குச்சவெளியில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குறியும் முஸ்லிம் பிரபலங்களின் மௌனமும்

0 449

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

இலங்­கையின் வடக்­கிலும் கிழக்­கிலும் அம்­மா­கா­ணங்­களின் தமிழ்­சார்ந்த பாரம்­ப­ரி­யத்­தையும் அதன் தனித்­து­வத்­தையும் நீக்கி அல்­லது குறைத்து, காலப்­போக்கில் அம்­மாகா­ணங்­க­ளையும் சிங்­கள பௌத்த மாகா­ணங்­க­ளாக மாற்­ற­வேண்டும் என்ற கனவு அப்­பே­ரி­ன­வா­தி­க­ளி­டையே சுதந்­திரம் கிடைப்­ப­தற்கு முன்­பி­ருந்தே குடி­கொண்­டி­ருந்­தது. சுதந்­திரம் கிடைத்­ததன் பின்னர் அக்­க­னவு அர­சாங்­கங்­களின் குடி­யேற்றத் திட்டங்­க­ளாலும் அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளாலும் தேர்தல் தொகுதி எல்லை மாற்­றங்­க­ளாலும் படிப்­ப­டி­யாக நன­வாகத் தொடங்­கிற்று. அம்­மா­கா­ணங்­களின் இன்­றைய இன­வா­ரி­யான குடி­சனச் செறிவும் தேர்தல் தொகு­தி­களும் அந்த உண்­மையை உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

இந்த மாற்­றங்­களின் தொடர்ச்­சி­யாக திரு­கோ­ண­ம­லையின் குச்­ச­வெ­ளிப்­ பி­ர­தே­சத்தின் ஒரு பகு­தியை கிழக்கு மாகா­ணத்­தை­விட்டும் நீக்கி வட­மேற்கு மாகா­ணத்­துடன் இணைப்­ப­தற்­கான பேரி­ன­வா­தத்தின் ஒரு திரு­வி­ளை­யா­டலை தமிழ் தலை­வர்கள் கண்­டித்து அர­சாங்­கத்­துடன் முறை­யிட்­டுள்­ளனர். ஆனால் அதைப்­பற்றி கிழக்­கு­ மா­காண முஸ்லிம் பிர­ப­லங்கள் வாய்­தி­ற­வா­தி­ருப்­பது புது­மை­யல்ல எனினும் கவ­லைக்­கு­ரி­யதும் ஆபத்­தா­னதும் என்­பதை முஸ்­லிம்கள் உண­ர­வேண்டும். சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் தமிழ்ப் பகு­தி­யைத்­தானே குறி­வைக்­கி­றது என்ற எண்­ணத்தில் முஸ்­லிம்கள் ஆறுதல் அடைந்தால் அந்தக் குறி ஒரு நாள் முஸ்லிம் பகு­தி­க­ளுக்குத் திரும்­பும்­போது தமி­ழினம் மௌன­மா­வதை குறை­கூற முடி­யாது. அப்­ப­டி­யான நிகழ்­வுகள் இதற்கு முன்­னரும் நடை­பெற்­றுள்­ளன. உதா­ர­ண­மாக, முல்­லைத்­தீவில் நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் கோயில் வளா­கத்­திலே ஒரு பௌத்த பிக்­குவின் சிதையை பௌத்த பேரி­ன­வா­திகள் எரித்து கோயிலின் புனி­தத்தைக் கெடுத்து இந்­து­மக்­களின் சாபத்­தையும் கோபத்­தையும் தேடி­ய­போது முஸ்லிம் தலை­மைகள் வாய்­தி­ற­வா­தி­ருந்­தனர். அதே­போன்று மகர சிறைச்­சாலைப் பள்­ளி­வா­சலை பாது­காப்பு அதி­கா­ரிகள் அப­க­ரித்து அதனை அவர்­களின் களி­யாட்ட மண்­ட­ப­மாக மாற்­றி­ய­போதும், கூர­க­லையில் தப்தர் ஜெய்­லா­னியின் ஒரு பகு­தியைத் தரை­மட்­ட­மாக்கி அதன் அரு­கே­யுள்ள பௌத்த விகாரை விஸ்­த­ரிக்­கப்­பட்­ட­போதும் தமிழ் தலை­மைகள் மௌனி­க­ளா­யினர். இவ்­வாறு ஏட்­டிக்குப் போட்­டி­யாக இரு இனங்­களின் தலை­மைத்­து­வங்­களும் நடந்து கொண்டால் பேரி­ன­வாதத் தீயில் ஈரி­னங்­களும் வெந்து மடி­வதைத் தடுக்க முடி­யாது. இப்­பொ­ழுது நீதி­மன்­றத்தின் தடை உத்­த­ர­வையும் மீறி முல்­லைத்­தீவில் ஆதி­சிவன் ஐயனார் கோவில் நிலத்தில் அரசின் அங்­கீ­கா­ரத்­துடன் பௌத்த விகாரை ஒன்று கட்­டப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் பிர­ப­லங்கள் இதனைக் காணா­த­துபோல் இருப்­பது வேத­னைக்­கு­ரி­யது.

இந்தப் பின்­ன­ணியில் அபி­வி­ருத்தி என்ற பெய­ரிலும் தன்­னி­யப்­ப­டுத்தல் (assimilation) என்ற பெய­ரிலும் சீனக் குடி­ய­ரசு உய்கர் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் சின்­ஜியாங் பிர­தே­சத்தை எவ்­வாறு ஹான்­சீனப் பிர­தே­ச­மாக்கி முஸ்­லிம்­களின் மத கலா­சாரத் தனித்­து­வத்­தையும் அழித்­துள்­ளது என்­ப­தை­ப் பற்­றிய சில உண்­மை­களை அறிந்­து­கொண்டால் சீன நண்­பர்­க­ளாக மாறும் பௌத்த சிங்­களப் பேர­ன­வா­தி­களின் அந்­த­ரங்கத் திட்­டங்­களை விளங்­கிக்­கொள்­வது இல­கு­வாக இருக்கும். (உய்கர் முஸ்­லிம்­களின் வர­லாற்றை விரி­வாக அறிய விரும்­புவோர் James A. Millward vOjpa Eurasian Crossroads, Hurst & Company, London, 2021, புதிய பதிப்பைப் படிக்­கவும்).

உய்கர் முஸ்­லிம்­க­ளுக்கு ஆயிரம் வருட வர­லாறு உண்டு. அவர்கள் விரும்­பி­ய­தெல்லாம் சீனப் பொது­வு­டமைக் குடி­ய­ர­சின்கீழ் தன்­னாட்­சி­யுள்ள ஒரு பிர­தேச சபை அவர்களுக்கு வேண்டும் என்­பது மட்­டுமே. சீனக் குடி­ய­ரசின் அர­சியல் யாப்­பின்கீழ் தமது மொழி­யையும், மதத்­தையும் கலா­சா­ரத்­தையும் பாது­காப்­ப­தற்­கா­கவே அதனை வேண்­டினர். அதைத்­தானே தமி­ழி­னமும் இங்கே வேண்­டு­கி­றது. இருந்தும் ஹான் சீனர்­க­ளுக்கு இலங்­கையின் சிங்­களப் பேரி­ன­வா­தி­க­ளைப்­போன்று அந்தக் கோரிக்கை பிரி­வி­னை­வா­த­மாகத் தோன்­றி­யது. அதன் விளை­வாக உரு­வா­கி­யதே உய்கர் இன­மாற்றக் கொள்கை.
இந்தக் கொள்­கையின் முதற் கட்டம் சின்­ஜியாங் உய்­கர்­களின் பிர­தேசம் என்ற வர­லாற்றை முற்­றாக நிரா­க­ரித்­தமை. இரண்­டா­வது கட்டம், அப்­பி­ர­தே­சத்­துக்குள் ஹான் சீனர்­களைக் குடி­யேற்­றி­யமை. அடுத்த கட்டம் அபி­வி­ருத்­தி­யென்ற பெயரில் முஸ்­லிம்­களின் நிலங்­களை தொழிற்­சா­லை­க­ளுக்­கா­கவும் பண்­ணை­க­ளுக்­கா­கவும் அரசு அப­க­ரித்து அங்கே ஹான் சீனர்­க­ளுக்குத் தொழிலும் நிலமும் வழங்­கி­யமை. இந்தக் கட்­டத்தில் உய்­கர்­களின் மத கலா­சா­ரத்தில் ஹான் சீனப்­பண்­பு­களை பாட­சாலைப் பாடப்­புத்­த­கங்கள் மூலம் புகுத்­தி­யமை. இறு­தி­யாக தீவி­ர­வாத ஒழிப்பு என்ற போர்­வையில் தனிப்­பட்ட முகாம்­க­ளுக்குள் உய்­கர்­களை அடைத்து மூளைச்­ச­லவை செய்­தமை. அதன் நோக்கம் தன்­னி­யப்­ப­டுத்தல் என்ற பெயரில் பல்­லின அமைப்பை உத­றித்­தள்ளி ஒரே இன­மாக, அதா­வது ஹான் இன­மாக அனைத்து சீன மக்­க­ளையும் மாற்­று­தலே. கோத்­தா­ப­யவின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மந்­தி­ரத்தின் அந்­த­ரங்­கமும் இது­தானே. இவை­யெல்லாம் சுதந்­திர இலங்­கையின் தமி­ழ­ருக்­கெ­தி­ரான அர­சியல் வர­லாற்றை ஞாப­கப்­ப­டுத்­த­வில்­லையா?

குறிப்­பாக, முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை கடைசி இரண்டு கட்­டங்­களின் சாயல்­களும் கோத்­தா­பய ஜனா­தி­பதி ஆட்­சியில் காணப்­பட்­டது என்­ப­தையும் மறுக்­க­லாமா? சுருக்­க­மாகச் சொன்னால் சீனா­விலே ஹான் பேரி­ன­வாதம் கற்­பித்த பாடங்­களை இலங்­கை­யிலே சிங்­கள பௌத்த பேரி­ன­வாதம் மீட்டல் செய்­கின்­றது. என­வேதான் இப்­பே­ரி­ன­வாதம் எந்த இனத்­துக்­கெ­தி­ராக எவ்வெவ் வழி­களில் அவிழ்த்­து­வி­டப்­பட்­டாலும் அதனை எல்லா இனங்­களும் அதிலும் குறிப்­பாக சிறு­பான்மை இனங்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும்.

பேரி­ன­வாதம் இந்த நாட்டின் அர­சியல் சமூகப் புற்­றுநோய் என்­பதை இப்­பத்­தி­ரி­கையில் இதற்கு முன் வெளி­வந்த ஒரு கட்­டுரை குறிப்­பிட்­டது. இன்று நிலவும் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்கும் இந்த நோயே முக்­கிய காரணம் என்­ப­தையும் அக்­கட்­டுரை சுட்­டிக்­காட்­டி­யது. எழு­பது ஆண்­டு­க­ளுக்கும் மேலாக வளர்ந்து புரை­யோடிக் கிடக்கும் இந்தப் புண்ணை வெட்டியெ­றிந்து நோயா­ளியைக் குணப்­ப­டுத்த வேண்டும் என­பதை நோக்­காகக் கொண்­டுதான் சிங்­கள பௌத்த இளை­ஞர்­களே கடந்த ஆறு மாதங்­க­ளுக்கு முன்னர் கிளர்ந்­தெ­ழுந்­தனர். அந்­தக்­கி­ளர்ச்சி இன, மத, மொழி வேறு­பா­டின்றி அனைத்து மக்­க­ளையும் அர­வ­ணைத்து நடத்­தப்­பட்­ட­போதும் வடக்­கிலும் கிழக்­கிலும் அதற்­கான ஆத­ரவு குறிப்­பி­டத்­தக்க அள­வுக்கு இருக்­க­வில்லை என்­பதை ஏமாற்­றத்­துடன் இங்கே பதிவு செய்ய வேண்­டி­யுள்­ளது. தாங்கள் 25 ஆண்­டு­க­ளாக சிங்­கள பௌத்த இரா­ணு­வத்­தி­னரின் அள­வி­ட­மு­டி­யாத கொடு­மை­களால் நசுக்­கப்­பட்­ட­போது எந்த அனு­தா­பமும் காட்­டாத சிங்­கள இளை­ஞர்கள் இப்­போது மட்டும் எங்­களை நாடு­வதேன் என்ற மனோ­பா­வத்தில் தமி­ழர்­களும், இராமன் ஆண்­டா­லென்ன இரா­வணன் ஆண்­டா­லென்ன என்ற மனோ­நி­லையில் முஸ்­லிம்­களும் சிக்­குண்­ட­மையே அவர்­க­ளது மந்­த­மான ஆர்­வத்­திற்குக் காரணம் என்றும் கரு­தலாம். இந்த நிலை மாற­வேண்டும்.

இன்று வளர்ந்­துள்ள இளைஞர் சமு­தாயம் இதற்கு முன்­வந்த இளைஞர் பரம்­ப­ரை­யி­லி­ருந்து முற்­றாக வேறு­பட்­ட­தொன்று. இது பூகோள ரீதி­யான ஓர் வேறு­பாடு. சர்­வ­தேச ரீதியில் இன்­றைய இளை­ஞர்கள் கல்வி வளர்ச்­சி­கண்டு உலக விவ­கா­ரங்­க­ளைப்­பற்­றிய விழிப்­பு­ணர்­வு­டனும் ஒரு­வ­ருக்­கொ­ருவர் நெருங்­கிய தொடர்­பு­டனும் செயற்­ப­டு­கின்­றனர். வளர்ச்சி கண்ட நாடு­க­ளிலும் வளர்ச்சி காணத்­து­டிக்கும் நாடு­க­ளிலும் அவ்­வி­ளை­ஞர்­களின் செயற்­பா­டு­களும் கிளர்ச்­சி­களும் அர­சியல் பொரு­ளா­தார சமூகக் கொள்­கைளில் தடம் பதித்­துள்­ளன. இதற்கு இலங்கை விதி­வி­லக்­காக இருக்க முடி­யாது.

அதைத்தான் அவர்­களின் அறப்­போ­ராட்டம் எடுத்­துக்­காட்­டி­யது. அவர்கள் முன்­வைத்த அடிப்­படை மாற்றம் என்ற கோரிக்கை பேரி­ன­வா­தத்­துக்கு விடுக்­கப்­பட்ட ஒரு சவால். பேரி­ன­வா­தத்தின் மடி­யிலே வளர்ந்த இன்­றைய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அவ்­வி­ளை­ஞர்­களின் எழுச்­சிக்­குரல் ஓர் அபாய சங்­காக ஒலித்­ததில் எந்த ஆச்­ச­ரி­யமும் இல்லை. அத­னா­லேதான் அவர்­களின் ஆத­ரவில் ஜனா­தி­ப­தி­யா­கிய ரணில் விக்­கி­ர­ம­சிங்ஹ அந்­தக்­கி­ளர்ச்­சிக்­கார இளை­ஞர்­களை பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்­தின்கீழ் சிறைக்குள் அடைத்­துள்ளார். அதனை உல­கமே கண்­டிக்­கி­றது. என­வேதான் சிறு­பான்மை இனங்கள் இரண்டும் சிங்­கள பௌத்த இளை­ஞர்­களின் போராட்­டத்­துக்குப் பூரண ஆத­ரவை வழங்க வேண்டும்.

அது ஒரு புற­மி­ருக்க, இன்று குச்­ச­வெ­ளியில் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள பிர­தேசப் பிரிவு பேரி­ன­வாத ஆட்­சியின் இன்னோர் அத்­தி­யாயம் என்­பதை உல­க­றியச் செய்ய வேண்டும். தமிழ்த் தலை­வர்கள் அதனை கண்­டிக்­கின்­றனர்; ஆனால் அதனை தமி­ழ­ருக்­குள்ள ஒரு தனிப்­பி­ரச்­சி­னை­யாக முஸ்­லிம்கள் கரு­திக்­கொண்டு வாழா­வி­ருத்தல் ஆபத்­தா­னது. ஏற்­க­னவே கூறப்­பட்­ட­து­போன்று இலங்­கையின் எந்­த­வொரு மூலை­யிலும் சிறு­பான்மை இனத்­தவர் பெரும்­பான்­மை­யாக இருக்­கக்­கூ­டாது என்­பதே சிங்­கள பௌத்த பேரினவாதத்தின் அடிப்படைக் கொள்கை. அந்தக் கொள்கைக்கு முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்களும் ஒரு நாள் பலியாகும் என்பதை முஸ்லிம் தலைமைகள் உணர்வார்களா? அதை உணர்ந்தால் தமிழ் தலைவர்களுடன் சேர்ந்து குச்சவெளி நாடகத்தை அரங்கேறாது தடுக்கவேண்டும்.

முடி­வாக ஓர் உண்­மையை மீண்டும் மீண்டும் வலி­யு­றுத்த வேண்­டி­யுள்­ளது. அதா­வது சிங்­கள பௌத்த மக்கள் இயல்­பிலே கருணை உள்ளம் படைத்­த­வர்கள். சினே­கி­தர்­க­ளாகப் பழ­கு­வ­தற்கும் நம்­பிக்­கை­யுடன் உற­வா­டு­வ­தற்கும் அவர்­க­ளுக்கு இணை­யாக இன்­னொரு சமூ­கத்தை உல­கிலே காண்­பது அரிது. ஆனால் அவர்­களின் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக இயங்கும் ஒரு காவி­யுடைப் படை­யி­னதும் அதி­கார ஆசையும் திரு­கு­தா­ளங்­களும் சேர்ந்து அந்த மக்­களை பேரி­ன­வாதம் என்ற மகு­டியில் மயங்க வைத்­துள்­ளது. அந்தப் பேரி­ன­வா­தமே சிறு­பான்மை இனங்­க­ளி­டை­யேயும் இன­வாத அர­சி­ய­லுக்கு வித்­திட்­டது என்றால் அது மிகை­யா­காது. இதை உணர்ந்­த­த­னா­லேதான் சிங்­கள பௌத்த இளை­ஞர்கள் அதனை வெட்­டி­வீச முற்­பட்­டுள்­ளனர். அவர்களின் முயற்சிகளுக்கு வலுவூட்டுவது சிறுபான்மை இனங்களின் கடமை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.