ஏறாவூரில் நஸீர் அஹமடின் அலுவலகம் ஆடைத் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்
உறவினர்களின் வீடு, உணவகமும் தாக்கப்பட்டன
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைகளில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுற்றாடல் அமைச்சரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அகமட்டின் அலுவலகம், அவருக்குச் சொந்தமான ஆடைத் தொழிற்சாலைகள் என்பன தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. அத்துடன் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான வீடு மற்றும் உணவகம் என்பனவும் தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் சொத்துக்களை இலக்கு வைத்து வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையிலேயே இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்த நஸீர் அகமட்டின் சொத்துக்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
வாடகைக் கட்டிடமான அவரது அரசியல் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதோடு, அவரது சகோதரரின் வீடு ஒன்றும் சகோதரரின் புதல்வருக்குச் சொந்தமான உணவகம் ஒன்றும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இதேவேளை நஸீர் அகமட்டிற்குச் சொந்தமான ஏறாவூர், புன்னைக்குடா வீதியில் அமைந்துள்ள மூன்று ஆடைத்தொழிற்சாலைகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இவற்றில் ஒரு தொழிற்சாலை முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த அதி நவீன ஆடைத் தொழில் இயந்திரங்கள், மின் பிறப்பாக்கிகள், ஜன்னல் கண்ணாடிகள் என்பனவும் அடித்து நொறுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட யுவதிகள் தொழில்வாய்ப்புகளை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடங்களுக்கு விரைந்தபோதும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அகமட்டிற்கு எதிராக ஒன்று திரண்ட பெருந்திரளானோர் செவ்வாய்க்கிழமை மாலையிலிருந்து நள்ளிரவு வரை இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.- Vidivelli