நெருக்கடியான காலத்தில் ஹஜ் செய்யாதிருக்கலாமா?

0 673

அஷ்ஷெய்க்
எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)

தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டி­மிக்க சூழலில் இவ்­வ­ருடம் இலங்­கை­யி­லி­ருந்து எவரும் ஹஜ் செய்­வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறப்­பட்ட போது அது தொடர்­பான வாதப் பிர­தி­வா­தங்கள் எழுந்­தன.

சொந்த உழைப்பில் இரு­பது லட்­சத்­திற்கு ஹஜ் செய்யும் ஹாஜி­களை விட்டு விட்டு சுரண்­டலில் கோடி­களைப் பதுக்­கி­யி­ருக்கும் அர­சியல் வர்க்­கத்தை கேள்­விக்கு உட்­ப­டுத்­த­லாமே என்று சிலரும், படைத்­தவன் உண­வ­ளிப்பான்; தகு­தி­யுள்­ள­வர்கள் கட­மையை நிறை­வேற்ற வேண்டும் என்று வேறு சிலரும், உங்­க­ளது கண்­க­ளுக்கு ஹஜ்­ஜுக்குச் செல்வோர் மட்­டுமா தென்­ப­டு­கி­றார்களா? மேற்­கத்­திய நாடு­க­ளுக்கு இலங்­கையில் இருந்து உல்­லாசப் பயணம் செய்­வோ­ரையும் ஏன் தடை செய்யக் கூடாது என்று வேறு சிலரும் கேட்­கி­றார்கள்.

இந்த கேள்­வி­க­ளுக்குள் பல நியா­யங்கள் மறைந்­தி­ருப்­பதை நாம் மறுப்­ப­தற்­கில்லை. எவ­ருக்கும் கருத்துக் கூறும் சுதந்­திரம் உள்­ளது. ஆனால், இந்த விவ­காரம் தொடர்­பான இஸ்­லா­மியப் பார்­வை­யையும் கவ­னத்தில் எடுத்து பொருத்­த­மான தீர்­மா­னங்­க­ளுக்கு வர வேண்டும் என்­பதே எமது அவா. எனவே, சில கார­ணங்­க­ளுக்­காக ஹஜ்­ஜுக்­கான தடை விதிக்­கப்­ப­டு­வது அல்­லது ஒருவர் மீது ஹஜ்ஜு கட­மை­யா­கியும் அதனை அவர் சில கார­ணங்­க­ளுக்­காகச் செய்­யாமல் தவிர்ந்து கொள்­வது தொடர்­பான இஸ்­லா­மியக் கண்­ணோட்­டத்தை இக்­கட்­டுரை ஆராய்­கி­றது.

ஹஜ் கடமை இஸ்­லாத்தின் ஐந்து தூண்­களில் ஒன்­றாகும். அது கட­மை­யான நிலையில் உள்ள ஒருவர் அதனை நிறை­வேற்­றாத போது அல்­லாஹ்வின் வெறுப்­புக்கு உள்­ளாகும் பெரும்­பா­வி­யாக மாறு­கிறார் என்­பது மிகத் தெளி­வான உண்­மை­யாகும்.
ஹஜ்ஜை நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய நிபந்­த­னை­களை பூர்த்தி செய்த ஒவ்­வொ­ரு­வரும் வாழ்வில் ஒரு தடவை ஹஜ் செய்­வது கடமை என்­ப­திலும் அதற்குப் பின்னர் செய்­யப்­படும் ஒவ்­வொரு ஹஜ்ஜும் உப­ரி­யான- சுன்­னத்­தான ஹஜ்­ஜு­களே என்­ப­திலும் எவ்­வித கருத்து பேதங்­களும் இல்லை.

உட­ன­டி­யா­கவா பிற்­ப­டுத்­தியா?
ஹஜ் கட­மை­யான ஒருவர் உட­ன­டி­யாக அதனைச் செய்ய வேண்­டுமா அல்­லது காலம் தாழ்த்திச் செய்ய முடி­யுமா என்­பது தொடர்­பாக அறி­ஞர்­க­ளுக்கு மத்­தியில் கருத்து முரண்­பாடு நில­வு­கி­றது. உட­ன­டி­யாக அதனை செய்ய வேண்டும் என்று சொல்­ப­வர்கள் பின்­வரும் ஹதீஸ்­களை ஆதாரம் காட்­டுவர் :-

“யார் ஹஜ் செய்ய நாடு­கி­றாரோ அவர் அதனைத் துரி­தப்­ப­டுத்­தட்டும். ஏனெனில், அவர் நோயா­ளி­யாக மாறு­வ­தற்கும் (பொருட்கள்) காணாமல் போவ­தற்கும், புதிய ஒரு தேவை உரு­வா­வ­தற்கும் வாய்ப்­பி­ருக்­கி­றது.” (ஸுனன் அபூ­தாவூத்- 1732)
“ஹஜ்ஜை அவ­ச­ரப்­ப­டுத்­துங்கள். உங்­களில் ஒரு­வ­ருக்கு எதிர்­பா­ராமல் ஏதும் நடந்­து­விடக் கூடும் என்று அவர் அறி­ய­மாட்டார்.” (முஸ்னத் அஹ்மத்- 2869)
ஆனால், கட­மை­யான ஹஜ்ஜை காலம் தாழ்த்தி நிறை­வேற்ற முடியும் என்று வேறு சில அறி­ஞர்கள் கூறு­கின்­றனர். அதற்கு ஆதா­ர­மாக, நபி(ஸல்)அவர்கள் ஹஜ் கட­மை­யாக்­கப்­பட்ட அதே வரு­டத்தில் அல்­லாமல் ஹிஜ்ரி பத்­தா­வது வரு­டத்தில் தான் அதனை நிறை­வேற்­றி­னார்கள். அன்­னா­ரது மனை­வி­மார்­களும் அதி­க­மான சஹா­பாக்­களும் அவர்­க­ளுடன் சென்­றார்கள். உட­ன­டி­யாக நிறை­வேற்­றப்­பட வேண்டும் என்­றி­ருந்தால் நபி­ய­வர்கள் அதனை பிற்­ப­டுத்­தி­யி­ருக்­க­மாட்­டார்கள் என்று இந்த அறி­ஞர்கள் கூறி­யி­ருப்­ப­துடன், கட­மை­யான ஹஜ்ஜை அவ­ச­ரப்­ப­டுத்தி நிறை­வேற்ற வேண்டும் என்று கூறும் ஹதீஸ்கள் உட­ன­டி­யாக நிறை­வேற்­று­வது கடமை என்ற கருத்தில் அல்­லாமல் சுன்­னத்து என்­ப­தனைத் தான் காட்டும் என்றும் கூறு­கி­றார்கள். இமாம்­க­ளான அவ்­ஸாஈ, தெளரீ, ஷாபிஈ போன்றோர் இக்­க­ருத்தில் இருக்­கி­றார்கள்.

எனவே, நியா­ய­மான காரணம் இருப்பின் ஹஜ்ஜை தாம­தப்­ப­டுத்தி நிறை­வேற்ற முடியும் என்­பதை இது காட்­டு­கி­றது.

தவிர்ந்து கொள்­வதும் தடை விதிப்­பதும்
இது இப்­ப­டி­யி­ருக்க, ஹஜ் கட­மை­யான ஒருவர் அதனை நிறை­வேற்­றாமல் தானாக தவிர்ந்து கொள்­வ­தற்கும் சில­போது ஆட்­சி­யா­ளர்கள் ஹஜ் செய்­வ­தற்கு தடை போடு­வ­தற்கும் பல நியா­யங்­களை இஸ்­லா­மிய சட்டப் பரப்பில் காண முடி­கி­றது. இஸ்­லா­மிய வர­லாற்றில் இதற்கு பல உதா­ர­ணங்கள் உள்­ளன.

தொற்­று­நோய்கள், யுத்­தங்கள், இயற்கை அனர்த்­தங்கள், கொள்­ளை­யர்­க­ளது அட்­ட­கா­சங்கள் போன்ற இடை­யூ­றுகள் வர­லாற்றில் இருந்த பொழு­தெல்லாம் ஹஜ் கடமை இடை­நி­றுத்­தப்­பட்­டது என்­ப­தற்கு பல ஆதா­ரங்கள் உள்­ளன.

1. ஆபத்து ஏற்­படும் என்ற பயம்
ஹஜ் செய்­ய­வி­ருக்கும் ஒரு­வரோ பலரோ தாம் ஆபத்­தான சூழ்­நி­லைக்கு உள்­ளா­கலாம் என்ற அனு­மானம் வலுக்கும் பட்­சத்தில் அதனைச் செய்­யாமல் இருக்க முடியும் என்­பதில் அறி­ஞர்கள் ஒரு­மித்த கருத்தில் இருப்­ப­தாக ஷாபிஈ மத்­ஹபைச் சேர்ந்த இமாம் ஜுவைனி தனது ‘அல்­ஙி­யாதீ’ எனப்­படும் நூலில் கூறு­கிறார்.

2. வெள்ளப் பெருக்கு
தைகிரீஸ் நதி பெருக்­கெ­டுத்­ததன் கார­ண­மாக பக்­தா­திலும் இராக்­கிலும் இருந்த பல பகு­திகள் வெள்­ளத்தில் மூழ்­கின. எனவே, அவ்­வ­ருடம் ஈராக்­கி­லி­ருந்து எவரும் ஹஜ்ஜு செய்­ய­வில்லை என இமாம்­க­ளான இப்னுல் அதீர் (மரணம்: கி.பி1233) இப்னுல் ஜவ்ஸீ ஆகியோர் எழு­தி­யி­ருக்­கி­றார்கள்.

3. அர­சியல் போர்கள்
மக்­காவை அண்­டிய பிர­தே­சங்­களில் அர­சியல் கார­ணங்­களால் இடம்­பெற்ற யுத்­தங்­களின் பொழுது மக்கள் முழு­மை­யாக அல்­லது பெரும்­பாலும் ஹஜ்ஜு செய்ய முடி­யாத சூழ்­நிலை காணப்­பட்­டது. கி.பி 714,1470 ஆகிய வரு­டங்கள் இதற்கு உதா­ர­ணங்­க­ளாகும்.

4. கொரோனா தொற்று
கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக உலகில் கொரோனா தொற்று இருந்­ததன் கார­ண­மாக ஹஜ்ஜை நிறை­வே­ற்று­வது பாது­காப்­பா­ன­தல்ல என முஸ்­லிம்­க­ளது அறி­ஞர்­க­ளுக்­கான சர்­வ­தேச மன்­றமும் இன்னும் பல இஸ்­லா­மிய அறி­ஞர்­களும் பத்வா வெளி­யிட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். அர­சாங்­கங்­களும் தடை­யுத்­த­ரவைப் பிறப்­பித்­தன. எனவே, ஹஜ்ஜை முதல் தட­வை­யாக செய்­வ­தற்கு தயா­ராக இருந்­த­வர்கள் கூட ஹஜ் செய்­ய­வில்லை.

5. திரு­ம­ணமா முதல் தட­வை­யாக ஹஜ்ஜா?
ஒருவர் தான் உட­ன­டி­யாக திரு­மணம் முடிக்­காத போது துர்­ந­டத்­தையில் சம்­பந்­தப்­பட்டு விடலாம் என்ற பயம் ஏற்­பட்டு அதே­வேளை ஹஜ்ஜும் கட­மை­யாகி விட்டால் கையில் இருக்­கின்ற பணத்தால் திரு­மணம் செய்ய வேண்­டுமா அல்­லது ஹஜ் செய்ய வேண்­டுமா என்ற விவ­கா­ரத்தில் திரு­ம­ணத்­திற்கே முன்­னு­ரிமை வழங்க வேண்டும் என்­பது இஸ்­லா­மிய அறி­ஞர்கள் பல­ரது கருத்­தாகும். இமாம் இப்னு குதாமா இக்­க­ருத்தை தனது ‘அல்­முக்னீ’’யில் குறிப்­பி­டு­வ­துடன் துர்­ந­டத்­தையை தவிர்க்க முடியும் என்­றி­ருந்தால் ஹஜ்ஜு செய்­வ­தற்கு முன்­னு­ரிமை வழங்க வேண்டும் என்றும் கூறி­யுள்ளார்.இமாம் இப்னு தைமிய்­யாவும் இக்­க­ருத்­தையே வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

சுன்­னத்­தான ஹஜ்­ஜுக்கு முன்னர் வறுமை நிவா­ரணம்
சமூ­கத்தில் மக்கள் பொரு­ளா­தார ரீதி­யாக மிகவும் பின்­தங்­கிய நிலையில் இருக்­கின்ற பொழுது சுன்­னத்­தான ஹஜ்ஜை விட்­டு­விட்டு நிவா­ரண உத­வி­க­ளுக்கே ஹஜ்­ஜுக்­காக ஒதுக்­கிய பணத்தை செல­வ­ழிக்க வேண்டும் என்­பது இமாம் கஸ்­ஸாலி (ரஹ்) போன்­ற­வர்­க­ளது கருத்­தாகும். இமா­ம­வர்கள் தனது இஹ்­யாவில் பின்­வ­ரு­மாறு எழு­து­கி­றார்கள்:- “சிலர் தமது பணத்தை ஹஜ்­ஜுக்­காக செல­வ­ழிப்­பதில் கவ­ன­மாக இருக்­கி­றார்கள். ஒன்­றுக்கு மேல் இன்­னொன்­றாக ஹஜ் செய்­கி­றார்கள். சில­போது தமது அண்டை வீட்­டாரை பசியில் விட்­டு­விட்டுப் போகி­றார்கள். எனவே, இமாம் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் ‘கடைசி காலத்தில் எவ்­வித நியா­ய­மு­மின்றி ஹஜ் செய்­வோ­ரது தொகை அதி­க­ரிக்கும். அவர்­க­ளுக்கு பயணம் இல­கு­வா­க­யி­ருக்கும். ஜீவ­னோ­பாயம் விஸ்­தீ­ர­ண­மாக இருக்கும். ஒருவர் ஹஜ்­ஜி­லி­ருந்து திரும்பும் போது, சிறைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் தனது பக்­கத்து வீட்­டா­ருக்கு உப­காரம் செய்­ய­மாட்டார்’ என்று கூறி­யி­ருப்­ப­தாக இமாம் கஸ்­ஸாலி எழு­து­கிறார்.

பிஷ்ர் இப்னுல் ஹாரித் என்­ப­வ­ரிடம் ஒருவர் வந்து தான் ஹஜ் செய்­வ­தற்கு உறு­தி­பூண்­டுள்­ள­தாகக் கூறி­விட்டு, ‘நீங்கள் எனக்கு ஏதும் கட்­ட­ளை­யி­டு­கி­றீர்­களா?’ என்று கேட்டார். அப்­போது பிஷ்ர், ‘அதற்­காக எவ்­வ­ளவு பணத்தை தயார் செய்து வைத்­தி­ருக்­கிறீர்?’ என்று கேட்ட போது அவர், ‘2000 திர்ஹம்’ என்று கூற, பிஷ்ர் ‘பற்­றற்ற வாழ்க்கை அல்­லது அல்­லாஹ்­வி­னு­டைய வீட்டின் மீதான மோகம் அல்­லது அல்­லாஹ்­வு­டைய திருப்தி இவற்றில் எதனை எதிர்­பார்த்து நீர் ஹஜ் செய்யப் போகிறீர்?’ என்று வின­விய போது, அவர் ‘அல்­லாஹ்வின் திருப்­தியை எதிர்­பார்த்துத் தான் (ஹஜ்ஜு செய்யப் போகிறேன்)’ எனப் பதி­ல­ளித்தார். அதற்கு பிஷ்ர் ‘நீர் உமது வீட்டில் இருந்து கொண்டே அப்­ப­ணத்தின் மூல­மாக அல்­லாஹ்வின் திருப்­தியை அடைய முடியும். அதா­வது, கடன்­கா­ரர்கள் பத்துப் பேர் தமது கடனை அடைப்­ப­தற்கு அந்த 2000 திர்­ஹம்­களை கொடுப்­பீ­ராக. குடும்­பஸ்தன் ஒரு­வ­ருக்கு அதனைக் கொடுத்து தனது குடும்­பத்தின் தேவை­களை அவர் ஈடு­செய்ய உத­வு­வீ­ராக. அனா­தையைப் பரா­ம­ரித்துக் கொண்­டி­ருக்கும் ஒரு­வ­ருக்கு கொடுத்து அவரை சந்­தோ­ஷப்­ப­டுத்­து­வீ­ராக. முடிந்தால் இந்தப் பணத்­தொகை அனைத்­தையும் ஒரு தனி­ந­ப­ருக்குக் கொடுப்­பீ­ராக. ஏனெனில், முஸ்­லிமின் உள்­ளத்தில் சந்­தோ­ஷத்தைப் புகுத்­து­வது, துன்­பப்­படும் ஒரு­வ­ருக்கு உதவி செய்­வது, கஷ்­டத்தைப் போக்­கு­வது, பல­வீ­ன­ருக்கு உதவி செய்­வது போன்ற நற்­க­ரு­மங்­களில் ஈடு­ப­டு­வ­தா­னது முதல் தட­வைக்குப் பிறகு செய்­யப்­ப­டு­கின்ற 100 ஹஜ்­ஜு­களை விடவும் சிறந்­த­தாகும்’ என்று கூறி­விட்டு, ‘இங்­கி­ருந்து எழுந்து சென்று நாம் உமக்கு கூறி­யது போன்று அதனைச் செலவு செய்­வீ­ராக. அல்­லது உமது உள்ளம் என்ன சொல்­கி­றது என்று எமக்குச் சொல்­வீ­ராக’ என்­றார்கள்.

அப்­போது அவர்:- ‘(ஹஜ்ஜுப்) பய­ணத்தை மேற்­கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் எனது உள்­ளத்தில் மேலோங்கி இருக்­கி­றது’ என்று கூறினார். அதற்கு பிஷ்ர் புன்­ன­கைத்துக் கொண்டு அவர் பக்கம் திரும்பி, ‘அழுக்­கான வியா­பா­ரத்தின் மூல­மா­கவும் சந்­தே­கத்­திற்­கி­ட­மான வழி­க­ளாலும் சொத்து, செல்­வங்கள் திரட்­டப்­பட்டால், உள்ளம் ஆசைப்­ப­டு­வது போன்று தான் அந்தப் பணத்தை செல­வ­ழிக்கும் படி அது கூறும். அது ஸாலி­ஹான அமல்­களை (போலி­யாக) வெளிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும்’ என்­றார்கள்.(இஹ்­யாஉ: 4/660)

எனவே, இஸ்­லா­மிய பிக்ஹில் ‘ஃபர்ள் கிபாயா’க்கள் என்­பன சுன்­னத்­தான- நபி­லான வணக்­கங்­களை விடவும் முற்­ப­டுத்­தப்­பட வேண்­டி­ய­வை­யாகும்.

சுன்­னத்­தான ஹஜ்­ஜுக்­காகப் பலர் செல்­வது பற்றிக் கூற வந்த அஷ்ஷைக் கர்­ளாவி: ‘ஹஜ் காலப்­பி­ரிவில் வச­தி­ப­டைத்த முஸ்­லிம்­களில் கணி­ச­மான தொகை­யினர் சுன்­னத்­தான ஹஜ்­ஜு­களைச் செய்­வதில் கவ­ன­மெ­டுப்­பதை நான் காண்­கிறேன். இந்த ஸுன்­னத்­தான ஹஜ்­ஜு­க­ளுடன் ரமழான் காலத்தில் உம்­ராக்­க­ளையும் அவர்கள் நிறை­வேற்­று­கி­றார்கள். தமது செலவில் தம்­மோடு இன்னும் பல ஏழை­க­ளையும் அழைத்துச் செல்­கி­றார்கள்.’ என்­கிறார். இஸ்­லா­மிய சமூ­கத்தில் பல வகை­யான வேலைத்­திட்­டங்­க­ளுக்கு இந்தப் பணத்தை செல­வி­டலாம் என்ற கருத்­தையும் அவர் வலி­யு­றுத்­து­கிறார்.

சமு­தா­யத்தில் அனா­தைகள், பட்­டி­னியால் இறப்­ப­வர்கள், முகாம்­களில் வாடும் அக­திகள், தமது நோய்க்­கான மருந்­து­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலையில் அங்­க­லாய்க்கும் நோயா­ளிகள், அடிப்­படைத் தேவை­களுள் ஒன்­றான அறிவைக் கற்றுக் கொள்­வ­தற்கு வசதி இல்­லாமல் தவிக்கும் பிள்­ளைகள், பெரி­ய­வர்கள், தொழில் வாய்ப்­பில்­லா­த­வர்கள், அல்­லல்­படும் கூட்­டத்­தினர் என அவர்­க­ளது பட்­டியல் தொடர்ந்து கொண்டே இருக்­கி­றது. இத்­த­கைய வேலைத்­திட்­டங்­க­ளுக்கும் இஸ்­லாத்தை பாது­காப்­ப­தற்கும் பிர­சாரம் செய்­வ­தற்கும் பெரும் தொகை பணம் செலவு செய்­யப்­பட வேண்­டிய நிலையில் சுன்­னத்­தான- நபி­லான கரு­மங்­க­ளுக்­காக செலவு செய்வோர் சம்­பந்­த­மா­கவே ‘பிக்ஹுல் அவ்­ல­விய்யாத்’ (இஸ்­லா­மிய சமூ­கத்தில் முன்­னு­ரி­மைப்­ப­டுத்தி நோக்க வேண்­டிய அம்­சங்கள்) என்ற பகுதி பற்­றிய ஆய்வில் ஈடு­ப­டு­ப­வர்கள் அதி­க­மாகக் கரி­சனை எடுக்­கி­றார்கள்.

பர்­ளான ஹஜ்ஜா? பட்­டினி நிவா­ர­ணமா?
ஒருவர் முதல் தட­வை­யாக செய்­யப்­படும் பர்­ளான ஹஜ்ஜைக் கூட செய்­யாமல் உட­ன­டி­யாகச் செய்­யப்­பட வேண்­டிய, அதா­வது முன்­னு­ரிமைப்படுத்­தப்­ப­ட­வேண்­டிய கரு­மங்கள் இருக்­கின்ற பொழுது அவற்­றுக்­காக அந்தப் பணத்தை செல­வ­ழிப்­பதே நல்­லது என்ற கருத்தில் பல பழைய கால, நவீ­ன­கால உல­மாக்கள் இருக்­கி­றார்கள்.

பொஸ்­னியா – ஹேர்­ஸ­கோ­வினா பகு­தியில் இடம்­பெற்ற இன­வெறித் தாக்­கு­தல்­களின் பொழுது முஸ்­லிம்கள் மிகக் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டார்கள். அச்­சந்­தர்ப்­பத்தில் எதி­ரி­களை எதிர்­கொள்­வ­தற்கும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­கவும் பெருந்­தொகைப் பணம் தேவைப்­பட்­டது. அந்த காலப் பிரிவில் அதா­வது,1992 ஆம் ஆண்டு பிர­பல இஸ்­லா­மிய சிந்­த­னை­யாளர் பஹ்மீ ஹுவைதீ அவர்கள் எகிப்தின் ‘அல்­அஹ்ராம்’ பத்­தி­ரி­கை­யிலே ஒரு கட்­டுரை எழு­தினார். அதிலே ‘பர்­ளான (முதல்­த­டவை செய்­யப்­படும்) ஹஜ்ஜை விடவும் பொஸ்­னி­யாவை மீட்­டெ­டுப்­ப­தற்கு முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கப்­பட வேண்டும்’ என்று கூறினார்.

இந்த கருத்து சம்­பந்­த­மாக ஷரீ­அத்தின்- பிக்ஹின் நிலைப்­பாடு என்ன என்று அஷ்ஷெய்க் கர்­ளா­வி­யி­டத்தில் வின­வப்­பட்­டது. அதற்கு அவர், ‘ஷரீ­ஆவின் கண்­ணோட்­டத்தில் பஹ்மீ ஹுவை­தியின் கருத்­துக்கு ஒரு நியாயம் உண்டு. ‘பிற்­ப­டுத்தி நிறை­வேற்ற முடி­யு­மான கட­மை­களை விடவும் உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்­டிய கட­மை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்’ என்­பது ஷரீ­அத்தின் நிலைப்­பா­டாகும்.
ஹஜ் கட­மையை காலம் தாழ்த்தி நிறை­வேற்ற முடியும் என்­பது சில அறி­ஞர்­களின் கருத்­தாகும். ஆனால், பொஸ்­னிய மக்­களை பசி, குளிர், நோய், கூட்டுக் கொலை போன்ற ஆபத்­துக்­களில் இருந்து உட­ன­டி­யாக மீட்­டெ­டுப்­ப­தற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்.அதனை காலம் தாழ்த்த முடி­யாது. எனவே அது காலத்தின் தேவை­யாகும். ஹஜ் கட­மையை மக்கா மதீ­னா­வா­சி­களும் அவற்றைச் சூழ­வுள்ள பகு­தி­களில் இருப்­ப­வர்­களும் நிறை­வேற்­றட்டும். அவர்­க­ளுக்கு அது அதி­க­மான செலவை ஏற்­ப­டுத்­த­மாட்­டாது என்றும் அவர் கருத்துத் தெரி­வித்தார்.

ஹஜ் செய்­வ­தற்­கான தகு­தி­களில்
‘இஸ்­தி­தா­ஆ’வும் ஒன்று
அதே­வேளை ஹஜ் கட­மை­யா­வ­தற்கு குர்­ஆனில் – ஷரீ­அத்தில் கூறப்­பட்ட நிபந்­த­னை­களில் ஒன்று ‘இஸ்­தி­தாஆ’- (சக்­தி­பெற்­றி­ருத்தல்) என்­ப­தாகும்.

’மனிஸ்­த­தாஅ இலைஹி ஸபீலா’ ஹஜ்­ஜுக்குப் போவ­தற்கு பாதை விட­யத்தில் சக்தி பெற்­றி­ருத்தல் என்று அதனை நாம் மொழி­பெ­யர்த்­தாலும் பய­ணத்­துக்­கான கட்­டுச்­சாதம், வாகனம் என்­ப­வற்றைப் பெற்­றி­ருப்­ப­தையும் அது குறிக்கும்.

ஒருவர் (ஹஜ்ஜு செய்­வ­தற்கு முன்னர்) தான் நிறை­வேற்ற வேண்­டிய கடன்­களை நிறை­வேற்ற வேண்டும். தான் ஹஜ்­ஜி­லி­ருந்து திரும்பும் வரைக்­கு­மான காலப்­பி­ரிவில் தான் செல­வு­செய்­வ­தற்கு கட­மைப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கான இல்­லிடம், ஆடை, தனக்கு தேவை­யான கால்­ந­டைகள், தொழில் கரு­விகள் போன்­றன தேவையை விடவும் அதி­க­மாக இருக்க வேண்டும். சிறைக்­கை­தி­க­ளாக இருப்போர், ஹஜ் செய்­வதை விட்டும் தடுக்கும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்குப் பயப்­ப­டுவோர் போன்­றோரும் ஹஜ்­ஜி­லி­ருந்து விலக்­க­ளிக்­கப்­ப­டுவர் என்­பது ஹனபீ மத்­ஹ­பி­ன­ரு­டைய கருத்­தாகும். ஹஜ்­ஜுக்குப் போக முன்னர் இவற்றை அவர் ஊர்­ஜி­தப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். அப்­படி இல்­லாத போது அவர் மீது ஹஜ் கட­மை­யா­க­மாட்­டாது. அதே வேளை நிறை­வேற்ற வேண்­டிய கடன்கள், கட­மை­யான ஸகாத், நேர்ச்­சைகள் என்­ப­வற்றை அவர் நிறை­வேற்­றி­யி­ருப்­பதும் ஹஜ் கட­மை­யா­வ­தற்­கான மற்­றொரு நிபந்­த­னை­யாகும்.

எனவே, ஹஜ்ஜை நிறை­வேற்­று­வ­தற்­கான நிபந்­த­னை­களைப் பூர்த்தி செய்த ஒருவர் மீது மட்­டுமே ஹஜ் கட­மை­யா­கி­றது. அது கட­மை­யா­னாலும் அதனை அவர் நிறை­வேற்­றாமல் இருக்­கலாம் என்­ப­தற்­கான சில நியா­யங்­களை இஸ்லாம் வகுத்துக் கூறி­யுள்­ளது. சில­போது அவர் ஹஜ் செய்­வதில் இருந்து தானாகத் தவிர்ந்து கொள்­வ­தற்கு இஸ்லாம் அனு­ம­திக்கும். வேறு சிலரைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் ஹஜ் செய்­வதை இஸ்­லா­மிய சட்­டமே தடை­செய்யும். எனவே இவை விதி­வி­லக்­கான சந்­தர்ப்­பங்­க­ளாகும்.

இலங்கைச் சூழலில் ஹஜ்
ஹஜ்­ஜுக்­காக நமது நாட்­டி­லி­ருந்து செல்­வோரும் முக­வர்­களும் அண்ண­ள­வாக 6 தொடக்கம் -8 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை நமது நாட்டை விட்டும் சவூதி அரே­பி­யா­வுக்கு கொண்டு செல்­வ­தற்­கான பொறி முறையை கண்­டு­கொள்ள வேண்டும். அந்தப் பொறி­மு­றையை கண்­டு ­கொள்­ளாத போது இம்­முறை ஹஜ்ஜை நிறை­வேற்ற முடி­யாத சூழ்­நிலை உரு­வா­கலாம் எனக் கூறப்­ப­டு­கி­றது.

மேலும், இம்­முறை தலா ஒரு ஹாஜிக்கு சுமா­ராக ரூபா 20- முதல் 25 லட்­சத்தும் இடைப்­பட்ட தொகை செல­வா­கலாம் என்று அனு­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கையில் இம்­முறை இங்­கி­ருந்து 1585 பேர் ஹஜ்­ஜுக்குச் செல்­வ­தாயின் 317 தொடக்கம் 396.25 கோடி ரூபாய்கள் செல­வாகும் என்றும் அது அண்ண­ள­வாக 9 தொடக்கம் 10 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் என்றும் கணிக்­கப்­பட முடியும்.

இது இப்­ப­டி­யி­ருக்க, நமது நாட்டு மக்கள் மிகப்­ப­யங்­க­ர­மான பொரு­ளா­தார நெருக்­க­டி­யையும் பட்­டினிச் சாவையும் எதிர்­கொள்­கி­றார்கள். எதிர்­கா­லத்தில் இந்­நிலை மிகவும் மோச­ம­டை­யலாம் என எதிர்வு கூறப்­ப­டு­கி­றது. எனவே, இவ்­வ­ளவு பெரும் தொகையை ஹஜ்­ஜுக்­காகச் செலவு செய்­வது பொருத்­த­மாக அமை­யுமா என்ற கேள்­வியும் எழு­கி­றது.
ஹஜ்­ஜுக்­காக செல­விட வேண்­டி­யுள்ள இப்­பா­ரிய பணத்­தொ­கையை ஸத­கா­வா­கவும் தொழில் வாய்ப்­புக்­களைப் பெற்றுக் கொடுக்கவும் பசி பட்டினியைப் போக்கவும் பயன்படுத்தலாமே என சிலர் அபிப்பிராயப்படுவதும் நியாயமாகும்.

தமது குழந்தைக்கு பால் மாவை வாங்கிக் கொடுக்க பண வசதியில்லாமல் ஒரு தாயும் தகப்பனும் புலம்பும் போது, நோயாளியான தனது தந்தைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் மருந்தை வாங்கிக் கொடுக்க பணமின்றி ஒரு மகன் அழுது புலம்பும் போது….இது போன்ற உடனடித் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

எமது கண்முன்னே இருவர் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கடமையான தொழுகையாக இருப்பினும் அதனை விட்டுவிட்டு அச் சண்டையை தணிக்க முன்செல்வதே இஸ்லாம் எமக்கு காட்டித்தரும் அழகிய வழிகாட்டலாகும்.

அதனடிப்படையில் எமது நாட்டில் நிலவும் மிக அசாதாரண பொருளாதார நெருக்கடியின் மோசமான பின்விளைவின் எதிர்வு கூறல் அடிப்படையில் இவ்வருட ஹஜ்ஜை நிறைவேற்றாமல் அதனை பிற்போடுவதும் மிக பொருத்தமானதாக இருக்கக் கூடும். நிலமையை கருத்தில் கொண்டு ஹஜ்ஜுக்காக சேர்த்து வைத்த பணத்தில் ஒரு தொகையையோ அல்லது முழுவதுமாகவோ ஸதகா செய்வதாலும் பிஷ்ர் இப்னுல் ஹாரித், ஃபஹ்மி ஹுவைதீ போன்றவர்களது கருத்துக்கள் அடிப்படையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய முடியும்.

இருப்பினும் ஒருவர் தமது நிலைப்பாட்டை மற்றவர் மேல் திணிப்பது என்பதை விட வழிகாட்டல்களை வழங்குவதே சாலப் பொருத்தம். அதேநேரம் தாம் எதனை முற்படுத்த வேண்டும் என்பதனை மேற்கூறிய விளக்கங்களின் அடிப்படையில் நேர்மையாக சிந்தித்து முடிவு செய்ய வேண்டியது ஒவ்வொருவர் மீதும் கடமையாக மாறும் என்பதில் ஐயமில்லை.

வல்லவன் அல்லாஹ் எமக்கு நேர்வழியைக் காட்டுவதோடு அதனைப் பின்பற்றும் பாக்கியத்தையும் அருள்வானாக!
நாட்டின் வறுமையைப் போக்கி சுபீட்சமான எதிர்காலத்தைத் தருவானாக!. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.