மக்கள் வாழத் தகுதியற்ற தேசம்!

0 500

நாடு எதிர்­கொண்­டுள்ள நெருக்­கடி நிலைமை நாளுக்கு நாள் மோச­ம­டைந்து கொண்டே செல்­கி­றது. பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­ப­டாத முடக்க நிலை ஒன்­றுக்கு நாடு முகங்­கொ­டுத்­துள்­ளது. எரி­பொருள் நெருக்­கடி உச்ச கட்­டத்தை அடைந்­துள்­ளதால் அத்­தி­ய­வ­சிய தேவை­க­ளுக்குக் கூட வாக­னங்­களைப் பயன்­ப­டுத்த முடி­யாத நிலை தோற்றம் பெற்­றுள்­ளது. கர்ப்­பிணித் தாய்மார் கூட உரிய நேரத்தில் வைத்­தி­ய­சா­லை­க­ளுக்குச் செல்ல முடி­யாத நிர்க்­கதி நிலை தோன்­றி­யுள்­ளது. பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ளது. ரயில் மற்றும் பஸ் வண்­டி­களில் மக்கள் பாது­காப்­பற்ற வகையில் பய­ணிப்­பதைக் காண முடி­கி­றது. அடுத்த எரி­பொருள் கப்பல் இம்­மாத இறு­தி­யி­லேயே நாட்டை வந்­த­டையும் என அமைச்சர் கூறு­கிறார். எனினும் அதுவும் நம்­பிக்கை தரு­வ­தாக இல்லை.

இன்று நாட்டை விட்டு வெளி­யே­று­வதைத் தவிர வேறு வழி­யில்லை எனச் சிந்­திக்கும் நிலைக்கு மக்கள் வந்­து­விட்­டனர். நாட்டை விட்டு வெளி­யே­று­வோரின் எண்­ணிக்கை பல மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. இந்த ஆண்டில் கடந்த மே மாத இறுதி வரை 2,88,645 கட­வுச்­சீட்­டுக்கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ள­தாக குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­கள தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

2021 ஆம் ஆண்டு முழு­வதும் 3,82,506 கட­வுச்­சீட்­டுக்கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன. எனினும், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்­களில் மாத்­திரம் மூன்று இலட்­சத்தை அண்­மித்த கட­வுச்­சீட்­டுக்கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன், கட­வுச்­சீட்­டுக்­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக, குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள வளா­கத்தில் பெரும் எண்­ணிக்­கை­யி­லானோர் தொடர்ந்தும் காத்­தி­ருப்­பதை நாளாந்தம் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இந்த ஆண்டில் மாத்­திரம் சுமார் ஐந்து இலட்­சத்தை அண்­மித்தோர் வெளி­நா­டு­க­ளுக்கு செல்­லக்­கூடும் என அதி­கா­ரிகள் எதிர்­பார்க்­கின்­றனர்.

இலங்­கையின் பொரு­ளா­தார நெருக்­கடி தீவி­ர­ம­டைந்­துள்ள நிலையில், வேலை­வாய்ப்­பு­களை எதிர்­பார்த்து வெளி­நாடு செல்­வோரின் எண்­ணிக்கை பல மடங்­கு­க­ளாக அதி­க­ரித்­துள்­ளன. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்­களில் மாத்­திரம் 1,20,000க்கும் அதி­க­மானோர் வேலை­வாய்ப்­புக்­காக வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றுள்­ள­தாக இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தெரி­விக்­கின்­றது. இந்த எண்­ணிக்­கை­யா­னது, கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் 100 வீத அதி­க­ரிப்பு என இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

அது மாத்­தி­ர­மன்றி, தினமும் கடல் வழி­யாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்­கின்­ற­வர்கள் அல்­லது அதற்கு முயற்­சிப்­ப­வர்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்து வரு­கி­றது. நேற்று முன்­தினம் கிழக்கின் திரு­கோ­ண­மலை கடற்­ப­ரப்­பி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லியா நோக்கிப் பய­ணிக்க முயன்ற 46 பேரும் வடக்­கி­லி­ருந்து இந்­தியா நோக்கிப் பய­ணிக்க முற்­பட்ட 7 பேரும் கடற்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். குறிப்­பாக, இந்த ஆண்டின் இது­வ­ரை­யான காலம் வரை சட்­ட­வி­ரோ­த­மாக வெளி­நா­டு­க­ளுக்கு செல்ல முயற்­சித்த சுமார் 500 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கடற்­படை ஊடகப் பேச்­சாளர் தெரி­விக்­கிறார்.

நாட்டின் நிலை­மை­களைப் பயன்­ப­டுத்தி ஆட்­க­டத்­தல்­கா­ரர்கள் பெருந்­தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இவ்­வாறு மக்­களை அழைத்துச் செல்­கின்ற சம்­ப­வங்­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன. இவ்­வாறு பய­ணித்­த­வர்­களில் முதன் முறை­யாக ஒருவர் உயி­ரி­ழந்த சம்­ப­வமும் பதி­வா­கி­யுள்­ளது.

அடைக்­கலம் தேடி கண­வ­ருடன் இந்­தி­யாவின் தமிழ்­நாட்­டுக்குச் சென்று தனுஷ்­கோடி கடற்­க­ரையில் மயங்­கிய நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட 70 வய­தான பர­மேஸ்­வரி என்ற வயோ­திப பெண் சில தினங்­க­ளுக்கு முன் மர­ணித்­துள்ளார். ஆபத்­தான கடல் வழிப் பய­ணத்தை மேற்­கொண்ட நிலையில், நினை­வி­ழந்து கரை­யொ­துங்­கிய இவரை தமிழ்­நாட்டு பொலிசார் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தி­ருந்­தனர். இந் நிலை­யி­லேயே அவர் உயி­ரி­ழந்­துள்ளார். இது கடந்த காலங்­களில் சிரி­யா­வி­லி­ருந்து அக­தி­க­ளாகத் தப்பிச் சென்று கடலில் வைத்தே உயிரை விட்ட ஆயிரக் கணக்­கான மக்­களின் நிலைமை கண்முன் கொண்டு வரு­கி­றது.

மக்கள் பாது­காப்­பாக வாழ்­வ­தற்­கான சுபீட்­ச­மான தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­புவேன் என்ற வாக்­கு­று­தி­யுடன் ஆட்­சிக்கு வந்த கோத்­தா­பய ராஜ­பக்ச, தனது இரண்­டரை வருட ஆட்சிக் காலத்தில் உரு­வாக்­கி­யுள்ள சுபீட்சம் இதுதான். மக்கள் உயிர் வாழ முடி­யாத ஒரு தேசத்­தைத்தான் அவர் பரி­ச­ளித்­தி­ருக்­கிறார். இத்­த­னைக்கும் கார­ண­மான ஜனா­தி­ப­தியை பதவி விலகக் கோரி மக்கள் நடாத்தும் போராட்­டங்­களை அவர் செவி­ம­டுப்­ப­தாக இல்லை. நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்­திற்கு வருகை தந்த அவரை, எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் ‘கோட்டா வீட்­டுக்குச் செல்’ எனக் கோஷ­மெ­ழுப்பி விரட்­டி­ய­டித்­தனர்.

இவ்­வா­றான அவ­மா­னங்­களைச் சந்­தித்துக் கொண்டும் ஜனா­தி­பதிக் கதி­ரையில் தொடர்ந்­தி­ருக்க முனை­வது ஆச்­ச­ரியம் தரு­வ­தா­க­வுள்­ளது. மறு­புறம் பிர­தமர் பத­வியைப் பொறுப்­பேற்ற ரணில் விக்­ர­ம­சிங்­க­வி­னாலும் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்­களைக் கொண்­டு­வர முடி­ய­வில்லை. ஜனாதிபதி பதவியிலிருந்து கோத்தபாய விலகும்பட்சத்தில் மாத்திரமே இலங்கைக்கு உதவிகளை வழங்குவோம் என்ற நிலைப்பாட்டில் பல சர்வதேச நாடுகள் உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன. ஆக மொத்தத்தில், கோத்தபாய வீட்டுக்குச் செல்வதே தீர்வு என்ற கட்டத்துக்கு நாடு வந்துள்ளது. இந்தத் தருணத்திலேனும் அவர் இராஜினாமாச் செய்து வீடு செல்ல வேண்டும். இன்றேல் எதிர்வரும் நாட்களில் மக்களின் விரக்தி மற்றொரு வன்முறையாக உருப்பெறலாம். அதன்பிற்பாடு நாட்டில் என்ன நடக்கும் என்பதை கற்பனை செய்வது கூட முடியாத காரியமாகிவிடும். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.