(யு.எல்.முஸம்மில்)
நாகப்பாம்பு மற்றும் விஷப் பாம்புகளை கூண்டில் அடைத்து கூண்டிலிருந்து கொண்டு பாம்புகளுடன் சாகசம் புரிந்து வந்த இளைஞர் ஒருவர் நாகப் பாம்பு தீண்டியதில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
குருநாகல் மடிகே மிதியாலையைச் சேர்ந்த எம்.ஆர் . எம். ரிப்கான் எனும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். மேற்படி இளைஞர் இதுபோன்று சாகசம் புரியும் நண்பர்களுடன் இணைந்து ஏற்கனவே பயிற்சிகள் பெற்றுள்ளதுடன் தான் தனியாக இது போன்ற சாகச காட்சிகளை செய்வதற்கு ஆரம்பித்து சுமார் நான்கு மாதங்கள் ஆகின்ற நிலையிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுவரை 7 சாகச காட்சிகளை இவர் பல இடங்களிலும் நடாத்தியுள்ளதுடன், கடந்த சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் பண்டார கொஸ்வத்த என்ற இடத்தில் சாகச காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்நாள் சனிக்கிழமை நாகப் பாம்புகளுடன் சாகசம் புரிந்து கொண்டிருக்கும்போது நாகப்பாம்பு ஒன்றினால் தீண்டப்பட்டதையடுத்து உடனடியாக அவர் வாரியபொல மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். அங்கிருந்து குருநாகலை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மரணமானார் . அவரது ஜனாஸா ஞாயிறன்று மாலை மடிகே மிதியால முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli