சிங்களத்தில்: ராஹுல் சமந்த ஹெட்டியாரச்சி
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
இலங்கை வரலாற்றில் கரும் புள்ளியாகப் பதிவாகிவிட்ட 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் காரணங்களை ஆராய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. என்றாலும் இந்த ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகள் இன்றுவரை அமுலாக்கம் செய்யப்படவில்லை. ஆனால் இந்த ஆணைக்குழுவுக்காக செலவிடப்பட்ட தொகை 9 கோடி 13 இலட்சம் ரூபாவுக்கும் (91,369,829.98) அதிகமாகும். இந்த விபரங்களை தகவல் அறியும் உரிமையின் கீழ் (RTI) ஜனாதிபதி செயலகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் மூலம் வெளிப்படுத்திக்கொள்ள முடிந்தது.
இவ்வாறு 9 கோடி ரூபாய்களுக்கும் அதிகமான நிதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் எவ்வாறு, எந்தெந்த விடயங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது என்ற விபரங்களையும் தகவல் அறியும் உரிமை மூலம் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவாக ஒருகோடி 2 கோடி இலட்சம் ரூபாவுக்கு அதிகமாக (10,200,412,00) வும் ஏனைய அதிகாரிகளுக்கான கொடுப்பனவாக மூன்று கோடி 11 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான (31,162,101.97) நிதியும் ஆணைக்குழு இயங்கிய கட்டிடத்துக்கான கொடுப்பனவாக 3 கோடி 77 இலட்சம் ருபாவுக்கும் அதிகமான நிதியும்(37,754,151.69)செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நடத்திச் செல்வதற்கு தேவையான உபகரணங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்வதற்காக 69 இலட்சத்துக்கும் அதிகமான (6,905,326.00) நிதி செலவிடப்பட்டுள்ளது. இதே வேளை பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதற்காக 11 இலட்சத்துக்கும் அதிகமான (1,1 97,806,00) நிதி வழங்கப்பட்டுள்ளது. ஏனைய செலவுகள் 41 இலட்சத்துக்கும் அதிகம் (4,150,032.32) என தரவுகள் வழங்கப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களை சிலவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 45 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 270 பேர் பலியானார்கள். அத்தோடு 500 க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்குள்ளாகினர்.
இலங்கையில் நியமிக்கப்பட்ட ஏனைய ஆணைக்குழுக்களை விட, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்பட்ட இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் மிகவும் கரிசனை கொண்டிருந்தது.
பெரும் எண்ணிக்கையிலான மக்களின் உயிர்களைப் பலியெடுத்த மற்றும் பாரிய அளவிலான மக்களின் சொத்துக்களுக்கு அழிவினை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல் தொடர்பிலான காரணங்களை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட இவ் ஆணைக்குழு 214 நாட்கள் விசாரணைகளை மேற்கொண்டது. பாதுகாப்பு சேவைகளை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் தாக்குதலுக்கு முகம் கொடுத்தவர்கள், இவர்களைச் சார்ந்தவர்கள் என 457 பேரின் சாட்சியங்களை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பதிவு செய்துள்ளது. இவர்களில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய ஜனாதிபதியும், தாக்குதல் இடம் பெற்ற காலத்தில் பிரதமராக பதவி வகித்தவருமான ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் உள்ளடங்குவர்.
எவ்வாறெனினும் இவ்வாறு பெரும் தொகை பணம் செலவிட்டு செயற்பட்ட இந்த விசாரணை ஆணைக்குழு கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் நிதியினை விரயமாக்கிய மற்றுமொரு ஆணைக்குழுவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
தகவல்களை வழங்குவதற்கு ஒரு வருடமும் 8 மாதங்களும்
உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு செலவு செய்த செலவுகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தகவல்களைக் கோரி 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தகவல் அறியும் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டது. என்றாலும் இதன்பின்பு தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் 5 (1) (அ) மற்றும் 5 (1) (ஊ) பிரிவின் விதந்துரைகளுக்கமைய தகவல்களை வழங்கமுடியாது எனத் தெரிவித்து ஜனாதிபதி செயலகத்தினால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
என்றாலும் குறிப்பிட்ட சட்டபிரிவுகளில் அடங்கியுள்ள காரணங்களைக் கவனத்தில் கொண்டால் அப்பிரிவுகளில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 (1) (அ) பிரிவு தனிப்பட்ட தகவல்களுடன் தொடர்புபட்டவையென்றால் மற்றும் தனி நபர் ஒருவரின் விடயத்தில் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு நடக்குமென்றால் தகவல் வழங்குவதை மறுக்கலாம் இதுபோன்று 5 (1) (ஊ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏதாவதொரு குற்றச்செயலை கண்டுபிடிப்பதற்கு அல்லது குற்றவாளிகளை கைது செய்வதற்கு, அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கு பாதகம் ஏற்படுமென கருதினால் அல்லது தேசிய பாதுகாப்புக்கு தகவல்கள் பாதிப்பாக அமையும் எனக்கருதும் சந்தர்ப்பங்களில் மாத்தரமே தகவல்களை வழங்குவதை நிராகரிக்கலாம்.
எனினும் ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரியினால் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவின் செலவினங்கள் தொடர்பான தகவல்கள் மறுக்கப்பட்டுள்ளது. இந்த மறுப்பு தொடர்பில் ஆராய்ந்து நோக்கிய போது இந்தத் தகவல்களை குறிப்பிட்ட பிரிவுகளுக்குள் உள்ளடக்க முடியாது. மறுக்க முடியாது என்பதாகும்.
அத்தோடு உரிய நடைமுறையின் ஊடாக தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட மேன்முறையீட்டினையடுத்து பல தடவைகள் இது தொடர்பான விசாரணைகள் நடாத்தப்பட்டன. அதேவேளை ஒரு தடவை ஜனாதிபதி செயலக காரியாலயம் மேன்முறையீட்டு விசாரணையில் கலந்து கொள்வதிலிருந்தும் தவிர்ந்திருந்தது.
எவ்வாறாயினும் மேன்முறையீட்டு இல. RTIC Appeal /897/2021 ன் கீழ் 2022.10.06 ஆம் திகதி நடைபெற்ற மேன்முறையீட்டு விசாரணையையடுத்து குறிப்பிட்ட தகவல்களை விண்ணப்பதாரிக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலகத்துக்கு தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு உத்தரவிட்டது. அதன்படி 2022.10.20 ஆம் திகதி தகவல்கள் வழங்கப்பட்டன. தகவல்கள் வழங்குவதற்கு எடுக்கப்பட்ட காலம் ஒரு வருடமும் 8 மாதங்களாகும். இக்கால எல்லையில் வேலை செய்யும் நாட்கள் 400 ஆகும்.
இவ்விடத்தில் இந்நாட்டு மக்களுக்கு குறிப்பிட்டுக்கூறவேண்டிய விடயம் ஒன்றுள்ளது. அதாவது அதிகாரிகளுக்குப் பாதகம் ஏற்படும் வகையிலான தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக தகவல்கள் வழங்கப்படுவது மறுக்கப்படுகிறது. இலங்கையில் இது சாதாரணமாக நடைபெறுகிறது என்றாலும் அவ்வாறு மறுக்கப்பட்டாலும் அரச நிறுவனங்கள் மறுத்தாலும் நாம் இறுதிவரை நாம் இலக்கினை எய்துவதற்கு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கென நியமிக்கப்பட்டகுழு
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பான நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி அவரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சிபாரிசு செய்வதற்கென அறுவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தீர்மானத்துக்கமைய இக்குழு நியமிக்கப்பட்டது. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலுமொரு குழுவாகும்.
இக்குழு அப்போதைய அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் நியமிக்கப்பட்டது. இக்குழுவில் ஜோன்ஸ்டன் பர்ணாந்து, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் அங்கம் பெற்றிருந்தனர். இந்தக் குழு சட்டரீதியானதல்ல என எதிர்க்கட்சியும் குற்றம் சுமத்தியது.
அத்தோடு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் இக்குழுவின் நியமனத்தை எதிர்த்து கருத்து வெளியிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை 472 பக்கங்களையும் 215 இணைப்புகளையும் 6 அத்தியாயங்களையும் கொண்டதாகும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்காத உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எமது நாட்டில் இதுவரை நீதியைப் பெற்றுக்கொடுக்காத ஆணைக்குழு அறிக்கைகளில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
நன்றி: சிலோன் நியூஸ்
– Vidivelli