எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட வேண்டும் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தொகுதியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அவர் மேயர் வேட்பாளராக களமிறங்கும்போது பாராளுமன்ற பதவியை துறந்தால் அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குப் பட்டியலில் அடுத்தபடியாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவு செய்யப்படுவார் என்றும் நளின் பண்டார எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை தொடர்புகொண்டு கேட்ட போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் ஒத்தி வைத்து இருக்கின்ற சபையை மேலும் கால நீடிப்பு செய்ய முடியாது. கீழ் மட்ட அரசியல் அதிகார பீடத்தின் ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும். எனவே, உடனடியாக உள்ளூராட்சி தேர்தலுக்கு அரசாங்கம் செல்ல வேண்டும்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே, கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் பற்றிய தீர்மானம் கட்சியின் உயர் மட்டத்தில் எடுக்கப்படும். அதுவரை, நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. அத்தோடு, ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவிருக்கும் முதலாவது உள்ளூராட்சி மன்ற தேர்தல் என்பதால் பலமான வேட்பாளர்களை களமிறக்கும் வியூகங்கள் அமைக்கப்படலாம். அந்த வகையில் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பலமான வேட்பாளர் குறித்து நாம் தீர்மானம் எடுப்போம்.
நளின் பண்டார எம்.பி. குறிப்பிட்டது போன்ற தீர்மானங்களும் எடுக்கப்படலாம். எனினும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.- Vidivelli