கூரகல தப்தர் ஜெய்லானி விவகாரம்: கொழும்பில் இருந்து அறிக்கை விடுவதில் எவ்வித பயனுமில்லை
பேச்சுக்கு வருமாறு அழைக்கிறார் நெல்லிகல தேரர்
(ஏ.ஆர்.ஏ. பரீல்)
கூரகல – தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் தொடர்பில் கண்டன அறிக்கை வெ ளியிடுவதற்கு முஸ்லிம் அமைப்புகளுக்கு எவ்வித உரிமையுமில்லை. 26 முஸ்லிம் அமைப்புகளும் கொழும்பில் இருந்து அறிக்கை விடுவதில் எவ்வித பயனுமில்லை. பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் என்னிடம் நேரில் வாருங்கள். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வோம் என கூரகல புனித பூமிக்குப்பொறுப்பான வத்துகும்புரே தம்மரதன நெல்லிகல தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.
வத்துகும்புரே தம்மரதன தேரர் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாசபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், தேசிய சூரா சபை உட்பட 26 முஸ்லிம் அமைப்புகள் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலின் மினாரா கட்டமைப்பு இனவாதிகளால் அகற்றப்பட்டமைக்கு எதிராக ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. மரபுச் சின்னங்களை அழிக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தன. இதற்குப் பதிலளிக்கையிலே வத்துகும்புரே தம்மரதன தேரர் ‘விடிவெள்ளி’யிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜெய்லானி பள்ளிவாசல் பிரச்சினையை நேரில் கலந்துபேசி தீர்வு பெற்றுக்கொள்வதற்காக கடந்த காலங்களில் இரு தடவைகள் ஜம் இய்யத்துல் உலமா சபையை நேரடியாக சந்தித்துள்ளேன். இரு தடவைகள் உத்தியோகபூர்வமாக கடிதங்களை அனுப்பியுள்ளேன். ஆனால் கடிதங்களுக்கு இரு வருடங்கள் கடந்தும் பதில் எதுவும் கிடைக்கவில்லை. வக்பு சபைக்கும் கடிதம் அனுப்பினேன். இது வரை காலமும் கடிதம் அனுப்பினேன். இது வரைகாலமும் அவர்கள் மெளனமாகவே இருந்து வந்துள்ளார்கள்.
பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் நபீஸ் மற்றும் நகீப் மெளலானா, ரொஷானா அபுசாயி ஆகியோரை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். பள்ளிவாசல் தலைவர்கள் பதவிகளைப் பெற்றுக்கொள்வதிலே ஆர்வமாக இருக்கிறார்களேயன்றி பள்ளிவாசல் மீது பற்று இல்லை. அதனாலேயே பள்ளிவாசல் இந்நிலைமைக்குள்ளாகியிருக்கிறது.
அறிக்கைவிடும் அமைப்புகளில் சூபிக்கள் ஒருவருமில்லை. இவ்வாறான அமைப்புகள் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டாமை இதனை அடிப்படைவாதத்துக்கே இட்டுச் செல்லும். பள்ளிவாசலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் வணக்கஸ்தலம் ஒன்று அமைத்துக்கொடுப்பதற்கும் நாம் தயாராக இருக்கிறோம்.
கடந்த 50 வருட காலமாக இப்பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இப்பிரச்சினை மேலும் தொடர்ந்தால் இதனால் எதிர்காலத்தில் கலவரங்கள் மூளலாம். அதனால் நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்வு காணவேண்டியது அவசியமா-கும். எனவே கொழும்பிலிருந்து கொண்டு ஊடக அறிக்கை விடாதீர்கள். நேரே கூரகலவுக்கு வாருங்கள் என்றார்.- Vidivelli