மூடப்பட்ட பள்ளிகளை மீள திறப்பதற்கான நடவடிக்கையை திணைக்களம் செய்யும்
வக்பு சபையின் முன்னாள் தலைவர் சப்ரி ஹலீம்தீன்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக நாட்டில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்களை மீளத்திறப்பது தொடர்பிலான உத்தரவுகளையும், வழிகாட்டல்களையும் வக்பு சபை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு வழங்கியுள்ளது. அந்த உத்தரவுகளை அமுல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சு மற்றும் கலாசார அமைச்சின் ஊடாகவும் தொடர்புபட்ட நிறுவனங்கள் ஊடாகவும் மேற்கொள்ளும் என வக்பு சபையின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் நேற்று முன்தினம் முதல் வக்பு சபை செயற்பாடுகள் உடனடியாக அமுலுக்கு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. வக்பு சபைக்கு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். வக்பு சபையின் முன்னாள் தலைவரைத் தொடர்பு கொண்டு அவரது பதவிக்காலத்தின் சேவைகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
“நாரஹேன்பிட்டியிலுள்ள பள்ளிவாசல் இலங்கை புகையிரத திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள காரணத்தால் அதனை மூடிவிட்டார்கள். இந்தப் பள்ளிவாசலை மீளத்திறப்பதில் காணிப்பிரச்சினையே காரணமாக உள்ளது. அதே போல் மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள பள்ளிவாசலும் சிறைச்சாலை நிர்வாகத்தினால் மூடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிவாசலை மீளத் திறப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள பள்ளிவாசல்களை மீளத்திறப்பதற்கான வழிகாட்டல்களும் உத்தரவுகளும் வக்பு சபையினால் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
வக்புசபை பள்ளிவாசல்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முழுமையாக செயற்பட்டுள்ளது. என்றாலும் கொவிட் 19 தொற்று, மற்றும் நாடு முடக்கப்பட்டமை காரணமாக பணிகளை முன்னெடுப்பதில் தாமதமேற்பட்டது.
நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்களில் Flash Light வெளிச்சத்தில் வக்பு சபை அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
வக்புசபையின் பணிகள் சமூக உணர்வுடன் முன்னெடுக்கப்படவேண்டும். அந்த வகையில் நானும் ஏனைய உறுப்பினர்களும் அரசியல் தலையீடுகளுக்கு இடமளியாது செயற்பட்டுள்ளோம்.
எமது பதவிக்காலம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியிலே காலாவதியாகிறது. இந்தக்கால எல்லைக்கு முன்பே சபை கலைக்கப்பட்டுள்ளது. நான் மூன்று தடவைகள் வக்பு சபையின் தலைவராகப் பதவி வகித்துள்ளேன். எனது பதவிக்காலத்தில் கடமையை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உட்பட ஏனைய அதிகாரிகளுக்கும், பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுக்கும் நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன்’ என்றார். Vidivelli