நீதிக்குப் புறம்பான தடை நீக்கப்பட வேண்டும்

0 617

ஐக்­கிய நாடுகள் சபையின் 2012 ஆம் ஆண்டு விதி­மு­றைகள் எண் 01 இன் பிர­காரம் பயங்­க­ர­வா­தத்­திற்கு நிதி­யு­த­வி­ய­ளித்தல் தொடர்பில் 577 நபர்கள் மற்றும் 18 அமைப்­புகள் 2021 ஆம் ஆண்டில் கறுப்­புப்­பட்­டி­யலில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் இவர்­களில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிதி­யு­த­வி­ய­ளித்தல் செயற்­பா­டு­களில் ஈடு­பாடு காட்­டாத 316 நபர்கள் மற்றும் 6 அமைப்­பு­களை பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக பாது­காப்பு அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலும் இந்த வாரம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தடைகள் நீக்­கப்­பட்ட அமைப்­புகள் மற்றும் தனி நபர்­களின் பட்­டியல் ஒரு­பு­ற­மி­ருக்க, இக் கறுப்புப் பட்­டி­யலில் புதி­தாக பல முஸ்லிம் தனி நபர்­களும் அமைப்­பு­களும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளமை பல­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.

பயங்­க­ர­வாத செயல்­க­ளுடன் சம்­பந்தம் உள்­ள­தாக புல­னாய்வுத் தரப்­பு­க­ளாலும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தி­னாலும் இது­வரை உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத பலரும் கூட இப் பட்­டி­யலில் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக இலங்கை ஜமா­அதே இஸ்­லா­மியின் முன்னாள் அமீர் ஹஜ்ஜுல் அக்பர், கவி­ஞரும் ஆசி­ரி­ய­ரு­மான அஹ்னாப் ஜஸீம் உட்­பட ஏலவே கைது செய்­யப்­பட்டு இரு வரு­டங்­க­ளுக்கு மேலாக தடுத்து வைக்­கப்­பட்டு பிணை­யிலும் முற்­றா­கவும் விடு­விக்­கப்­பட்ட பலர் கூட இப் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர். அது­மாத்­தி­ர­மன்றி இவர்கள் அனை­வ­ரது வங்கிக் கணக்­கு­களும் முடக்­கப்­பட்­டுள்­ள­துடன் எதிர்­கா­லத்தில் இவர்கள் மீதான பாது­காப்புத் தரப்பின் கெடு­பி­டி­களும் அதி­க­ரிக்­கலாம் என அச்சம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

நீண்ட கால­மாக அநி­யா­ய­மாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்து, விடு­விக்­கப்­பட்டு மீண்டும் சமூ­கத்­துடன் இணைந்து தமது அன்­றாட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க ஆரம்­பித்­துள்ள சந்­தர்ப்­பத்தில், இவ்­வாறு கறுப்புப் பட்­டி­யலில் சேர்த்து வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யிட்­ட­மை­யா­னது அவர்­களை மேலும் அச்­சத்­திற்குள் தள்­ளி­யுள்­ளது.

வெளி­வி­வ­கார அமைச்சு, சட்­டமா அதிபர் திணைக்­களம், புல­னாய்வு பிரி­வுகள், சட்ட அமு­லாக்கல் பிரி­வினர் மற்றும் இலங்கை மத்­திய வங்­கியின் நிதிப் புல­னாய்வுப் பிரிவு அடங்­கிய குழு­வொன்­றி­னூ­டாக பயங்­க­ர­வா­தத்­திற்கு நிதி­யு­த­வி­ய­ளித்தல் தொடர்பில் மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட நபர்கள் மற்றும் அமைப்­பு­களின் செயற்­பா­டுகள் குறித்து கடந்த சில ஆண்­டு­க­ளாக ஆய்வு செய்­யப்­பட்டு, கிடைத்த ஆதா­ரங்­க­ளுக்­க­மைய பாது­காப்பு அமைச்சில் நடாத்­தப்­பட்ட பல சுற்று கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்குப் பின், கறுப்புப் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கப்­பட மற்றும் சேர்க்­கப்­பட வேண்­டிய நபர்கள் மற்றும் நிறு­வ­னங்கள் குறித்து பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­ட­தாக பாது­காப்பு அமைச்சு கூறு­கி­றது. உண்­மையில் இந்தக் கூற்று நகைப்­புக்­கி­ட­மா­ன­தாகும்.

கவிஞர் அஹ்னாப் ஜஸீம் ஒரு விவ­சா­யியின் மகன். இன்று அந்தக் குடும்­பத்­தினர் அன்­றாட வாழ்க்­கையைக் கொண்டு நடத்­து­வ­தற்கே எந்­த­வித வரு­மான வழி­க­ளு­மின்றித் தவித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். குடும்­பத்தின் மூத்த பிள்­ளை­யான அஹ்னாப், ஒரு தொழிலைக் கூட செய்ய முடி­யாத நிலையில் உள்ளார். இவ்­வா­றான பின்­ன­ணியில் அவர் பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி­ய­ளிப்­ப­தாக பாது­காப்பு அமைச்சு கூறு­வது எந்தப் புல­னாய்­வுத்­து­றை­யி­னரின் கண்­டு­பி­டிப்பு என்­ப­துதான் புரி­யாத புதி­ரா­க­வுள்­ளது. மாத­மி­ரு­முறை அவர் புத்­த­ளத்­தி­லுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் அலு­வ­ல­கத்­திற்குச் சென்று கையொப்­ப­மிட வேண்டும் என்­பது அஹ்­னா­புக்­கான பிணை நிபந்­த­னை­யாகும். அதற்­கான பயணச் செல­வைக்­கூட ஈடு­செய்ய முடி­யாத நிலையில் அவர் உள்ளார் என்­பதை அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்கள் நன்­க­றிவர். இந்­நி­லையில் அவரை பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி­ய­ளிப்­ப­தாக பட்­டி­யல்­ப­டுத்­தி­யுள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

அஹ்னாப் ஜஸீம் அநி­யா­ய­மாகத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரை விடு­விக்­கு­மாறும் ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் தொடர்­பு­டைய மனித உரிமை நிறு­வ­னங்கள் பலவும் பல தட­வைகள் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன. துர­திஸ்­ட­வ­ச­மாக இன்று அதே ஐ.நா. விதி­மு­றையைப் பயன்­ப­டுத்தி அஹ்னாப் மீண்டும் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ராக பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ளார். அஹ்னாப் போன்றே பலர் இப் பட்­டி­யலில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த தடைப்­பட்­டி­யலில் உள்­ள­டக்­க­பட்­டுள்­ள­வர்கள் இது தொடர்பில் சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முன்­வர வேண்டும். இவர்­க­ளுக்கு முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் உத­வி­களை வழங்க வேண்டும். தடை செய்­யப்­பட்­டுள்ள அமைப்­பு­களும் தமது சட்டப் போராட்­டத்தை தொடர வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களைக் கண்­ட­றி­வதை விடுத்து, தொடர்ந்தும் இவ்­வாறு அப்­பாவி முஸ்­லிம்­களை இலக்கு வைத்து அவர்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரித்து அர­சியல் செய்­வது தவிர்க்­கப்­பட வேண்டும்.

ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுடன் சர்­வ­கட்சி அர­சாங்கம் தொடர்­பிலோ அல்­லது தேசிய அர­சாங்கம் தொடர்பிலோ பேச்சு நடத்தும் முஸ்லிம் கட்சிகள் இந்த விடயம் தொடர்பில் தீவிர கரிசனை காட்ட வேண்டும். தமது பிரதான நிபந்தனைகளில் ஒன்றாக இந்த விவகாரத்தை உள்வாங்க வேண்டும்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட 316 தனி நபர்களினதும் 6 அமைப்புகளினதும் தடைகள் நீக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோன்று முஸ்லிம் அரசியல் தரப்புகளும் தமது சமூகம் சார்ந்தவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அநீதியான தடையைத் தளர்த்துவதற்கு முன்வர வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.