முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதற்கு பிக்குகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது
தேர்தலுக்கு முன் வகுப்புகள் நடந்தன என்கிறார் தம்மானந்த தேரர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு முஸ்லிம்களைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புவதற்காக பெளத்த பிக்குமார்களுக்கு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அக்கருத்தரங்குகளில் இஸ்லாமி தீவிரவாதத்தினை அடிப்படையாகக் கொண்ட போகோ ஹராம் அமைப்பின் வீடியோக்கள் காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து பெளத்த பிக்குமார்கள் தங்களது மதபோதனைகளின் (பன) போது இஸ்லாமிய தீவரவாதம் தொடர்பில் 10–15 நிமிடங்கள் பேசவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது என வல்பொல ராகுல பெளத்த கற்கை நிலையத்தின் தலைவர் கல்கந்தே தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; அதிகாரத்திலிருக்கும் ஆட்சியாளர்களும், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களும் தங்களது வெற்றிக்கு சிங்கள பெளத்த கொள்கைகளையே கேடயமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள். ஆனால் இம்முறை சிங்கள பெளத்த கொள்கைகள் பயங்கரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் ஆபத்தானவர்கள் என்று பிரசாரம் செய்து சிங்கள பெளத்த மக்களை ஒரு பிரிவாக, ஒரு தொகுதியாக வேறுபடுத்த முயற்சித்ததுடன் ஏனைய இனங்கள் அவர்களது எதிரிகளாக வகைப்படுத்தினார்கள். இந்த அரசாங்கம் சிங்கள பெளத்தர்களை தனது அதி உச்ச நன்மைக்காக கேடயமாக பயன்படுத்தியது.
ஜனாதிபதி ருவான்வெலிசாயாவில் சத்திய பிரமாணம் செய்து கொண்டதை நாம் கண்டோம். மே 9 ஆம் திகதிக்கு முன்னைய தினம் முன்னாள் பிரதமர் அனுராதபுரத்துக்கு விஜயம் செய்தார். அலரி மாளிகையின் முன்னால் போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பியபோது அதனை திசை திருப்புவதற்காக பிரித்தை ஒலிக்கச் செய்தார்கள். இந்நிலையில் ராஜபக்ஷாக்கள் பெளத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தினார்கள் என நீங்கள் கருதுகிறீர்களா-? என்ற கேள்விக்கு தேரர் பதிலளிக்கையில்,
அவர்கள் சமயத்தை பயன்படுத்தினார்கள் என்று எவ்வாறு கூற முடியும். அவர்கள் நீதி நெறிகளை மதிக்கவில்லை.
முஸ்லிம் சமூகத்தைப்பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதற்காக பெளத்த பிக்குமார்களுக்கு கருத்தரங்குகளை நடத்தினார்கள். இந்தக் கருத்தரங்குகளில் இஸ்லாமிய தீவிரவாதத்தினை அடிப்படையாகக் கொண்ட போகோ ஹராம் அமைப்பின் வீடியோக்களை காண்பித்தார்கள். இதனையடுத்து பெளத்த பிக்குமார்களுக்கு தங்களது மதபோதனைகளின் (பன) போது இஸ்லாமிய தீவிரவாதம் தொடர்பில் 10 – 15 நிமிடங்கள் பேசவேண்டுமென அறிவுறுத்தினார்கள்.
இந்த ஏற்பாடுகள் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டன. பல பகுதிகளிலிருந்தும் அநேகமான பெளத்த குருமார்கள் இது தொடர்பில் என்னிடம் முறையிட்டார்கள். தங்களால் நிகழ்த்தப்பட்ட மதபோதனைகளின்போது பயங்கரவாதம், அடிப்படைவாதம், தொடர்பாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொண்டதாகவும் கூறினார்கள்.
மதபோதனைகள் ஒரு போதும் இவ்வாறு தவறாக கையாளப்படக்கூடாது. சாதாரண மக்கள் சமாதானம், சாந்தி பெற்றுக்கொள்வதற்காகவே பிக்கு ஒருவரை தங்களது வீட்டுக்கு அழைப்பர். ஆனால் இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் வெறுப்பினை பரப்புவதற்காக குருமார்களை சமய அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் பற்றி பேசும்படி நிர்ப்பந்தித்துள்ளது.
பெளத்தம் இவ்வாறு வன்முறையாக பயன்படுத்தப்பட்டதை இதற்கு முன்பு நான் ஒருபோதும் காணவில்லை. அத்தோடு முரடர்களை குருமார்போன்று பல இடங்களில் நிறுத்தியிருந்தனர் என்றார்.- Vidivelli