இலங்கையின் ‘அறகலய’: ராஜபக்ச யுகத்தை அஸ்தமிக்கச் செய்த வரலாற்றுத் திருப்பம்!

0 491

எம்.எல்.எம்.மன்சூர்

இலங்­கையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி ஆட்­சி­முறை செயற்­பட்ட கடந்த 44 வருட காலத்தில் பதவி வகித்த மிகவும் பலம் வாய்ந்த ஜனா­தி­பதி என்ற பெரு­மை­யையும், மிகவும் பல­வீ­ன­மான ஜனா­தி­பதி என்ற பெரு­மை­யையும் ஒரே நேரத்தில் தட்டிச் செல்­கிறார் கோட்­டா­பய ராஜ­பக்ச. அதே­போல, ராஜ­பக்ச குடும்ப ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தவர் என்ற விதத்­திலும் வர­லாறு அவரை நினைவு கூரும்.

2019 நவம்பர் மாதத்தில் நாட்டின் 7 ஆவது நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாக கோட்­டா­பய ராஜ­பக்ச பத­வி­யேற்ற தரு­ணத்தில் பெரு­வா­ரி­யான சிங்­கள மக்கள் அந்தப் பேரெ­ழுச்­சியை அளவு கடந்த பெரு­மித உணர்­வுடன் கொண்­டாடி வர­வேற்­றார்கள். ‘வருக!… மா மன்­னரே! வாழி நீடு…’ என்று வாழ்த்­து­ரைத்து, பன்னீர் தெளித்து அவரை வர­வேற்ற அதே மக்கள் இப்­பொ­ழுது ‘நீர் போய் தொலைந்தால் போதும் இனி’ என்று வசை­பாடி, பகி­ரங்­க­மாக அவ­ருக்கு சாப­மிடும் அள­வுக்கு தலை­கீ­ழாக மாறி­யி­ருக்­கி­றது நிலைமை.

ராஜ­பக்ச வழி­பாட்டில் ஊறித் திளைத்துப் போயி­ருந்த சிங்­கள கூட்டு உள­வி­யலை, ஒட்­டு­மொத்­த­மாக ராஜ­பக்­சாக்­களை நிரா­க­ரித்­தொ­துக்கும் எதிர் திசைக்கு நகர்த்திச் சென்ற கார­ணிகள் எவை? இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் எவரும் கற்­பனை செய்து கூட பார்த்­தி­ருக்க முடி­யாத இந்த மாற்றம் நிகழ்ந்­தது எப்­படி? இந்த அற்­பு­தத்தை நிகழ்த்திக் காட்­டி­ய­வர்கள் யார்?

நம்­பவே முடி­யாத விதத்­தி­லான அதி­ரடி மாற்­றங்­க­ளுடன் இணைந்த விதத்தில் வேக வேக­மாக காட்­சிகள் மாறி வரும் இலங்­கையின் இன்­றைய அர­சியல் களம் குறித்த கேள்வி – பதில் வடி­வி­லான ஒரு பார்வை.

அர­சாங்­கத்­துக்கு எதி­ரான கோல்பேஸ் திடல் போராட்டக் களத்­துக்கு ‘அற­கல பூமிய’ என்று பெய­ரிட்­டி­ருக்­கி­றார்கள். அதில் ஏதா­வது விசேஷம் இருக்­கி­றதா?
சிங்­கள மொழியில் ஒரு போராட்­டத்தைக் குறிப்­ப­தற்கு ‘சட்­டன’ மற்றும் ‘அற­க­லய’ என இரண்டு சொற்கள் பொது­வாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஆனால், இந்த இரண்­டுக்கும் இடையில் ஒரு நுட்­ப­மான வித்­தி­யா­ச­மி­ருக்­கி­றது. 1930 களின் பின்னர் லங்கா சம­ச­மாஜக் கட்சி போன்ற இட­து­சாரிக் கட்­சிகள் பிர­பல்­யப்­ப­டுத்­திய ‘அற­க­லய’ என்ற சொல் நிரந்­தர இயல்­பி­லான ஒரு போராட்­டத்தைக் குறிக்கும் விதத்தில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது (உதா­ரணம்: சத்­தி­யத்­துக்கும், அசத்­தி­யத்­துக்கும் இடை­யி­லான போராட்டம்).

குறிப்­பாக 2010 இன் பின்னர் இலங்கை அர­சியல் சமூ­கத்தில் (Polity) பாரி­ய­ள­வி­லான ஊழல், முறை­கே­டுகள், இனத் துவேஷம், மத வெறி என்­பன ஆழ­மாக வேரூன்­றி­யி­ருக்­கின்­றன. ‘எங்கள் மீது எவரும் கை வைக்க முடி­யாது’ என்ற ஆண­வத்தில் ஆளும் கட்சி அர­சி­யல்­வா­தி­களும், மகா சங்­கத்­தி­னரின் ஒரு பிரி­வி­னரும் இலங்­கையில் அண்­மைய வரு­டங்­களில் நிகழ்த்தி வந்­தி­ருக்கும் அரா­ஜகச் செயல்கள் நாட்டில் சட்டம், ஒழுங்கு முழு­மை­யாக சீர்­கு­லைந்­தி­ருப்­ப­தற்­கான அத்­தாட்­சிகள்.

பல சந்­தர்ப்­பங்­களில் ஆள் பார்த்து, இடம் பார்த்து சட்டம் அமுல் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. ‘எம்மை யாரும் தண்­டிக்க முடி­யாது‘ என்ற எண்­ணத்தில் பல தரப்­புக்கள் பகி­ரங்­க­மாகக் குற்றச் செயல்­களை நிகழ்த்தும் வழக்கம் (Immunity) நாட்டில் வேரூன்றி வரு­கி­றது. கடந்த மே 9 ஆம் திகதி பொல்­லு­க­ளு­டனும், ஆயு­தங்­க­ளு­டனும் கோல்பேஸ் திட­லுக்குள் பிர­வே­சித்த நபர்கள் இந்த எண்­ணத்­தி­னா­லேயே தூண்­டப்­பட்­டி­ருந்­தார்கள். ஒரு ஜன­நா­யக நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் இவை மிகவும் ஆபத்­தான போக்­குகள்.

இது­வரை காலமும் நாங்கள் பழக்­கப்­பட்­டி­ருக்கும் சம்­பி­ர­தா­ய­மான அர­சாங்கக் கட்சி – எதிர்க்­கட்சி அர­சியல் மூலம் இத்­த­கைய ஜன­நா­யக விரோதப் போக்­கு­களை முடி­வுக்குக் கொண்டு வர முடி­யாது என்­பது ‘அற­க­லய‘ செயற்­பாட்­டா­ளர்­களின் வாதம். ஒட்­டு­மொத்த கட்­ட­மைப்பு மாற்­ற­மொன்­றுக்­கூ­டாக மட்­டுமே அதனை சாதித்துக் கொள்ள முடியும் என அவர்கள் கரு­து­கி­றார்கள். அதற்­கென பல முனை­க­ளிலும் தொட­ரான பல போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

வெறு­மனே ராஜ­பக்­ச­ாக்களை தேர்­தலில் தோற்­க­டித்து, மற்­றொரு கட்­சியின் கையில் ஆட்­சியை கைய­ளிப்­பதன் மூலம் மக்­க­ளுக்கு எந்தப் பிர­யோ­ச­னமும் கிடைக்கப் போவ­தில்லை. பழைய திருட்டுக் கும்­பலின் இடத்தில் ஒரு புதிய திருட்டுக் கும்பல் வந்து உட்­கார்ந்து விடும். கடந்த 74 வருட கால சரித்­திரம் மீண்டும் மீண்டும் இத­னையே நிரூ­பித்துக் காட்­டி­யி­ருக்­கி­றது என்­கி­றார்கள் அவர்கள்.

ராஜ­பக்­சா­க்களை விரட்­டி­ய­டிப்­ப­துடன் நின்று விடாமல், இனிமேல் இலங்கை அர­சி­யலில் அத்­த­கைய தீய சக்­திகள் தலை தூக்­கு­வ­தற்­கான வாய்ப்பை அறவே இல்­லா­தொ­ழிக்க வேண்டும்; அந்தக் குறிக்­கோளை இலக்­காகக் கொண்டு இலங்­கை­யர்கள் அனை­வரும் கூட்­டாக முன்­னெ­டுக்க வேண்­டிய தொடர் போராட்­டங்­க­ளையே அவர்கள் ‘அற­க­லய’ எனக் குறிப்­பி­டு­கி­றார்கள்.

உண்­மையில், இந்த ‘அற­க­ல­யவை‘ பின்­னா­லி­ருந்து இயக்­கு­ப­வர்கள் யார்?
இதன் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் யார்? ஏதா­வது மறை­க­ரங்கள் இங்கு செயற்­பட்டு வரு­கின்­ற­னவா என்­பது போன்ற கேள்­விகள் இப்­போ­தைக்கு முக்­கி­ய­மில்லை. ஒன்றை மட்டும் சொல்­லலாம். எந்­த­வொரு மக்கள் எழுச்­சி­யையும் சரி­யான திசையில் நெறிப்­ப­டுத்திச் செல்­வ­தற்கும், அதற்­கான முன்­னு­ரி­மை­களை வகுத்துக் கொள்­வ­தற்கும் ஒரு குழு இருந்து வரு­வது அவ­சியம். அந்தப் பணியை ஒரு சில சிறிய கட்­சி­களும், சமூக செயற்­பாட்­டா­ளர்கள் சிலரும் முன்­னெ­டுப்­ப­தாகத் தெரி­கி­றது. அவர்கள் இப்­பொ­ழுது ‘நாங்கள் இன்­னின்ன கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள்‘ என்று சொல்லிக் கொண்டால் அதனை எதி­ரிகள் தமக்குச் சாத­க­மான விதத்தில் பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும். இன்­னொரு விதத்தில் இந்தப் போராட்­டத்­துக்கு அனைத்துக் கட்­சி­களைச் சேர்ந்­த­வர்­களும் ஆத­ர­வ­ளித்து வரு­கி­றார்கள். அந்த நிலையில், அதனை ‘கட்சி சாரா­தது‘ என்று சொல்லிக் கொள்­வதில் எந்தத் தவ­று­மில்லை.

இத்­த­கைய ஒரு போராட்­டத்தின் மூலம் ராஜ­பக்ச குடும்­பத்தை இலங்கை அர­சி­ய­லி­லி­ருந்து முற்­றாக அகற்ற முடி­யுமா?
ராஜ­பக்­சாக்­களை வீழ்த்­து­வதில் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்கும் முதன்­மை­யான சவால், சாதா­ரண சிங்­கள மக்­க­ளுக்கு மத்­தியில் ஆழ­மாக வேரூன்­றி­யி­ருக்கும் ராஜ­பக்ச திரு­வுரு (Rajapakse Cult) வழி­பாட்டை தகர்த்­தெ­றி­வது எப்­படி என்­பதை தெரிந்து கொள்­வது. அது ஒரு சாதா­ரண காரி­ய­மல்ல. சமூ­க­வியல் மற்றும் மானு­ட­வியல் போன்ற துறை­களில் ‘Collective Memory’ என ஒரு சொல் புழக்­கத்தில் இருக்­கி­றது. அதா­வது, குறிப்­பிட்ட ஒரு சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் கடந்த காலத்தில் தாம் சந்­திக்க நேரிட்ட ஒரு பெரும் துயர நிகழ்வை அல்­லது பேர­திர்ச்­சியை கூட்­டாக நினைவில் வைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்த நினைவு தொடர்ந்து அவர்­களை அலைக்­க­ழித்து வரு­வ­துடன், அவர்கள் எடுக்கும் அனைத்து முக்­கி­ய­மான முடி­வுகள் மீதும் அது செல்­வாக்குச் செலுத்­து­கின்­றது என்று கரு­தப்­ப­டு­கி­றது.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் சிங்­க­ளவர், தமிழர் மற்றும் முஸ்­லிம்கள் ஆகிய மூன்று சமூ­கத்­தி­னரும் இறந்த காலம் தொடர்­பான கசப்­பான, துய­ரார்ந்த அனு­ப­வங்­க­ளுடன் கூடிய கூட்டு நினை­வு­களை சுமந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். உதா­ரணம் 2009 மே முள்­ளி­வாய்க்கால் சமர். அது தமி­ழர்­க­ளி­னதும், சிங்­க­ள­வர்­க­ளி­னதும் கூட்டு உள­வி­யலில் நேர்­மா­றான சித்­தி­ரங்­களை ஊன்றச் செய்­தி­ருக்­கி­றது. பிர­பா­க­ரனின் மர­ணத்­தையும் உள்­ளிட்ட விதத்தில் விடு­தலைப் புலிகள் முற்­றாக அழிக்­கப்­பட்ட செயலை ஒரு மாபெரும் துயர நிகழ்­வாக தமி­ழர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் நினைவில் வைத்­தி­ருக்­கி­றார்கள்.

சிங்­கள மக்கள் அதற்கு நேர் மாறான விதத்தில் தாம் வாழ்­நாளில் சாதித்த மிகப் பெரிய வெற்றி ஒன்­றாக அதனை கரு­தி­ய­துடன், அந்த வெற்­றியை ஈட்டித் தந்த ராஜ­பக்­ச­ாக்களை, எதி­ரி­க­ளி­ட­மி­ருந்து சிங்­கள இனத்­துக்கு விடு­தலை பெற்றுத் தந்த கட­வு­ளர்­க­ளாக பார்க்கத் தொடங்­கி­னார்கள். ஏனென்றால், 1985 அநு­ரா­த­புரம் படு­கொ­லைகள் தொடக்கம் இறு­தி­யாக 2009 மார்ச் மாதம் அக்­கு­ரஸ்­ஸயில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­குதல் வரையில் தென்­னி­லங்­கையில் நிகழ்த்­தப்­பட்ட கொலைகள் எடுத்து வந்த அதிர்ச்சி மற்றும் அந்தக் கால கட்டம் நெடு­கிலும் (குறிப்­பாக சிங்­கள) மக்கள் அனு­ப­வித்து வந்த மரண பயம் என்­பன அவர்­க­ளது மனதில் உறைந்து போயுள்­ளன.

2010 இன் பின்னர் இடம் பெற்ற அனைத்து தேர்­தல்­க­ளிலும் சிங்­கள மக்கள் ராஜ­பக்­சாக்­க­ளுக்கு வழங்­கிய அமோக ஆத­ரவை இந்தப் பின்­பு­லத்­தி­லேயே புரிந்து கொள்ள வேண்டும். மஹிந்த ராஜ­பக்ச தோல்­வி­ய­டைந்த 2015 ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் கூட சிங்­கள வாக்கு வங்­கியில் குறிப்­பிட்டுச் சொல்­லும்­ப­டி­யான ஒரு நகர்வு ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. கிட்­டத்­தட்ட 85%– -90 % ஆன சிறு­பான்மைச் சமூக வாக்­குகள் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அளிக்­கப்­பட்­டி­ருந்த கார­ணத்­தி­னா­லேயே சிறு வாக்கு எண்­ணிக்­கையில் அவர் தோல்­வி­ய­டைந்­தி­ருந்தார் (உதா­ரணம்: மூதூர் தொகுதி தேர்தல் முடி­வுகள் – மைத்­தி­ரி­பால சிறி­சேன 57, 532 வாக்­குகள்; மஹிந்த ராஜ­பக்ச 7,132 வாக்­குகள்).

2018 உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வுகள் ராஜ­பக்ச பிம்பம் சிங்­கள மக்­களின் உள்­ளங்­களில் எந்த அள­வுக்கு வலு­வான விதத்தில் வேரூன்­றி­யி­ருந்­தது என்­பதை தெளி­வாக எடுத்துக் காட்­டின. 2019 ஏப்ரல் ஈஸ்டர் தாக்­கு­தல்கள், முன்­ன­ரிலும் பார்க்க வலு­வான விதத்­தி­லான ராஜ­பக்­சாக்களின் இரண்­டா­வது எழுச்­சிக்கு வித்­திட்­டன.

ராஜ­பக்­சாக்கள் தொடர்­பாக சிங்­கள மக்கள் மத்­தியில் இவ்­விதம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டி­ருந்த புனித பிம்பம் தகர்க்கப்­பட்­டது எப்­படி?
‘கோட்டா கோ ஹோம்’ சுலோகம் திடீ­ரென முன்­வைக்­கப்­பட்­டாலும் கூட இத்­த­கைய அதி­ர­டி­யான ஒரு கோஷத்­திற்கு மக்­களின் ஆத­ரவை திரட்டிக்கொள்ளும் நோக்கில் சிங்­கள சமூக ஊட­கங்கள் கடந்த இரண்டு வருட கால­மாக அவர்­களை உள­வியல் ரீதியில் தயார்­ப­டுத்தி வந்­துள்­ளன.

கோட்­டா­பய ராஜ­பக்ச பாது­காப்புச் செய­லா­ள­ராக இருந்த காலத்தில் அவரை வைத்து வரை­யப்­படும் கார்ட்டூன் ஒன்றை பிர­சு­ரிப்­ப­தற்குக் கூட கொழும்பின் முன்­னணி சிங்­கள, ஆங்­கில நாளி­தழ்கள் தயக்கம் காட்டி வந்­தன என்­பது எல்­லோரும் அறிந்த செய்தி. இலங்கை அர­சியல் சமூ­கத்தில் ராஜ­பக்ச குடும்பம் எவரும் கை வைக்க முடி­யாத ஒரு ‘புனிதப் பசு­வாக’ (Sacred Cow) கரு­தப்­பட்டு வந்­தது. அந்தப் பயத்தைப் போக்கி, ராஜ­பக்ச புனித பிம்­பத்தை உடைத்து நொறுக்­கி­யதில் சிங்­கள சமூக ஊடக வெளியில் நட்­சத்­திர அந்­தஸ்தை ஈட்டிக் கொண்­டி­ருக்கும் நான்கு ஆண்­களும், ஓர் இளம் பெண்ணும் வகித்து வந்­தி­ருக்கும் பாத்­திரம் மிக மிக முக்­கி­ய­மா­னது.

உபுல் சாந்த சன்­னஸ்­கல, தர்­ஷன ஹந்­துன்­கொட, அபி­ஷேகா பெர்­னான்டோ, சேபால் அம­ர­சிங்க மற்றும் சுதத்த தில­க­சிறி ஆகியோர் (பெரும் எண்­ணிக்­கை­யி­லான பார்­வை­யா­ளர்­களைக் கொண்­டி­ருக்கும்) தமது யூ டியூப் சேனல்­க­ளுக்கு ஊடாக இவ்­விதம் முன்­னெ­டுத்த தீவிர ராஜ­பக்ச எதிர்ப்பு பிர­சாரம், இலங்­கையில் அண்மைக் காலத்தில் சமூக ஊட­கங்­க­ளுக்கு ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்ட மிகவும் வெற்­றி­க­ர­மான பிர­சார இயக்கம் ஒன்­றுக்­கான சிறந்த உதா­ரணம்.

ராஜ­பக்­சாக்கள் எந்த மரி­யா­தைக்கும் லாயக்­கற்ற ஒரு ‘திருட்டுக் கும்பல்’ (பட்ட ஹொரு) என்ற கோஷத்தை அவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே சீராக முன்­வைத்து வந்­தார்கள். ஒவ்­வொரு நிகழ்ச்­சியின் போதும் பல தட­வைகள் ‘பட்ட ஹொரு‘ என்ற வார்த்தை உச்­ச­ரிக்­கப்­பட்­டது.

ராஜ­பக்­சாக்களை அம்­ப­லப்­ப­டுத்தும் அதே வேளையில், அவர்­க­ளு­டைய முதன்மை ஆத­ரவுத் தளத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்த அர­சி­யல்­வா­திகள், புத்த பிக்­குகள் அத்­துடன் ஹிரு, தெரண, மவ்­பிம போன்ற ஊட­கங்­களின் முத­லா­ளிகள் போன்­ற­வர்கள் மீதும் அவர்கள் மிகக் கடு­மை­யான தாக்­கு­தல்­களை தொடுத்து, அந்த நபர்­களின் மறு­பக்­கத்தை மக்­க­ளுக்கு எடுத்து காட்­டி­னார்கள்.

குறிப்­பாக, இன்­றைய சிங்­கள சமூ­கத்தில் ஒரு ‘Iconoclast’ ஆக (புனி­தங்­களை குலைப்­ப­வ­ராக) செயற்­பட்டு வரும் கோடீஸ்­வர டியூஷன் வாத்­தி­யா­ரான உபுல் சாந்த சன்­னஸ்­கல நன்கு பிர­பல்­ய­மான தனது யூ டியூப் சேனலில் ஞான­சார தேரர், அத்­து­ர­லியே ரதன தேரர் ஆகி­யோ­ரையும் உள்­ளிட்ட அரச ஆத­ரவு பிக்­குகள் மீது முன் வைத்து வந்த கடு­மை­யான விமர்­ச­னங்கள் சிங்­கள மக்கள் மத்­தியில் அவர்கள் குறித்து நிலவி வந்த மாயை­களை களை­வ­தற்கு பெரிதும் பங்­க­ளிப்புச் செய்­தி­ருந்­தன.

‘இந்தப் பிக்­கு­களை நாங்கள் துளியும் கண்­ணி­யப்­ப­டுத்தத் தேவை­யில்லை‘ என்ற செய்­தியை மீண்டும் மீண்டும் அவர் சிங்­கள மக்­க­ளுக்கு வழங்கிக் கொண்­டி­ருந்தார். ‘பிக்ஷ பரிச்­சே­தய‘ என்ற நூலிலும் (2012) இலங்கைச் சமூ­கத்தில் புத்த பிக்­குகள் வகித்து வரும் பாத்­திரம் குறித்த பல சர்ச்­சைக்­கு­ரிய கருத்­துக்­களை அவர் பதிவு செய்­தி­ருக்­கிறார்.
இந்த ஐவரும், சிங்­கள சமூக ஊட­கங்­களில் முனைப்­புடன் செயற்­பட்டு வரும் இன்னும் பல தீவிர ராஜ­பக்ச எதிர்ப்­பா­ளர்­களும் தொடர்ச்­சி­யாக முன்­வைத்து வந்த வாதங்­களின் சாராம்­சத்தை பின்­வரும் விதத்தில் தொகுத்துக் கூறலாம் :

‘பௌத்த மதத்­திற்கும் இந்த ஆட்­க­ளுக்­கு­மி­டையில் துளியும் சம்­பந்­த­மில்லை. மத வெறியைத் தூண்டி, மக்­களை மடை­யர்­க­ளாக்கி, தமது கஜா­னாவை நிரப்பிக் கொள்ளும் படு அயோக்­கி­யர்கள் இவர்கள்.‘

வர­லாறு காணாத விலை­வாசி உயர்வு மற்றும் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் கடு­மை­யான தட்­டுப்­பாடு என்­பன (குறிப்­பாக சிங்­கள) மக்­க­ளுக்கு மத்­தியில் உரு­வாக்­கிய விரக்­தியும், ஆவே­சமும் இறு­தியில் இந்த வெடிப்பை துரி­தப்­ப­டுத்­தின. இந்தப் பின்­ன­ணியில், ‘கோட்டா கோ ஹோம்‘ போன்ற தீவி­ர­மான ஒரு கோஷத்­திற்கு ஆத­ர­வ­ளிக்கும் நிலைக்கு சிங்­கள மக்கள் தள்­ளப்­பட்­டார்கள்.

இந்த ‘அற­க­ல­யவை‘ ஒரு பெரும் வர­லாற்றுத் திருப்பம் என்று வர்­ணிக்க முடி­யுமா?
நிச்­ச­ய­மாக அப்­படி வர்­ணிக்­கலாம். சுதந்­திர இலங்கை அதன் 74 வருட கால வர­லாற்றில் முதல் தட­வை­யாக இப்­ப­டி­யான ஒரு மக்கள் எழுச்­சியை சந்­திக்­கி­றது. ‘நமது நாட்டில் இப்­ப­டி­யான ஒரு மாற்றம் நிகழ்­வ­தற்கு அறவே சாத்­தி­ய­மில்லை’ என்றே கடந்த ஏப்ரல் மாதம் வரையில் பலரும் நினைத்துக் கொண்­டி­ருந்­தார்கள்.

இதற்கு முன்னர் 1987 -–1989 காலப் பிரிவில் (அப்­போது தலை­ம­றை­வாக செயற்­பட்ட) JVP ஜனா­தி­பதி ஜே ஆர் ஜெய­வர்­த­னவை இலக்கு வைத்து இதே மாதி­ரியான ஒரு அற­க­ல­யவை நடத்­தி­யது. அவர்கள் அப்­போது முன்­வைத்த சுலோகம் ‘ஜே ஆர் மரமு‘ (ஜே ஆரை தீர்த்துக் கட்­டுவோம்) என்­பது. இறு­தியில், அன்­றைய ஜேவிபி இன் முக்­கிய தலை­வர்கள் அனை­வரும் கொல்­லப்­ப­டு­வ­துடன் இணைந்த விதத்தில் அது முடி­வுக்கு வந்­தது. ஜே. ஆர். தனது இரண்­டா­வது பதவிக் காலத்தை நிறைவு செய்து, 1988 டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றுச் சென்றார்.

ஆனால், இந்தத் தடவை நாட்டு நில­வரம் ஒரு பெரும் மக்கள் எழுச்­சிக்கு உசி­த­மான ஒரு சூழ்­நி­லையை உரு­வாக்­கி­யி­ருக்கும் கார­ணத்­தினால் இந்த ‘அற­க­லய‘ முக்­கி­ய­மான பல சாத­னை­களை நிகழ்த்­தி­யி­ருக்­கி­றது.

அது ஆரம்­பிக்­கப்­பட்டு ஐம்­பது நாட்­க­ளுக்­குள்­ளேயே ராஜ­பக்ச குடும்­பத்தின் முக்­கிய மூன்று தூண்­களில் இரண்டு தூண்கள் சரிந்­தி­ருக்­கின்­றன. 21 ஆவது யாப்புத் திருத்தம் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு முன்­ன­ரேயே ஜனா­தி­பதி பெரு­ம­ள­வுக்கு பல­வீ­ன­ம­டைந்­தி­ருக்­கிறார். அத்­துடன், ஊழல் மற்றும் வன்­முறை அர­சியல் என்­ப­வற்­றுக்குப் பெயர் போன பல முன்னாள் அமைச்­சர்கள் காணாமல் போயி­ருக்­கி­றார்கள்.

சட்­டத்தை தமது கைகளில் எடுத்து, மத வெறியைத் தூண்டி, சிறு­பான்மைச் சமூ­கங்­களை மிரட்­டு­வதை தமது முழு நேரத் தொழி­லாகக் கொண்­டி­ருந்த ஒரு சில முன்­னணி பிக்­கு­கள் உள்­ளிட்ட பலர் பதுங்கி வாழ வேண்­டிய நிர்ப்­பந்தம்.

மற்­றொரு முக்­கி­ய­மான சாதனை ‘அற­க­லய‘ சாதா­ரண பிர­ஜை­க­ளிடம் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் அதீத நம்­பிக்­கையும், துணிச்­சலும்.

அடி­மட்ட இலங்கைப் பிர­ஜைகள் மத்­தியில் அதி­கார பீடம் குறித்து நிலவி வந்த மரி­யாதை கலந்த அச்­சத்தை அது போக்­கி­யி­ருக்­கி­றது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்­களில் நாட்டில் இடம்­பெற்ற பல்­வேறு சம்­ப­வங்­களின் போது பொது மக்கள் – குறிப்­பாக இளை­ஞர்­களும், பெண்­களும் – பொலிஸ், இரா­ணுவம் போன்ற பாது­காப்பு தரப்­பி­னரை எதிர்­கொண்ட விதம், அவர்­க­ளு­டைய உடல் மொழி மற்றும் அவர்கள் வெளிப்­ப­டுத்திக் காட்­டிய தார்­மீக கோபம் ஆகிய அனைத்­துமே அண்மைக் கால இலங்கை வர­லாற்றில் முன்­னு­தா­ர­ணங்கள் இல்­லாத நிகழ்­வுகள்.

முதல் தட­வை­யாக ஆட்­சி­யா­ளர்­களும், அதி­கார வர்க்­கத்­தி­னரும் மக்கள் சக்­திக்கு முன்னால் மண்­டி­யிட்­டி­ருக்­கி­றார்கள். கடந்த பத்­தாண்டு காலம் (அரசின் மறை­முக அனு­ச­ர­ணை­யுடன்) சிங்­கள வல­து­சா­ரி­களும், மதத் தீவி­ர­வா­தி­களும் அப­க­ரித்து வைத்­தி­ருந்த பொது வெளி இப்­பொ­ழுது சாதா­ரண மக்­களின் கைக­ளுக்கு வந்­தி­ருக்­கி­றது.

2019 இன் பின்னர் வீரி­ய­மாக முன்­னெ­டுக்­கப்­பட்ட கோட்­டா­பய ராஜ­பக்ச செயல்­திட்­டத்தின் அத்­தி­வாரத் தூண்கள் ஒவ்­வொன்­றையும் இந்த யூ டியூப் பரப்­பு­ரை­யா­ளர்கள் ஆட்டம் காணச் செய்­தார்கள். கோல்பேஸ் போரா­ளிகள் இப்­பொ­ழுது அவற்றை முற்­றிலும் தகர்த்­தெ­றிந்­தி­ருக்­கி­றார்கள். கோட்­டா­பய ராஜ­பக்ச இன்­னமும் (பெய­ர­ளவு) ஜனா­தி­ப­தி­யாக இருந்து வந்­தாலும் கூட, இலங்கை அர­சி­யலில் ராஜ­பக்ச யுகம் அநே­க­மாக முடி­வுக்கு வந்­தி­ருக்­கின்­றது.

”ஆட்­சி­யா­ளர்­களே! இந்தத் தடவை நீங்கள் ஒரு பிழை­யான தலை­மு­றை­யி­ன­ருடன் மோது­வ­தற்கு முன்­வந்­தி­ருக்­கி­றீர்கள்…” என்ற ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களின் பதாகை வாசகம் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு மட்­டு­மன்றி எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கும் ஒரு வலு­வான செய்­தியை விடுக்­கி­றது. கிட்­டத்­தட்ட 66 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அஹிம்சை வழியில் சத்­தி­யாக்­கி­ர­கத்தில் ஈடு­பட்­டி­ருந்த தமி­ழர்கள் மீது தாக்­குதல் தொடுத்து எந்த கோல்பேஸ் திடலில் இலங்­கையின் வன்­முறை அர­சியல் கலா­சாரம் துவக்கி வைக்­கப்­பட்­டதோ அதே கோல்பேஸ் திடலில் அது கடந்த மே 9 ஆம் திகதி அது முடித்து வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
மக்கள் எழுச்­சியின் கூட்டு வலி­மையைப் பார்த்து முதல் தட­வை­யாக பொலி­சாரும், இரா­ணு­வத்­தி­னரும் பயப்­படத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள். உய­ர­தி­கா­ரிகள் பொது­மக்­க­ளுக்கு பொறுப்புக் கூற வேண்­டிய தமது கட­மையை உணர்ந்த நிலையில், இப்­பொ­ழுது உஷார் அடைந்­தி­ருக்­கி­றார்கள். சாதா­ரண பொது­மக்­களும் கூட அதி­கா­ரி­க­ளிடம் விரல் நீட்டி, கேள்­வி­களைக் கேட்கக் கூடிய துணிச்­சலைப் பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

கோட்­டா­பய ராஜ­பக்­சவின் முதன்மை ஆத­ரவுத் தள­மாக இருந்து வரும் சிங்­கள பௌத்த மக்­க­ளுக்கு மத்­தியில் இப்­பொ­ழுது ஒரு மன­மாற்றம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக கரு­த­லாமா?
ஆம். அர­சாங்­கத்தின் வெறித்­த­ன­மான சிறு­பான்மை எதிர்ப்பு அர­சியல் நகர்­வு­களை ஆசீர்­வ­தித்து, அவற்றை மௌன­மாக ரசித்துக் கொண்­டி­ருந்த சிங்­கள சமூகம் இப்­பொ­ழுது தனது கண்­ணோட்­டத்தை முழு­மை­யாக மாற்றிக் கொண்­டி­ருக்­கி­றது.

மத்­திய கிழக்கு நாடுகள் உள்­ளிட்ட இலங்­கையின் பாரம்­ப­ரிய நட்பு நாடுகள் இலங்­கை­யி­லி­ருந்து ஒதுங்கிக் கொள்ளும் நிலையை அவர்கள் கவ­லை­யுடன் நோக்­கு­கி­றார்கள். நமது நாடு சர்­வ­தேச ரீதியில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட முடியும் என்ற பேரச்சம் (குறிப்­பாக சிங்­கள) மக்கள் மத்­தியில் மேலோங்­கி­யி­ருக்­கின்­றது. ‘சர்­வ­தேச சமூ­கத்தைப் பொருட்­ப­டுத்­தவே தேவை­யில்லை‘ என்ற விதத்தில் உரக்கக் கோஷ­மிட்டு, தம்மை உஷார் மடை­யர்­க­ளாக வைத்­தி­ருந்த விமல் வீர­வன்ச போன்­ற­வர்கள் மீதும் சிங்­கள மக்கள் கடும் வெறுப்பை உமிழ்­கி­றார்கள்.

டாக்டர் ஷாபி தொடர்­பான புர­ளியைக் கிளப்பி, சிங்­கள ஊட­கங்­களின் பக்­க­ப­லத்­துடன் அதனை முன்­னெ­டுத்துச் சென்ற நபர்­க­ளுக்கும் சிங்­கள மக்கள் கடும் வசை சொற்­க­ளுடன் சாப­மிட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஊழல் அர­சி­யல்­வா­திகள், சட்­டத்தை தமது கைகளில் எடுக்கும் அர­சியல் அடி­யாட்கள், பௌத்த மத விழு­மி­யங்­களை இழி­வு­ப­டுத்தும் பிக்­குகள், கட­மையைச் செய்யத் தவறும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள், அரச உய­ர­தி­கா­ரிகள் ஆகிய அனை­வ­ருக்கும் மக்கள் வலு­வான ஒரு செய்­தியை விடுத்­தி­ருக்­கி­றார்கள்.

ஆனால், கோட்­டா­பய ராஜ­பக்­சவை இன்­னமும் வீட்­டுக்கு அனுப்ப முடி­ய­வில்­லையே?
கோட்­டா­பய ராஜ­பக்ச இன்னும் பத­வியில் ஒட்டிக் கொண்­டி­ருந்­தாலும் கூட, இன்­றைய கோட்­டா­பய 2019 இல் ருவன்­வெ­லி­சா­யவில் நாட்டு மக்­க­ளுக்கு உரை நிகழ்த்­திய அந்த கோட்­டா­பய ராஜ­பக்ச அல்ல என்­ப­தையும், எதிர்ப்­புக்­களை துச்­ச­மாக மதித்து ‘ஒரே நாடு – ஒரே சட்டம்‘ செய­ல­ணிக்கு ஞான­சார தேரரை தலை­வ­ராக நிய­மனம் செய்த அந்த கோட்­டா­பய ராஜ­பக்ச அல்ல என்ற விட­யத்­தையும் இங்கு முக்­கி­ய­மாக குறிப்­பிட வேண்டும்.

கோட்­டா­பய ராஜ­பக்ச என்ற தனி மனி­த­னுடன் எவ­ருக்கும் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை. ஆட்சித் தலைவர் என்ற முறையில் அவர் முன்­னெ­டுத்த பல நட­வ­டிக்­கைகள் நாட்டு நல­னுக்கு பெரு­ம­ள­வுக்கு குந்­தகம் விளை­விக்கக் கூடி­யவை என்ற அடிப்­ப­டை­யி­லேயே அவரை விரட்­டி­ய­டிக்க வேண்­டு­மென்ற கோஷம் முன்­வைக்­கப்­பட்­டது. இப்­பொ­ழுது அந்த செயல்­திட்டம் பெரு­ம­ள­வுக்கு விலக்கிக் கொள்­ளப்­பட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

அவரை இந்த அள­வுக்குப் பல­வீ­னப்­ப­டுத்­தி­யி­ருக்கும் சாத­னையை, பதவி விலகச் செய்­வ­தற்கு இணை­யான ஒரு சாத­னை­யா­கவே நோக்க வேண்டும். அத்­தோடு ஒட்­டு­மொத்த ராஜ­பக்ச குடும்­பமும் முடக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதன் பின்னர் வரக் கூடிய தேர்தல் ஒன்றில் மூன்றாம் தலை­முறை ராஜ­பக்ச ஒருவர் வெற்­றி­யீட்­டி­னாலும் கூட, தனது குடும்­பத்தின் பெயரைப் பயன்­ப­டுத்தி, ஒரு பெரும் அர­சியல் சக்­தி­யாக அவர் உரு­வெ­டுக்க முடி­யாது.

இனிமேல் இலங்­கையில் ஒரு­போதும் இனத் துவேஷம் மற்றும் மத­வெறி என்­பன தலைதூக்க முடி­யாது என்று சொல்­ல­லாமா?
இல்லை; அப்­படிச் சொல்ல முடி­யாது. இன­வாத, மத­வாத சிந்­தனை கொண்ட நபர்­களும், மற்­றைய இனத்­த­வர்கள் மதத்­த­வர்கள் மீது காழ்ப்­பு­ணர்ச்சி கொண்­டி­ருக்கும் நபர்­களும் பெரும்­பான்மைச் சமூ­கத்­திலும், அதே போல சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளிலும் இருந்து வரு­கி­றார்கள்; இனி­மேலும் அப்­படி இருந்து வரு­வார்கள்.

ஆனால், 2012 இன் பின்னர் இலங்­கையில் தோன்­றிய மிக ஆபத்­தான போக்கு நாட்டின் மைய நீரோட்ட அர­சி­யலில் (Mainstream Politics) இந்­த­கைய நபர்கள் ஒரு பெரும் சக்­தி­யாக எழுச்­சி­ய­டைந்­த­மை­யாகும். சிங்­கள ஊட­கங்­களும் அதற்கு கணி­ச­மான அள­வி­லான பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருந்­தன. ஆனால், ‘அற­க­லய‘ அந்த நிலை­மையை தலை­கீ­ழாக மாற்­றி­ய­மைத்­தி­ருப்­பதை தெளி­வாக அவ­தா­னிக்க முடி­கி­றது.

இறு­தி­யாக, கோல்பேஸ் போராட்டக் களம் இலங்­கையின் சிறு­பான்மைச் சமூ­கங்­க­ளுக்கு விடுக்கும் செய்தி என்ன?
‘இனிமேல் இலங்­கையில் இன அல்­லது மத லேபிள்­களை ஒட்டிக் கொண்ட அர­சியல் கட்­சிகள் இருந்து வரக் கூடாது‘ என்ற கோஷமும், ‘அர­சி­ய­லி­லி­ருந்து மதத்தைத் தூரப்­ப­டுத்தி, விலக்கி வைக்க வேண்டும்‘ என்ற கோஷமும் ‘அற­க­லய‘ நெடு­கிலும் வலு­வாக ஒலித்து வந்­ததை பார்த்தோம். அது தொடர்­பாக சிங்­கள மக்­க­ளுக்கு மத்­தியில் பர­வ­லான ஒரு கருத்­தொற்­றுமை ஏற்­பட்டு வரு­வ­த­னையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. பொது­பல சேனா போன்ற தீவி­ர­வாத இயக்­கங்கள் முழு நாட்­டிற்கும் ஒரு சாபக்­கே­டாக இருந்து வரு­கின்­றன என்ற விதத்­திலும் அவர்கள் சிந்­திக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

இலங்கைத் தமிழ் அர­சி­யலைப் பொறுத்­த­வ­ரையில் (தமிழ்­நாட்டைப் போலவே) மதம் ஒரு முதன்­மை­யான பாத்­தி­ரத்தை வகித்து வர­வில்லை. ஆனால், முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் நிலை வேறு. கிழக்­கிலும், வன்­னி­யிலும் முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் கணி­ச­மான அள­வி­லான வாக்கு வங்­கியைக் கொண்­டி­ருக்கும் SLMC மற்றும் ACMC போன்ற கட்­சிகள் இந்தப் பின்­ன­ணியில் ஒரு புதிய சவாலை எதிர்­கொண்டு வரு­கின்­றன. தென்­னி­லங்கை அர­சி­யலில் எழுச்சி கண்டு வரும் புதிய மாற்­றங்­க­ளுக்கு ஏற்ற விதத்தில் அனு­ச­ரித்துச் சென்று, இன, மத லேபிள்­களைக் களைந்து, தேசிய நீரோட்­டத்­துடன் எவ்­வாறு சுமு­க­மாக இணைந்து கொள்ள முடியும் என்­பது குறித்து ஆழ­மாக சிந்­தித்துப் பார்க்க வேண்­டிய தேவை அக்­கட்­சி­க­ளுக்கு இப்­பொ­ழுது ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அது தவிர, (இயக்­கங்­களின் அடிப்­ப­டையில் மிக மோச­மான விதத்தில் பிள­வுண்டு போயி­ருக்கும்) ஒட்­டு­மொத்த இலங்கை முஸ்லிம் சமூ­கமும் முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் கவ­னத்­தி­லெ­டுத்து, உட­ன­டி­யாக கையாள வேண்­டிய ஒரு சில முக்­கி­ய­மான பிரச்­சி­னைகள் இருந்து வரு­கின்­றன. குறிப்­பாக மத்­ர­சாக்­களை ஒழுங்­கு­மு­றைப்­ப­டுத்­துதல் மற்றும் காதி நீதி­மன்­றங்கள் தொடர்­பான சீர்­தி­ருத்­தங்கள் போன்ற (ஏற்­க­னவே சிங்­கள மதத் தீவி­ர­வா­திகள் கையி­லெ­டுத்­தி­ருக்கும்) விவ­கா­ரங்கள் தொடர்­பாக ஒரு கருத்­தொற்­றுமை உரு­வாக்­கப்­பட வேண்டும். அது ஓர் இல­கு­வான காரி­ய­மாக இருக்கப் போவ­தில்லை.

எனவே, அதற்­கென முஸ்லிம் சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்­களும், நிதா­ன­மாக சிந்­திக்கக் கூடிய புதிய தலை­முறை இளை­ஞர்­களும் (கோல்பேஸ் ‘அற­க­ல­ய­வுக்கு‘ இணை­யான விதத்­தி­லான) ஓர் ‘அற­க­ல­யவை‘ முஸ்லிம் சமூ­கத்­துக்குள் முன்­னெ­டுக்க வேண்­டிய தருணம் இப்­பொ­ழுது வந்­தி­ருக்­கின்­றது.

அடுத்து வர­வி­ருக்கும் தேர்­தல்­களின் போது இரு பிர­தான கட்­சி­களும், (மூன்­றா­வது அணி­யான) JVP யும் முன்­வைக்கப் போகும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் எவ்­வாறு இருக்கப் போகின்­றன?

“அனை­வ­ரையும் அர­வ­ணைத்துச் செல்லும், பொரு­ளா­தார வலிமை மிக்க, சுபீட்­ச­மான ஓர் இலங்கை” (An Inclusive, Economically Viable, Prosperous Sri Lanka) என்ற வாச­கமே எதிர்­கால தேர்­தல்­களில் அனைத்துக் கட்­சி­களும் மக்கள் முன்னால் வைக்கும் சுலோ­க­மாக இருந்து வருதல் வேண்டும்.

துரித பொரு­ளா­தார வளர்ச்சி, வெளி­நாட்டு முத­லீ­டு­களை அதி­க­ளவில் கவர்ந்­தி­ழுப்­ப­தற்­கான வழி­மு­றைகள், (அடுத்து வரும் ஐந்து வருட காலப் பிரிவில் அரச துறையில் எத்­த­கைய விரி­வாக்­கமும் சாத்­தி­ய­மில்­லாத நிலையில்) தனியார் துறையில் ஆயி­ரக்­க­ணக்­கான வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்க வேண்­டிய தேவை என்­ப­வற்­றுக்கே அநே­க­மாக எல்லா கட்­சி­களும் முன்­னு­ரிமை வழங்க வேண்­டி­யி­ருக்கும்.

எந்த ஒரு கட்­சியும் இன­வாத, மத­வாத அஜென்­டாக்­களை முன்­னெ­டுக்கக் கூடிய ஒரு சூழல் அநே­க­மாக நிலவி வர மாட்­டாது என்றே தோன்­று­கி­றது.

”அனை­வ­ரையும் அர­வ­ணைத்துச் செல்லும் சமூகம்” (Inclusive Society) என்ற மிக முக்­கி­ய­மான வார்த்­தையை வாய் தவ­றியும் கூட உச்­ச­ரிக்க மறுத்த, இலங்கை எதிர்­கொண்டு வரும் பூகோள – அர­சியல் யதார்த்­தங்­களை உதா­சீனம் செய்த கோட்­டா­பய ராஜ­பக்ச, சர்­வ­தேச ரீதியில் கைவி­டப்­பட்­டி­ருக்கும், கொந்­த­ளிப்­புக்கள் சூழ்ந்த தேச­மொன்றை இறு­தியில் தனது ‘Legacy‘ ஆக விட்டுச் செல்­ல­வி­ருக்­கிறார்.

அடுத்து வரும் வரு­டங்­களில் இலங்­கையின் ஆட்சித் தலை­வர்­க­ளாக வருவதற்கு கனவு கண்டு கொண்டிருக்கும் (சம்பிக ரணவக்கவையும் உள்ளிட்ட) அனைவரும் கோட்டாபய ராஜபக்சவின் பரிதாபகரமான வீழ்ச்சியிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான படிப்பினை அதுவாகவே இருந்து வரும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.