இலக்கிய ஆதாரங்கள், வாய்மொழி ஆதாரங்கள் அனைத்திலும் கவனம் செலுத்தும் முயற்சிகள் தேவை. ஒரு சிறுபான்மை சமூகத்திற்குள்ள பிரச்சினைகள், இஸ்லாமியர்களுக்குரிய வழக்காறுகள், ஆட்சியாளர்களாக முஸ்லிம்கள் இல்லாத நிலைமை என்பன முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றைக் கட்டி எழுப்புவதில் பிரச்சினைகளாக உள்ளன. எனினும், வரவேற்கத்தக்க முன்னேற்றங்கள் இந்த துறையில் நடந்திருப்பதை மறுப்பதற்கில்லை.
அதிகம் பேசப்படாத விடயங்கள் பற்றிய உணர்வுடன்தான் இக்கட்டுரைத் தொடர் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமாகியது.
விடிவெள்ளி ஆசிரியர் எம்.பீ.எம்.பைரூஸுக்கு முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும். இந்தத் திட்டத்தை அவருடன் கலந்துரையாடி ஒரு அறிமுக உரையுடன் ஆரம்பித்தோம். சில மாதங்கள் நேரடியாகவே இவர் இதனை பார்த்து பிரசுர வடிவமைப்புக்களில் கவனம் செலுத்தினார். இந்த வகையில் ‘இலங்கை முஸ்லிம்களின் வரலாறு’ சொல்லப்படுவது ஒருதேவை என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது.
சில மாதங்களின், பின்னர் விடிவெள்ளி பத்திரிகையின் சிரேஷ்ட உதவி ஆசிரியர் எஸ்.என்.எம்.சுஹைல் இந்த பொறுப்பை ஏற்றிருந்தார். படங்கள் பிரசுரிப்பது, பெயர்கள், ஆண்டுகள், சொற்பிரயோகங்கள் பற்றி எங்களுக்குள் நடந்த தொலைபேசி உரையாடல்கள் சுவாரஸ்யமானவை, பயனுள்ளவை. இந்தக்கட்டுரைகளின் முதல் வாசகர் சுஹைல்தான். ஒட்டுமொத்த விடிவெள்ளி ஆசிரியர் பீடமும் பல வழிகளில் இதன் வெற்றிக்கு உதவியாக இருந்துள்ளது. முக்கியமாக நிறுவனம் இத்தொடர் தொடர்ந்து வெளிவருவதில் தயக்கங்களற்ற ஆதரவை வழங்கியது மகிழ்ச்சி. இது சுதந்திரமான என் எழுத்து.
நீண்டகால வாசிப்பு, நேர்முகங்கள், நேரடி அனுபவங்கள் வழியாகப் பெற்ற தகவல்கள், கருத்துக்கள், ஆதாரங்கள் என்பன முடிந்தளவு இவ்வெழுத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. இதுவரை பேசப்படாத, குறைவாக பேசப்பட்ட, கவனத்திற்கு அதிகம் வராத விடயங்கள், கருத்துக்கள் இத்தொடரில் உரையாடப்பட்டுள்ளன. தெரிந்த விடயங்களாக இருந்தாலும் புதிய ஒழுங்கில் சொல்வதற்கும் வாத ஒழுங்கில் சிலவற்றைப் பேசுவதற்கும் இத்தொடரில் நான் முயன்றுள்ளேன்.
‘இலங்கையில் முஸ்லிம்களின் இருப்பையும் சரித்திரபூர்வமான உரிமைகளையும் வெளிப்படையாக சரித்திர பின்னணியில் அனஸ் நீங்கள் நிறுவிக்காட்டுகிறீர்கள்’ என்ற ஒரு வாசகரின் வார்த்தை மகிழ்ச்சி தருகிறது.
நிறைய வாசகர்கள் இருந்தார்கள். ஓரளவு வாசிப்பறிவுள்ள அடிநிலை மக்கள் பலர் இத்தொடரை வாசித்து வந்ததை நான் நேரில் அறிவேன். பரகஹதெனியாவில் ஒரு உணவு விடுதிக்கு நான் அடிக்கடி செல்வது வழக்கம். அங்கு சர்வராகப் பணியாற்றி வந்த வாசக நண்பர் ஒருவர், நான் அவரது மேசைக்குச் செல்லாவிட்டாலும் தேடி வந்து அப்போது புதிதாக வந்த தொடர்களின் முக்கிய விபரங்கள் பற்றி என்னுடன் கலந்துரையாடுவார். சாதாரண தரம் பயிலும் தனது பிள்ளைகள் படிப்பதற்காக ஒவ்வொரு பிரதிகளாகத் தேடிச் சேகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்திலும் பல வாசகர்கள் இருந்தனர். மூத்த பிரஜையும் நிந்தவூர் வரலாற்று ஆசிரியரும் தொலைபேசியிலும் நேரில் (எனது வீட்டுக்கு) வந்தும் இதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். கிண்ணியாவில், கம்மல்துறையில், கம்பளையில், ஆண்டியா கடவத்தையில், கல்பிட்டியில், புத்தளத்தில், வவுனியாவில், கொழும்பில் என நாடு பூராகவும் இதற்கு வாசகர்கள் இருந்தனர்.
கல்பிட்டி செல்லும்போது கல்பிட்டி முஸ்லிம் வரலாற்றில் ஆர்வம் உள்ள நண்பர் நாதன் வீடு சென்றால் அவரது படிக்கும் மேசையில் விடிவெள்ளி அடுக்கப்பட்டிருக்கும். இத்தொடர்பற்றி அவர் ஆர்வத்துடன் உரையாடுவார். அனுராதபுரம் அன்பு ஜவர்ஷா, கொழும்பு நாகூர் கனி, புத்தளம் இஸட்.ஏ.சனீர், தர்காநகர் சனீர், களுத்துறை ரினாஸ் எனப் பலர் இந்த எழுத்துக்களில் ஆர்வம் காட்டியதோடு, இது தொடரவேண்டும் என்றும் ஆர்வமூட்டினர்.
பொதுமக்கள் இந்தப் பிரச்சினையை அறிந்து கொள்ள வேண்டும் என்பது எனதும் விடிவெள்ளி ஆசிரியர் பீடத்தின் விருப்பமாகவும் இருந்தது. உண்மையில் இத்தொடர் அதில் வெற்றி கண்டுள்ளது. இலங்கையில் உள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள் அத்தொடரினால் கவரப்பட்டிருந்தனர். பலர் என்னுடன் நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசினர். தென்கிழக்கு பல்கலைக்கழக அரபு, இஸ்லாமிய பீட மாணவர்கள் இந்தத் தொடர் பற்றியும் முஸ்லிம் வரலாறு பற்றியும் கலந்துரையாடிய சந்தர்ப்பங்களும் உண்டு.
பொதுவாக, இதை நூலாக பிரசுரிப்பது பற்றி எல்லா இடங்களிலும் வலியுறுத்தப்பட்டது. பொது வாசகரை கவனத்திற் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் தேவையான முறையியல் மற்றும் சான்றாதார ஒழுங்குகள் இதில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. பல நுண்மையான விடயங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆயினும் நூலாக்கத்தின்போது கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் சில உள்ளன. விரிவுகருதி, கடினம் கருதி, எழுதப்படாத விடயங்களும் உள்ளன. அந்த விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
முஸ்லிம் வரலாறு பற்றி முஸ்லிம்களின் கவனம் விரிவுபடுத்தப்படவேண்டும் என்ற இத்தொடரின் இலக்கு ஓரளவு வெற்றி கண்டுள்ளது என்பது எனது எண்ணம். இதை நூலாக்குவது அடுத்த கட்ட முயற்சியும் முன்னேற்றமுமாகும். பத்திரிகைத் தொடர்களுக்கான குறைந்த ஆயுள்பற்றி நாம் உணர்வோம்.
ஏன் வரலாறு என்பது ஒரு அபத்தமான கேள்வி. நாம் வாழ்ந்தது வரலாற்றில், வாழ்வது வரலாற்றில், வரப்போகும் வாழ்வும் வரலாற்றின் பதிவுகளுக்குச் செல்லாமல் தப்புவதில்லை. “மஹாவம்சம்” “சூழவம்சம்” “யாழ்ப்பாண வைபவமாலை” இல்லை என்பது அழுது மாரடிக்கப்பட வேண்டிய விடயம் அல்ல. வரலாற்றுத் தேடல் பல அரிய உண்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். இந்த முயற்சிகள்தான் இப்போது நடக்கின்றன. சில ஏற்கனவே நடந்துள்ளன. அவை பற்றிய பல தகவல்களும் கருத்துகளும் இக்கட்டுரைகள் தொடரில் இடம்பெற்றுள்ளன.
ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் கவனம் செலுத்துவற்கு முன்னரே அவரது படைப்புக்களுக்கு ஆதாரமாயிருந்த தகவல்களும் கூட வரலாற்றில் பதிவாகி இருந்தன. சேர்.பொன்னம்பலம் இராமநாதன் எதிர் கணிய ரீதியில் எழுதி இருந்தாலும் முஸ்லிம் வரலாற்றுக்கான தவிர்க்க முடியாத சில சான்றுகளையும் அவர் உரையாடியுள்ளார். அதனால் 19 ஆம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால எழுத்துக்களில் எமர்சன் டெனென்ட், சேர். அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன், ஆர்.எல்.புரோஹியர் போன்ற பலர் இதற்கான பாதைகளைத் திறப்பதில் முன்னின்றனர். தென்னக தொன்மை முஸ்லிம் வரலாற்றையும் சேர்க்கும்போது நாம் அதிக ஆதாரங்களுக்கு உரிமைகூறக் கூடியவர்களாகிறோம். இத்தொடர் இந்த விடயங்களை ஆராய்வதில் அதிகம் கவனம் செலுத்தி உள்ளது. வரலாற்றில் நாங்கள் யார்? எங்கள் வரலாறு என்ன? என்ற கேள்விகளுக்கு பாரபட்சமற்ற முறையில் விடைகாண்பதற்கும் இஸ்லாத்தின் தொடக்க காலத்துடன் ஹிஜ்ரி ஆண்டுகளின் ஆரம்பக் கட்டத்திலேயே கேரளம், தமிழ்நாடு, தென்கிழக்காசியா, இலங்கையில் நடந்த முஸ்லிம் குடியேற்றங்கள் பற்றிய உரையாடல்கள் இத்தொடரின் அடிப்படை கருத்தாக இருந்துள்ளன.
வரலாற்று அறிவு மற்றும் விவாதங்கள் இன்மையினால் வரலாறு பின்தள்ளப்பட்டது என்பது ஒரு சமூகத்தின் மீதும் அதன் அறிவின்மீதும் ஏற்படும் சுமத்தப்படும் அவச்சொல்லாகும். இது ஒரு கடினமான ஆனால் இனிமையான பயணம். நிபந்தனைகள் அற்ற முறையில் அதில் நாம் பிரவேசித்திருக்கிறோம். பல முஸ்லிம், தமிழ், சிங்கள புத்திஜீவிகள், ஆய்வாளர்கள், இன்றும் பல வழிகாட்டுதல்களையும் கருத்துக்களையும் முன்வைத்து வருவது நம்பிக்கையூட்டும் நடவடிக்கையாகும். விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் பைரூஸுடன் நடத்திய தொடக்க உரையாடல் இன்று போல் நினைவில் உள்ளது. ‘நீங்கள் எழுதுங்கள் விடிவெள்ளி பிரசுரிக்கும்’ இதுதான் பேச்சு, இதுபோன்ற ஒரு நூலை நான் எழுதுவதாக இருந்தாலும் அது எழுதப்பட்டிருக்குமா என்பது ஐயம். ஆகவே நான் விடிவெள்ளி ஆசிரியர் பீடத்திற்கும், பத்திரிகை நிறுவனத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்து என்னை ஊக்கப்படுத்திய வாசக நண்பர்களிடமிருந்து இத்தொடரை நிறைவுக்கு கொண்டுவந்து விடைபெறுகிறேன்.-Vidivelli