நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் மிகப் பாரதூரமான பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமித்துள்ளார். ராஜபக்சாக்களுக்கு எதிரான மக்களின் கோபம் வன்முறையாக வெடித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் நாட்டின் அரச இயந்திரத்தைப் பொறுப்பெடுத்து நடத்துவதற்கு முன்வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்புவிடுத்தார்.
எனினும் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச அதற்கு முன்வரவில்லை. இந் நிலையில் பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட ரணில் விக்ரமசிங்க, அப்பொறுப்பை ஏற்றுச் செயற்பட முன்வந்தார். இதற்கு முன்னர் ஐந்து தடவைகள் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற வகையில் அவரது அனுபவம் இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்த உதவும் என எதிர்பார்க்க முடியும்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து பல மாதங்களுக்கு முன்னரே சபையில் எதிர்வுகூறிய ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவே விளங்குகிறார். எனினும் மக்களின் ஆதரவைப் பெறாத, பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த கட்சி என்ற வகையிலும் தேசியப் பட்டடியல் மூலம் பாராளுமன்றம் நுழைந்தவர் என்ற வகையிலும் ரணிலின் எச்சரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக பொருளாதாரம் குறித்த எந்தவித தகைமையும் அனுபவமுமில்லாத பசில் ராஜபக்ச மற்றும் அஜித் கப்ரால் போன்றவர்களின் முட்டாள்தனமாக யோசனைகளைப் பின்பற்றித் தீர்மானங்களை எடுப்பதிலேயே ஜனாதிபதி குறியாகவிருந்தார். இன்று நிலைமைகள் எல்லைமீறிச் சென்றபிறகே ஜனாதிபதி இருப்பவர்களில் பொருத்தமான ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்குகின்ற தீர்மானத்தை எடுத்திருக்கிறார்.
இருந்தபோதிலும் ரணில் விக்ரமசிங்க, எந்தவித அழுத்தங்களுமின்றி அமைச்சரவையை வழிநடாத்திச் செல்வதற்கு பொது ஜன பெரமுனவினர் எந்தளவு ஒத்துழைப்பு வழங்கப் போகிறார்கள் என்பதிலேயே நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மீட்சி தங்கியுள்ளது எனலாம். நேற்று முன்தினம் சபையில் அக் கட்சியினர் நடந்து கொண்ட விதம் இந்த சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்கிறது. குறிப்பாக பசில் ராஜபக்ச தொடர்ந்தும் தனது அரசியல் சித்து விளையாட்டுக்களைக் காட்ட முனைவார் என்பதில் சந்தேகமில்லை. மே 9ஆம் திகதியுடன் திருகோணமலை கடற்படை முகாமுக்குள் ஒளிந்துகொண்ட மஹிந்த ராஜபக்ச, நேற்றுதான் முதன்முறையாக பொது வெளியில் தோன்றினார். பாராளுமன்ற அமர்விலும் கலந்து கொண்டார். தனது தந்தை ஒருபோதும் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லை என்றும் தொடர்ந்தும் அவர் பொது ஜன பெரமுனவை வழிநடாத்துவார் என்றும் நாமல் ராஜபக்ச எம்.பி. நேற்றுத் தெரிவித்திருக்கிறார். ஆக, இந்த நாட்டைப் படுபாதாளத்தில் தள்ளிய ராஜபக்ச குடும்பமும் அவர்களைப் பின்பற்றும் ஏனைய அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் அரசியல் செய்யப் போகிறார்கள் என்பதையே இந்த நகர்வுகள் குறித்து நிற்கின்றன.
மறுபுறம் எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில் தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்பி சபையின் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதிலேயே காலத்தைக் கடத்துகின்றன. தற்போதைய உடனடித் தேவையாகவுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பில் அவர்கள் முறையான யோசனைகளை முன்வைத்து அழுத்தங்களை வழங்குவதாகத் தெரியவில்லை.
இது மஹிந்த, கோத்தா, ரணில், சஜித், அனுர என வேறுபாடுகாட்டிக் கொண்டிருப்பதற்கான நேரமல்ல. இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாட்டைத் தூக்கி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நேரம்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக நஷ்டத்தில் இயங்கும் பல நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வேண்டும் என்ற யோசனையை பிரதமர் ரணில் முன்வைத்துள்ளார். குறிப்பாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பாரிய நட்டத்தில் இயங்குகிறது. இறுதியாக 2008 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டபோது, 4428 மில்லியன் ரூபாவை இலாபமாகப் பெற்ற அந் நிறுவனம் 2020 ஆம் ஆண்டு 47198 மில்லியன் ரூபா நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அப்படியால் இந்நிறுவனத்தை தொடர்ந்தும் இவ்வாறான பாரிய நட்டத்தில் நடத்திச் செல்ல வேண்டுமா அல்லது தனியாரிடம் ஒப்படைத்து மீண்டும் இலாபமீட்டச் செய்ய வேண்டுமா என்பது பற்றிய கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதே பாராளுமன்றத்தின் பணியாகும். இவ்வாறான விவாதங்கள், கலந்துரையாடல்களை விடுத்து பிரயோசனமற்ற விடயங்களில் கவனம் செலுத்துவது கவலைக்குரியதாகும்.
பாராளுமன்றமே சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட நிறுவனம் என்ற வகையில் பொருளாதார மீட்சிக்கான வழிகளை உடன் கண்டறிந்து, தேவையான சட்டங்களை இயற்றி அல்லது திருத்தி தீர்வுகளைக் காண அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதைவிடுத்து சிறுபிள்ளைகள் போல ஒருவரையொருவர் விரல் நீட்டிக் குற்றம்சாட்டி விளையாடிக் கொண்டிருப்பதற்கான தருணம் இதுவல்ல. பாராளுமன்ற அமர்வுகளைச் சரிவரப் பயன்படுத்தி தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். மக்கள் 225 பேரையும் தெரிவு செய்து அனுப்பியது சண்டைபிடிப்பதற்கு அல்ல. மாறாக சாத்தியமான தீர்மானங்களை எடுப்பதற்கே என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். – Vidivelli