(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்துள்ள வழக்கின், ‘முன் விளக்க மாநாடு’ (pre trial conference) திங்களன்று ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு சிறப்பு ட்ரயல் அட் பார் நீதிமன்றம் முன் அந்நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனைவிட 25 பிரதிவாதிகளுக்காகவும், அவர்களது சட்டத்தரணிகள் முன் வைத்துள்ள பிணைக் கோரிக்கை குறித்த எழுத்து மூல சமர்ப்பணங்களுக்கு, சட்ட மா அதிபர் எழுத்து மூலம் ஆட்சேபனைகளை நேற்று முன் வைத்தார். மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர பிணைக் கோரிக்கைக்கு எதிரான வாதங்களை இவ்வாறு எழுத்து மூலம் முன் வைத்தார்.
எனினும் அந்த எழுத்து மூல சமர்ப்பணங்களுக்கு மேலதிக எதிர்வாதங்களை அல்லது விளக்கங்களை முன் வைக்க சந்தர்ப்பமளிக்க வேண்டும் என பிரதிவாதிகளுக்காக ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப், என்.எம். சஹீட் உள்ளிட்டோர் முன் வைத்த கோரிக்கையை சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன்படி அதற்கான சந்தர்ப்பத்தையும் அளித்து, பிரதிவாதிகள் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை தொடர்பில் நீதிமன்றின் தீர்மானத்தை எதிர்வரும் நவம்பர் 24 இல் அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் பிரதான பிரதிவாதியாக அரச தரப்பால் அறிமுகப்படுத்தப்படும் அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி உட்பட 25 பேருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் திங்களன்று அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மெகஸின், அங்குணகொலபெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இவ்வாறான நிலையிலேயே, வழக்கானது மேலதிக முன் விளக்க மாநாடு மற்றும் பிணை குறித்த தீர்மானத்துக்காக எதிர்வரும் நவம்பர் 24 வரை ஒத்தி வைக்கப்பட்டது.- Vidivelli