாகும்.
அதே போன்று முன்னாள் ஜனாதிபதியிடம் வழங்கப்படவிருந்த சாட்சிகள் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பொது மக்களிடம் மறைக்கப்படுவதானது , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளையும் மறைக்கும் செயற்பாடாகும். இவ்வாறு மறைக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஏனைய தொகுதிகளை உடனடியாக மக்களுக்கு பகிரங்கப்படுத்துமாறும், இந்த தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுமாறும் அரசாங்கத்திடமும் , சட்டமா அதிபர் திணைக்களத்திடமும் கேட்டுக் கொள்கின்றோம்.’ என்று இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli