ஏ.ஆர்.ஏ.பரீல்
இவ்வருடம் இலங்கையர்களுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கான அனுமதியினை அரசாங்கம் வழங்கியதையடுத்து முஸ்லிம் சமூகம் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் ஹஜ் முகவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை ஹஜ் முகவர்கள் சங்கம் மற்றும் ஹஜ் உம்ரா முகவர்கள் சங்கம் ஆகிய இரு முகவர்கள் சங்கங்களும் இவ்வருட ஹஜ் பயண ஏற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையிலே அரசாங்கம் முஸ்லிம்களின் ஹஜ் கடமைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மை கருதி தாங்கள் இவ்வருடம் ஹஜ் பயண ஏற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என ஹஜ் முகவர்கள் ஏகமனதாக தீர்மானித்திருந்தனர். இது தொடர்பாக சவூதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலே இலங்கை மக்களின் ஹஜ் கடமையின் அவசியம் குறித்து சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரம நாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்தே அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 7 ஆம் திகதி பத்தரமுல்லையில் செத்சிரிபாயவில் அமைந்துள்ள புத்தசாசனம் மற்றும் கலாசார அமைச்சில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலில் புத்த சாசனம் மத மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க, சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், காதர் மஸ்தான், இஷாக் ரஹ்மான், முஷாரப் முதுநபீன், மர்ஜான் பளீல், அகில இலங்கை ஹஜ் முகவர்கள் சங்கம் மற்றும் ஹஜ், உம்ரா முகவர்கள் சங்கம் என்பனவற்றின் பிரதிநிதிகள், புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரன, மேலதிக செயலாளர் நாயனா நாதவிதாரன மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஹஜ் யாத்திரிகர்களுக்கு தலா 1500 டொலர்கள் வீதம் வெளிநாட்டிலிருந்து ஹஜ் முகவர் அல்லது ஹஜ் யாத்திரிகரால் வங்கியில் வைப்பிலிட வேண்டும் என்ற நிபந்தனை அமைச்சர் விதுர விக்கிரம நாயக்கவினால் விதிக்கப்பட்டது. அத்தோடு இலங்கைக்கு இவ்வருடம் கிடைக்கப்பெற்றுள்ள 1585 ஹஜ் கோட்டாவுக்கான யாத்திரிகர்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல் திணைக்களத்தில் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டவர்களிலிருந்து தெரிவு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு ஹஜ் யாத்திரிகர்கள் தாம் விரும்பிய ஹஜ் முகவர்கள் ஊடாக பயணத்தை மேற்கொள்ள முடியுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விடுமுறை தினங்களிலும் திணைக்களம் பணியில்
இவ்வருட ஹஜ் யாத்திரைக்காக சவூதி அரேபியா வழங்கியுள்ள 1585 கோட்டாவை முழுமையாகப் பூர்த்தி செய்து கொள்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சனி,ஞாயிறு மற்றும் நோன்மதி தினங்களில் முழு மூச்சாக இயங்கி வந்தது. திணைக்களத்தின் ஹஜ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இப் பணிகளை முன்னெடுத்தனர். அவர்கள் ஹஜ் யாத்திரைக்காக பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபா செலுத்தி பதிவு செய்து கொண்டுள்ள விண்ணப்பதாரிகளை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு ஹஜ் யாத்திரையை உறுதி செய்து கொள்வதில் தொடராக ஈடுபட்டனர்.
ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக 2020 ஆம் ஆண்டு வரை 4500 பேர் பதிவுக்கட்டணமாக தலா 25 ஆயிரம் ரூபாவை திணைக்களத்தில் செலுத்தி காத்திருக்கின்றனர். கடந்த இரு வருடங்கள் உலகில் பரவிய கொவிட் 19 வைரஸ் தொற்று நோய்காரணமாக இலங்கையருக்கு ஹஜ் யாத்திரைக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் ஹஜ் யாத்திரைக்காக 2022 இல் 120 பேர் பதிவுக்கட்டணம் செலுத்தி தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டவர்களிலிருந்தே யாத்திரிகர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு மில்லியன் யாத்திரிகர்களுக்கு அனுமதி
கடந்த காலங்களில் நிலவிய கொவிட் 19 தொற்று நோய் அச்சுறுத்தலை கருத்திற் கொண்டு இவ்வருட ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையை சவூதி அரேபிய ஹஜ், உம்ரா அமைச்சு ஒரு மில்லியனாக கட்டுப்படுத்தியுள்ளது. இதில் வெளிநாட்டு யாத்திரிகர்கள் 8 இலட்சத்து 50 ஆயிரம் பேரை அனுமதிக்கவுள்ளது. இதேவேளை யாத்திரிகர்களின் வயதெல்லையையும் 65 ஆக நிர்ணயித்துள்ளது. எனவே 65 வயதுக்கு மேற்பட்டோர் இவ்வருடம் ஹஜ் கடமைக்காக யாத்திரை மேற்கொள்ள முடியாது.
ஹஜ் கட்டணம்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமோ அரச ஹஜ் குழுவோ இவ்வருட ஹஜ் கட்டணத்தைத் தீர்மானிக்கவில்லை. கட்டணத்தை ஹஜ் முகவர்களே தாம் யாத்திரிகர்களுக்கு சவூதி அரேபியாவில் வழங்கவுள்ள தங்குமிட வசதி மற்றும் ஏனைய ஏற்பாடுகளை கருத்திற்கொண்டு தீர்மானித்தனர். இவ்வருட ஹஜ் கட்டணம் 20 –25 இலட்சங்களுக்கு உட்பட்டதாக இருக்கும் என ஹஜ் முகவர்கள் தெரிவித்தனர்.
பதிவு செய்யப்பட்டுள்ள
முகவர் நிலையங்கள்
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக 73 முகவர் நிலையங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 73 முகவர் நிலையங்களின் விபரங்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளவுள்ள ஹஜ் யாத்திரிகர்கள் குறிப்பிட்ட பதிவு செய்யப்பட்டுள்ள முகவர் நிலையங்கள் ஊடாகவே தங்களது பயண ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் யாத்திரிகர்களை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ‘பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்கள் ஊடாக யாத்திரிகர்கள் மேற்கொள்ளும் பயண ஏற்பாடுகளுக்கு திணைக்களம் எவ்விதத்திலும் உத்தரவாதம் வழங்காது. பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்களைத் தொடர்பு கொண்டு தாம் ஏமாற்றப்படுவதிலிருந்தும் யாத்திரிகர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
மேலதிக விபரங்களுக்காக திணைக்களத்தின் ஹஜ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும் படியும் வேண்டியுள்ளார்.
கடந்த காலங்களில் ஹஜ் ஏற்பாடுகளின்போது குறிப்பிட்ட சில முகவர்கள் ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இறுதியில் அவர்களைக் கைவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறான ஹஜ் முகவர் நிலையங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் ஒவ்வொரு யாத்திரிகரும் கையொப்பமிடும் வகையிலான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தில் யாத்திரிகர், ஹஜ் முகவர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் கைச்சாத்திடுவார்கள். -குறிப்பிட்டுள்ள ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சேவைகள் மற்றும் நிபந்தனைகள் முகவரினால் மீறப்படும் பட்சத்தில் முகவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் இப்றாஹிம் அன்ஸார் தெரிவித்துள்ளார்.
யாத்திரிகர்களுக்கான வைத்திய சேவை
கடந்த காலங்களில் போன்று இவ்வருடம் ஹஜ் யாத்திரிகர்களுக்கான வைத்திய சேவை திணைக்களத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்படமாட்டாது. ஹஜ் முகவர் குழுக்களே டாக்டர்களை அழைத்துச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாக்டர்களுக்கான பேஸா விசா திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும். எனவே யாத்திரிகர்களின் வைத்திய சேவைகளை முகவர் குழுக்களே பொறுப்பேற்கவுள்ளன.
ஹஜ் தூதுக் குழு
வருடாந்தம் ஹஜ் யாத்திரையின்போது ஹஜ் தூதுக்குழுவொன்றும் சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்வது வழமையாகும். இவ்வருடம் ஹஜ் தூதுக்குழு விஜயம் மேற்கொள்ளவேண்டுமா என ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. தூதுக்குழுவின் விஜயத்துக்கான நிதியினை ஹஜ் நிதியிலிருந்தே ஒதுக்க வேண்டியுள்ளது. இது தொடர்பில் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் தெரிவித்தார்.
சமூக சேவையாக கருதுங்கள்
ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகளை இலாபமீட்டும் தொழிலாகக் கருதாது சமூக சேவையாக கருதுங்கள். நாடு நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் ஒவ்வோர் யாத்திரிகரும் கடினமாக உழைத்து சேமித்த பணத்தினாலே யாத்திரையை மேற்கொள்கின்றனர் என்பதை ஒவ்வொரு முகவரும் கவனத்தில் கொள்ள வேண்டுமென புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஹஜ் முகவர்களை வேண்டியுள்ளார்.
இதே வேளை, ஹஜ் ஒரு புனிதமான கடமையாகும். ஒவ்வொரு முஸ்லிமும் தங்கள் வாழ்க்கையில் ஹஜ் கடமையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்ற கனவுடனேயே வாழ்கின்றனர். எனவே இந்த யாத்திரை ஏற்பாடுகளை முன்னெடுக்கும் முகவர்கள் இதனை சமூக சேவையாகக் கருத வேண்டும். இலாபமீட்டும் வர்த்தகமாக எண்ணக்கூடாது. யாத்திரிகர்களிடமிருந்து நியாயமான கட்டணத்தை அறவிட வேண்டும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வருட ஹஜ் ஏற்பாடுகளை திறம்பட முன்னெடுத்து யாத்திரிகர்களுக்கு சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்காக திணைக்கள அதிகாரிகள் பணிப்பாளரின் தலைமையில் இயங்கி வருகின்றனர்.
கொவிட் 19 தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம்
இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஹஜ் யாத்திரிகர்கள் கொவிட் 19 வைரஸ் நோயிலிருந்தும் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளும் வகையிலான மூன்று தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டிருப்பது கட்டாயம் என சவூதி அரேபிய ஹஜ் உம்ரா அமைச்சு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபிய அதிகாரிகள் கொவிட் 19 தொடர்பான ஏற்கனவே சவூதியில் அமுல்படுத்தியிருந்த சில விதிமுறைகளை அகற்றிய பின்பே கொவிட் 19 தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை மூடிய இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையும் நீக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் பொது சுகாதார அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கொவிட் 19 தடுப்பூசிகளை கட்டாயம் ஏற்றிக்கொண்டிருக்க வேண்டும் என சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதே வேளை இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் இதனைக்கவனத்திற் கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் தாம் மூன்று கொவிட் 19 தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டதற்கான உரிய ஆவணங்களை தம்முடன் எடுத்து வரவேண்டுமெனவும் ஜித்தாவை தளமாகக் கொண்டுள்ள இலங்கையின் கொன்சியூலர் ஜெனரல் பலாஹ் மெளலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இவ்வருடம் 65 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் ஹஜ் கடமைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் பயணிகள் தம்முடன் 5 வயதுக்கு குறைந்த பிள்ளைகளை அழைத்துவர வேண்டாமெனவும் கோரியுள்ளார்.
இலங்கை ஹஜ் யாத்திரிகர்களின் நலன்கள் தொடர்பில் ரியாதிலுள்ள இலங்கையின் தூதுவர் பக்கீர் ஹம்சா சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை ஹாஜிகளுக்கு மக்கா மற்றும் அரபாவில் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதில் முதல் தடவையாக யாத்திரை மேற்கொள்பவர்களுக்கே சவூதி ஹஜ் உம்ரா அமைச்சு முதலிடம் வழங்கியுள்ளது. அத்தோடு கொவிட் 19 தடுப்பூசிகள் மூன்றினைப் பெற்றிராதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன எனவும் கொன்சியூலர் ஜெனரல் மெளலானா தெரிவித்தார்.
ஆர்வம் குறைவு
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளுக்காக 73 ஹஜ் முகவர் நிலையங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தாலும் அவற்றில் 46 முகவர் நிலையங்களையே தெரிவு செய்துள்ளது. இவற்றில் 9 ஹஜ் முகவர் நிலையங்களுக்கே ஹஜ் ஏற்பாடுகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது. தெரிவு செய்யப்பட்ட 9 முகவர் நிலையங்களுடன் இணைந்தே ஹஜ் பயண ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியுள்ளது.
இதே வேளை இவ்வருடம் இலங்கைக்கு 1585 ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றாலும் நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் டொலர் நெருக்கடி காரணமாக ஹஜ் விண்ணப்பதாரிகளில் பெரும்பாலானோர் பயணத்தில் ஆர்வம் காட்டவில்லை என திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தார்கள். இவ்வருட ஹஜ் கட்டணம் எதிர்பாராத அளவில் 20 –25 இலட்ச ரூபாயாக உயர்ந்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.
ஹஜ் பயண முகவர் சங்கம்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என்று ஹஜ் முகவர் சங்கங்கள் தீர்மானித்திருந்தாலும் சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட்டின் முயற்சியினால் அரசாங்கத்தின் அனுமதி இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டது.
அமைச்சர் நஸீர் அஹமட் புத்தசாசன, மத மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் கலந்துரையாடி அனுமதியைப் பெற்றுக்கொடுத்தார். இதனையடுத்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் குறுகிய காலத்தில் மும்முரமாகச் செயற்பட்டு ஹஜ் பயண ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்தது.
இதற்காக ஹஜ் பயண முகவர் சங்கம் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் எம்.ஜி.எம்.ஹிஸாம் ஹஜ் யாத்திரிகர்கள் சார்பில் அமைச்சர்கள் விதுர விக்கிரம நாயக்க, நஸீர் அஹமட் மற்றும் திணைக்கள பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார், மற்றும் திணைக்கள ஊழியர்களுக்கு நன்றிகளைச் சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
கடந்த இரண்டு வருடங்கள் இலங்கையர்கள் தங்கள் ஹஜ் கனவுகளை சுமந்து எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களில் பலர் கனவுகளுடனே வபாத்தாகி விட்டார்கள். அவர்களது கனவுகளை அல்லாஹ் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வருடம் இறுதி நேரத்தில் இலங்கையர்களுக்கு ஹஜ் வாய்ப்பு கிட்டியுள்ளது. யாத்திரிகர்கள் நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் சகவாழ்வுக்காகவும், விஷேட துஆ பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவே சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli