நாடு வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிக மோசமானதொரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதை நாம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம். எரிபொருள் தட்டுப்பாடு நாட்டை முற்றாக முடக்க நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் பல கிலோ மீற்றர்கள் தூரம் வரிசையில் காத்து நிற்க வேண்டியுள்ளது. பல வாகனங்கள் எரிபொருளின்றி வீதிகளிலேயே கைவிடப்பட்டுள்ளன. போதுமான எரிபொருள் இல்லாததால் பல மணி நேர மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படுகிறது. இது தினமும்10 மணி நேரமாக அதிகரிக்கப்படலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இலங்கை வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. உலகில் ஏலவே வங்குரோத்தையடைந்த பல நாடுகளின் வரிசையில் இப்போது இலங்கையும் புதிதாக இணைந்து கொள்ளவுள்ளமை நமது துரதிஷ்டமாகும்.
அரசாங்கம் கொவிட் 19 பரவலே இந்த பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் எனக் கூறினாலும் அது மாத்திரன்றி முறையற்ற பொருளாதார முகாமைத்துவமே இதற்கான பிரதான காரணம் என பொருளியல் நிபுணர்கள் ஆதாரபூர்வமாக நிறுவி வருகின்றனர்.
அரசாங்கத்தின் உயர்வான செலவினங்கள் மற்றும் வரிக் குறைப்புகளால் அரச வருமானம் குறைந்துள்ளது. சீனாவுக்கு பாரிய கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ளமை, இந்த தசாப்தத்திலேயே அந்நிய செலாவணி இருப்பு இந்த ஆட்சியிலேயே அதிகம் குறைந்தமை மற்றும் கொவிட் நெருக்கடியின் உடனடி தாக்கம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஆகியவற்றால் இலங்கை இந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசாங்கம் இந்த நெருக்கடியிலிருந்து எவ்வாறு வெளிவருவது எனச் சிந்திக்காது தமக்கு மத்தியில் அரசியல் சித்து விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகிறது. நிதியமைச்சருக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்களுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் நிலவுவதை வெளிப்படையாகக் காண முடிகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் நேற்று தனியாக மாநாடு ஒன்றை நடாத்தி நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான திட்ட யோசனைகளை முன்வைத்துள்ளன. இதன் மூலம் அரசாங்கத்தினுள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளமை தெளிவாகிறது. அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு கட்சி ரீதியாக பிளவுபடுவது நாட்டை மேலும் படுகுழியில் தள்ளவே வழிவகுக்கும்.
மறுபுறம் ஜெனீவிவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி வத்திக்கான் சென்றுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித், பாப்பரசரைச் சந்தித்து தமது போராட்டத்திற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சந்திப்பு இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தங்களைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மாத்திரமன்றி ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டைச் சந்தித்துள்ள கர்தினால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்கும் விடயத்தில் ஐ.நா.வின் உதவியையும் கோரியுள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரும் தற்போது ஜெனீவாவில் உள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறை வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர்கள் ஜெனீவாவின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அதேபோன்று இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக ஒழிப்பதற்கான அழுத்தத்தை வழங்குமாறும் ஜெனீவாவில் இம்முறை அழுத்தம் வழங்கப்படுகிறது. இது தொடர்பில் நேற்றைய தினம் ஜெனீவாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முஸ்லிம்கள் பலரும் இணையவழியில் பங்குபற்றி பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிரான தமது நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். இந்த அரசாங்கம் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக முன்னெடுத்துவரும் கொள்கைகளை தெளிவாக அதில் சுட்டிக்காட்டியுள்ளனர். பயங்கரவாத தடைச்சத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜெஸீமும் இதில் பங்குபற்றி தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து, பெரும்பான்மை மக்களை திசை திருப்பியே ஆட்சிக்கு வந்தது. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்தி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்ததுடன் கொவிட் ஜனாஸாக்களை பலவந்தமாக எரித்ததன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் சாபத்தை சம்பாதித்துக் கொண்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் இந்த அரசாங்கம் அரசியல் இலாபம் அடைந்து கொண்டதாகவும் வாக்குறுதியளித்தபடி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாது வேடிக்கை பார்ப்பதாகவும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்தினர் ஆதங்கப்படுகின்றனர். இன்று இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்து ஆட்சிக் கதிரையில் அமர்த்திய பெரும்பான்மை மக்கள் கூட பொருளாதார நெருக்கடியினால் தினமும் சாபமிடுகின்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது.
எனவே அரசாங்கம் இவ்வாறு தொடர்ந்தும் மக்களின் சாபங்களைச் சம்பாதித்துக் கொண்டு அழிவுப்பாதையில் செல்வதானது இறுதியில் முழு தேசத்தையுமே பாதிக்கச் செய்யப் போகிறது. இந்த நெருக்கடியிலிருந்து மீள சர்வதேசத்தின் உதவி மிகவும் அவசியம். ஆனால் தற்போது ஜெனீவாவில் நடக்கும் நிகழ்வுகள் அந்த நம்பிக்கையையும் நீர்த்துப் போகச் செய்வதாகவே உள்ளன. இதற்கும் அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிற்போக்கான கொள்கைகளே காரணமாகும்.- Vidivelli