வீட்டுக்கு போவாரா கோட்டா?

0 415

றிப்தி அலி

சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் இலங்­கை­யினை ஆட்சி செய்த தலை­வர்கள் யாரும் முகங்­கொ­டுக்­காத நெருக்­க­டி­யினை ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தற்­போது முகங்­கொ­டுத்­துள்ளார்.

சுமார் 69 இலட்சம் வாக்­கு­க­ளினால் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்டு பாரா­ளு­மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பலத்­துடன் ஆட்சி செய்து வந்த கோட்­டா­பய ராஜ­பக்ஷ,வெறும் 30 மாதங்­க­ளுக்­குள்­ளேயே மக்­களின் நன்­ம­திப்­பினை இழந்­துள்ளார். அவ­ருக்கு வாக்­க­ளித்த 69 இலட்சம் மக்­களே இன்று அவ­ருக்கு எதி­ராக வீதி­களில் இறங்கிப் போராடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

நாடு தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார பிரச்­சி­னை­களும் அர­சி­யலில் எந்­த­வித முன் அனு­ப­வ­மு­மற்ற ஜனா­தி­ப­தி­யினால் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற நடை­மு­றைச்­சாத்­தி­ய­மற்ற கொள்­கை­களும் கார­ண­மா­கவே இவர் மீது வைத்­தி­ருந்த நம்­பிக்­கையை மக்கள் இழந்­துள்­ளனர்.

சுமார் 10 மணி நேரத்­திற்கு மேற்­பட்ட மின்­சார தடை, கேஸ், எரி­பொருள், பால்­மா­விற்­கான தட்­டுப்­பாடு, ரூபாவின் பெறு­மதி வீழ்ச்சி, அத்­தி­ய­வ­சியப் பொருட்­களின் விலை அசுர வேகத்தில் அதி­க­ரிப்பு, விவ­சா­யத்­திற்கு தேவை­யான உரப் பற்­றாக்­குறை போன்ற பல பிரச்­சி­னைகளை இலங்கை மக்கள் தின­சரி எதிர்­நோக்கி வரு­கின்­றனர்.
இதனால் அவ­ருக்கு எதி­ராக நாட்டின் பல பாகங்­களிலும் தொடர்ச்­சி­யாக ஆர்ப்­பாட்­டங்கள் நடை­பெற்று வரு­வ­துடன் ”GoHomeGota” என்ற சுலோகம் உல­க­ளா­விய ரீதியில் பிர­பல்­ய­ம­டைந்து வரு­கின்­றது.

மிரி­ஹான சம்­பவம்
இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த மக்கள் நாட்டின் பல பாகங்­களில் பல்­வேறு வகை­யான போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர். எந்­த­வொரு அர­சியல் கட்­சி­க­ளி­னதும் ஆத­ர­வின்றி முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளி­லொன்று கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு கொஹு­வலை பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது.

இந்தப் பேர­ணியில் பங்­கேற்­ற­வர்கள், ஊர்­வ­ல­மாக ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ மிரி­ஹான பிர­தே­சத்தில் வசித்து வரு­கின்ற வீட்­டினை நோக்கிச் சென்­றனர்.
இதனை பொலிஸார் தடுத்­த­போது பேரணி திசை திருப்­பப்­பட்டு அப்­பி­ர­தே­சத்தில் ஏற்­பட்ட பதற்ற சூழ்­நி­லை­யினை கட்­டுப்­ப­டுத்த கண்ணீர் புகையும், நீர்ப் பிர­யோ­கமும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதன்­போது அப்­பி­ர­தே­சத்­தி­ல் நிறுத்தப்பட்டிருந்த பொலி­ஸாரின் பஸ்­ஸிற்கு இனந்­தெ­ரி­யாத குழு­வி­னரால் தீவைக்­கப்­பட்­டது. இதனால் அமை­தி­யாக இடம்­பெற்ற ஆர்ப்­பட்டம் கல­வ­ர­மாக மாறி­யது.

அவ்­வி­டத்தில் ஊட­க­வி­ய­லாளர் உட்­பட 50க்கு மேற்­பட்டோர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாக சட்­டத்­த­ர­ணிகள் கூறு­கின்­றனர்.
இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் கங்­கொ­ட­வில நீதி­மன்­றத்தில் ஏப்ரல் 1ஆம் திகதி ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது சுமார் 400க்கு மேற்­பட்ட சட்­டத்­த­ர­ணிகள் தன்­னார்­வ­மாக ஆஜ­ராகி பிணை பெற்­றுக்­கொ­டுத்­தனர். இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­களை ஆரம்­பத்தில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்க அர­சாங்கம் முயன்­ற­தா­கவும் எனினும் சட்­டத்­த­ர­ணி­களின் தலை­யீடு கார­ண­மாக பொதுச் சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­வித்த குற்­றச்­சாட்­டி­லேயே வழக்குப் பதிவு செய்­யப்­பட்டு பிணை வழங்­கப்­பட்­ட­தா­கவும் அறிய முடி­கி­றது.

அட்­டா­ளைச்­சே­னையில் முஸ்லிம் காங்­கி­ரஸின் பேரணி
இதே­வேளை, பொருட்­களின் விலை­யேற்­றத்­திற்கு எதி­ராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட பேர­ணி­யொன்று கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை மாலை அட்­டா­ளைச்­சே­னையில் இடம்­பெற்­றது.

எவ்­வா­றா­யினும், கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ருடன் இருக்­கி­றார்­களா அல்­லது அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­படும் அக்­கட்­சியின் எம்.பிக்­க­ளு­ட­ன் இருக்­கி­றார்­களா என்­பதை நிரூ­பிப்­பதே இந்த ஆர்ப்­பாட்­டத்தின் மறை­முக நோக்­க­மாக இருந்­தது.

இவ்­வா­றான ஓர் ஆர்ப்­பாட்­டத்தை நடத்தக் கூடாது என சமூக ஊடங்­களில் முன்­வைக்­கப்­பட்ட பல்­வேறு எதிர்ப்­பு­க­ளையும் மீறி நடை­பெற்ற இந்த ஆர்ப்­பாட்­டத்தில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் கலந்­து­கொண்­டனர்.

இந்த கூட்­டத்தில் மாட்டு வண்­டியில் பேர­ணி­யாக செல்ல அக்­கட்­சியின் தலை­வ­ரான ரவூப் ஹக்கீம் ஏறியபோது, மாடு மிரண்­ட­மை­யினால் அவர் கீழே விழுந்த சம்­ப­வமும் பதி­வா­னது.

இவ்­வாறு நாளுக்கு நாள் ஆர்ப்­பாட்­டங்கள் அதி­க­ரித்­ததை அடுத்து ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷ­வினால் அவ­சர கால நிலைமை நாட்டில் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

சமூக ஊடக தடையும் ஊர­டங்கும்

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (03) நாட­ளா­விய ரீதியில் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­வ­தற்­கான அழைப்­பொன்­று ­ச­மூக ஊட­கங்கள் வாயி­லாக முன்­வைக்­கப்­பட்­டது.
இதனால் கதி­க­லங்­கிய அர­சாங்கம், சனிக்­கி­ழமை (02) மாலை 6.00 மணி முதல் திங்­கட்­கி­ழமை அதி­காலை 6.00 மணி வரை ஊர­டங்குச் சட்­டத்தை திடீ­ரென பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது.

இத­னை­ய­டுத்து மக்கள் பொருட் கொள்­வ­ன­விற்­காக முண்­டி­ய­டித்­ததை நாட­ளா­விய ரீதியில் அவ­தா­னிக்க முடிந்­தது. அன்று முஸ்­லிம்கள் புனித ரமழான் மாதத்தின் முதல் நோன்பை நோற்­ப­தற்குத் தயா­ராகிக் கொண்­டி­ருந்த நிலையில்,ஊர­டங்கு அறி­வித்தல் வெளியி­டப்­பட்­ட­மை­யா­னது முஸ்­லிம்­க­ளையும் பெரும் அசௌ­க­ரி­யத்தில் ஆழ்த்­தி­யது. எனினும் பெரும்­பா­லான பகு­தி­களில் இரவு மற்றும் ஐவேளை தொழு­கைகள் தங்­கு­ த­டை­யின்றி இடம்­பெற்­றன.

இதே­வேளை, நள்­ளி­ரவு பேஸ்புக், வட்ஸ்அப், யூடீயுப், டுவிட்டர், இன்ஸ்­டா­கிராம், டிக்டொக் உள்­ளிட்ட பல சமூக ஊட­கங்­க­ளுக்கும் தடை விதிக்­கப்­பட்­ட­துடன் ஒன்­றரை மணி நேர மின்­துண்­டிப்பும் அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.

இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த மக்கள் வி.பி.என் தொழில்­நுட்பம் ஊடாக சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்தின் இவ்­வா­றான சர்­வா­தி­கார நட­வ­டிக்­கை­களை கடு­மை­யாக கண்­டித்­தனர். சமூக ஊட­கங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை மனித உரிமை மீறல் என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவும் அறி­வித்­தது.

பாது­காப்பு அமைச்சின் சிபா­ரி­சிற்கு அமை­யவே இந்த தடை விதிக்­கப்­பட்­டது என தகவல் தொழி­நுட்ப அமைச்சு அறி­வித்­தது. எனினும், சுமார் 15 மணித்­தி­யா­லங்­களின் பின்னர் சமூக ஊடங்­க­ளுக்­கான தடை நீக்­கப்­பட்­டது.

ஊர­டங்குச் சட்டம் அமு­லி­லி­ருந்த போதிலும் அதனை மீறியும் அவ­ச­ர­கால நிலை­மையை கண்­டு­கொள்­ளா­மலும் நாட்டின் பல பிர­தே­சங்­களில் ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

ஆர்ப்­பாட்­டங்­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலைக்கு பொலிஸார் தள்­ளப்­பட்­டனர். பொது­மக்­களின் ஆர்ப்­பாட்­டங்கள் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்­பி­னர்­களின் வீடு­களை நோக்­கியும் திரும்­பின. இது­வரை பல எம்.பி.க்களின் வீடுகள் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களின் தாக்­கு­த­ளுக்கு இலக்­கா­கி­யுள்­ளன.

இதனால் அச்­ச­ம­டைந்த அர­சாங்கம், மக்­களை சமா­ளிப்­ப­தற்­காக அமைச்­ச­ரவை இரா­ஜி­னாமா எனும் நாட­கத்தை அரங்­கேற்­றி­யது. ஆரம்­பத்தில் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து மஹிந்த ராஜ­பக்ச இரா­ஜி­னாமாச் செய்­ய­வுள்­ள­தாக தக­வல்கள் கசிந்­தன. எனினும் அவரைத் தவிர ஏனைய அனைத்து அமைச்­சர்­களும் இரா­ஜி­னாமாச் செய்­தனர்.

இவ்­வா­றான நிலையில் ஊர­டங்குச் சட்டம் கடந்த திங்­கட்­கி­ழமை அதி­காலை நீக்­கப்­பட்­டது. இதனை அடுத்தும், பல ஆர்ப்­பாட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

குறிப்­பாக பல பிர­ப­லங்­களும் மக்­க­ளோடு மக்­க­ளாக இணைந்து வீதியில் இறங்கி ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­ப­டு­வதை காண முடி­கி­றது. பிர­பல கிரிக்கட் வீரர்­க­ளான சனத் ஜயசூரிய, ரொஷான் மஹா­நாம, மாவன் அத­பத்து, திமுத் கரு­ணா­ரத்ன உள்­ளிட்­டோரும் பல சினிமா, கலை நட்­சத்­தி­ரங்­களும் இவ்­வா­றான ஆர்ப்­பாட்­டங்­களில் பங்­கெ­டுத்து வரு­கின்­றனர். அது மாத்­தி­ர­மன்றி பாரிய வர்த்தக நிறு­வ­னங்­களும் இவ்­வா­றான போராட்­டங்­க­ளுக்கு தமது ஆத­ரவை பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்­ளன.

புதிய அமைச்­சர்கள் நிய­மனம்
இதே­வேளை, அமைச்­ச­ரவை இரா­ஜி­னாமாச் செய்­ததும் நான்கு பேரைக் கொண்ட தற்­கா­லிக அமைச்­ச­ர­வை­யொன்று ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டது. இதில் வெளிவி­வ­கார அமைச்­ச­ராக ஜீ.எல். பீரிஸும், நிதி அமைச்­ச­ராக அலி சப்­ரியும், கல்வி அமைச்­ச­ராக தினேஸ் குண­வர்த்­த­னவும், நெடுஞ்­சாலை அமைச்­ச­ராக ஜோன்ஸ்டன் பெர்­ணான்­டோவும் பத­வி­யேற்­றனர்.

எனினும், இந்த அமைச்சர் நிய­ம­னமும் கடு­மை­யான விமர்­ச­னத்­திற்­குள்­ளா­கி­யது. பத­வி­யேற்ற 24 மணி நேரத்­திற்­குள்­ளேயே நிதி அமைச்சர் பத­வி­யினை இரா­ஜி­னாமாச் செய்த அலி சப்ரி, ஜனா­தி­ப­திக்கு தேவை என்றால் தனது தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­னையும் இரா­ஜி­னாமாச் செய்ய தயார் என அறி­வித்தார்.

இதே­வேளை, கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்றம் கூடிய போது,பொது ஜன பெர­முன, சுதந்­திரக் கட்சி, விமல் வீர­வன்ச தலை­மை­யி­லான அணி உட்­பட சுமார் 42 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தாக பாரா­ளு­மன்­றத்தில் அறி­வித்­தனர்.

முஸ்லிம் எம்.பிக்­களின் “பெல்டி“
பொது ஜன பெர­மு­னவில் அங்கம் வகிக்கும் பெரும்­பான்மை இன எம்.பி.க்களே அர­சாங்­கத்­திற்­கான தமது ஆத­ரவை விலக்கிக் கொண்­டுள்ள நிலையில், 20க்கு ஆத­ர­வ­ளித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என்ன செய்யப் போகி­றார்கள் என்ற கேள்வி முஸ்லிம் சமூ­கத்­தி­லி­ருந்து பர­வ­லாக முன்­வைக்­கப்­பட்­டது.

இச்­ச­ம­யத்தில், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தான் பாரா­ளு­மன்­றத்தில் சுயா­தீ­ன­மாகச் செயற்­ப­ட­வுள்­ள­தாக அறி­வித்தார். இவர் 20 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கா­விட்­டாலும் அதன் பின்னர் வந்த சகல வாக்­கெ­டுப்­பு­க­ளிலும் அர­சாங்­கத்தை ஆத­ரித்­தவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

குறிப்­பாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜ­ப­க்ஷ­விற்கு ஆத­ர­வாக இவர் குரல்­கொ­டுத்து வந்த நிலை­யி­லேயே, பாரா­ளு­மன்றில் சுயா­தீ­ன­மாக செயற்­ப­ட­வுள்­ள­தாக அறி­வித்தார். இவ்­வாறு அவர் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்றும் போது சபையில் சல­ச­லப்பு ஏற்­பட்­டது. முஷாரப், சபையில் உரை­யாற்றிக் கொண்­டி­ருக்­கும்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் இவர் முன்னால் 5,000 ரூபா நாண­யத்­தாளை நீட்டி, பணத்­துக்­கா­கவே இவ்­வா­றான செயல்­களில் ஈடு­ப­டு­வ­தாக குற்­றஞ்­சாட்­டினார்.

இதே­வேளை, 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்­த­மை­யினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் கட்சிப் பத­வி­க­ளி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள ஹரீஸ் எம்.பி, அக்­கட்­சி­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட பேர­ணியில் அனை­வ­ரையும் கலந்­து­கொள்­ளு­மாறு பேஸ்புக் ஊடாக அறி­வித்­தி­ருந்தார்.

ஏற்­க­னவே இந்த பேர­ணியில் கலந்­து­கொள்ள ஆயி­ரக்­க­ணக்­கானோர் தயா­ராக உள்­ளதை அறிந்­த­வு­ட­னேயே குறித்த அறி­விப்­பினை அவர் மேற்­கொண்டார்.
இத­னி­டையே, 20 ஆம் திருத்தச் சட்­டத்தை ஆத­ரித்­து­விட்டு அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்டு வரும் ஹரீஸ், நஸீர் அகமட், பைசல் காசிம், தௌபீக், அலி சப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் ஆகியோர் இது­வரை தமது நிலைப்­பா­டு­களை அறி­விக்­க­வில்லை. இந்த எம்.பி.க்களுக்கு எதி­ராக முஸ்­லிம்கள் கிளர்ந்­தெழ வேண்டும், அவர்­க­ளது வீடு­களை முற்­று­கை­யிட வேண்டும் என சமூக வலைத்­த­ளங்­களில் கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. நேற்று முன்­தினம் கல்­மு­னையில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட இளை­ஞர்கள் ஹரீஸ் எம்.பி.யின் வீட்டின் முன்­பாக சென்று கூச்­ச­லிட்­ட­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முஸ்லிம் எம்.பி.க்கள் 20க்கு ஆத­ர­வ­ளித்து ஜனா­தி­ப­தியை சர்­வா­தி­கா­ரி­யாக்­கி­ய­மையே காரணம் என்­பதும் குறிப்­பிட்டுக் கூறத்­தக்­க­தாகும்.

கோட்டா பதவி துறப்­பாரா?
அமைச்­ச­ரவை இரா­ஜி­னாமாச் செய்­தாலும் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ இரா­ஜி­னாமாச் செய்ய வேண்டும் என்­பதே மக்­களின் பிர­தான கோரிக்­கை­யா­க­வுள்­ளது. எனினும் ஜனா­தி­பதி பதவி வில­கு­வ­தற்­கான அறி­கு­றிகள் எதுவும் தெரி­ய­வில்லை. நேற்­றைய தினம் பாரா­ளு­மன்றில் உரை நிகழ்த்­திய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ, ஜனா­தி­பதி ஒரு­போதும் பதவி வில­க­மாட்டார். எதிர்ப்­பு­களை சந்­திக்க நாம் தயா­ரா­க­வுள்ளோம் என அறி­வித்தார். இந்த அறி­விப்பு மக்­களை மேலும் ஆத்­தி­ர­மூட்­டி­யுள்­ளது. ஆர்ப்­பாட்­டங்கள் மேலும் உக்­கி­ர­ம­டையும் என்­ப­தையே தற்­போ­தைய நிகழ்­வுகள் கட்­டியம் கூறு­கின்­றன.

நிலை­மையை சமா­ளிப்­ப­தற்­காக, நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தினை கட்­டி­யெ­ழுப்ப அனைத்து கட்­சி­களும் இணைந்த அர­சாங்­க­மொன்­றினை உரு­வாக்க முன்­வ­ரு­மாறு ஜனா­தி­பதி அழைப்பு விடுத்தார். எனினும், இந்த அழைப்­பினை பல கட்­சிகள் நிரா­க­ரித்­துள்­ளன. இதனால் எந்­த­வொரு முடி­வி­னையும் எடுக்க முடி­யாத நிலைக்கு ராஜ­பக்ஷ குடும்­பமும், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவும் தள்­ளப்­பட்­டுள்­ளது. ஆட்­சி­யி­லி­ருந்து வில­கவும் முடி­யாமல் தொட­ரவும் முடி­யாமல் இக்­கட்­டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர கால நிலையும் நேற்று புதன்கிழமை நள்ளிரவில் ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் பிரதான கோரிக்கை ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதாகும். கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவந்த அதே மக்களே இப்போது அவர் தமக்குத் தேவையில்லை என்று போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற எதிர்ப்பை, சவாலை இதற்கு முன்னர் பதவி வகித்த எந்தவொரு ஜனாதிபதியும் சந்திக்கவில்லை. மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலில் நுழைந்த கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் கோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதே சிறந்த தீர்மானமாகும்.

அதனையும் மீறி அவர் தொடர்ந்து பதவி வகித்தால், தற்போது நாட்டில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களாக மாறி கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.அது இந்த நாட்டை மேலும் படுகுழியில் தள்ளவே வழிவகுக்கும்.
மக்களின் போராட்டங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் பல வெளிநாட்டுத் தலைவர்கள் ஓடி ஒழிந்த வரலாறுகள் பல காணப்படுகின்றன.

அவ்வாறான நிலையில், மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமாச் செய்வதன் ஊடாக நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப முடியும் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.