நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்ற நிலையில், பல பில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி எனும் பெண்ணின் விவகாரம் பலத்த பேசுபொருளாகியுள்ளது.
கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 34 ஆவது மாடியில் நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்ற இவர், பல பிரபலங்களிடம் முதலீடு என்ற பெயரில் பணத்தைப் பெற்று ஏமாற்றியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அரசியல்வாதிகள், கலைஞர்கள், வர்த்தகர்கள் மாத்திரமன்றி பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் இவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப் பெண், பிரத்தியேக பாதுகாப்பு சேவை ஒன்றை தனது பாதுகாப்புக்கென அமர்த்தியிருந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வெளிநாடுகளில் நிதி முதலீடு, வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிதி முதலீடு ஆகியவற்றுக்காக பணத்தைப் பெற்று அதற்காக அதிக வட்டியை வழங்குவதாக கூறியே பிரபல வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட தரப்பினரிடம் இவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை, திலினி பிரியமாலியின் மோசடியில் சிக்குண்டதாக கூறுப்படும் தரப்பினர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடந்த சில தினங்களாக முறைப்பாடுகளை பதிவு செய்து வருகின்றனர்.
இவரது மோசடியில் சிக்குண்டதாக கூறப்படும் பலரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த பெண்ணும் அவரது கணவர் என அறியப்படும் நபர் ஒருவரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பொது மக்கள் எவரேனும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறும் பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.
இருப்பினும் திலினி பிரியமாலிக்குச் சொந்தமான ஏழு வர்த்தக நிறுவனங்களில் தமது பணத்தை முதலீடு செய்த பல அரசியல்வாதிகளும் பிரபலங்களும், பல்வேறு காரணங்களுக்காக பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு தயங்குவதாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
மோசடியான முறையில் பெறப்பட்ட பணத்தில் வருமானம் ஈட்டாமல், சந்தேகநபர் எவ்வாறு 41 இலட்சம் ரூபாயை மாதாந்தம் செலவிட்டார் என்பது குறித்த தகவல் இதுவரையில் வெளிவரவில்லை என்றும் சீ.ஐ.டியினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
உண்மையில் இப் பெண் அரசியல் பிரபலங்களின் ஆதரவுடனேயே இந்த மோசடிகளைச் செய்துள்ளார் என்பதை இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள் மூலம் ஊகிக்க முடிகிறது. மாத்திரமின்றி, சில மத தலைவர்களும் இவரது மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளனர் அல்லது அவரிடம் ஏமாந்துள்ளனர் என்ற தகவல்களும் கசிய ஆரம்பித்துள்ளன.
பிரபல இளம் அரசியல்வாதியொருவர் இவரது இந்த மோசடி வர்த்தகத்திற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. எனினும் பொலிசார் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள் என்பது சந்தேகமே.
இலங்கையைப் பொறுத்தவரை சகல விதமான சட்டவிரோத செயற்பாடுகளும் அரசியல்வாதிகளது அனுசரணையுடனேயே இடம்பெறுகின்றன. இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் வெளிச்சத்துக்கு வரும்போது யாரேனும் ஒருவரை சிக்கவைத்துவிட்டு அவர்கள் தப்பி விடுகின்றனர். திலினியின் விவகாரமும் அவ்வாறான ஒன்றாகவே தெரிகிறது.
இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில், குறித்த பெண்ணிடம் அதிக பணத்தை முதலிட்டு ஏமாந்தவர்களில் பிரபல முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரும் மேலும் சில முஸ்லிம் வர்த்தகர்களும் உள்ளடங்குகின்றனர். வட்டியை இஸ்லாம் ஹராமாக்கியிருக்க, அதிக வட்டியைப் பெறும் நோக்கில் இவ்வாறு பல மில்லியன் கணக்கான ரூபாய்களை வழங்கி ஏமாந்திருக்கின்றமை கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.
ஆகுமான முதலீடுகளுக்கான எவ்வளவோ வழிகள் இருக்க, இவ்வாறு ஒரு பெண்ணின் வலையில் வீழ்ந்து பணத்தை இழந்துள்ளமை வெட்கக் கேடானதாகும். இந்த விவகாரத்தை முன்னிறுத்தி முஸ்லிம் வர்த்தகர்கள் மத்தியில் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். பண வசதிபடைத்தோர் ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்குவதை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறான மோசடிக்காரர்களின் வலையில் சிக்காதிருக்குமாறு அறிவூட்டப்பட வேண்டும்.- Vidivelli