பிரபல இஸ்லாமிய அறிஞர் கலாநிதி யூசுப் அல் கர்ளாவி கடந்த கடந்த திங்கட்கிழமை தனது 96 ஆவது வயதில் கட்டாரில் காலமானார். அன்னாரின் ஜனாஸா தொழுகை கட்டாரிலுள்ள முஹம்மத் பின் அப்துல் வஹாப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதில் ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
யூசுஃப் அப்துல்லாஹ் அல்-கர்ளாவி, 1926 செப்டம்பர் 9 இ-ல் எகிப்தின் நைல் கழிமுக கிராமம் சஃபத் துராபில் ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இரண்டு வயதில் தந்தையை இழந்து விட்டமையால், தனது சிறிய தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கிராமத்தில் இருந்த மக்தப் ஒன்றில் சேர்ந்து, பத்து வயதிலேயே குர்ஆனை மனனம் செய்து முடித்தார். பின், தாண்டாவிலிருந்த மார்க்கக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்தார். அவரது அஸ்ஹர் கல்விக்கான முதல் படியாக இது அமைந்தது.
இக்காலத்தில் தான் இஃக்வான் அல்-முஸ்லிமூன் அமைப்புடன் தொடர்பேற்பட்டு, அதனோடிணைந்து செயற்பட ஆரம்பித்திருந்தார். ஒன்பது வருடங்கள் பயின்று பட்டம் பெற்ற பின், அல்- அஸ்ஹரில் படிப்பதற்காக கெய்ரோ சென்றார். உசூலுத்தீன் துறையில் இணைந்து, 1953 இ-ல் வகுப்பில் முதல் மாணவராய் பட்டம் பெற்றார். 1957 இ-ல் அரபிமொழி போதனை தனித்துறைப் பயிற்சியில் தேர்வு பெற்றார். இணையாகவே, குர்ஆன்- சுன்னாஹ் துறைப் படிப்பையும் தொடர்ந்த அவர், 1960- இல் அதற்கான முன் ஆயத்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
1960 இ-ல் “ஸகாத்தும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அதன் தாக்கமும்” என்ற தலைப்பிலான தனது டாக்டர் பட்டத்திற்கென அவர் தயாராகிக் கொண்டிருக்கையில், இஃக்வான் அமைப்பினர் மீது அதிபர் நாசரின் ஒடுக்குமுறை துவங்கியதால் அது இடைநின்று போனது. 1973- இல் தான் அவரால் அதனை நிறைவு செய்ய முடிந்தது. இஃக்வான் அமைப்புடன் அல்-கர்ளாவிக்கு இருந்த தொடர்பு, மும்முறை அவர் சிறைபடக் காரணமாயிற்று. 1949- இல் மன்னர் ஃபாரூக்கின் ஆட்சியில் முதலாவதாகவும், பின் 1954 முதல் 1956 வரை அதிபர் ஜமால் அப்துல் நாசர் அரசாலும், பின்பு 1962 இ-ல் குறுகியதொரு காலமும் அவர் எகிப்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டார்.
யூசுஃப் அல்-கர்ளாவி, 1956 முதல் கெய்ரோ பள்ளிவாயில்களில் உத்தியோகபூர்வமாக பிரச்சாரம் செய்யத் துவங்கினார். 1959- இல் பிரச்சாரம் செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்ட அவர், அல்- அஸ்ஹர் இஸ்லாமியக் கலாசார துறைக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். இஸ்லாமிய வக்ஃப் அமைச்சின் கீழ் இயங்கிய இமாம்களுக்கான நிறுவனத்தின் மேற்பார்வையாளராகவும் பணியாற்றினார். மார்க்க கல்விக்கான கத்தார் உயர்நிலை நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றுவதற்கென அல்- அஸ்ஹர் அவரை அனுப்பி வைத்தது. 1977 இ-ல் கத்தார் பல்கலை கழகத்தில் இஸ்லாமிய ஷரீஆ துறையையும் சீறா மற்றும் சுன்னாஹ்வுக்கான ஆய்வு மையத்தையும் துவக்கினார். அல்ஜீரியாவில் இஸ்லாமிய கற்கைகளுக்கான அமீர் அப்துல் காதிர் பல்கலைக்கழக கல்வியியலாளர் குழுத் தலைவராகவும், இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சின் ஆலோசகராகவும் பணியாற்றினார். வறுமை மற்றும் நோயால் அவதியுறும் உலகளாவிய முஸ்லிம்களுக்கு உதவும் பொருட்டு, சர்வதேச இஸ்லாமிய நிவாரண நிறுவனத்தை நிர்மாணிப்பதற்கான முதல் அழைப்பு இவரிடமிருந்தே வந்தது. அயர்லாந்தைத் தலைமையகமாகக் கொண்ட ஃபத்வா மற்றும் இஸ்லாமிய ஆய்வுக்கான ஐரோப்பியக் கவுன்சிலின் தலைவராகவும், முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைவராகவும் மரணிக்கும் வரை பதவி வகித்தார்.
பலஸ்தீன் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் நடத்திவரும் சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவான அவரது பத்வாக்கள், சர்வதேச அளவில் பல மட்டங்களில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேவேளை, முஸ்லிம் குழுக்கள் சிலவற்றின் வரம்பு மீறல்களைக் கண்டிக்கவும் அவர் தவறவில்லை. அல்-ஜஸீரா தொலைக்காட்சியில் ஹலால்- ஹராம் குறித்த அவரது கேள்வி- பதில் நிகழ்ச்சிகள் உலகப் புகழ் பெற்றவை.
டாக்டர் யூசுஃப் அல்-கர்ளாவி, இதுவரை சுமார் நூறு நூல்களை எழுதியிருக்கிறார். கல்வியியல் பாணியும் பாரபட்சமற்ற சிந்தனைப் போக்கும் அவரது ஆக்கங்களின் முக்கியப் பண்புகளாக திகழ்கின்றன. ஷரீஆவில் மரபார்ந்த ஞானம், சமகாலப் பிரச்சினைகள் குறித்த ஆழ்ந்த புரிதல் இரண்டையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றிருப்பது இவரது தனிச்சிறப்பு. ஃபிக்ஹுஸ் ஸகாத் எனும் இவரது நூலைப் பற்றி கூறிய சைய்யித் அபுல் அஃலா மௌதூதி, “இஸ்லாமிய சட்டவியலில் இந்நூற்றாண்டின் தலைசிறந்த நூல் இதுவே” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி அல்-கர்ளாவி தேர்ந்த ஒரு கவிஞரும் கூட. அவரது கவிதைகளுள் சில, நஃபஹத் வ லஃபஹத் என்ற தலைப்பில் நூல் வடிவிலும் வெளிவந்துள்ளன.
கலாநிதி யூசுப் அல் கர்ளாவியின் சிந்தனை மற்றும் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட பலரும் அவரது மறைவு தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
மிஷ்காத் ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர் வெளியிட்டுள்ள குறிப்பில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
‘‘எழுத்தால் சாதனைகள் பலவற்றைப் படைத்த அந்தக் கர்ளாவிப் பேனா முற்றாக நின்று போய்விட்டது என்பது மனதிற்கு பெரும் பாரத்தையும் கவலையையும் தருகிறது. எனினும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் 100 பாகங்களாக வெளியிட உள்ளார்கள் என்ற செய்தி கர்ளாவியின் நாம் வாசிக்காத எழுத்துக்கள் இன்னும் உள்ளன என்ற எண்ணத்தை தந்து ஒரு சின்ன ஆறுதல் பெற வைக்கிறது.
நான் கண்ட இமாம் கர்ளாவி நான்கு வகையான அறிவாளுமை. அந்த பின்னணியில் நின்று அவர் பெரும் பங்காற்றினார்.
1. இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போராட்டங்களில் கலந்துகொண்டு அது இக்கால பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது என நிறுவிய சிந்தனையாளன். இஸ்லாமியத் தீர்வின் தவிர்க்க முடியாத் தன்மை இறை நம்பிக்கையும் வாழ்வும் போன்ற நூல்கள் இதற்கு உதாரணங்களாகும்.
2. இஸ்லாமிய சட்டம், சட்ட ஆய்வு முறைமை (உஸூல் அல் பிக்ஹ்), ஸுன்னா, இறை நம்பிக்கை (அகீதா), தஸவ்வுப் போன்ற ஷரீஆ கலைகளில் பல புதிய சிந்தனைகளை முன்வைத்த மிகப்பெரும் ஷரீஅத் துறை நிபுணர்.
3. இஸ்லாமிய எழுச்சி தீவிரம், வன்முறைக்கு சென்று விடக்கூடாது; இறுக்கமும் கடும் போக்கும் கொண்ட சிந்தனைகளில் விழுந்து விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி எழுதிய இஸ்லாமிய எழுச்சியின் வழிகாட்டி. கோளாறு எங்கே உள்ளது மறுப்புக்கும் தீவிரவாதத்திற்குமிடையே இஸ்லாமிய எழுச்சி போன்ற பல நூல்கள் இதற்கான உதாரணங்களாகும்.
4. கர்ளாவி ஆரம்ப காலத்தில் -இளம் வயதில்- கவிஞர் கர்ளாவி என அழைக்கப்பட்டார். அவ்வாறு -பின்னால் காலப் பிரிவில் அவரிடம் சிந்தனைப் பகுதி மிகைத்து விட்டாலும்- ஒரு இலக்கிய கர்த்தாவாகவும் அவர் இயங்கினார்.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் கவலைகளைச் சுமந்து கண்களில் கண்ணீரோடும் உள்ளத்தில் ஆழ்ந்த வேதனையோடும் பாசத்தோடும் வாழ்ந்த, சிந்தனையோடு மட்டும் நின்று விடாத, எந்த இயக்க கட்டமைப்புக்குள்ளும் உட்படாத சமூக வழிகாட்டி அவர்.
சிறுபான்மை முஸ்லிம்களை அவர் மறக்கவில்லை. சிறுபான்மை ஒருபோதும் பெரும்பான்மை போன்று வாழவோ இயங்கவோ கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். எனவே அதற்கான “பிக்ஹ் அல் அகல்லிய்யாத்” (சிறுபான்மைக்கான சிந்தனை முறைமை) என்ற கோட்பாட்டு ஒழுங்கொன்றை ஆரம்பித்து வைத்தார்.
இந்த மாபெரும் மனிதரை என்ன சொல்லி வழி அனுப்புவது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் வார்த்தைகளுனுள்ளே அடைபடுகிறாரில்லை. இறைவா இந்த சமூகத்திற்கான அவரது உழைப்புக்கான நற்கூலியை வழங்குவாயாக. நாம் எல்லாம் உன் சன்னிதானத்தில் சந்திக்க அருள் புரிவாயாக’’ எனத் தெரிவித்துள்ளார்.
கலாநிதியின் பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள கலாநிதி ரவூப் ஸெய்ன் கர்ளாவியின் மறைவு தொடர்பில் எழுதியுள்ள குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
‘‘அறபு உலகைக் கடந்து உலக முஸ்லிம்களால் மதிக்கப்பட்ட மாணிக்கம் அவர். கர்ளாவி அவர்கள் இஸ்லாமிய உலகுக்கு வெளியே சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளுக்கும் பயணம் செய்தவர். அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு ஷரீஆ அடிப்படையில் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தவர். முஸ்லிம்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் இஸ்லாமிய தனித்துவத்துடன் வாழ வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் தனித்துவமானது.
அதனால்தான் சிறுபான்மை வாழ்வியல் குறித்து அவரது பிரத்தியேகமான பிக்ஹுத்துறை ஆய்வுகள் விரிவடைந்தன. அது தொடர்பில் அவர் விரிவாக எழுதினார்.
இத்துறை சார் பிக்ஹு நூல்கள் அரிதிலும் அரிது. ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய சபையின் உருவாக்கத்திலும் வழி நடாத்தலிலும் அல்லாமா கர்ழாவி அவர்களது பங்கு மெச்சுதலுக்குரியது. அம்மன்றம் ஐரோப்பிய நாடுகளில் கடந்த மூன்று தசாப்தங்களாக நடாத்தி வந்த ஆராய்ச்சி மாநாடுகளில் உத்வேகத்துடன் பங்குபற்றிய அல்லாமா அவர்கள் அம்மன்றத்தை வழிநடாத்துவதிலும் முன்னணிப் பங்கினை ஆற்றியுள்ளார். இஸ்லாமிய அறிஞர்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவராக இருந்து அன்னார் ஆற்றிய பங்களிப்பும் போற்றுதலுக்குரியதாகும்.
இஸ்லாமிய சட்டம்,தஃவா, சமுகக்களம், இஸ்லாமிய கலைகள், வரலாறு,படைப்பிலக்கியம், ஆன்மீகம் என அனைத்துத் தளங்களிலும் மிகுந்த விளை திறனுடன் இயங்கிய இமாம் அவர்கள், இந்த ஒவ்வொரு பரிமாணத்திலும் எழுதியுள்ள நூல்கள் அவரது ஆழமான ஆய்வுகளின் பிரத்தியட்ஷமான புலப்பாடுகளாகவே உள்ளன. குர்ஆன்,சுன்னாஹ், முன்னைய இஸ்லாமிய அறிஞர்கள்,சட்டவியலாளர்கள், என ஆதாரங்களை அடுக்கும் அவரது எழுத்துப்பாங்கு அவருக்கேயுரிய தனித்தன்மையாகும். வரைவிலக்கணத்திலிருந்து தொடங்கி வரலாற்று வழியாக நகர்ந்து ஷரீஆவின் வரையறைகளை முன்னிறுத்தி தர்க்க ரீதியாக முடிவுறுத்தும் அந்த எழுத்து மிகுந்த சுவாரஸ்யம் கொண்டது. வாசிக்கும்போதுதான் அந்த இன்பத்தை அனுபவிக்கலாம்’’ எனக் குறிப்பிடுகிறார்.
கலாநிதி யூசுப் அல் கர்ளாவியின் மறைவு தொடர்பில் ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் எழுதியுள்ள குறிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘‘ யார் ஏற்றாலும் மறுத்தாலும் 20, 21 ஆம் நூற்றாண்டுகளில் இஸ்லாத்தை பாதுகாக்கவும் வளர்க்கவும் அவர் இமாலயப் பங்களிப்பை வழங்கியிருக்கிறார். தனது ஏழு பிள்ளைகளையும் கலாநிதிகளாக்கிய வளமான குடும்பத்தின் தகப்பன் அவர். நான்கு பெண்கள் மூன்று ஆண்கள். தனது எழுத்துக்கள், உரைகள் வாயிலாக அவர் பின்வரும் கருத்தியல்களை ஆழமாக வலியுறுத்தி வந்திருக்கிறார்:-
முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழும் சூழலுக்கு மட்டுமன்றி சிறுபான்மையாக வாழும் சூழலுக்கும் பொருத்தமாகும். கரைந்து போகாமல், தனித்துவம் பேணிய நிலையில், சமாதான சகவாழ்வைப் பேணித் தான் ஒரு முஸ்லிம் சிறுபான்மை சூழலில் வாழ வேண்டும். மார்க்கத்தின் எல்லாப் போதனைகளும் சமதரமானவை அல்ல. அவற்றில் முதன்மைப்படுத்த வேண்டியவை, உடனடியாக செய்யப்பட வேண்டியவை அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை என்ற ஒரு பகுதி இருப்பது போலவே காலதாமதமாக செய்ய முடியுமானவை, ஒப்பீட்டு ரீதியில் முக்கியத்துவம் குறைந்தவை என்ற ஒரு பகுதியும் உள்ளது.
கடும்போக்கு, தீவிரவாதம், பிடிவாதம்,கண்மூடித்தனம், வெறித்தனம் என்பவற்றை எதிர்த்து இஸ்லாத்தின் தாராளத்தன்மை,நெகிழ்வுத் தன்மை, அரவணைக்கும் பண்பு, விட்டுகொடுப்பு, சகவாழ்வு என்பன தொடர்பாக அவர் அதிகமதிகம் பேசியும் எழுதியும் வந்தார். அப்படியிருந்தும் அவர் சிலரால் காரசார விமர்சிக்கப்பட்டுள்ளார். தீவிரவாதத்தை வன்முறையைத் தூண்டியவர், பத்வாக்களில் அதிகமதிகம் தாராளமாக நடந்தார் என்றெல்லாம் கூறப்பட்டு குற்றவாளியாக்கப்பட்டார். அவரது வபாத் தொடர்பாக இரங்கல் செய்திக்கு பதிலாக சந்தோஷத்தை சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். சில நாடுகளுக்கு அவர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
அவரை விமர்சித்தவர்கள் மூன்று சாரார்:- இஸ்லாத்தின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டோர், அவரது நூல்களை வாசிக்காதவர்கள் அல்லது நுணிப்புல் மேய்ந்தவர்கள், சத்தியத்தை உரிய முறையில் புரிந்து ஹக்கை ஹக்காக கூற வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்கள்.
மூன்றாவது தரப்பினரது விமர்சனங்களே நியாயமானவை. இவர்கள் இமாம் கர்ளாவியின் பாரிய பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை அவரது பிழைகளை ஆதாரங்களோடு ஆனால், பண்பாடாக சுட்டிக்காட்டத் தவறவில்லை.
அவரை நாம் ஓர் பேரறிஞராக பார்க்கும் அதேவேளை அவரை மனிதராகவே பார்க்க வேண்டும். நபிமார்களைத் தவிர மற்றைய அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே. அவரது சில நிலைப்பாடுகள் மற்றும் பத்வாக்களில் பிழைகள் இருக்கலாம். அவரது சில இஜ்திஹாத்கள் பிழைத்திருக்கலாம். இந்தப் பார்வை எல்லா அறிஞர்களைப் பொறுத்தவரையில் எமக்கு வர வேண்டும்.
இமாம் யூஸுப் கர்ளாவீ கூறும் கருத்துக்கள் அல்லது வெளியிட்ட பத்துவாக்கள் எல்லாம் இலங்கைச் சூழலுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூற முடியாது. அவற்றில் சில பொருத்தமற்றவையாக இருக்கலாம். எனவே அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். ஆனால், எமது வாசிப்பு விரிந்தாக இருக்க வேண்டும். எல்லா அறிஞர்களது கருத்துக்களையும் திறந்த மனதோடு வாசிக்கும் சிந்தனை சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் அவற்றில் பொருத்தமானவற்றையே எமது சூழலுக்கு நாம் அனுமதிக்க வேண்டும்.
இலங்கை என்பது எகிப்தோ பாகிஸ்தானோ அல்ல. இலங்கை முஸ்லிம்களுக்கென தனியான வாழ்வொழுங்கு இருக்க வேண்டும். இந்த நாட்டில் நாம் சிறுபான்மையினராக வாழுகின்றோம். பெரும்பான்மை சமூகங்களோடு ஒற்றுமையாகவும் அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொண்டும் சமாதானமாகவுமே வாழ வேண்டும். வன்முறை ஒதுங்கிய வாழ்வு இஸ்லாத்தால் அனுமதிக்கப்பட்டதல்ல. கலாநிதி கர்ளாவி அவர்கள் சிறுபான்மை வாழ்வொழுங்கில் இத்தகைய வரம்புகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தை பலபோது வலியுறுத்தி வந்திருக்கிறார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு கலாநிதி யூசுப் அல் கர்ளாவியை இலங்கையைச் சேர்ந்த பிரமுகர்கள் குழுவொன்று சந்தித்து கலந்துரையாடியது. இதன்போது ‘‘ இலங்கை முஸ்லிம்கள் தமது தனித்துவத்தைப் பாதுகாத்து வாழ்கின்ற அதேநேரம் பெரும்பான்மை சமூகங்களுடன் சுமுகமான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்’’ என அவர் அறிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli