கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
கடந்த பல வாரங்களாகக் காலிமுகத் திடல் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியாக மாறி பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருக்கிறாள். “கோத்தாவே போ”, “225 தேவையில்லை”, “கோத்தா-போ-கிராமம்” என்ற கோஷங்கள் எல்லாமே அந்தக் கர்ப்பிணியின் பிரசவ வேதனையின் அழுகுரல்களே. அந்த மாதாவின் வயிற்றிலிருந்துதான் நவ இலங்கைக் குழந்தையொன்று பிறக்கப்போகும் சாயல்கள் தென்படுகின்றன. அது ஒரு சுகப்பிசவமாக இருக்கவேண்டுமென அங்கு குழுமி இருக்கும் முஸ்லிம்களும் பிரார்த்திப்பதைக் காண பெருமிதமாக இருக்கிறது. அதே சமயம், இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களும் அப்பிரார்த்தனைக்கு ஆமீன் கூறவேண்டுமென இக்கட்டுரை மிக வினயமாய் வேண்டுகிறது.
சுதந்திரம் கிடைத்த நாள்முதல் இன்று வரை எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் கட்டியாண்டு பேயாட்டம் ஆடி, நாட்டின் பல்லினச் சமூக அமைப்பைச் சீரழித்து, பொருளாதாரத்தையும் வங்குரோாத்து நிலைக்குத் தள்ளி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறநாடுகளிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்தும் அளவுக்குக் கொண்டுவந்துள்ள இனவாத ஆட்சிப் பொறிமுறை விழிப்புற்ற ஓர் இளம் சந்ததியின் பார்வையில் அதன் போலி வசீகரத்தையெல்லாம் இழந்து நிர்வாண கோலத்தில் நிற்கின்றது. அந்த ஆட்சிப் பொறிமுறையின் பேயாட்டம் கடந்த சுமார் இரண்டுவருட ராஜபக்ச குடும்ப அரசாங்கத்தில் அதன் உச்சத்தை எட்டியது. இன்று நாடு அனுபவிக்கும் நெருக்கடிகள் அனைத்துமே அந்த இரண்டாண்டுகால ஆட்சியின் ஒட்டுமொத்தமான விளைவுகள் என்று கூறினால் அது மிகையாகாது. எனவேதான் “கோத்தாவே போ” என்ற கோஷத்தின் அடிநாதமாக ராஜபக்சாக்களே போங்கள் என்ற ஒலி அமைந்துள்ளது.
இந்த நிலையில் புளித்துப்போன இனவாதப் பல்லவியையே தேர்தல் அரங்குகளிற் பாடிப்பாடிப் பழக்கப்பட்ட இன்றைய நாடாளுமன்றத்தின் 225 பரிதாபப் பிரகிருதிகளும் எப்படியாவது அல்லது எந்த உருவத்திலாவது பழைய அமைப்பையே பாதுகாத்து ஆட்சியைத் தொடரத் தீர்மானித்துள்ளனர். அதற்காக சர்வகட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு என்ற பெயரில் ஒரு ராஜபக்சவை மட்டும் ஜனாதிபதியாக வைத்துக்கொண்டு மற்றவர்களை நீக்கி, ஜனாதிபதியின் அதிகாரங்களையும் குறைத்து அவற்றை தமக்குள் பங்குவைத்துக் கொண்டு தொடர்ந்தும் மூன்று வருடங்களைக் கடத்த விளைகின்றனர். இந்த முயற்சி இவர்களிடம் காலிமுகத் திடலின் பிரசவ வேதனையை உணரக்கூடிய திறன் இல்லை என்பதையே தெளிவாக்குகிறது.
அதுமட்டுமல்ல, இந்த 225 ஆன்மாக்களும் இவர்களுக்கு முன்வந்த நாடாளுமன்ற சகாக்களும் சேர்ந்து ஏற்படுத்தியுள்ள இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு என்ன தீர்வு என்பது பற்றி எந்தத் திட்டமோ செயற்பாடுகளோ இவர்களிடம் இல்லை. எங்களிடம் உண்டு என்று கூறும் மக்கள் விடுதலை முன்னணி அங்கத்தவர்களும் அதை வெளிப்படுத்தாதது ஒரு குறையே. இந்த நிலையில் இந்த 225 பேரும் தொடர்ந்தும் சட்டசபையில் வீற்றிருப்பதில் ஏதேனும் பயன் மக்களுக்கு உண்டா? இந்த வினாவைத்தான் காலிமுகத் திடலிலே திரண்டுள்ள இளைஞர்களும் யுவதிகளும் கேட்கின்றனர்.
ஊழலும் திருட்டும் ஏமாற்றும் நிறைந்த ஓர் அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் அதன் அங்கத்தவர்களின் தனிப்பட்ட நலனையே அபிவிருத்தி செய்தமையை சர்வதேச ஊடகங்களே வெளிப்படுத்தியுள்ளன. அதேபோன்று இன்றைய எதிர்க்கட்சியினர் தாம் ஆட்சியிலிருந்தபோது செய்த ஊழல்களும் ஏற்கனவே அம்பலமாகி உள்ளன. ஜே. ஆர். ஜெயவர்த்தன 1977ல் அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதார அமைப்பும் அவ்வாறான அமைப்புகளின் உலகளாவிய செயற்பாடுகளும் இவ்வாறான ஊழல்களுக்கும் திருட்டுகளுக்கும் நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இலங்கையிலே அந்த ஊழல்களின் ஒப்பற்ற ஜவான்களாக ராஜபக்ச குடும்பம் மாறியுள்ளதை இன்றைய இளவல்கள் நன்குணர்வர். அவற்றுள் சிலவற்றை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க துணிவுடன் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் இவர்கள் எல்லாரையுமே துரத்திவிட்டு தகைமையும் கண்ணியமும் மிக்க ஒரு குழுவினரை மக்கள் தெரிந்தெடுக்கும் ஒரு வாய்ப்பினை விரைவில் ஏற்படுத்துமாறு கோரியே அறப்போரொன்று காலிமுகத் திடலை மையமாகக் கொண்டு ஆரம்பித்து இன்று அப்போராட்டம் நாடெங்கிலும் பரவியுள்ளது.
இந்தப் போரின் அடிப்படைக் கோரிக்கை என்னவெனில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இனவாத உருவில் அமைக்கப்பட்டு நாட்டை நாசமாக்கிய அரசியல் பொருளாதாரப் பொறிமுறையை அடியோடு தகர்த்தெறிந்துவிட்டு, நாட்டின் பிரஜைகள் யாவருமே ஒரு தாய் பெற்ற பிள்ளைகள், ஆதலால் அவர்கள் யாவரும் சமமே என்ற அடிப்படையில் ஒரு நவ இலங்கையை உருவாக்கி அதற்காகப் பல தியாகங்களைச் செய்து அதன் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகும். அதற்காக ஒரு பொருளாதாரத் திட்டத்தை வகுத்து அதன் நெடுங்கால இலக்குகள் எவை குறுங்கால இலக்குகள் எவையென்று வகுத்து அவற்றின் அடிப்படையில் அத்திட்டத்தைச் செயற்படுத்தல் மிக அவசியம். அந்தத் திறனுள்ள பலர் உள்நாட்டிலே உளர். ஆனால் அதற்கு முதலில் இருக்கின்ற 225யும் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். அது இலகுவில் முடியுமா? இதுதான் இன்றைய பிரச்சினை.
ஒன்றுமட்டும் உண்மை. அதாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தலொன்று நடைபெற்றால் இருக்கின்ற 225ல் அதிகமானவர்கள் மீண்டும் வெற்றிவாகைசூடி திரும்பப் போவதில்லை. ஆகவே எப்படியாவது அடுத்த மூன்று வருடங்களுக்கும் தமது ஆசனங்களைக் காப்பாற்றுவதே அவர்களின் பிரதான நோக்கம். ராஜபக்ச கூட்டணி அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஓரிரண்டு அமைச்சர்கள்கூட இப்போது காலிமுகத்திடலில் நடக்கும் போராட்டத்திற்கு அந்நிய சக்திகளின் சூழ்ச்சி என்ற ஒரு சாயத்தைப் பூசத் தொடங்கியுள்ளனர். அதே சமயம் அக்கூட்டணியிலிருந்து விலகிய மற்றைய கட்சிகளுடன் கைகோர்த்து புதிய ஒரு பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்கப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக பௌத்த சங்கத்தினருள் ஒரு பகுதியினரும் இயங்கத் தொடங்கியுள்ளனர். இன்றைய சீரழிவுகளுக்குப் பௌத்த சங்கத்தினரும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இதைப்பற்றிய விபரங்களை ஏற்கனவே எனது ஆங்கிலக் கட்டுரைகளில் கொழும்பு டெலிகிறாப் இணைய இதழில் வெளியிட்டுள்ளேன்.
இந்த முயற்சிகள் வெற்றியளிக்குமானால் காலிமுகத் திடல் போராட்டத்தை படைகளைக்கொண்டு நசுக்க அவர்கள் முனையலாம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு ஓர் இருண்ட முகமும் உண்டு என்பதை அவரே 2021 இல் அம்பாறை மாவட்டத்தின் உகனையில் பேசும்போது பகிரங்கமாகவே கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கெதிராக அந்த முகமே வெளிப்பட்டது. இப்போதும் அதே முகம் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு எதிராக வெளிப்படலாம். ஈற்றில், சுகப்பிரசவத்துடன் பிறக்கவேண்டிய நவ இலங்கைக் குழந்தையை அதன் தாயின் வயிற்றிலேயே அழித்துவிட இடைக்கால அரசு முடிவெடுக்கும். ஏற்கனவே பல இடங்களில் அறப்போராட்த்தின் ஆர்வலர்களுக்கு எதிராக அரசு சார்பிலிருந்து பயமுறுத்தல்கள் நடைபெற்றுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. ஆனாலும் இந்தத் தந்திரங்களை மிக உன்னிப்பாக உலக அரங்கு கவனித்துக் கொண்டிருக்கிறது. இளைஞர்களுக்கும் அந்த உபாயம் தெரியாமலில்லை.
ஆயுதம் தாங்காத அறப்போரொன்றை ஆயுதப்படையினரால் ஒடுக்கி இரத்தக் களரியை ஏற்படுத்தி பல உயிர்ப் பலிகளின் மத்தியிலே தமது ஆட்சியைத் தொடரலாமென ஜனாதிபதியும் அவரது அடிவருடிகளும் நினைத்தால் அதைவிடவும் ஒரு முட்டாள்தனம் இருக்க முடியாது. பொருளாதாரம் மேலும் சீரழிவது நிச்சயம். முழு நாடே ஒரு புரட்சிக் களமாகவும் மாறலாம். அதனால் உலக அரங்கு இந்த ஆட்சியினருக்கு எதிராகச் சீறிப் பாயும்.
இன்றைய இளஞ்சந்ததியின் சக்தியை யாரும் தரக்குறைவாக எடைபோடக் கூடாது. அது கேட்பதெல்லாம் ஆட்சி அதிகாரத்தை அல்ல. மாறாக, ஜனநாயகம் வழங்கும் சுதந்திரங்களுடனும், பொருளாதார நீதியுடனும், மனித உரிமைகளுடனும், சமமாக யாவரையும் ஆட்சிசெய்யும் ஓர் அரசாங்கத்தையே அவர்கள் உருவாக்க முனைகின்றனர். அவ்வாறான ஓர் அரசாங்கத்தை கடந்த எழுபது ஆண்டுகளாக இலங்கை காணவில்லை. ஆட்சிசெய்த எல்லா அரசுகளுமே ஏதோ ஓர் இனத்தையோ மதத்தையோ கலாச்சாரத்தையோ நசுக்கித்தான் ஆட்சி செய்துள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு நவ இலங்கையை சிருஷ்டிக்கவே அவர்கள் போராடுகிறார்கள். அவர்கள் வெல்ல வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையும்.
முடிவாக ஒன்று. அவர்களின் போராட்டம் வெற்றிபெறுமானால் எதிர்காலத்தில் இனவாதக் கட்சிகளுக்கு இலங்கையில் இடமிருக்காது. இன்று முஸ்லிம்களின் மத்தியிலும் ஒரு கட்சி இரண்டாகப் பிரிந்து இரண்டுமே இனவாதத்தை கக்கிக்கொண்டு முஸ்லிம்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. அக்கட்சிகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் நடத்தைகளும் பேச்சுக்களும் முஸ்லிம் இனத்தையே மற்ற இனத்தவர்களின் சிரிப்புக்கும் ஏளனத்துக்கும் பலியாக்கியுள்ளன. அதைப்பற்றி ஏற்கனவே சில கட்டுரைகள் இப்பத்திரிகையில் வெளிவந்துள்ளன. எனவே, அடுத்த தேர்தல் வரும்போது அக்கட்சிளுக்கு சாவுமணி அடிக்கப்பட வேண்டியது முஸ்லிம் சமூகத்தின் கடமை. வரலாற்றின் குப்பைத் தொட்டி இக்கட்சிகளின் வரவுக்காகக் காத்திருக்கிறது.- Vidivelli