ஜனாதிபதி சட்டத்தரணி
பாயிஸ் முஸ்தபா
காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் எம்.எச். மொஹம்மட் இன் 6ஆவது சிரார்த்த தினம் கடந்த ஏப்ரல் 26 இல் நினைவுகூரப்பட்டது. ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் நல்ல மனித நேயராகவும் நீண்ட காலமாக அவரை எனக்கு நன்கு தெரியும்.
அவருடைய அரசியல் வாழ்க்கை நீண்ட வரலாற்றைக் கொண்டது. அன்றைய கால இளைஞர்களுக்கு விஷேடமாக அரசியலில் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு அவருடைய அரசியல் வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகக் காணப்படுகின்றது.
எம்.எச்.மொஹம்மடின் அரசியல் பிரவேசம் சந்தர்ப்பவசத்தாலோ அல்லது தற்செயலாகவோ இடம்பெற்ற ஒன்றல்ல. உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் மக்களுக்கு நீண்ட காலமாக சேவை செய்து வந்த அரசியல் பாரம்பரியம் நிறைந்த குடும்பத்திலேயே அவர் பிறந்து வளர்ந்தவர். இதன் காரணமாக அவரிடம் பிறப்பிலேயே அரசியல் ஞானம் காணப்பட்டது. அவரது கொள்ளுப்பாட்டனார் அன்றைய சட்டவாக்கச் சபையின் அங்கத்தவராகக் காணப்பட்டதுடன் 1876ஆம் ஆண்டில் இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னோடியாகவும் காணப்பட்டார். அவரது மூத்த மாமன்களான எம்.ஐ.எம் ஹனீபா மற்றும் எம்.எல்.எம். செய்னுதீன் ஆகிய இருவரும் முறையே 1894 தொடக்கம் 1900 வரையும் 1900 தொடக்கம் 1907 வரையும் கொழும்பு மாநகர சபை அங்கத்தவர்களாக இருந்தனர்.
மொஹம்மட் தனது அரசியல் பயணத்தைத் தொடங்க மேற்கொண்ட வழிமுறைகள், அரசியலில் பயணிக்கும்போது எதிர்கொண்ட சவால்கள் அவர் அரசியலில் சிகரங்களை அடைய வழிவகுத்ததோடு. ஓர் அரசியல்வாதியாக அவருக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் காணப்படுகின்றது.
மொஹம்மட் தனது 24ஆவது வயதில் மாநகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். ஆரம்பத்தில் எஸ்.ஏ. விக்கிரமசிங்க மற்றும் பீட்டர் கெனமன் போன்ற தலைவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவர், இடது சாரியாக அரசியலில் தடம் பதித்தார்.
மொஹம்மதும், வீ.ஏ. சுகததாஸவும், எம்.எச். மொஹம்மடின் தந்தை ஆதரவாளராக இருந்த இலங்கைத் தொழிற்கட்சியின் ஆதரவாளர்களாக இருந்ததுடன் இறுதியாக கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
வாலிபர் மொஹம்மட் இலங்கை கமியூனிசக் கட்சியின் அங்கத்தவராக இருந்த அதேவேளை, 1947ஆம் ஆண்டு முதற் பகுதியில் கொழும்பு மாநகர சபைக்கு ஒரு சுயேட்சை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 1965ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் 1960ஆம் ஆண்டு ஒருமுறை கொழும்பு மாநகர சபை மேயராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 1965ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பொரளைத் தொகுதியில் போட்டியிட்டதுடன், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமசமாஜவாதி விவியன் குணவர்தனவைத் தோற்கடித்து அபார வெற்றி பெற்றதுடன், டட்லி சேனாநாயக்கவின் அமைச்சரவையில் தொழில் வேலைவாய்ப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
1977ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பொரளைத் தொகுதியில் இருந்து மீண்டும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன், ஜே.ஆர். ஜயவர்தனவின் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒருவரே இவர் ஆவார்.
ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் 9ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டிருந்தார். தனது அரசியலில் பெரும் பகுதியினை சிங்கள மக்கள் செறிந்து வாழும் பொரளைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் அம் மக்களிடம் இருந்து மிகுந்த ஆதரவையும் வரவேற்பையும் பெற்றிருந்தார்.
இவரது இஸ்லாமிய குடும்பப் பின்னணி காரணமாக இவரது வேட்பு மனுவை எதிர்த்தபோதிலும் மொஹம்மடின் நாட்டுப்பற்றைப் புரிந்து கொண்டதன் பின்னர், அவரது தீவிர ஆதரவாளராக மாறியிருந்தார். மொஹம்மட் சிங்கள மக்களின் சிறந்த நண்பனாக இருந்ததுடன் தனது சொந்த சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்வதில் பின் நின்றதில்லை.
பௌத்த விகாரைகளுக்கும் தம்ம பாடசாலைகளுக்கும் அவர் செய்த சேவைகள் இன்றும் சிங்கள மக்களால் நினைவுகூரப்படுகின்றது. அவர் இறுதிவரை சிங்கள மொஹம்மட் என்றே அழைக்கப்பட்டார். உதாரணமாக அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, சிங்கள மாணவர்கள் தம்ம அறநெறிப் பாடசாலைகளுக்குச் செல்வதற்கு இலவச பஸ் சேவை ஒன்றையும் வழங்கியிருந்தார்.
அரசியல் அல்லது சமய விவகாரங்களில் ஈடுபடுகின்ற போது, அவர் முஸ்லிம் தலைவர் என்று அழைக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. முஸ்லிம் உலமாக்கள் மற்றும் ஏனைய மத போதகர்களுடன் வேறுபாடு இன்றி சகலருக்கும் உரிய மரியாதையையும் கௌரவத்தையும் வழங்கினார்.
சமூகங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் “வாழ வழி விடு” என்ற கோட்பாட்டை உருவாக்கியதோடு, அவநம்பிக்கை, வகுப்பு வாதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட தேசிய வாதம் எமது சமூகத்தில் கருவுற்றுக் கொண்டிருந்த வேளை, தமிழ், முஸ்லிம், சிங்கள இனத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
மொஹம்மட் இனங்களுக்கிடையேயான ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். சர்வதேச ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வளர்க்க இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் கீழ் தேசிய ஒற்றுமை மற்றும் புரிந்துணர்விற்கான மையத்தினை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பிற்கு சவூதி அரேபியாவின் மக்கமா நகரில் உள்ள ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாம் அனுசரணை வழங்குவதுடன் கும்புருகமுவே வஜிர நாயக தேரர் (சப்ரகமுவ பல்கலைக்கழக உபவேந்தர்) மற்றும் பானகல உபதிஸ்ஸ தேரர் (ஜப்பான் இலங்கை மஹா போதி அமைப்பின் இலங்கைக்கான பிரதானி) ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் 1981ஆம் ஆண்டு இஸ்லாமிய கலாசார திணைக்களத்தை ஸ்தாபித்தது, அவர் முஸ்லிம் சமூகத்துக்குச் செய்த பாரிய சேவையாகும். முஸ்லிம் மத விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஹஜ் புனிதப் பயணம் தொடர்பில் எழுந்த பிரச்சினைகளை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்த மொஹம்மட், ஒரு சிறந்த ஆன்மிகவாதியாகவும் காணப்பட்டார். அவரது குறிக்கோள்கள் மிகவும் தூர நோக்குடையதாகக் காணப்பட்டது. வளர்ந்து வரும் ஓர் இளம் அரசியல்வாதிக்கு அவருடைய வாழ்க்கை ஒரு முன்னுதாரணமாகும். அத்தோடு, எதிர்கால முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஓர் எடுத்துக் காட்டுமாகும்.
மனிதர்களுள் ஒரு மகத்தான மனிதராக இன்றும் நினைவுகூரப்படுகின்றார். கடந்த தசாப்தங்களில் சகோதர சமூகங்களிடையே ஏற்பட்டுள்ள தப்பபிப்பிராயங்களுக்கு எதிராக செயற்பட்ட ஒருவராகக் காணப்பட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக தான் பிரதிநிதித்துவப்படுத்திய சமூகத்திற்கு மகத்தான சேவையினை ஆற்றியுள்ளார். அவரது சேவைகளை ஏற்று அவருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தினை வழங்குவானாக! – Vidivelli