அஷ்ஷைக் பளீல் (நளீமி)
ஏகாதிபத்தியத்தின் சின்னம் எலிசபெத் மகாராணியின் இறுதிக்கிரியை நிகழ்வுகளை நாம் மனக்கண் முன் கொண்டு வருவோம். முழு உலகமும் தொலைக்காட்சியில் அவற்றைப் பார்த்துக்கொண்டு பிரமித்துப் போனது. அதேவேளை, அவர் தலையில் அணிந்திருந்த கிரீடத்தில் இருந்த மாணிக்கக் கற்கள் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பலாத்காரமாக எடுத்துச்செல்லப்பட்டவை என்றும் இவ்வளவு அதிகமான பணியாட்களை கொண்ட மிக ஆடம்பரமான பகிங்ஹாம் அரண்மனையை நிர்மாணிக்கவும் நிர்வகிப்பதற்காகவும் பின்தங்கிய, ஏழை நாடுகளிலிருந்தே பணம் சுரண்டப்பட்டது என்றும் பேசப்பட்டதை யாரால் மறுக்க முடியும்?
பிரித்தானியாவின் ஆதிக்கம் (ஏகாதிபத்தியம்) உலகின் பல நாடுகளில் இருந்தமையால் சூரியன் மறையாத தேசம் என்று அது வர்ணிக்கப்பட்டது. காலனித்துவவாதம் பிரித்தானியாவுக்கு மட்டும் உள்ளதாக இருக்கவில்லை.
ஏகாதிபத்தியம் அல்லது பேரரசுவாதம் (Imperialism) என்பது, பேரரசு ஒன்றை உருவாக்கும் அல்லது அதனைப் பேணும் நோக்குடன், வெளி நாட்டின் மீது தொடர்ச்சியான கட்டுப்பாட்டையோ மேலாதிக்கத்தையோ செலுத்தும் கொள்கையாகும்.
ஒரு காலத்தில் ஐரோப்பியர்கள் அமெரிக்க, ஆபிரிக்க மற்றும் ஆசிய நாடுகளை காலனித்துவ ஆக்கிரமிப்பைச் செய்து பிழிந்தெடுத்தார்கள். இவர்கள் கடைப்பிடித்த Imperialism (ஏகாதிபத்தியம், பேரரசு வாதம்) Colonization (காலனித்துவம்) ஆகிய கொள்கைகள் மிகக் கொடூரமானவையாகும். இவை கீழைத்தேய நாடுகளை அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, ஏன் சிந்தனா ரீதியாகக் கூட அடக்குவதற்கும் சுரண்டுவதற்குமான மறுபெயர்களாகும்.
“ஏகாதிபத்திய காலம்” என்பது ஐரோப்பிய நாடுகள், பிற கண்டங்களில் குடியேற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கிய காலத்தையே குறிக்கின்றது. பேரரசுவாதம் என்பது, தொடக்கத்தில், 1500 களின் பிற்பகுதியில், பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆபிரிக்கா, அமெரிக்காவை நோக்கிய விரிவாக்கம் தொடர்பான கொள்கைகளைக் குறிக்கவே பயன்பட்டது.
இவ்வாறு தமக்கு எந்த வகையிலும் உரித்துக் கொண்டாட முடியாத பிற நாடுகளை ஆக்கிரமிப்பதற்கான உரிமை இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
காலனித்துவவாதிகள் தாம் சென்ற இடங்களிலெல்லாம் மக்களை கொன்று குவித்தார்கள். அந்த அந்த நாடுகளில் உள்ள வளங்களை சுரண்டிக் கொண்டு வந்து தமது நாடுகளைப் போஷித்தார்கள். அதற்கு மேலாக தமது மதத்தை இந்த நாடுகளில் திணித்தார்கள். இந்த நாடுகளில் இருந்து இந்த சுரண்டல்காரர்களை வெளியேற்ற அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் அவர்களை துரத்தியடிக்க கீழைத்தேய நாட்டு மக்கள் அதிகமதிகம் போராடினார்கள். லட்சோப லட்சம் மக்கள் இப்போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்ய நேரிட்டது.
உதாரணமாக, 1954 ஐத் தொடர்ந்த காலப்பிரிவில் அல்ஜீரியாவிலிருந்து பிரான்ஸிய காலனித்துவவாதிகளைத் துரத்த சுமார் 15 லட்சம் பேர் உயிர் கொடுத்தனர்.
காலனித்துவத்தின் நோக்கம்
காலனித்துவ விரிவாக்கத்தின் உந்துதல்களை கடவுள், தங்கம் மற்றும் மகிமை (God, Gold, Glory) என்று சுருக்கமாகக் கூறலாம்.
Historians use a standard shorthand, “Gold, God, and Glory,” to describe the motives generating the overseas exploration, expansion, and conquests that allowed various European countries to rise to world power between 1400 and 1750.(https://www.encyclopedia.com/social-sciences/applied-and-social-sciences-magazines/gold-god-and-glory)
‘கடவுள்’ என்று கூறக் காரணம், மிஷனரிகள் கிறிஸ்தவத்தைப் பரப்புவதை தார்மீகக் கடமை என்று கருதினர், மேலும் காலனித்துவ நோக்கங்களை காப்பாற்றுவதற்கு கடவுள் அவர்களுக்கு வெகுமதி அளிப்பார் என்று அவர்கள் நம்பினர்.
‘தங்கம்’ என்று கூறக் காரணம், காலனித்துவவாதிகள் தங்கள் சொந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மற்ற நாடுகளின் வளங்களை சுரண்டினார்கள்.
‘மகிமை’ என்று கூறக் காரணம், ஐரோப்பிய நாடுகள் அதிக எண்ணிக்கையிலான காலனிகளை அடைவதில் பெருமையுடன் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன.
வித்தியாசம் என்ன?
இந்த ஏகாதிபத்தியவாதிகள் செய்த போராட்டங்களுக்கும் முஸ்லிம் படைகள் செய்த போராட்டங்களுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடு காணப்பட்டது.
முஸ்லிம்களது படையெடுப்புக்கள் புனிதமான இலக்குகளைக் கொண்டிருந்தன என்பதற்கு பின்வரும் சம்பவம் நல்ல உதாரணமாகும்.
பிரான்ஸில் அப்துர் ரஹ்மான் காபிகீயின் தலைமையில் நகர்ந்து கொண்டிருந்த இஸ்லாமிய சேனையை தற்போதைய பிரான்ஸின் வட பகுதியில் இருந்த அகுய்டைன் எனும் பகுதியில் கிறிஸ்தவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கு இடம்பெற்ற யுத்தம் Battle of Tours எனப்பட்டது. அதில் எதிரிப்படையினர் இஸ்லாமிய சேனையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொலை செய்தார்கள். கி.பி.732 இல் ரமழான் மாதத்தில் நடந்த இப்போராட்டத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களது ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு ’பிலாதுஷ் ஷுஹதா’ (ஷஹீதுகளது ராஜபாட்டை) Battle of the Highway of the Martyrs என்று பெயரிடப்பட்டது.
அவர்களது மண்ணறைகளிலிருந்து இரவில் பாங்கோசை கேட்பதாக அப்பிரதேசத்தவர்கள் கூறியதாக இப்னு ஹய்யான் எனும் வரலாற்றாசிரியர் கூறுகிறார். ‘அல்லாஹ் மிகப்பெரியவன்’, ‘அல்லாஹ் மிகப்பெரியவ’ என்ற வாசகங்களை பாங்கு கொண்டிருக்கிறது. “அந்த மண்ணறைகளில் இருந்து யுத்தத்துக்கு அழைக்கும் மேளச் சத்தங்களையோ வாள்வீச்சு சத்தங்களையோ யுத்தம் செய்வோரது கூச்சல்களையோ அப்பிரதேசத்தவர்கள் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் ஏகத்துவத்தினதும் ஈமானினதும் தொழுகையினதும் வாழ்க்கையில் வெற்றியினதும் கோஷத்தையே காதுகளால் கேட்டார்கள்” என அஷ்ஷைக் கஸ்ஸாலீ அவர்கள் தனது ‘மஅல்லாஹ்’ எனும் நூலில் மிகவும் காத்திரமான ஒரு கருத்தை சொல்லுகிறார்கள்.
ஆனால், காலனித்துவவாதிகள் எந்த எந்த நாடுகளுக்கெல்லாம் சென்றார்களோ அங்கு அவர்கள் போராடி இறந்த பொழுது அவ்வப்பிரதேசங்களில் அவர்களது பூதவுடல்கள் அடக்கப்பட்டன. எனவே, “அவர்களது மயானங்களில் இருந்து ‘தங்கம், தங்கம், பெட்ரோல், பெட்ரோல், சுரண்டல், சுரண்டல்’ என்ற கூக்குரல்கள் தான் வெளிவரும்” என்று அஷ்ஷைக் கஸ்ஸாலீ சொல்லுகிறார்கள்.(பக்:163)
பிரபல எழுத்தாளர் உஸ்தாத் ஸையாத் அவர்கள் “இஸ்லாமிய யுத்த வெற்றிகள் காலனித்துவத்துக்கான அல்லது வரி அறவிடுவதற்கான வெற்றிகளாக இருக்கவில்லை. மாறாக, சுதந்திரத்திற்கும் நேர்வழி காட்டலுக்குமான வெற்றிகளாகவே இருந்தன” என்று கூறிவிட்டு ‘பூவுலகில் அவை சுதந்திரம், அபிவிருத்தி, ஏகத்துவம், ஈமான், சத்தியம், நற்செயல்கள், புதிய கண்டுபிடிப்புக்கள், நீதி என்பவற்றுக்கான வெற்றிகளாக இருந்தன’ என்று சொல்லுகிறார். (மேற்படி நூல்:162)
மனிதனைப் படைத்து பரிபாலித்து வரும் சர்வ வல்லமையும் கொண்ட பிரபஞ்ச நாயகன், ஏக இரட்சகனையே வணங்கி வழிபட வேண்டும் என்ற கொள்கையின் நிழலில் வாழும்படியே இஸ்லாமிய சேனை அழைப்பு விடுத்தது. எனவே, இஸ்லாமிய சேனை போன இடங்களில் எல்லாம் அல்லாஹ்வையே மகத்துவப்படுத்த விரும்பியது.
காலனித்துவவாதிகள் தாம் ஆக்கிரமித்த நாடுகளை ஏன் ஆக்கிரமித்தனர் என்ற கேள்விக்கு தெளிவான பதில் அஷ்ஷைக் அல்கஸ்ஸாலி அவர்களால் கூறப்பட்டிருக்கிறது.
இலங்கை, இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு படையெடுத்துச் சென்ற மேற்கத்தியவர்கள் ஏன் சென்றனர்? அப்பிரதேசங்களில் இருந்த மக்களுடைய வாழ்வை வளப்படுத்த வேண்டும், அடிமைத் தழையிலிருந்து விடுதலை செய்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்ய வேண்டும், பொருளாதார ரீதியாக, அவர்களை வளப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலா? அல்லது வேறு நோக்கங்களிலா என்பதற்கு இக்கூற்று மிகச்சிறந்த ஆதாரமாகும்.
பாரசீகத் தளபதி ருஸ்துமின் அரசவைக்குச் சென்ற முஸ்லிம் சேனையின் பிரதிநிதி ரிப்யீ இப்னு ஆமிரிடம் ருஸ்தும் ‘நீங்கள் என்ன நோக்கத்தோடு இங்கு வந்திருக்கிறீர்கள்? என்று கேட்ட போது, “படைப்பினங்களை வணங்குவதை விடுத்து படைத்தவனை வணங்குவதற்கு அடியார்களுக்கு அழைப்புக் கொடுப்பதற்காக அல்லாஹ் எங்களை அனுப்பியிருக்கிறான். உலகத்தின் நெருக்கடியிலிருந்து அதன் விசாலத்தின் பால் அழைக்க நாங்கள் வந்துள்ளோம். மதங்கள் என்ற பெயரால் இழைக்கப்படும் அநீதிகளிலிருந்து காத்து இஸ்லாமிய நீதத்தின் பால் அழைப்பு விடுக்க நாங்கள் வந்துள்ளோம்” என்று அவர் கூறினார். (தபரீ: தரீகுர் ருசுல் வல்முலூக்,7/39, இப்னு கஸீர், அல்பிதாயா வன்னிஹாயா,3/520)
யுத்தங்களுக்கான பின்னணிகள்
உலகில் தொன்றுதொட்டு பல்வேறு நோக்கங்களுக்காக போர்கள் செய்யப்பட்டு வருகின்றன. இனம், மொழி, நிறம், பிரதேசம் போன்ற வேறுபாடுகளின் காரணமாக தோன்றும் வெறியால் தூண்டப்பட்டு மக்கள் யுத்தங்களில் ஈடுபடுவதுண்டு. பலமான சமூகங்கள் பலவீனமான சமூகங்களை ஆக்கிரமித்து, அவற்றின் வளங்களை சுரண்டி, தம்மை வளர்த்துக் கொள்ள வரலாற்றில் யுத்தங்களைத் தொடுத்துள்ளன.
இஸ்லாம் பிரதேச வெறியை எதிர்த்துப் போராடியது. நீதியே அரசாட்சி செய்யவேண்டும் என்பதற்காகவும் மக்களுக்கு மத்தியில் அன்பு நிலவ வேண்டுமென்பதற்காகவும் இந்த நிலைப்பாட்டை எடுத்தது.
நபி (ஸல்) அவர்கள் ‘எமக்கு மத்தியில் யார் இன, பிரதேசவாதத்தின்பால் அழைப்பு விடுக்கிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்லர். யார் இன, பிரதேசவாதத்திற்காகப் போராடுகிறாரோ அவரும் எம்மைச் சார்ந்தவரல்லர்’ என்றார்கள். (அபூதாவூத், கிதாபுல் அதப் – 112, ஸஹீஹ் முஸ்லிம், கிதாபுல் இமாரா – 57)
காலனித்துவ நோக்கங்களுக்காகவும் பொருளாதார நலன்களுக்காகவும் செய்யப்படும் போர்களை இஸ்லாம் வெறுக்கிறது. அவை சந்தைகளையும் மூலப்பொருட்களையும் தேடி செய்யப்படும் சுரண்டலுக்கான போர்களாகும். அவை பின்தங்கிய பலவீனமான நிலையிலுள்ள சமூகங்களை அடிமைப்படுத்தவும் தொடர்ந்தும் அவற்றை சுரண்டல்வாத காலனித்துவவாத ஆட்சியின் கீழ் வைத்துக்கொள்ளவும் செய்யப்படும் போர்களாகும். அந்தவகையில், அவை கொள்ளையடிப்பதற்கான, சூறையாடுவதற்கான, பலாத்காரத்துக்கான போர்களாகும். அவை சமுதாயங்களது கண்ணியத்துக்கும் சுயாதிபத்தியத்திற்கும் எதிரானவையே. இத்தகைய போர்கள் இஸ்லாத்தில் முற்றாகத் தடைசெய்யப்பட்டவையாகும். இத்தகைய போர்களைத் தூண்டுவோர் அல்லாஹ்வின் மிகப் பொதுவான நீதி உலகில் நிலவி, வாழ்வை வழிநடாத்தத் தடைபோடுகிறார்கள். சுரண்டலையும் அநீதியையும் பிறரது செல்வங்களை அநியாயமாக விழுங்குவதையும் விரும்புவார்கள். மேலும், அரசர்கள், வீரர்களது வரட்டு கௌரவங்களுக்காகச் செய்யப்படும் போர்களையோ, தனிப்பட்ட இலாபங்களுக்காகவும், கொள்ளைக்காகவும் செய்யப்படும் போர்களையோ இஸ்லாம் நிராகரிக்கிறது’ என ஆய்வாளர் கலாநிதி தசூகி எழுதுகிறார். (அத்தசூகி, அத்திராஸாதுல் இஸ்லாமிய்யா – 19 -20, மேலதிக விபரத்திற்குப் பார்க்க – அல்அலாகாத் அத்தௌலிய்யா – 22,23)
உமையாக்களது காலத்தில் மஸ்லமா இப்னு அப்துல் மலிக் எனும் தளபதி தனது படைகள் சகிதம் உரோமர்களது பெரும் கோட்டையொன்றை முற்றுகையிட்டிருந்தார். ஆனால், அந்த கோட்டைக்குள் படையினரால் நுழைய முடியவில்லை. எனவே, மஸ்லமா தனது படையை நோக்கி : “உங்களில் யாராவது ஒருவருக்கு இந்த கோட்டையில் ஒரு துளையை (அரபு மொழியில் துளை ‘நக்ப்’ எனப்படும்) ஏற்படுத்தி அதனூடாக நுழைந்து கோட்டையின் கதவை திறக்க முடியுமா?” என்று கேட்டார். அப்போது இனந்தெரியாத ஒருவரால் அக்கோட்டையில் ஒரு துளையிடப்பட்டுகிறது. அந்தத் துளையூடாக நுழைந்த அவர் பல்வேறுபட்ட ஆபத்துக்களையும் எதிர்கொண்ட நிலையில் அந்த கோட்டையின் கதவை திறந்து விடுகிறார். எனவே, அக்கதவினூடாக நுழைந்த முஸ்லிம் படையினரால் கோட்டை கைப்பற்றப்படுகிறது.
இதன் பின்னர் தளபதி மஸ்லமா தனது படையினரிடத்தில் ‘ஸாஹிபுன் நக்ப் (துளைவாசி) எங்கே?” என்று கேட்கிறார். ஆனால், எவரும் முன்வரவில்லை. அப்போது மஸ்லமா “கட்டாயமாக என்னிடத்தில் அந்த துளைவாசி வரவேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.
சிறிது நேரத்தில் இரவு வேளையில் தன்னை முழுமையாக மூடிய நிலையில் ஒருவர் வந்து “அந்த துளைவாசி யார் என்று உங்களுக்கு அறிவிப்பேன். ஆனால், அவர் தன்னை இனம்காட்டுவதற்கு மூன்று நிபந்தனைகளை இடுகிறார். அவையாவன;- முதலாவது, கலீபாவுக்கு அனுப்பும் கடிதத்தில் அவருடைய பெயர் இடம்பெறக் கூடாது. இரண்டாவது, அவர் செய்த இக்கருமத்திற்கு கைமாறாக எதுவும் வழங்கப்படக் கூடாது. மூன்றாவது, அவர் யார் என்று நீங்கள் கேட்கக் கூடாது” என்று சொன்ன பொழுது மஸ்லமா “அவர் எங்கே?” என்று கேட்கிறார். அதற்கு அந்த படைவீரர் பணிவோடும் வெட்கத்தோடும் “தளபதி அவர்களே, நான் தான் அந்த துளைவாசி” என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்திலிருந்து வெளியேறிச் சென்றார். அதன் பிறகு மஸ்லமா அவர்கள் தான் தொழுத ஒவ்வொரு தொழுகையிலும் “மறுமையில் யா அல்லாஹ் என்னை ‘ஸாஹிபுன் நக்ப்’ உடன் சேர்த்து விடுவாயாக” என்று பிரார்த்தித்து வந்தார்கள் என வரலாறு கூறுகிறது. (உயூனுல் அக்பார் 1/265)
இஸ்லாமிய சேனையில் இணைந்து போராடியவர்கள் உலக இலாபங்களையோ புகழையோ அணுவளவேனும் எதிர்பார்க்காமல் தியாகத்தோடு உழைத்திருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
யுத்தங்கள் அற்பமான, லோகாயத நோக்கங்களுக்காகச் செய்யப்படுவதனை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. நபி (ஸல்) அவர்களது காலத்தில் நடந்த யுத்தங்களின் போது அவற்றில் கலந்து கொண்ட சிலரிடம் இத்தகைய நோக்கங்களை அவதானித்த நபிகளார்(ஸல்) அவற்றிற்காக இறைவனது கூலி கிட்டாதென்றும் அவை பிழையான நோக்கங்கள் என்றும் தெரிவித்தார்கள்.
அ. ஒருவர், நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்கிறார். அதேவேளை, அதன்மூலம் உலக செல்வங்களை ஈட்டிக்கொள்ளவும் விரும்புகிறார். அவர் பற்றிய அபிப்பிராயம் யாது?’ என வினவினார். அதற்கு நபியவர்கள் ‘அவருக்கு நற்கூலியே கிடையாது’ என்று மூன்று தடவை மீட்டி மீட்டிக் கூறினார்கள். (அபூதாவூத், கிதாபுல் ஜிஹாத் – 2516)
ஆ. ஒரு தடவை நபி(ஸல்) அவர்களிடம் ‘ஒருவர் (மக்களால்)தான் புகழப்பட வேண்டும் என்பதற்காகப் போராடுகிறார், மற்றொருவர் உலக இலாபமொன்றுக்காகப் போராடுகிறார். இன்னொருவர், மக்கள் தன்னைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் போராடுகிறார். இந்த நோக்கங்களில் அல்லாஹ்வின் பாதையில் எனக் கருதத்தக்க நோக்கம் யாது?’ என வினவப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘யார் அல்லாஹ்வின் வார்த்தை மட்டும் மேலோங்கியதாக இருக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகிறாரோ அவர் மட்டுமே (அல்லாஹ்வின் பாதையில் போராடியவராகக் கருதப்படுவார்)’ என்றார்கள். (அபூதாவூத், கிதாபுல் ஜிஹாத் – 2517, அஹ்மத், பாகம் – 01, பக்கம் – 416)
முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதாகவும் முஸ்லிம் அல்லாதோர் ‘தாகூத்’ இன் வழியில் – பிழையான வழியில், அத்துமீறுபவர்களின் பாதையில் யுத்தம் புரிவதாகவும் அல்குர்ஆன் தெரிவிக்கிறது.(சூரா அல்பகரா – 76)
யுத்தம் தொடுக்கும் போது முஸ்லிம் படை கடைப்பிடிக்க வேண்டிய ஒரு முக்கியமான ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் அல்லாஹ், ‘உங்கள் மீது எவரும் அத்துமீறினால் அவர் அத்துமீறும் அளவுக்கே நீங்களும் அத்துமீறுங்கள். அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்’ என்று தெரிவிக்கிறான்.
இதுபற்றி விபரிக்கும் அஷ்ஷைக் அல்கஸ்ஸாலி, ‘மிகவும் அவதானத்தோடும் கவனத்தோடும் போரிட வேண்டுமென்று இவ்வசனம் கூறுகின்றது. அதாவது இறையச்சம் மூலம் பெற்ற கடுமையான வரையறைகளால் அப்போராட்டம் நெறிப்படுத்தப்பட வேண்டும். அந்தத் தக்வா (இறையச்சத்தை) அடைவதற்கே அவர்கள் அன்றும் இன்றும் போராடுகிறார்கள். துஷ்டர்களைத் தடுத்து நிறுத்தவும் ஆட்சிக்கதிரை வரம்புமீறாமல் தடுக்கவும் மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்துக்கு விதிக்கப்படும் இத்தகைய நெறிமுறை போல் வேறு எங்கும் காணமுடியாது.” என்கிறார். (அல்கஸ்ஸாலி, அல்இஸ்லாம் வல் இஸ்திப்தாதுஸ் ஸியாஸி பக்கம் : 99)
‘சமாதானத்தையும் சௌஜன்யத்தையும் அழிக்க சிலர் முயற்சிக்கையில் அவற்றைக் காப்பாற்ற சிலபோது பலாத்காரம் பிரயோகிக்கப்படலாம். சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கெதிராக பொலிஸார் பலாத்காரத்தை பிரயோகிப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அதனால் சட்டமும் ஒழுங்கும் பாதுகாக்கப்படும். இஸ்லாம் சமாதானத்தை வலியுறுத்தினாலும் அடக்குமுறையை ஒழிக்க அதிகாரத்தை பிரயோகிக்கும்படி முஸ்லிம்களுக்கு ஊக்கமளிக்கிறது.’ என ஸாகிர் நாயிக் எழுதுகிறார். (Zakir Naik – Religion of Compassion – Hajj Umra, March, 2003, P: 27)
மதசுதந்திரத்தை ஒவ்வொரு பிரஜையும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமன்றி, அநீதிக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகாமல் சுதந்திரமாக வாழும் உரிமையைப் பொது மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் இஸ்லாம் போராட்டத்தை அனுமதித்தது. குறிப்பாக, இஸ்லாமிய அரசை அண்டி வாழ்ந்த சமூக அமைப்புக்களில் இடம்பெற்ற அக்கிரமங்கள் இஸ்லாமிய சமூகத்தின் கவனத்தை ஈர்த்தன. முஸ்லிமல்லாதவர்களுக்கு சமத்துவமும், நீதியும், பொருளாதார, சமூகவியல் சுபீட்சமும் கிட்ட வேண்டும் என்பதற்காக படைப்பலம் பிரயோகிக்கப்பட்டமையை மறுக்க முடியாது. ஏற்கனவே, சூரதுன் நிஸாவின் 75வது வசனம் இதற்குப் பொருத்தமாகும்.
பலவீனர்களுக்கு உதவுவது இரக்கத்தினதும் நீதியினதும் அன்பினதும் வெளிப்பாடாகும். இஸ்லாம் வானத்து மதம் என்ற வகையில் பலசாலிகள் பலவீனர்களுக்கு அநீதியிழைப்பதைக் கண்டு வாளாதிருக்கமாட்டாது. அல்லாஹ் குர்ஆனில், ‘உலகில் பலவீனப்படுத்தப்பட்ட (அடக்கப்பட்ட)வர்களுக்கும் நாம் அருள்பாலித்து அவர்களைத் தலைவர்களாக மாற்றவும் அவர்களை அனந்தரக்காரர்களாக மாற்றவும் விரும்புகிறோம்’எனக் கூறுகிறான். (சூரா அல்கஸஸ் – 05)
தோமஸ் ஆனோல்ட் மேற்கூறப்பட்ட கருத்துக்களைப் பலப்படுத்தும் வகையில் பல சான்றுகளை தருகிறார். ‘இஸ்லாமியப் படை ஜோர்தான் சமவெளியை அடைந்து, அபூஉபைதா ‘பிஹ்ல்’ என்ற இடத்தில் பாளையமிட்ட போது அந்த பிரதேசத்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவ குடிகள் அறபுக்களை விழித்து பின்வருமாறு கடிதம் எழுதினார்கள். ‘முஸ்லிம்களே! நாம் பைஸாந்தியர்களை விட உங்களையே விரும்புகிறோம். அவர்கள் எமது மதத்தைச் சார்ந்தோராக இருப்பினும் சரியே. ஏனெனில், நீங்கள் எம்முடன் மிகவும் விசுவாசமாக நடக்கிறீர்கள். எம்மோடு மிகவுமே இரக்கமாக இருக்கிறீர்கள். எமக்கு அநீதியழைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்கிறீர்கள். எங்கள் மீதான அவர்களது ஆட்சியை விட உங்களது ஆட்சி மிகவுமே சிறந்தது. ஏனெனில், அவர்கள் எமது பொருட்களையும் இல்லிடங்களையும் சூறையாடியிருக்கிறார்கள்.’ இவ்வாறு அக்கடிதம் எழுதப்பட்டது. (The Preaching of Islam – T.W Arnold, P – 55)
கலாநிதி அக்ரம்ழியா உமரி எழுதும் போது, ‘ரோமம் மற்றும் தெற்கு, மேற்கு, மத்திய தரைக்கடல் பிராந்தியங்களை உள்ளடக்கியதாக இருந்த பைஸாந்திய பேரரசில் பர்பர்கள், கிப்திகள், அரபிகள், ஆகியோர் குடிமக்களாயிருந்தனர். அங்கு மன்னராட்சியே நிலவியது. கிறிஸ்தவ மதம் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான தொடர்புகளை மட்டுமே நெறிப்படுத்தியது. அரசன் அரசவைக்கு வந்தால் யாவரும் சிரம்சாய்த்தனர்.
வட்டி, பதுக்கல் என்பன பொருளாதாரத்தின் அடிப்படைகளாக இருந்தன. குடிமக்கள் மீது தாங்கமுடியாத வரிப்பழு சுமத்தப்பட்டது. சக்கரவர்த்தியும் படைத்தளபதிகளும் தேவாலயக் குருக்களும் சமூதாயத்தின் உயர் மட்டத்தில் இருக்க, பெரும் விளைநிலங்களில் ஆயிரக்கணக்கான அடிமைகள் அடைபட்டு போசாக்கின்மை, மோசமான வாழ்க்கைத் தரம் என்பவற்றில் உழன்று வந்தனர். இத்தகைய ஏழைவகுப்பினர் பலதடவை புரட்சிகளை செய்ய முனைந்தும் அதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. இவர்களை வேலையில் ஈடுபடுத்திவந்த மத்தியதர வர்க்கத்தினர் பெரும் எண்ணிக்கையினராக இருந்தனர். வர்க்கபேதம், பிரபுத்துவ முறை, சமூக அநீதி என்பன பைஸாந்திய சமூக அமைப்பைப் பாதித்து வந்தன. கொடுமை, இம்சை, மத வைராக்கியம், அறிவீனம், மூட நம்பிக்கை என்பவற்றால் தனிமனிதர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்தவரை சமூகத்தில் அதுபற்றிய பலத்த வாதப்பிரதிவாதங்கள் நிலவின. ஹிரகல் மன்னன் தனது கொள்கையை எகிப்தியர் மீது திணிக்கப்போய் தோல்வி கண்ட போது அவர்களைக் கொடுமைப்படுத்தி நெருப்பிலிட்டான்.’ என்கின்றார்.(அக்ரம் ழியா உமரி, அஸ்ருல் கிலாபா அர்ராஷிதா,பக்;-334-338, மஜல்லதுல் அஸ்ஹர், 2003பெப்ரவரி, பக்: -1916, அல்இஸ்லாமு வகுரபாதுஸ் ஸைப்,பக்;-78)
முஸ்லிம்கள் இந்த உலகத்தில் நீதி, நியாயம், பொருளாதார சுபிட்சம், சமத்துவம், கல்வி, பொருளாதார மேம்பாடு என்பவற்றை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் படைகளை நடத்திச் சென்றார்கள். எனவே தான் ‘கோத்’ வர்க்கத்தவர்களது அடக்குமுறைகளில் இருந்து தம்மை விடுவிக்கும்படி ஸ்பெயின் நாட்டு யூதர்கள் மூஸா பின் நுஸைருக்கு கடிதம் அனுப்பினார்கள். இந்தியாவுக்கு வந்த முகம்மது பின் காசிம் தனது பணியை முடித்துக் கொண்டு திரும்பிய சந்தர்ப்பத்தில் இந்துக்கள் அவரை எவ்வளவு போற்றினார்கள் என்பதிலிருந்து அவர் இந்தியாவில் எத்தகைய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார் என்பதை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.
இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சில தளபதிகளும் ஆட்சியாளார்களும் தப்புச் செய்திருக்கிறார்கள். ஆனால், அவற்றைப் பொதுமைப்படுத்தி நோக்கி அவற்றை இஸ்லாத்தின் அங்கீகாரம் பெற்ற நடவடிக்கைகளாகக் கருதக் கூடாது.
இஸ்லாமிய சேனையின் நோக்கம் ரத்தம் குடிப்பதோ, சுரண்டுவதோ, அடிமைப்படுத்துவதோ அல்ல. தமது உயிர் உடமைகளை கூட தியாகம் செய்து, உலக மக்களுக்கு கண்ணியத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுப்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.
இந்தியாவிலும் ஸ்பெயினிலும் முஸ்லிம்களது ஆட்சி 800 வருடங்கள் நிலைத்து நின்றது. அங்கு அவர்கள் புகழ்பூத்த நாகரீகமொன்றை கட்டியெழுப்பினர். ஸ்பெயின் தான் மேற்குலக அறிவெழுச்சிக்கு வித்திட்டது என ஆய்வாளர்கள் ஏற்கிறார்கள். கோர்டோவா பல்கலைக்கழகத்தில் கற்றவர்கள் தான் ஐரோப்பிய நகரங்களுக்கு அறிவு தீபத்தை ஏந்திச் சென்றார்கள்.
எனவே, உலகில் ஏகாதிபத்தியத்தையும் காலனித்துவத்தையும் கொள்கையாகக் கொண்டு பலவீனமான சமூகங்களை அடக்கியொடுக்கி பிழிந்து வாழ்ந்த ஐரோப்பியர்களுக்கும், நீதி, நியாயம், சமத்துவம், பொருளாதார சுபிட்சம், அறிவு மறுமலர்ச்சி என்பன உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏற்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உலகின் பல பகுதிகளிலும் படையெடுப்பை மேற்கொண்ட முஸ்லிம்களுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.- Vidivelli