பலதார மணத்திற்கு கடும் நிபந்தனையுடன் அனுமதி வழங்க முடியும்
தனியார் சட்ட திருத்தம் குறித்த குழு பரிந்துரை ஏழு உறுப்பினர்கள் ஆதரவு, இருவர் கடும் எதிர்ப்பு
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் முஸ்லிம் ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள பலதார மணம் செய்து கொள்வதற்கான அனுமதி கண்டிப்பான நிபந்தனைகளுடன் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட வேண்டும் என முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 9 பேரடங்கிய குழுவில் ஏழுபேர் பலதார மணத்தை கடும் நிபந்தனைகளுடன் அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதே வேளை குழுவின் இரு அங்கத்தவர்கள் பலதார மணம் முழுமையாக இல்லாமற் செய்யப்பட வேண்டும் என மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
1951 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முஸ்லிம் ஆண்களுக்கு பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் ஆண்களுக்கு பலதார மணம் கடும் நிபந்தனைகளுடன் தொடர்ந்தும் அனுமதிக்கப்படவேண்டும் என்ற பரிந்துரை, சட்டத்தில் திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி, சப்ரி ஹலீம்தினின் குழுவினரால் இரு வாரங்களுக்குள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முஸ்லிம் ஆண்களுக்கான பலதார மணம் தொடர்பான அனுமதியை இரத்துச் செய்யவேண்டுமென அப்போதைய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. அப்போது இன்றைய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி நீதியமைச்சராக பதவியில் இருந்தார்.
தற்போதைய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை மீண்டும் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார். அதற்கிணங்கவே குறிப்பிட்ட பரிந்துரைகள் இருவார காலத்துக்குள் நீதியமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீனைத் தொடர்பு கொண்டபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
‘‘இச்சட்டத்தில் திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்காக ஆரம்பத்தில் நியமிக்கப்பட்ட குழு பலதார மணம் தொடர்பில் எவ்வித சிபாரிசுகளையும் முன்வைக்கவில்லை.
சட்ட வரைபு ஏனைய திருத்தங்கள் தொடர்பில் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் பலதார மணம் தொடர்பான விவகாரத்தினால் அத்திருத்தங்கள் இன்னும் அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
பலதார மணம் உணர்வுபூர்வமான விடயமாகும். இது தொடர்பில் நாம் பல கலந்துரையாடல்களை நடத்தியே தீர்மானத்துக்கு வந்துள்ளோம். ஏனென்றால் பலதார மணத்தை புனித குர்ஆன் அனுமதித்துள்ளது இதில் திருத்தங்களைச் செய்வதற்கு மக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நாங்கள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவைச் சந்தித்தபோது பலதார மணம் தொடர்பில் குழுவின் கருத்தினை அவர் வினவினார். பலதார மணம் கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட வேண்டுமென 7 உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். ஏனைய இரு உறுப்பினர்கள் பலதார மணம் அனுமதிக்கப்படக்கூடாது என கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் அமைச்சர் இதனை எழுத்துமூலம் அறிவிக்குமாறு எங்களை வேண்டிக்கொண்டார்.
காதிநீதிமன்ற முறைமைக்குப் பதிலாக சமரசம் செய்து வைப்பவர்கள் (Conciliator) நியமிக்கப்பட வேண்டும். இவர்களிடமிருந்து இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட விவாகங்களுக்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம். Conciliatorகளது தகுதி குறித்து நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானிக்கும்.
கொன்சிலியேட்டராக நியமிக்கப்படுபவர்கள் சட்ட அறிவும் கவுன்சிலிங் பற்றிய அறிவும் உடையவர்களாக இருக்க வேண்டுமென நாம் பரிந்துரைத்துள்ளோம். இவர்கள் விசாரணை நடாத்தி பலதார மணத்தை ஒருவருக்கு அனுமதிப்பதா எனத் தீர்மானிப்பார்கள். பலதார மணம் கடுமையான நிபந்தனைகளுடனே அனுமதிக்கப்பட வேண்டுமென குழு சிபாரிசு செய்துள்ளது.
கொன்சிலியேட்டர் பலதார மணத்துக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு மனைவியர்கள் சமமாக நடத்தப்படுவார்களா என்பது தொடர்பில் ஆராய வேண்டும். பொருளாதார ரீதியில், உள ரீதியில், உடல் ரீதியில் அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒருவருக்கு ஒரு மனைவி இருக்கும் போது மேலதிகமாக மனைவியர்களை பெற்றுக்கொள்வதற்கு, திருமணம் செய்து கொள்வதற்கு, மனைவியர்களையும் பிள்ளைகளையும் தாபரிப்பதற்கு பொருளாதார ரீதியில் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்.
ஒருவர் இரண்டாவது தடவையாக திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர் முதலாவது மனைவியையும் தாபரிக்கக் கூடிய பொருளாதார வசதி கொண்டவராக இருக்க வேண்டும்.
ஒருவர் பலதார மணம் செய்வதற்கு உகந்த காரணங்கள் இருக்க வேண்டும். அதாவது முதலாவது மனைவி நீண்ட காலம் நோயினால் பாதிப்புற்றவளாக இருக்க வேண்டும். அல்லது சுகப்படுத்த முடியாத நோய்களுக்குள்ளாகி இருக்க வேண்டும் அல்லது மண வாழ்க்கையில் ஈடுபட முடியாதவளாக இருக்க வேண்டும். இவ்வாறான நிலையில் பலதார மணம் அனுமதிக்கப்படலாம் என்றார்.
தொடர்ந்தும் சப்ரி ஹலிம்தீன் தெரிவிக்கையில், முஸ்லிம் பெண்களின் வயதெல்லை 18ஆக அதிகரிக்கப்படுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏனைய திருமணச் சட்டங்களிலும் திருமண வயதெல்லை 18 ஆகவே இருக்கிறது. அத்தோடு திருமணப் பதிவில் மணப்பெண்ணின் கையொப்பம் கட்டாயமாக பெறப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது திருமணப் பதிவில் மணப்பெண்ணின் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மணப்பெண்ணின் ‘வொலி’யே கையொப்பமிடுகிறார். இந்த விடயத்தை நாம் விருப்பத்துக்குரியதாக சிபாரிசு செய்துள்ளோம். மணப்பெண் ‘வொலி’யின் கையொப்பம் தேவையெனக் கருதினால் பெற்றுக்கொள்ளலாம். வொலியின் கையொப்பம் திருமணம் வலிதாக இருப்பதற்கு கட்டாயமாக தேவையாக மாட்டாது. இதற்குப் பதிலாக மணப்பெண் திருமணப் பதிவில் கையொப்பமிட வேண்டும்.
தற்போது மணப்பெண்ணின் தரப்பில் ‘வொலி’ மாத்திரமே கையொப்பமிடுவது அமுலில் உள்ளது. இது தற்போது விருப்பத்துக்குரியதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை பரிந்துரைத்துள்ள குழு ஏனைய முஸ்லிம் நாடுகளில் அமுலிலுள்ள திருமண உடன்படிக்கைகளை உதாரணமாக காட்டியுள்ளது என்றார்.- Vidivelli