மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம் : கைது செய்யப்பட்டோரில் வழக்கு தொடரப்படாத 13 பேர் விடுவிப்பு
ஏழு பேருக்கு பிணை; பத்து பேர் குறித்து விசாரணை தொடர்கிறது
(எம்.எப்.எம்.பஸீர்)
மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்படாத 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று வருடங்கள் மற்றும் இரு வருடங்களுக்கு மேலாக இவர்கள் விளக்கமறியலில் இருந்துவந்த நிலையிலேயே நேற்று மாவனெல்லை நீதிவான் தம்மிக ஹேமபால இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
அத்துடன் மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிவான், விசாரணைகள் நிறைவடையாத 10 பேரின் விளக்கமறியல் காலத்தை மட்டும் நீடித்து உத்தரவிட்டார்.
மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் 46 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 16 பிரதிவாதிகளுக்கு எதிராக மட்டும் கேகாலை மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவ்விசாரணைகள் எதிர்வரும் மே 18 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கேகாலை மேல் நீதிமன்றில் நீதிபதி ஜகத் கஹந்தகமகே தலைமையிலான யகி டி அல்விஸ் மற்றும் இந்திகா காலிங்கவங்ச ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகிறது. இந் நிலையிலேயே, ஏனைய 30 பேர் குறித்த விடயங்கள் மாவனெல்லை நீதிவான் நீதிமன்றின் பொறுப்பில் உள்ளது. அந்த விடயங்களே நேற்று விசாரணைக்கு வந்தன. இந்த 30 சந்தேக நபர்களில் பலர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைருடன் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் ஆஜரானார். இந் நிலையிலேயே சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்பகுதியில் மாவனெல்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவனெல்லை திதுல்வத்தையிலும் ஏனைய இடங்களிலும் ஐந்து புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் 46 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களில் 16 பேருக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தலை தடுப்பது தொடர்பிலான சர்வதேச இணக்காப்பாட்டு சட்டத்தின் கீழும் 21 குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரு சமூகங்களிடையே மோதலை உருவாக்க சதித் திட்டம் தீட்டியமை, 5 புத்தர் சிலைகளை தகர்த்தமை, சமூகங்களிடையே வெறுப்புணர்வுகளை தூண்டியமை, தோப்பூர் மாவனெல்லை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா பகுதியில் அதற்கான வதிவிட கருத்தரங்குகள் மற்றும் ஆயுதப் பயிற்சியினைப் பெற்றமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழும், ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்தரங்குகளுக்கு தேவையானவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கியமை தொடர்பில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை தடுக்கும் சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
2019 ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்திய பயங்கரவாதி சஹ்ரான் மற்றும் முறைப்பாட்டாளர் அறியாதவர்களுடன் இணைந்து பிரதிவாதிகள் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.
இக்குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்களையும், 92 சாட்சியாளர்களின் பட்டியலையும் சட்ட மா அதிபர் குற்றப் குற்றப் பத்திரிகையில் இணைத்துள்ளார்.- Vidivelli