எம்.எல்.எம். மன்சூர்
கடந்த மே 17 ஆம் திகதி நீங்கள் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சுருக்கமான 12 நிமிட நேர உரை உங்கள் அரசியல் வாழ்க்கையில் நீங்கள் நிகழ்த்திய முக்கியமான உரைகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. அச்சந்தர்ப்பத்தில் உங்கள் குரலில் தொனித்த துயரத்தையும், இயலாமை உணர்வையும் பார்த்த பொழுது, உங்களைப் போன்ற ஒருவருக்கே இந்நாட்டில் இப்படியொரு நிலைமை ஏற்பட முடியுமானால், எத்தகைய அதிகார பின்புலங்களும் இல்லாத சாதாரண குடிமக்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பற்றவர்களாக இருந்து வருகின்றார்கள் என்ற அச்ச உணர்வே எமக்கு ஏற்பட்டது.
(நீங்கள் இப்பொழுது அரசாங்கத்துக்கு வெளியில் இருப்பதாக பாவனை செய்து கொண்டிருந்த போதிலும்) ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது எல்லோருக்கும் தெரியும்; அத்துடன் பொலிஸ், இராணுவம் போன்ற அரசின் முக்கியமான அங்கங்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பராமரித்து வருபவர். உங்களுடைய அபாரமான வாக்குவன்மையைப் பயன்படுத்தி நீங்கள் தொடர்ச்சியாக நிகழ்த்தி வந்த எழுச்சியூட்டும் உரைகள் மூலம் (போர் இடம்பெற்ற காலப் பிரிவின் போது) பாதுகாப்புப் படையினரின் மனோதிடத்தை நிலைக்கச் செய்வதற்கும், தூண்டுவதற்கும் பெரும் பங்களிப்புச் செய்திருந்தீர்கள் என்பது முழு நாடும் அறிந்த விடயம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த மே 9 ஆம் திகதி இரவு உங்கள் வீடு ஒரு வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, உங்கள் பிள்ளைகளின் பெறுமதியான கல்வி உபகரணங்கள் கொள்ளையிடப்பட்ட பொழுது, அந்த கொடுமையை பொலிசார் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அந்த வன்முறைக் கும்பலிடமிருந்து உங்கள் வீட்டையும், பெறுமதியான பொருட்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கென கடைசி வரையில் இராணுவம் அழைக்கப்படவில்லை என்றும் கடும் விரக்தித் தொனியில் சொன்னீர்கள்.
தோழர், மன்னிக்க வேண்டும். இப்படியான உரைகள் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டப்படும் ஒரு கவிதை இருக்கிறது. அது புளித்துப் போன ஓர் உதாரணமாக இருந்து வந்தாலும் கூட, அதன் பொருத்தப்பாட்டைக் கருத்திற் கொண்டு இங்கு அதனை உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்படுகின்றது:
‘முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தார்கள். நான் பேசாமல் இருந்தேன்; ஏனெனில், நான் ஒரு சோசலிஸ்டாக இருக்கவில்லை.
பின்னர் அவர்கள் தொழிற்சங்கத் தலைவர்களைத் தேடி வந்தார்கள். நான் பேசாமல் இருந்தேன்; ஏனெனில், எனக்கு எந்த ஒரு தொழிற்சங்கத்துடனும் தொடர்பிருக்கவில்லை.
அதற்குப் பிற்பாடு அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள். நான் பேசாமல் இருந்தேன்; ஏனெனில், நான் யூத இனத்தைச் சேர்ந்தவனாக இருக்கவில்லை.
இறுதியாக, அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்; அப்பொழுது எனக்காகப் பேசுவதற்கு யாருமே எஞ்சியிருக்கவில்லை!
1930 களில் ஜேர்மனியில் ஹிட்லரால் தூண்டப்பட்ட இனத் துவேஷம் மற்றும் சிறுபான்மை வெறுப்பு என்பவற்றின் விளைவாக இறுதியில் பல இலட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். ஒட்டுமொத்த மனித குலத்தின் மனச்சாட்சியையும் உலுக்கிய அந்த மாபெரும் துயர நிகழ்வு எடுத்து வந்த குற்றவுணர்வில் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் 1946 இல் எழுதிய கவிதை இது.
அதாவது, தொடர்ச்சியாக நாட்டில் அநியாயங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அவற்றைத் தடுக்க வேண்டியவர்கள், தட்டிக் கேட்க வேண்டியவர்கள் அவ்வாறு செய்யாது மௌனம் சாதித்தால் இறுதியில் என்ன நடக்க முடியும் என்பதனை அது சொல்கிறது.
‘இந்த அராஜகத்தை அரசாங்கம் தடுக்கத் தவறியது ஏன்’ என்பதே நீங்கள் எழுப்பும் கேள்வி. மிகவும் நியாயமான கேள்வி. அத்துடன் இப்படியான ஒரு கேள்வியை எழுப்புவதற்கு மற்றவர்களைப் பார்க்கிலும் உங்களுக்கு ஒரு தார்மீக உரிமை இருக்கிறது.
முதலில் உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். இன்னொருவரின் வீடுவாசல்கள், சொத்துக்கள் அழிக்கப்படுவதைப் பார்த்து எவராவது சந்தோசப்பட்டால் அந்த நபர் கடும் மனச்சிதைவையும், வக்கிர புத்தியையும் கொண்டிருக்கும் ஒருவராகவே இருக்க முடியும். நள்ளிரவில் ஒரு வன்முறைக் கும்பல் வந்து, தமது வீட்டை அடித்து உடைக்கும் பொழுது, அந்தக் குடும்பத்தின் பெண்கள் மற்றும் பிள்ளைகள் மீது அது எப்படியான பேரதிர்ச்சியையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்த முடியும் என்பதனை எம்மால் ஊகிக்க முடியும்.
உங்கள் பாராளுமன்ற உரை 12 நிமிடங்கள் அளவில் சுருக்கமானதாக இருந்து வந்த காரணத்தினாலும், நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் தீவிரமாக உணர்ச்சிவசப்பட்டிருந்த காரணத்தினாலும் இதனுடன் சம்பந்தப்பட்ட இன்னும் சில விடயங்களை கூற மறந்திருப்பீர்கள் என நினைக்கிறோம். அதாவது, இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் பொலீசாரும், இராணுவத்தினரும் முற்றாக முடக்கப்பட்டிருந்த நிலையில் வன்முறைக் கும்பல்கள் எவ்வித அச்சமும் இல்லாமல், சாவகாசமாக வீதிகளில் இறங்கி, மக்களின் வீடு வாசல்களையும், சொத்துக்களையும், தொழில் நிலையங்களையும் அழித்து, அட்டகாசம் புரிந்திருக்கிறார்கள். ஒரு சில கொலைகளையும் நிகழ்த்தியிருக்கிறார்கள். அளுத்கம (2014), கிந்தோட்டை (நவம்பர் 2017), அம்பாறை (பெப்ரவரி 2018), திகன (மார்ச் 2018), மினுவாங்கொடை, குளியாப்பிட்டி மற்றும் ஹெட்டிபொல (மே 2019) ஆகிய இடங்களில் நிகழ்ந்த கொடூரங்கள் இதற்கான உதாரணங்கள்.
இவற்றைத் தூண்டியவர்கள், வழிகாட்டிச் சென்றவர்கள் மற்றும் நேரடியாக தாக்குதல்களை நடத்தியவர்கள் யார் என்பதைக் காட்டும் துல்லியமான டிஜிட்டல் சான்றுகள் மற்றும் CCTV பதிவுகள் இருந்து வந்த போதிலும், எவரும் இதுவரையில் அக்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படவில்லை. மிக முக்கியமாக, அந்த வன்முறைகளின் போது தமது கடமையைச் செய்யத் தவறிய பொலிஸ் அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, 2012 ஆம் ஆண்டின் பின்னர் தண்டனை குறித்து துளியும் அச்சமின்றி (Immunity) பகிரங்கமாக குற்றங்களை நிகழ்த்தும் ஒரு கலாசாரம் எமது நாட்டில் வளர்ச்சி கண்டு வந்திருக்கிறது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதன் இயல்பான ஒரு நீட்சியாகவே மே 9 சம்பவங்களை நாங்கள் பார்க்கிறோம்.
இது எமது ஒட்டுமொத்த அரசியல் சமூகத்தையும் பீடித்திருக்கும் ஒரு புற்றுநோயாக இருந்து வருகின்றது. அந்தப் புற்றை அறுவைச் சிகிச்சை செய்து முழுமையாக அகற்றாமல், அவ்வப்பொழுது தோன்றும் சிறு சிறு காயங்களுக்கு சிகிச்சையளிப்பதால் மட்டும் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. அதாவது, ஒட்டுமொத்த சித்திரத்தையும் உதாசீனம் செய்து தனியொரு சம்பவத்தை மட்டும் (Missing the Wood for the Trees) சுட்டிக்காட்டி, ‘இந்த அராஜகம் ஏன்’ என்று நீங்கள் ஆவேசக் குரல் எழுப்புகிறீர்கள்.
இப்பொழுது இன மத பேதமில்லாமல் நாட்டு மக்கள் அனைவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகளுக்கு இலக்காகி, பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள். வரலாற்றில் முதல் தடவையாக தமது அணியைச் சேர்ந்த ஜனாதிபதி பதவியில் இருக்கும் பொழுது, அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டிருக்கின்றன. ஓர் இருண்ட எதிர்காலம் குறித்து ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு பாரிய முன்னெச்சரிக்கையாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம்.
ஆகவே, மே 9 ஆம் திகதி பகல் கொழும்பு நகரிலும், இரவு நாடெங்கிலும் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோளை நாங்களும் உங்களுடன் இணைந்து மீண்டும் வலியுறுத்துகிறோம். அதே வேளையில், அதற்கு முன்னர் நாட்டில் இவ்விதம் இடம்பெற்றிருக்கும் எண்ணற்ற சம்பவங்களின் போது பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நீதியும், நிவாரணமும் வழங்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றோம்.
அடுத்து முக்கியமான ஒரு கேள்வியும் இங்கு இருக்கின்றது. பொலிசாரும், இராணுவமும் ஜனாதிபதியின் கட்டளைகளை ஏற்றுச் செயற்பட வேண்டுமென்பது அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் ஓர் ஏற்பாடு. ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் உரிய நேரத்தில் அந்தக் கட்டளைகள் விடுக்கப்படாவிட்டால் அல்லது எத்தகைய கட்டளைகள் விடுக்கப்பட வேண்டுமோ அதற்கு மாறான விதத்தில் கட்டளைகள் விடுக்கப்பட்டால் அல்லது அரசாங்கத்தில் இரு அதிகார மையங்கள் செயற்படும் நிலை ஏற்பட்டு, ஒன்றுக்கொன்று முரணான விதத்தில் கட்டளைகள் கிடைத்தால் பாதுகாப்புத் துறையினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டுதலை வழங்கும் திட்டவட்டமான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கும் பொழுது, கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, மக்கள் சொத்துக்கள் அழிக்கப்படும் பொழுது அவற்றை தடுத்து நிறுத்துவதற்கென கட்டளைகள் வரும் வரையில் பொலிசார் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உடனடியாக அவர்கள் செயற்பட முடியும். அதற்கான முழுமையான அதிகாரமும், பொறுப்பும் அவர்களுக்கு இருக்கின்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் கடந்த பல வருட காலமாக இது இடம்பெறவே இல்லை.
ஆகவே, இனிமேல் இத்தகைய சம்பவங்கள் ஏற்படும் பொழுது அவற்றைத் தடுக்கத் தவறினால் அந்தந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரிகள், பிராந்தியத்துக்குப் பொறுப்பான டிஐஜி போன்ற உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இறுதியில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை அவற்றுக்கு நேரடியாகப் பொறுப்புக் கூற வைப்பதற்கும், அவர்கள் கடமை தவறியிருந்தால் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி, தண்டனைகளை வழங்குவதற்கும் உடனடியாக ஒரு சுயாதீனமான பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கோரிக்கையை உங்களைப் போன்ற வலுவான அரசியல்வாதிகள் இன்றைய அரசிடம் முன்வைக்க வேண்டும். அதை விடுத்து மே 9 சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு மட்டும் தண்டனை வழங்க வேண்டுமென நீங்கள் கோரிக்கை விடுப்பதன் மூலம் இலங்கையைப் பீடித்திருக்கும் இந்தப் புற்றுநோயை ஒரு போதும் அகற்ற முடியாதிருக்கும் என்பதே எமது தாழ்மையான அபிப்பிராயமாகும்.
அந்தப் பொறிமுறை உருவாக்கப்படாத வரையில்; இனிமேலும் இத்தகைய அராஜகச் செயல்கள் இலங்கையில் நிகழ்ந்த வண்ணமே இருக்கும். மே 9 ஆம் திகதி இரவு கிட்டத்தட்ட 35 இற்கும் மேற்பட்ட அரசாங்கக் கட்சி அரசியல்வாதிகளின் வீடுகளை இலக்கு வைத்து நிகழ்த்தப்பட்ட அந்தச் சம்பவங்கள், பிறிதொரு நாளிரவு இதே விதத்தில் பொலிஸ் முடக்கப்பட்டிருக்கும் பொழுது எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது பாய முடியும்; மற்றொரு சந்தர்ப்பத்தில் மிகவும் பலவீனமான ஒரு மதச் சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட முடியும். அந்த ஆபத்து எப்பொழுதும் எம்மை எதிர்நோக்கியிருக்கின்றது.
ஆகவே, பேச்சு வன்மையும், மக்களைக் கவர்ந்திழுக்கக் கூடிய ஆளுமைப் பண்புகளையும் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற தலைவர்கள் இந்த பொறிமுறைக்காக உடனடியாக குரலெழுப்ப வேண்டும் என நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறான ஒரு கோரிக்கையை நீங்கள் அரச தரப்பிடம் முன்வைத்தால் மட்டுமே மே 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையைப் போன்ற ஓர் உரையை நிகழ்த்துவதற்கான தார்மீக உரிமையை நீங்கள் கொண்டுள்ளீர்கள் என்ற விடயத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
நன்றி, வணக்கம்!
-Vidivelli