கொவிட் சடலங்களை அருகிலுள்ள மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதி
மஜ்மா நகரில் அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் முற்றுப்பெற்றன
எம்.ரீ.எம்.பாரிஸ்
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களை மார்ச் 5 ஆம் திகதி முதல் அருகிலுள்ள மையவாடிகளிலேயே நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள EPID/400/2019/ n- Cov எனும் சுற்று நிருபம் ஊடாக அறிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக கொவிட்டினால் உயிரிழப்போரின் சடலங்கள், ஓட்டமாவடி – மஜ்மா நகரின் அடையாளம் காணப்பட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்த காணியில் நல்லடக்கம் செய்யப்பட்டு வந்த நிலையிலேயே தற்போது அனைத்து மையவாடிகளிலும் அடக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சுற்று நிருபம் என்ன கூறுகிறது?
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் புதிய சுற்று நிருபத்துக்கு அமைய, கொவிட் தொற்றால் உயிரிழந்தவரின் சடலம் 5ஆம் திகதி முதல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அச்சடலம் சவப்பெட்டிக்குள் வைக்கப்படுவதற்கு முன்னர் எவ்வகையிலும் கசிவு ஏற்படாத பிரேத பையொன்றுக்குள் சுகாதார ஊழியர்களால் வைக்கப்படவேண்டும், குறித்த சடலம் சுகாதாரத் தரப்பினரால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் 24 மணிநேரத்திற்குள் அச்சடலம் எந்தவொரு தகன சாலையில் தகனம் செய்யப்படவோ அல்லது எந்தவொரு மையவாடியிலும் நல்லடக்கம் செய்யப்படவோ வேண்டும், தகனம் அல்லது அடக்கம் செய்யும் இடம் தவிர்ந்த வேறெந்தவொரு இடத்திற்கும் சடலம் கொண்டுசெல்லப்படக்கூடாது (வீடுகளுக்கு சடலங்களை எடுத்துச் செல்ல முடியாது) எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தொற்றுக்குள்ளானவரின் சடலம் பதப்படுத்தப்படக்கூடாது, சடலத்தை தகனம் அல்லது அடக்கம்செய்யும் முறை சம்பந்தப்பட்டவரின் உறவினர்களின் விருப்பத்தின்படி மேற்கொள்ளப்படலாம், சடலத்தை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான செலவுகள் உறவினர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும், இதன்பின்னர் அதற்குரிய செலவுகள் சுகாதார அமைச்சினாலோ அல்லது வேறு திணைக்களங்களினாலோ வழங்கப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகனமும் அடக்கமும்
முன்னதாக கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் அங்கீகரிக்கப்பட்ட சுடலை அல்லது இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என கடந்த 2020 ஏப்ரல் 4ஆம் திகதியிடப்பட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் கடந்த 2020 ஏப்ரல் 11 ஆம் திகதி 2170/8 எனும் இலக்க வர்த்தமானி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் அவர்களது குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக எரிக்கப்பட்டன.
இக் காலப்பகுதியில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களின் காரணமாகவும் அழுத்தங்கள் காரணமாகவும் கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் எந்த ஒரு நபரையும் அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என கடந்த 2021 பெப்ரவரி 25 ஆம் திகதியிடப்பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இறுதிக் கிரியைகள் தொடர்பிலான சுகாதார அமைச்சின் வழி காட்டல் அடங்கிய சுற்று நிருபத்துக்காக காத்திருக்க வேண்டியேற்பட்டது. இதற்குள் அடக்கம் செய்யும் இடம் தொடர்பில் சிக்கல் ஏற்படவே, முதலில் இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்யப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. எனினும் அந்த அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. இரணை தீவு மக்கள் அதற்கு எதிராக போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
இந் நிலையிலேயே, ஓட்டமாவடி – மஜ்மா நகர் காணியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்த வர்கள் நல்லடக்கம் செய்யப்படும் பணிகள் கடந்த 2021 மார்ச் 5 இல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜனாஸா அடக்கம் ஆரம்பம்
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கொவிட்-19 ஜனாஸா நல்லடக்கத்திற்குப் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட வேளையில், மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட மஜ்மா நகர், சூடுபத்தினசேனை கிராமம் அடையாளம் காணப்பட்டது.
இதனை ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் கோறளைப்பற்று மேற்கு, மத்தி ஆகிய பிரதேச செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கல்குடா கிளை, பிரதேச முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள், பிரதேச ஜும்ஆப் பள்ளிவாசல்கள், மாவட்ட ரீதியில் காத்தான்குடி, ஏறாவூர் முஸ்லிம் சமூக நிறுவனங்களின் சம்மேளனங்களின் ஒத்துழைப்புடன் இதற்கான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவசர அவசரமாக ஜனாஸா நல்லடக்கத்திற்கு முதல் நாளிரவு மயான பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதி சுத்திகரிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினரின் வழிகாட்டலில் முதலாவது ஜனாசா நல்லடக்கம் கடந்த 2021 மார்ச் மாதம் 05ஆம் திகதி அன்று பி.ப 4.00 மணியளவில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் பணியாற்றும் முஸ்லிம் ஊழியர்களினால் முஸ்லிம் மக்களின் சமய அனுஷ்டானங்களுடன் கொவிட்-19 சுகாதார வழிமுறைகளைப்பேணி மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி முதலில், கொரோனாவால் உடயிரிழந்து வைத்தியசாலை குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த இருவரின் ஜனாஸாக்களும், பின்னர் காத்தான்குடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மூவரின் ஜனாஸாக்களும் ஓட்டமாவடி – மஜ்மா நகர் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டன. அன்று முதல் கடந்த சனிக்கிழமை வரை மஜ்மா நகர் காணியில் சுமார் 3634 சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் மட்டுமன்றி, பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் சடலங்களும் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இறுதி நாள் நல்லடக்கம்
இந் நிலையில் கொவிட் சடலங்களை நாட்டின் எப்பகுதியிலும் உள்ள மையவாடிகளில் சுகாதார வழிமுறைகளைப் பேணி அடக்கம் செய்ய முடியும் என்ற சுற்று நிருபம் வெளியானதைத் தொடர்ந்து ஓட்டமாவடி மஜ்மா நகர் மையவாடியில் அடக்கம் செய்யும் பணிகள் நிறைவுக்கு வந்தன. இதற்கமைய 3634 ஆவது சடலமானது கடந்த சனிக்கிழமை மாலை அடக்கம் செய்யப்பட்டது. இதன் போது பிரதேச சபை தவிசாளர், செயலாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், இராணுவத்தினர், சுகாதாரத்தரப்பினர், பிரதேச சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம். நௌபர், இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அனுமதியளித்த ஜனாதிபதி, பிரதமர், இராணுவத்தளபதி, சுகாதார மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் நாடளாவிய ரீதியில் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிவில் சமூக நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களுக்கும் தமது பிரதேச மக்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும், அன்றைய தினம் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கான விசேட பிரார்த்தனை நிகழ்வும் மையவாடி வளாகத்தில் இடம்பெற்றது.
இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களது உறவினர்கள் மையவாடிக்கு விஜயம் செய்து பிரார்த்தனைகளில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதேச தேச சபையை முன்கூட்டி தொடர்பு கொள்வதன் மூலம் இதற்கான அனுமதி யைப் பெற்றுக் கொள்ள முடியும்.- Vidivelli