கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
பிராந்தியப் பொருளாதார ராட்சதன்
ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ இலங்கையை 2048ஆம் ஆண்டளவில், அதாவது சுதந்திரம் கிடைத்த நூறாவது வருடத்தில், முதலாம் உலக நாடுகளுள் ஒன்றாகவும் அதன் பொருளாதாரத்தை ஏற்றுமதியால் வளர்ச்சிபெற்ற ஒரு பிராந்திய ராட்சதனாகவும் மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளார், உண்மையைக் கூறுவதானால் திட்டமிட்டுள்ளார் என்பதைவிட கனவு கண்டுள்ளார் என்பதே பொருத்தமாகும். எனினும் விவாதத்துக்காக அதனை ஒரு திட்டம் என்பதையே ஏற்றுக்கொண்டு இன்னுமொரு உண்மையையும் உணரவேண்டியுள்ளது. அவருடைய திட்டம் வெற்றியடைந்தாலோ தோல்வியடைந்தாலோ அதனை கொண்டாடுவதற்கோ அதுபற்றி வருந்துதற்கோ 2048ல் அவருடைய வயது 99ஐ எட்டி இருக்கும். அவர் நீடூழி காலம் சுகதேகியாக வாழவேண்டுமென வாழ்த்தியபின் அவருடைய பொருளாதாரத் திட்டம் செல்லரித்த அத்திவாரத்திரத்தில் அமையும் ஓர் அலங்கார மாளிகை என்பதையே இக்கட்டுரை சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதற்குரிய காரணத்தை கீழே விபரிப்போம்.
யதார்த்தத்தின் அவலம்
இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைமையின் யதார்த்தம் என்ன? கடன் சுமை, திறைசேரியின் வங்குரோத்து, பொருள் பற்றாக்குறை, தொழில்வாய்ப்பின்மை, வருமான வீழ்ச்சி, உணவுப்பஞ்சம், விலைவாசி ஏற்றம் என்றவாறு நாட்டின் பொருளாதாரப் பிணிகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம். அவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களின் மனவேக்காடும் ஏமாற்றங்களும் ஆட்சியாளரின்மேல் வெறுப்பை ஏற்படுத்தி ஆங்காங்கே அமைதிப் போராட்டங்களாகவும் சில சமயங்களில் வன்முறை கலந்தனவாகவும் வெடிக்கின்றன. கடந்த பங்குனி மாதம் காலி முகத்திடலில் ஆரம்பமான இளைஞர்களின் அமைதிப்போராட்டம் சர்வதேசக் கவனத்தையும் ஈர்த்து நாட்டு மக்களின் ஆதரவையும் பெற்றதென்பதை யாரும் மறுக்க முடியாது. அது ஏற்படுத்திய அரசியல் மாற்றங்களுள் ஒன்றுதான் இன்றைய ஜனாதிபதியின் ஆட்சி. எனினும் இயற்கை வளங்களையும் இனிய மக்களையும் ஏற்றமிகு கலாசாரப் பொக்கிஷங்ளையும் கொண்டு மிளிர்ந்து பிறர் மதிக்க விளங்கிய இந்தத் தீவு இன்று ஒரு பிச்சைக்கார நாடெனவும் தோல்வியடைந்த அரசு எனவும் உலகத்தால் மட்டிடப்படும் அவலத்தை வெறும் வார்த்தைகளாலும் சுலோகங்களாலும் மறைக்க முடியாது. அதுதான் இன்றைய யதார்த்தம்.
ஜனாதிபதியின் மாற்றுவழி
பொருளாதாரப் பிணிகளை அகற்றாமல் இந்த நாட்டுக்குச் சுபீட்சமில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று. ஆனால் அவற்றை அகற்ற வேண்டுமாயின் அதற்கு உடனடியாகத் தேவைப்படுவது அன்னியச் செலாவணி. அதனைப்பெற்று மக்களின் அன்றாடக் கஷ்டங்களுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்தி ஓரளவுக்கேனும் அமைதிகாண முடியுமானால் அதனைத் தொடர்ந்து தனது கனவுத்திட்டத்தை நிறைவேற்றலாம் என்பதே இன்றைய ஜனாதிபதியின் மாற்றுவழி. அது எவ்வளவு கரடுமுரடான பாதை என்பதை இக்கட்டுரை தொடர்ந்து விளக்கும்.
முன்னைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் செழிப்பும் மகோன்னதமும் கொண்ட ஒரு நாட்டைக் கட்டி எழுப்புவதாகக்கூறி அதற்கொரு மாற்றுவழியையும் கையாள்வதாக அறிவித்து இறுதியில் அந்த வழி அவரையே நாட்டை விட்டோடச் செய்த சோக காவியத்தை எதிர்காலக் கவிஞனொருவன் பாடட்டும். ஆனால் அதேபோன்ற இன்னொரு சோக காவியத்துக்கு இன்றைய ஜனாதிபதி ஆளாகக்கூடாது என்ற எண்ணத்துடன் அவருடைய அலங்கார மாளிகையின் உறுதியற்ற அடித்தளத்தை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதற்கு முன்னர், மக்கள் பிணிகளைத் தீர்ப்பதற்கும் மாளிகை கட்டுவதற்கும் தேவையான பணத்தைப் பெறுவதற்கு ஜனாதிபதி கையாண்டுள்ள வழியினைப்பற்றி விளங்குதல் வேண்டும்.
இதுவரை பட்ட கடன் சுமை ஒரு புறமிருக்க இனியும் கடன் படுவதன்றி அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் ஓர் அவசரக் கடனைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியின் காலடியில் வீழ்வதைவிட ஜனாதிபதிக்கு வேறுவழி கிடையாது. சர்வதேச நாணய நிதியோ முதலாளித்துவப் பொருளாதாரங்களின் பாதுகாவலன். அதன் நோக்கமும் கடமையும் உள்நாட்டு வரவு செலவுகளிலும் சர்வதேசக் கொடுக்கல் வாங்கல்களிலும் மிகை காண்பது ஒருபுறமிருக்க சமநிலையேனும் காணமுடியாமல் இரண்டிலும் துண்டுவீழ்ச்சி கண்டு தத்தளிக்கும் இலங்கை போன்ற நாடுகளுக்கு அவசர நிதியுதவி வழங்கி ஒருவிதமான நிலைப்பாட்டை உருவாக்கி அதிலிருந்து அவற்றின் பொருளாதாரங்களை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்துவைக்க வழிவகுப்பதாகும். ஆனால் அதற்கு அடிப்படைத் தேவையாக சில கட்டுப்பாடுகளை அந்த நிதி விதித்து அவற்றை நிறைவேற்றினால் ஒழிய அதன் உதவி கிடைக்காது என்பதையும் வலியுறுத்தும். இலங்கைக்கும் அவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சாதாரண பிரஜைகளைப் பாதிக்கும் ஒன்றைமட்டும் விளக்கியபின் ஜனாதிபதியின் மாளிகையின் அடித்தளத்தைப்பற்றி விமர்சிப்போம்.
வரவு செலவுக் கட்டுப்பாடு
அரசின் உள்நாட்டு வரவுசெலவுகளைச் சீர்படுத்த வேண்டுமாயின் செலவினங்களைக் குறைத்து வரவுகளை கூட்ட வேண்டும். இங்கேதான் ஜனாதிபதியின் மாற்றுப் பாதையில் மிகப்பெரிய குழியொன்று தெரிகின்றது. வரவினைப் பெருக்க அரசுக்குள்ள வழிகள்; இரண்டு. ஒன்று வரிகளை உயர்த்துவது, மற்றது அரசுக்குச் சொந்தமான பொருளாதார நிறுவனங்களின் இலாபத்தைப் பெருக்குவது. இந்த நிறுவனங்கள் எல்லாமே நட்டத்தில் ஓடுவதால் இரண்டாவது வழியால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அவற்றையும் சீர்செய்ய வேண்டுமென்பது சர்வதேச நாணயநிதியின் இன்னொரு கட்டளை. அதைப்பற்றிப் பின்னர் ஆராய்வோம். முதலில் வரிகளைப்பற்றிய ஜனாதிபதியின் மாற்றங்கள் யாவை?
வரிகளும் அவற்றின் வசூலும்
வரிகள் இரண்டு வகைப்படும். ஒன்று வருமான வரிபோன்ற நேர் வரிகள். அவற்றை வருமானம் பெறும் நபரோ தனியார் நிறுவனமோ கட்டவேண்டும். மற்றது பொருள்களின் பெறுமதியில் சுமத்தப்படும் நேரில் வரிகள். இரண்டவதின் பளு பொருள்களை வாங்குவோரின் தலையில் சுமத்தப்படுவதால் அதனை நேரில் வரியென அழைப்பர். இரண்டுமே இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை அதிகரிப்பதும் இன்றுள்ள நிலையில் தவிர்க்கமுடியாத ஒன்று எனவும் கூறலாம். ஆனால் வரிகளை அதிகரிப்பது இலகு. அந்த வரிகள் எதிர்பார்த்த வருமானத்தை ஈட்டுமா என்பதுதான் கேள்விக்குறி. காரணம் வரித்திணைக்களத்தின் நிர்வாக ஊழல்கள். இது ஒரு நீண்டகாலச் சீர்கேடு மட்டுமல்ல, ஓர் ஊழல் கலாச்சாரத்தின் தவிர்க்கமுடியாத அங்கமாகவும் காணப்படுகிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வரித்திணைக்கள அதிகாரி ஒரு பக்கத்தில் வரி ஆணையை குறிப்பிட்ட வர்த்தகநிறுவனம் ஒன்றுக்கு அனுப்பிவிட்டு மறுபக்கத்தில் அதே அதிகாரி அந்த நிறுவனத்துக்குச் சென்று வரித்தொகையை எவ்வாறு குறைப்பதென்ற இரகசியத்தையும் ஒரு குறிப்பிட்ட சன்மானத்துக்காகச் சொல்லிக் கொடுத்தால் வரித்திணைக்களம் எதிர்பார்த்த வரித்தொகையை திரட்டுமா? இவ்வாறான ஊழல் நெடுங்காலமாக நடைபெற்றுவந்துள்ளது. அண்மையில் மத்திய வங்கியின் ஆளுனரும் வரிசெலுத்த வேண்டியவர்களுக்கு எந்தச் சலுகையும் வழங்கக்கூடாதென எச்சரித்துள்ளமை திணைக்களத்தையே எச்சரித்ததுபோல் இல்லையா?
ஏற்றுமதியின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றுவேன் என்று திடசங்கற்பம் பூண்டுள்ள ஜனாதிபதி ஏற்றுமதிசெய்யும் தனியார் துறைக்கு வருமான வரியை அதிகரித்தால் அது அத்துறையின் ஊக்கத்துக்குத் தடையாகாதா? ஏற்கனவே சில நிறுவனங்கள் வரி குறைந்த நாடுகளை நோக்கி தமது தொழிலை நகர்த்த முயற்சிகள் எடுப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. எனவே ஒரு பக்கத்தில் நிர்வாக ஊழல் வரி ஈட்டும் வருமானத்தை குறைக்க மறுபக்கத்தில் ஏற்றுமதி செய்யும் தொழில்கள் ஊக்கமிழந்து ஜனாதிபதியின் ஏற்றுமதிப் பொருளாதார அலங்கார மாளிகைக்கு அடிக்கல் வைக்கவும் தயங்கும் என்பது தெளிவாகின்றது.
நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள்
சமூகநலன் கருதி உள்நாட்டுப் போக்குவரத்து, நீர் விநியோகம், மின்சார சேவை போன்ற சில அத்தியாவசிய துறைகளை தனியார் துறைக்கு விடாமல் அரசாங்கமே பொறுப்பேற்று நடத்துவதிற் பல நன்மைகளுண்டு. ஆனால் அவையும் ஊழல் நிறைந்த நிறுவனங்களாக இயங்கினால் நட்டம் அடைவதைத் தடுக்க முடியாது. இலங்கை அரசின் எல்லா பொருளாதார நிறுவனங்களின் கதையும் அதுவே. அதைச் சீர்படுத்துமாறு சர்வதேச நாணய நிதி கட்டளையிட்டுள்ளது. அதற்கு ஜனாதிபதியின் பதில் அந்த நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்றுவிடுவதே. அதனால் தலையிடி தொலைந்தது என்று ஜனாதிபதி ஆறுதல் அடையலாம். ஆனால் அதன் பாரதூரமான விளைவுகளை மக்கள் அனுபவிக்கும்போது அந்த விளைவுகள் ஏற்படுத்தும் தலையிடி ஜனாதிபதியின் மூளையையே பாதித்துவிடலாம். தனியார்துறைக்கு விற்றுவிடுவதால் போட்டியை ஏற்படுத்தி அதன்மூலம் அந்நிறுவனங்கள் வழங்கும் சேவையின் கட்டணங்களை குறைக்கலாம் என்பது தனியார்மயப்படுத்தலை ஆதரிப்போர் கூறும் ஒரு நியாயம். உதாரணமாக, இலங்கையின் விமான சேவையை தனியார் நிறுவனமொன்றுக்கு விற்றுவிடுவதாக வைத்துக்கொள்வோம். இந்த நிறுவனம் யாருடன் போட்டி போடப் போகின்றது? இன்னுமொரு விமான சேவை இந்த நாட்டில் உண்டா போட்டி போடுவதற்கு? அதுவன்றி, வெளிநாட்டு நிறுவனங்களுடன்தான் அந்தப் போட்டி இருக்கும் என்று கூறினால் அந்தப் போட்டி இப்போதும் உண்டுதானே. இலங்கை விமான சேவையின் உண்மையான பிரச்சினை போட்டியல்ல, அதில் நிலவும் ஊழல். அதனை ஒழிக்க முயன்றால் அது அரசியல் பிரச்சினையாக மாறும் என்பதால் ஜனாதிபதி அதனை விற்பதற்குத் தயாராகிறார். இதே நிலைதான் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலும் தொலைபேசித் தொடர்பு நிறுவனத்திலும் காணப்படுகின்றது. ஏன் இந்த ஊழல் கலாசாரம்?
செல்லரித்த அத்திவாரம்
இலங்கையின் இன்றைய அவலத்துக்கும் ஜனாதிபதியின் ஏற்றுமதிப் பொருளாதார அலங்கார மாளிகை தடையாவதற்கும் காரணமாய் அமைந்துள்ளது நாட்டின் அரசியல் அத்திவாரத்தின் பலவீனம். அந்த அத்திவாரத்தை உடைத்தெறிந்துவிட்டுப் புதியதொரு அத்திவாரத்தை அமைக்காமல் எந்த ஒரு பொருளாதாரத் திட்டமும் இந்த நாட்டுக்குச் சுபீட்சம் தரமாட்டாது. அந்த அத்திவாரத்தைப்பற்றி இனிச் சில வார்த்தைகள்.
சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு இன்றுவரை இலங்கையின் அரசியல், பொருளாதார, கலாசார, சமூக அமைப்புகளின் நோக்கையும் போக்கையும் நிர்ணயிப்பது சிங்கள பௌத்த பேரினவாதம். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாகப் பல்லின மக்களையும் பல்லின கலாசாரத்தையும் மொழிகளையும் மதங்களையும் தன் மடியில் வைத்துத் தாலாட்டி வளர்த்த இலங்கைத் தாயின் வயிற்றிலே இறுதியாகப் பிறந்த துஷ்டக் குழந்தையே இப்பேரினவாதம். அது வளர்ந்து ஆளாகி இலங்கையர் என்னும் குடும்பத்தையே சீர்குலைத்துள்ளது. அந்தச் சீர்குலைவின் லட்சணத்தையே இன்றைய பொருளாதாரப் பிணிகளும் நிர்வாக ஊழல்களும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
பேரினவாதம் அமைத்த அரசியல் அத்திவாரத்தில் இலங்கை இலங்கையருக்கே என்ற இரும்புக் கம்பி அகற்றப்பட்டு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே என்ற மரப்பலகை மாட்டப்பட்டதால் அந்த அத்திவாரத்தை செல்லரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை இன்றைய ஜனாதிபதி உட்பட எந்தவொரு பெரும்பான்மை இன அரசியல் தலைவனும் துணிவுடன் சுட்டிக்காட்டி அந்த அத்திவாரத்தையே உடைத்தெறியத் தைரியமற்றவனாக இருக்கிறான். மாறாக, அதே அத்திவாரத்திலேயே விக்கிரமசிங்ஹவும் தனது அலங்கார மாளிகையை நிர்மாணிக்கத் துணிந்துள்ளார். அது கனவாகவே முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.
பேரினவாதமும் தேயிலை ஏற்றுமதியும்
பேரினவாதம் எப்படி பொருளாதாரத்தை பாதித்தது என்பதற்கு தேயிலை ஏற்றுமதியின் வரலாறு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சுதந்திரம் கிடைக்கும்போது இலங்கைத் தேயிலைக்கு உலக சந்தையில் ஒரு தனி மதிப்பு இருந்தது. ஆனால் அந்த மதிப்பை பின்வந்த அரசாங்கங்களால் காப்பாற்ற முடியவில்லை. அதற்குக் காரணம் தேயிலையின் தரமோ உலக சந்தையின் மதிப்புக் குறைவோ அல்ல. கைத்தொழில் மயமாக்கம், ஏற்றுமதிப் பன்முகப்படுத்தல் என்ற போர்வைகளில் தேயிலை உற்பத்தியை ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசாங்கங்கள் அணுகியதனாலேயே. அதற்கான உண்மையான காரணம் தேயிலைத் தோட்டங்கள் தமிழர்களின் தொழிற்படையினால் முற்றுகையிடப் பட்டிருப்பதே. சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழருக்கெதிரான தமது எதிர்ப்பை தேயிலை உற்பத்தியில் காட்டத் தொடங்கினர். இது தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை என்பது போல் இல்லையா?
அதே மாதிரியான பேரினவாதமே இப்போது முஸ்லிம்களின் வியாபார வளர்ச்சிக்கும் எதிரியாகச் செயற்படுகின்றது. இந்த நிலையில் பொருளாதாரம் எவ்வாறு வளர்ச்சி அடையும்?
எல்லாவற்றுக்கும் மேலாக பேரினவாதமே ஊழலையும் வளர்க்கின்றது என்பதை இனியும் மறைக்க முடியாது. பேரினவாதத்தை ஆதரிக்கும் தலைவர்களை ஆட்சியில் அமர்த்தி அவர்களின் அத்துமீறல்களையும் தனது மௌனத்தால் ஆதரிக்கும் இந்தத் தத்துவமே ராஜபக்ச ஆட்சியினரை நாட்டையே கொள்ளையடிக்கச் செய்தது. ஊழல்களைப்பற்றி அடிக்கடி அங்கலாய்க்கும் அரசியல் தலைவர்கள் ஏன் அதன் அடித்தளமாய் அமைந்துள்ள பேரினவாதத்தை கண்டிக்கிறார்கள் இல்லை? உண்மை என்னவெனில் அந்தத் தத்துவத்தை நிராகரிப்பதற்கு பெரும்பான்மை இனத்திலுள்ள எந்தத் தலைவனுக்கும், விக்கிரமசிங்ஹ உட்பட, துணிவில்லை. காரணம், அதனை எதிர்த்தால் ஆட்சியில் அமர முடியாது. இந்த துர்ப்பாக்கிய நிலை நீடிக்கும்வரை இந்த நாட்டுக்கு விமோசனமே இல்லை. ஜனாதிபதியின் அலங்கார மாளிகையும் மணல் வீடாகவே மாறும் என்பது உறுதி. – Vidivelli