ஏ.ஆர்.ஏ.பரீல்
ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் மற்றும் முறையான பொருளாதார முகாமைத்துவமின்மை காரணமாக நாடு இன்று பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் இன்னல்களுக்குள்ளாகியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் வர்த்தகர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் விடிவெள்ளியுடன் கருத்து பரிமாறிக்கொள்கையில் தெரிவித்ததாவது; ‘எமது முஸ்லிம் வர்த்தகர்கள் இச்சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை பதுக்காமல் நியாயமான விலையில் இன பேதமில்லாமல் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இதனையே எமது மார்க்கமும் வலியுறுத்தியுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி அதனை கூடுதலான விலைக்கு விற்று அந்தப்பணத்தை ஸதக்கா கொடுப்பதும் பாவமான காரியமாகும். இவ்வாறான ஸதக்கா இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நியாயமான விலைக்கு பொருட்களை விற்று அந்த இலாபத்தில் ஸதக்கா கொடுப்பதே நன்மையாக அமையும். நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமையில் கொள்ளை இலாபம் பெறுவது பாவமாகும். இவ்விடயத்தில் முஸ்லிம் வர்த்தகர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும். இதுவே இறைவனின் அருட்கொடையாக அமையும்.
அத்தோடு முஸ்லிம்கள் விவசாயத்திலும் நாட்டம் கொள்ள வேண்டும். விவசாயம் பெரிய தர்மமாகும். நவீன முறைகளைக் கையாண்டு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம். கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் விவசாயத்தில் ஈடுபடமுடியும். நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விவசாய நிலம் இல்லாவிட்டால் தங்கள் வீட்டின் மாடிகளில் உரப் பைகளிலும், பிளாஸ்டிக் உபகரணங்களிலும் தங்களுக்குத் தேவையான விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளலாம்.
இலங்கை நிர்வாக சேவை சங்கம் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அதிகாரிகளின் ஊடாக விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் தட்டுப்பாடு நிலவும் விவசாய உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கு விவசாய மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
உலமா சபை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்புசபை பள்ளிவாசல்கள் ஊடாக முஸ்லிம்களை விவசாயத்தில் ஊக்குவிக்க முடியும். ஆலோசனைகளை வழங்க முடியும். ஏனைய மதத்தவர்களையும் இத்துறையில் இணைத்துக் கொள்ளலாம்.
அரசியல் பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வுகள் கிட்ட வேண்டுமென்றால் உலமாக்களும் புத்திஜீவிகளும் முஸ்லிம்களைத் தெளிவுபடுத்த வேண்டும். இன்று மக்கள் தங்கள் சுயநலன்களுக்காகவே அரசியல் செய்கிறார்கள். பாராளுமன்றத்துக்கு தகுதியற்றவர்களைத் தெரிவு செய்கிறார்கள். பாராளுமன்றத்துக்கு அனுப்பப்படுபவர்களுக்குத் தங்கள் கடமை என்னவென்று தெரியவில்லை.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் உலமா சபையும், புத்தி ஜீவிகளும் ஆராய்ந்து அவர்களில் தகுதியானவர்கள் பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டும். ஏனைய சமூகத்தவர்களுக்கும் இத்தெளிவுகளை வழங்க வேண்டும். அவர்களுடன் இணைந்து செயற்படவேண்டும்.
உள்ளூராட்சிசபை, மாகாணசபை மற்றும் பாராளுமன்றத்துக்கு தகுதியற்றவர்களே பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகிறார்கள். இந்நிலைமை மாற வேண்டும். இவ்விடயத்தில் எல்லா சமூகத்தினரும் பிழைவிடுகிறார்கள். எனவே வாக்காளர்கள் மீதுள்ள பொறுப்பு தெளிவுபடுத்தப்படவேண்டும்.
தகுதியானவர்களை பிரதிநிதிகளாக பாராளுமன்றத்துக்கு அனுப்பிவிட்டு விமர்சிப்பதால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை. பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் எங்கு போகிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாமலிருக்கிறது. எதிர்காலத்தில் அரசியலில் மாற்றங்கள் நிகழவேண்டுமென்றால் கிராம, நகர மட்டத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றார்.- Vidivelli