உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம் ஏராளம். தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகம் என பல்வேறு தரப்பினரும் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்தனர். நூற்றுக் கணக்கானோர் அநியாயமாக கைது செய்யப்பட்டு பல வருடங்களை சிறையில் கழிக்க வேண்டிய துரதிஷ்டம் ஏற்பட்டது. இவர்களில் இன்னும் சிலர் அநியாயமாக தொடர்ந்தும் சிறையில் வாடுகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஏற்படுத்திவிட்டுச் சென்ற கசப்பான அனுபவங்களிலிருந்து முஸ்லிம் சமூகம் பாடம் படித்திருக்கும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருந்தது. இத் தாக்குதலின் பின்னராவது முஸ்லிம் சமூகம் தனக்குள் ஊடுருவியுள்ள மார்க்க ரீதியான கொள்கை முரண்பாடுகளிலிருந்து விலகியிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. துரதிஸ்டவசமாக, அந்த எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகி வருவதையே அண்மைக்கால சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.
கடந்த வாரம் காலி, கிந்தோட்டையில் அமைந்துள்ள அவுலியா மலைப் பள்ளிவாசலை மையப்படுத்தி தோற்றம் பெற்ற முரண்பாட்டினால் இரு குழுக்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்று 12 பேரளவில் காயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட போது முஸ்லிம் சமூகம் இன்னும் திருந்தவில்லை என பலரும் கருத்துக்களை வெளியிட்டதையும் நாம் கண்டோம்.
அதேபோன்றுதான் கடந்த ஹஜ் பெருநாள் உழ்ஹிய்யா இறைச்சி விநியோகத்தினால் தோற்றம் பெற்ற பள்ளிவாசல் நிர்வாக சபை முரண்பாடு காரணமாக அநுராதபுரம், அசரிக்கம பிரதேசத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட துரதிஷ்ட சம்பவமும் அரங்கேறியது. இது போன்ற பல சம்பவங்கள் ஆங்காங்கே பதிவாகியுள்ளன. இவை தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் கூர்மையாக அவதானித்து வருவதாகவும் இவ்வாறான முரண்பாடுகள் நிலவும் பள்ளிவாசல்கள் பற்றிய பட்டியலை முஸ்லிம் சமய திணைக்களம் மற்றும் வக்பு சபையிடமிருந்து கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிவாசல்களையும் இஸ்லாமிய கொள்கை வேறுபாடுகளையும் மையப்படுத்திய மோதல்கள் அதிகரித்துச் செல்கின்றமை கவலைக்குரியதாகும். இது ஓர் ஆரோக்கியமான நகர்வாக தெரியவில்லை.
முஸ்லிம்கள் மத்தியில் அடிப்படைவாதம், தீவிரவாதம் தோற்றம் பெற்றுள்ளது என முஸ்லிம் விரோத சக்திகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதாக எமது செயற்பாடுகள் அமையக் கூடாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரும் கறையாகும். இந்தக் கறையைத் துடைத்து சமூகம் மீது கட்டவிழ்க்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களை களைவதற்கான நடவடிக்கைகளை ஒரு சமூகமாக நாம் முன்னெடுக்க வேண்டுமே தவிர, மீண்டும் மீண்டும் எம்மீது பழிசுமத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
இவ்வாறான முரண்பாடுகள் நிலவும் பள்ளிவாசல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு உலமா சபை, பள்ளிவாசல் சம்மேளனங்கள், வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய திணைக்களம் என்பன இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைகளைத் தோற்றுவிப்போர், வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகிகளாக வருவோருக்கான தகுதிகளை வரையறை செய்ய வேண்டும். கடந்த காலங்களில் குற்றச் செயல்கள், வன்முறைகள், மோதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை நிர்வாகங்களிலிருந்து நீக்க வேண்டும். இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவே பள்ளிவாசல்களை மையப்படுத்திய முரண்பாடுகளை கட்டுப்படுத்த முடியுமாகவிருக்கும். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் விரைந்து செயற்பட வேண்டும். இன்றேல் இன்னுமின்னும் சமூகம் தலைகுனிவுகளைச் சந்திப்பதை தவிர்க்க முடியாது போகும்.